தத்துவ விளக்கம்

தத்துவக் காட்சி, தத்துவ உணர்வு என்பன உண்மை. அதாவது, உள்ளதை உள்ளபடி காண்பதும், அறிவதுமாகும். இயற்கை ஞானம் என்றும் சொல்லலாம்.

நாம் தத்துவத்தையும், இயற்கையையும் வேறுபடுத்திய காட்சியையும், குணத்தையும், உணர்வையும் கொண்டவர்களாக இருக்கிறோம். இப்படிப்பட்ட நமக்கு வெறும் பச்சை உண்மை - தத்துவம் என்பது சங்கடமான காட்சியாகவும் கேள்வியாகவும்தான் இருக்கும் உதாரணம் வேண்டுமானால் ஒன்று சொல்லுகிறேன்.

ஒரு மனிதனைக் காண்பது என்பது இயற்கையை மறைத்துச் சாயலை வேறுபடுத்திய தோற்றத்தைக் காண்பது என்பதாகும். ஆனால் அதே மனிதனை இயற்கையாய் உள்ளபடி காண்பது என்பது, அவனை நிர்வாணமாக, எவ்வித மறைவும் மாற்றமும் இல்லாமல் காண்பது என்பதாகும். இந்தக் காட்சி இன்றைய உலகுக்குப் பிடிக்காது; வெறுப்பையும், சங்கடத்தையும் உண்டு பண்ணக்கூடியதாகும். இப்படியே இன்றைய ஒவ்வொரு தன்மையையும் நிலைமையையும் நிர்வாணமாய், உண்மையாய்க் காண்பது என்பது இன்றைய உலகுக்கு வெறுப்பாகவும் அசூசையாகவும் அதிருப்தியாகவுமிருக்கும். அதனால்தான் தத்துவ விசாரணைக்கும், தத்துவம் அறிவதற்கும் மனிதன் சில பக்குவத்தை அடைந்திருக்க வேண்டும் என்பார்கள்.

அதனால்தான் நானும் உண்மைத் தத்துவத்தைச் சொல்வது என்பது பலருக்கு அதிருப்திகரமானதாக இருக்கும் என்று சொன்னேன். பொதுவாகவே நாட்டில் ஒரு பழமொழி உண்டு. யதார்த்தவாதி வெஹுஜன விரோதி’ என்று சொல்வதுண்டு. இதன் கருத்து மக்கள் யாவரும் பொய்யர்களாய் இருக்கவேண்டும் என்பதல்ல. எது உண்மையோ, எது தத்துவமோ அது மக்களிடையில் மாற்றுருவம், மாற்றுப் பெயர், மாற்றுக் குணம் பெற்று இருக்கிறது.

ஆதலால், உண்மை விளக்கம் திருப்தி அற்றதாகக் காணப்படும். எனவே, தத்துவ விசாரணை விளக்கம் என்பதற்கு இயற்கையிலேயே மக்களுக்கு எடுத்துச் சொல்லுவதில் சங்கடமிருந்தாலும் நான், அதாவது ஒரு சாதாரண மனிதனும், தலைவர் என்னைப் பற்றி எடுத்துச் சொன்னதுபோல் நாஸ்திகன், மதத்துவேஷ அரசியல் எதிரி என்கின்ற தன்மையில் பேர்வாங்கி இருக்கிறவனும் தத்துவத்தைப் பற்றிப் பேசுவதென்றால், அது மிக மிகச் சங்கடத்தைக் கொடுக்கக் கூடியதாகும்.

என்றாலும் என்மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு - குறைகளுக்குச் சமாதானம் சொல்லும் முறையிலேயே என் தகுதிக்கு ஏற்ற அளவு தத்துவத்தைப் பற்றிச் சொல்ல முயலுகிறேன்.

ஏனெனில், இந்த இப்படிப்பட்ட ஒரு அவையில் நான் எதைப்பற்றிப் பேசுவது என்பதாக எனக்குள் எழுந்த பிரச்னை முடிவு பெறுவதற்கு முன்னதாகவே, தலைவர் அவர்கள் என்னை அறிமுகப்படுத்துவதில், இந்த மேற்கண்ட சொற்களும் உச்சரிக்கப்பட்டதால், அவைகளே போதுமென்று கருதி, அவைகளைப் பற்றிப் பேசலாம் என்றே நினைக்கிறேன்.

