05182022பு
Last updateபு, 02 மார் 2022 7pm

சாதி ஒழிப்புக்காகவே நாங்கள் போராடுகிறோம்!

நாங்கள் சாதி ஒழிய வேண்டும் என்று போராடுகின்றோம். சாதி ஒழிப்புக்காகவே 3000 – 4000 பேர்கள் சிறைக்குச் சென்று பல கஷ்ட நஷ்டங்களை எல்லாம் ஏற்று வெளி வந்து இருக்கிறோம். அதன் காரணமாகவே நாட்டு மக்களிடம் மட்டுமல்ல, எங்களைக் கேலி செய்த அரசாங்கத்தாரிடையே கூட மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் நீ இப்படிப்பட்ட நல்ல சூழ்நிலையில் உருவாகியுள்ளதை ஒழிக்க வேண்டும் என்று பாடுபடும் ஆச்சாரியாருக்குத் துணை போகிறாய் என்றால் என்ன அர்த்தம்? சாதியைப் பாதுகாக்க இழி தன்மையை ஒழிய விடாமல் கட்டிக் காக்க உதவுகின்றாய் என்பது தானே பொருள்?

நீங்கள் உங்கள் 5 - ஆண்டு காலச் சட்டசபை வாழ்வில் தான் ஆகட்டும், வெளியில் தான் ஆகட்டும், என்றேனும் சாதி ஒழிய வேண்டும் என்று மறந்தும் பேசியிருக்கின்றீர்களா? எங்களது சட்ட எரிப்புச் சிறைவாசத்துக்குப் பிறகு இந்த நாட்டு முதல் அமைச்சர் காமராசர் சாதி ஒழியாத சுயராஜ்ஜியம் என்ன சுயராஜ்ஜியம்? மக்களுக்கு எல்லாம் படிப்பு கொடுப்பதன் மூலம் சாதியை ஒழிக்கப் போகிறேன் என்கிறார்.

இந்தியப் பிரதமர் நேருவும் சாதி ஒழியாவிட்டால் வந்த சுதந்திரத்தினால் என்ன பலன்? வெளிநாட்டில் தலை நீட்டவே முடியவில்லையே! எப்படியும் இந்தச் சாதியை ஒழித்தாக வேண்டும் என்றார்.நீங்கள் என்றாவது சாதி ஒழிப்புப் பற்றி ஒரு வார்த்தை பேசியதுண்டா? சாதியை ஒழிக்கக் கூடாது, கட்டிக் காக்க வேண்டும் என்று கூறும் இராஜாஜிக்குத் துணை போவது தானே (கண்ணீர்த்துளிகளின்) வேலையாக உள்ளது. சாதி ஒழிய வேண்டும் என்பதில் எங்களை விட இந்தக் கண்ணீர்த்துளிகளுக்குத் தானே நியாயமாக அக்கறை இருக்க வேண்டும். சாதி ஒழிந்தால் பலன் பெறுபவர்கள் அவர்கள் தானே! அதை விட்டு விட்டு சாதி ஒழிப்பு உணர்ச்சி பெருகிக் கொண்டு இருக்கும் இந்தப் பொற்காலத்தை ஒழிக்க பார்ப்பானுக்குத் துணை போகிறாய் என்றால் உன்னை என்ன என்று அழைப்பது?வாக்காளப் பெருமக்களுக்கு நான் பணிவுடன் கூறிக் கொள்ளுகின்றேன்.

நீங்கள் யாருக்கு ஓட்டுப் போட்டாலும் சரி பார்ப்பானுக்குப் போட்டாலுங் கூடப் பரவாயில்லை. இந்தப் பாவிகளுக்கு (கண்ணீர்த்துளிகளுக்கு) ஒரு போதும் ஓட்டுப் போடாதீர்கள். இந்தக் கண்ணீர்த் துளிகள் இன்று நமது சமூதாயம் வரலாறு கண்டிராத முன்னேற்றம் அடைந்து வருவதை அரித்து ஒழிக்கின்ற தொழுநோய் போல் உள்ளார்கள். இவர்கள் கையில் ஆட்சிப் பொறுப்பு வந்தால் எவ்வளவு மோசமாகப் போகும் என்பதற்கு உதாரணம் சென்னை கார்ப்ரேஷனே போதுமே!

சர்வமும் லஞ்சம், ஊழல்- இதுதானே தாண்டவமாடுகின்றது? "மதராஸ் கார்ப்பரேஷன்" சங்கதி கண்டு நாடே சிரிக்கின்றதே. நான் மதராஸ் (சென்னை) மக்களுக்கு கூட்டங்களிலே கூறினேன். நீங்கள் மதராஸ் கார்ப்பரேஷன் ஊழலாக உள்ளது என்று அதிருப்தி அடைந்து இந்தக் கண்ணீர்த்துளிகளுக்கு ஒட்டுப் போட்டீர்களே பலன் என்ன? சாணியிலே கால் வைத்து விட்டோமே! என்று அஞ்சி எட்டிக் குதிக்கப் போய் மலத்தில் அல்லவா கால் வைத்து விட்டீர்கள் என்று குறிப்பிட்டேன். அது போலவே இந்தக் காஞ்சிபுரம் வாசிகளுக்கு நான் கூறுகின்றேன்.

நீங்கள் சென்ற தேர்தலில் காங்கிரசுக்கு ஓட்டளிக்காமல் கண்ணீர்த்துளிகளை வெற்றி பெறச் செய்தீர்கள். இப்படி நீங்கள் செய்ததன் மூலம் நீங்கள் அடைந்த பலன் என்ன?உங்கள் தொகுதியில் குறைப்பாட்டை எடுத்துச் சொன்னார்களா?அல்லது நாட்டுக்காவது நலன் பயக்கும் பல திட்டங்களைப் பற்றி விவாதித்தார்களா? நான் தான் முதலில் சொன்னேன். இவர்களின் சட்டசபை யோக்கியதைப் பற்றி. இப்படிப்பட்டவர்களையா மீண்டும் தேர்தலில் வெற்றி அடையச் செய்யப் போகிறீர்கள்?

எனவே காஞ்சிபுரத்துக்கு இருக்கக் கூடிய பழியைத் தீர்க்க சமூதாய நலனிலும் சாதி ஒழிப்பிலும் அக்கரையுள்ள காங்கிரசுக்கே நீங்கள் வேலை பண்ண வேண்டும் காங்கிரசை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இதற்காக ஆங்காங்கு கமிட்டிகள் அமைத்துக் கொண்டு காமராசர் தலைமையில் இயங்கி வரும் இந்தக் காங்கிரஸ் ஆட்சியில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நன்மைகளை எல்லாம் எடுத்து மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும். அதுபோலவே ஆச்சாரியார் காலத்தில் அவர் செய்த கொடுமைகள் பற்றியும் மீண்டும் அவர் பதவிக்கு வருவரானால் ஏற்படக் கூடிய ஆபத்துக்கள் முதலியவைகள் பற்றியும் விளக்க வேண்டும்.

(26-11-1961 அன்று காஞ்சிபுரம் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு. "விடுதலை"- 04-12-1961)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/08/blog-post_10.html