Language Selection

“இந்த இயக்கம் எந்தத் தனிப்பட்ட மனிதனும் வீரனாவதற்கும் வீர சொர்க்கம் போய்ச் சேரவும் ஏற்பட்டதல்ல. எனக்கு வீர சொர்க்கத்தில் நம்பிக்கை கிடையாது. வீரனாவதில் பயன் உண்டு என்று நம்பிக்கை கிடையாது. காந்திக்குமேல் ஒருவன் வீரனாகவோ மகாத்மாவாகவோ விளம்பரம் பெற முடியாது. ஆனால் அவரால் மனித சமூகத்துக்கு ஒரு காதொடிந்த ஊசி அளவு பயனும் ஏற்படவில்லை. ஏற்படப் போவதில்லை. வேண்டுமானால் அவருக்கும் அவர் சந்ததிக்கும் பெரிய மதிப்பு ஏற்பட்டு விடும். கோவிலும் ஏற்படும்.

ஆனால் நான் அப்படிப்பட்ட புகழை விரும்பவில்லை. எனக்குப் புகழ் வேண்டியதில்லை. புகழ் பெறுவதற்கு எவ்வளவு அயோக்கியத்தனம் செய்ய வேண்டுமென்பது நான் நன்றாய் அறிவேன். எத்துறையிலும் நான் இருந்து பார்த்து விட்டுத்தான் இந்த “இழிவு” பெறும் வேலைக்கு மனப்பூர்த்தி யாகவே வந்தேன். ஆதலால் நான் புகழ் பெறும் மார்க்கமோ வீரப்பட்டம் பெறும் மார்க்கமோ அறியாதவனல்ல.

நம் சுயமரியாதை இயக்கத்தின் இப்போதைய வேலையைக்கூட அரசாங்கத்தார் சட்ட விரோதம் என்று சொன்னால் அப்போது என்ன செய்வது என்று கேட்கிறார். இதற்கு நான் தாமதமில்லாமலும் வெட்கமில்லாமலும் உடனே பதில் சொல்லுகிறேன். என்ன பதில் என்றால் உடனே இயக்கத்தை நிறுத்திவிட்டு பிறகு மேல் கொண்டு என்ன செய்வது என்று நம்பிக்கையுள்ள தோழர்களுடனும் பொறுப்புள்ள தோழர்களுடனும் கலந்து யோசிப்பேன். ஒன்றுமே செய்ய முடியாமல் போனால் அப்போது ஜெயிலுக்குப் போய் உட்கார்ந்து கொண்டு சுகமனுபவிப்பேன். வீரப்பட்டமும் பெறுவேன்.

சிறிது வேலை செய்ய இடமிருந்தாலும் “புகழை”யும், “வீர”ப் பட்டத்தையும் தியாகம் செய்துவிட்டு பயங்காளி, கோழை, அடிமை என்கின்ற பட்டங்களை மகிழ்ச்சியோடு வரவேற்று தலையில் சுமந்து கொண்டாவது வேலை செய்வேனே ஒழிய வீண் வீம்புக்கும் போலி விளம்பரத்துக்கும் இரையாக மாட்டேன்.

- ‘குடி அரசு’ 29.3.1936 ‘பெரியார்’

http://karuppupaiyan.blogspot.com/2008/01/117.html