தோழர்களே, விஷயம் அற்பமானதாகவும் கருதப்படலாம், பிரமாதமானதாகவும் கருதப்படலாம். எப்படியெனில், சாதாரண மக்களுக்குக் கடவுள், மதம், அரசியல் விஷயங்களின் தத்துவம் மிகவும் அலட்சியமானதாகும்; பெரிய அறிஞர்களுக்கு இந்த விஷயங்கள் அபாரமானதும் மிக நுணுக்கமாக அறிந்து பேசத் தகுந்ததுமாகும்.

ஒரு பாட்டுக்காரன் பாடும்போது, பாமர மக்களும் வித்வதன்மை உள்ளவர்களும் கலந்திருந்து கேட்பார்களானாலும் பாமர மக்கள் பாட்டின் வாசகங்களை சொற்களைப் பொறுத்த வரையில் கவனித்துவிட்டு, “இது ஏதோ சாமிமீதுப் பாடினான்,’’ “இது ஏதோ பெண்களைப் பற்றிப் பாடினான்’’ என்று அந்த வார்த்தைகளின் அளவோடு அவர்கள் பாட்டுக் கச்சேரிக்குப் போன தன்மையை முடித்துக் கொள்ளுவர்.

அதே பாட்டுக்காரனிடம் பண்டிதத் தன்மை உடையவர்கள் கேட்ட அளவில், சங்கீதக் கலைஞானத்தைக் கொண்டு மிக நுணுக்கமாகக் காது கொடுப்பார்கள். ஆதலால் பாடுகிறவன் பாடுகிற வேலையை மிகப் பிரமாதமாகக்கொண்டு மிகக் கஷ்டத்தோடு கவலையோடு பாடவேண்டியிருக்கும். அதனால்தான் நான் பேச, எடுத்துக் கொண்ட விஷயங்கள் அலட்சியமானதும் அபாரமானதும் என்று சொன்னேன்.

தோழர்களே, தலைவர் கடவுளைக் குறிக்கும்போது, “எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த, யாவையும் செய்கிற தன்மை உள்ளவர்’’ என்று சொன்னார். அதோடு கூடவே தலைவர் மதத்தைப் பற்றிக் குறிக்கும்போது “மனிதனுக்கும் கடவுளுக்கும் சம்பந்தத்தை உண்டாக்குவதற்கு மதம்’’ என்று சொன்னார். இது மதபக்திக் கூட்டமல்ல; புராணப் பிரசங்க கூட்டமுமல்ல. ‘தத்துவ விளக்கம்’ என்னும் தலைப்பில் பேசுவதைக் கேட்க வந்திருக்கும் கூட்டம். ஆனதால், கடவுளுடையவும், மதத்தினுடையவும் தத்துவம், உண்மைத் தத்துவம் அதுவும் பச்சை உண்மையாம் பட்டாங்கமாய் உள்ள தத்துவம் பேசப்பட வேண்டியதாகும். ஆதலால், அந்தப்படி பேசுகிற முறையில் நான் பேசுகிறேன்.

உண்மையிலேயே என்னை நாஸ்திகன் என்றும், மதத்துவேஷி என்றும் பலர் சொல்லுகிறார்கள்; பலர் கருதியுமிருக்கிறார்கள். இந்தப்படி நாஸ்திகர்கள் என்பவர்கள் யாராவது கருதி இருப்பார்களானால் நான் மகிழ்ச்சி அடைவேன். ஆஸ்திகர்கள் என்பவர்கள் கருதி இருப்பார்களானால் அவர்களுக்காகப் பரிதாபப்படுவதுடன், இந்த மாதிரி மக்களிடையில் இருக்க வேண்டி இருக்கிறதே என்று என்னையே நான் வருந்திக் கொள்ளுகிறேன்.

தத்துவ வாசகத்துக்காகக் கூட்டப்பட்ட கூட்டத்தில் கூட, எனது தத்துவத்தை எடுத்துச் சொல்ல நான் பயப்பட்டால், அல்லது பித்தலாட்டம் செய்தால், நான் என்னையே வெறுத்துக்கொள்ள வேண்டியவனாவேன். ஆகவே, என்னை நாஸ்திகன், மதத்துவேஷி என்று ஆஸ்திகன் சொல்லுவது மகாமகா அறியாமையும் அலட்சிய புத்தியும் ஆகும்.
இதை ஒரு உதாரணம் காட்டி விளக்குகிறேன்.

ஒரு ஊரில் ஒரு பிச்சைப் பிழைப்பு பார்ப்பனன் ஒரு நல்ல காரியம் நடந்ததற்காகப் பிச்சைக் கொடுக்கும் ஒரு வீட்டிற்கு வந்து பிச்சை கேட்டான். அவ்வீட்டுக்காரர் மற்றவர்களுக்கு கொடுத்ததுபோல் இவனுக்கும் நான்கணா கொடுத்தார். அதற்கு அந்தப் பிச்சைக்காரப் பார்ப்பனன் அந்த வீட்டுக்காரனைப் பார்த்துக் கோபித்துக்கொண்டு, “ஏ ஓய்! தற்பெருமை, அன்னியர்களைக் குறைகூறுதல், பணத்தாசை ஆகிய மூன்றையும் துறந்து, நான்கு வேதம், ஆறு சாஸ்திரம், பதினெண் புராணம். தர்க்கம், மீமாம்சை, தத்துவ ஞானம் ஆகியவைகளைக் கற்று மிக மேதாவியும், மகாபண்டிதனுமான எனக்கும் நாலு அணாவா? இந்த ஒன்றும் தெரியாத முட்டாள் கழுதைக்கும் நாலு அணாவா? வெகுயோக்கியமாய் இருக்கிறதே உம்முடைய தர்மம் என்று கேட்டானாம்.
அதுபோல் இருக்கிறது, ஒரு ஆஸ்திகன் என்பவன் ஒருவனைப் பார்த்து நாஸ்திகன் என்று சொல்லுவது என்கிறேன்.

ஏன் எனில், இந்த ஆஸ்திகன் கடவுளை எப்படி அறிந்திருக்கிறான் என்றால்,
“கடவுள் சர்வ வல்லமை உள்ளவர், சர்வ வியாபி (எங்கும் நிறைந்தவர்) சர்வத்தையும் (எல்லா காரியங்களையும்) நடத்துகிறவர், அவருக்கு மேம்பட்டவர் எவரும் இல்லை, அவர் அன்றி (அவர் அனுமதியாமல்) ஒரு காரியமும் நடைபெறுவதில்லல்’’ என்பதாக அறிந்திருப்பதாகச் சொல்லிவிட்டு, அப்படிப்பட்ட கடவுளை நான் இல்லை என்பதாகவோ, மறுப்பதாகவோ சொல்லுகிறார் என்றால், இது அந்தப் பார்ப்பனன் சொன்னதற்கே சமாதானமாகும்.

அந்தப் பார்ப்பனன் முதலில் தன்னிடம் ஆத்மஸ்துதி, பரநிந்தை, திரவிய சுபேட்சை இல்லை என்றும், தான் அவைகளை வெறுத்து விட்டவன் என்றும் சொல்லி விட்டு உடனே நான் நாலு வேதம், ஆறு சாஸ்திரம் முதலியவைகளைப் படித்துக் கரைகண்ட மேதாவியாகிய மகாபண்டிதன் என்கிறான். இதில் அவன் தற்பெருமை வெறுத்த யோக்கியதை தெரிகிறது.

அதுபோலவே பரநிந்தை - அன்னியனை இழிவாக்குவது - வைவது தன்னிடம் இல்லை என்று சொல்லிவிட்டு, “இந்த ஒன்றும் தெரியாத முட்டாள் மடையனுக்குமா நாலணா?’’ என்கிறான்.

அடுத்தபடியாக தனக்குப் பண ஆசையே இல்லை என்று சொல்லிவிட்டு, “இந்த நாலு அணாதானா எனக்குக் கொடுப்பது?’’ என்கிறான். எனவே தன்னைப்பற்றி அவன் சொன்னது அத்தனையும் பொய் என்பதும், கற்பனை என்பதும், அவன் பின்னால் சொல்லியதிலிருந்து வெளியாகிவிட்டன.

அதுபோலவே எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த, யாவற்றையும் செய்விக்கிற கடவுளை ஒரு மனிதன் இல்லை என்று சொல்லுகிறான் என்று சொன்னால், ஒன்று அந்த ஆஸ்திகன் கடவுளுக்கு மேல்கண்ட குணங்கள் இருப்பதாகச் சொன்னது பொய்யாகவும், கற்பனையாகவும் இருக்க வேண்டும் அல்லது மற்ற மனிதரைப் பார்த்து, நாஸ்திகன் கடவுள் இல்லை என்று சொன்னது தவறாக, அறியாமையாக யோசனையற்றதாக இருக்கவேண்டும்.

இருக்கிற கடவுளை இல்லை என்று சொல்லுவதில் சொல்லுபவனுக்கு என்ன லாபம்? அல்லது சர்வத்தையும் செய்விக்கிற, சொல்லச் செய்கிற ஒரு கடவுள் இப்படியாக ஒரு வரைச் சொல்லவும் நினைக்கவும் செய்வதில், கடவுளுக்குத் தானாகட்டும் என்ன லாபம் வரும்? ஆகவே, ஒரு மனிதன் இப்படி முட்டாள்தனமான காரியத்தைச் செய்வானா? அல்லது ஒரு கடவுள் இப்படிப் பைத்தியக்காரத்தனமான காரியத்தைச் செய்விப்பாரா என்பதையாவது, ஒருவன் கடுகளவு நினைத்தாலும், சிந்திக்கும் சக்தி இருந்தாலும் மற்றவனை ‘நாஸ்திகன், கடவுளை மறுக்கிறவன்’ என்று குறைவோ, குற்றமோ சொல்ல மாட்டான்.

ஒருவனை ஒருவன் நாஸ்திகன், கடவுள் இல்லை என்று சொல்லுகிறவன் என்று சொல்லுவதே நாஸ்திகமாகும், கடவுளைச் சரியாக அறியாததேயாகும். அந்த வார்த்தையை உண்டாக்கினவர்களே நல்ல நாஸ்திகர்களாவர். கடவுள் இருந்தால், ஒரு மனிதன் இல்லை என்று சொல்ல முடியுமா? அல்லது ஒருவன் இல்லை என்று சொல்லுகிறான் என்று மற்றவன் நினைக்காவது முடியுமா? ஆகவே, நாஸ்திகம் நாஸ்திகன் என்பன கடவுள் வியாபாரக்காரர்கள் தங்கள் வியாபாரத்துக்கு ஆதரவாகக் கண்டுபிடித்த உப கருவிகளே ஆகும். கடவுள் வியாபாரக்காரனுக்கு அல்லாமல் மற்றவனுக்கு இந்த கவலையே இருக்க நியாயமில்லை.

கடவுள் பற்றிய தத்துவ விளக்கம் என்றால், கடவுள் நிர்வாணமாய், பட்டாங்கமாய் காணப்படும் வரையில் ஆராய்ச்சி செய்வது என்பதாகும். ஒரு விஷயத்தைத் தத்துவ விசாரணை செய்ய, முதலில் என்ன, ஏன் எதற்காக, எப்படி, எங்கே, எப்போது என்பன போன்ற கேள்விகளைப் போட்டு திருப்தியான பதில் பெற வேண்டும். தயவு தாட்சண்யமற்ற கேள்வி போட வேண்டும். தத்துவ விசாரணை என்பதும் தர்க்க வாதம் என்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தமுடையதாகும். ஆகையால், சர்வ சக்தி, சர்வ வியாபகம், சர்வத்தையும் நடத்துதல் ஆகிய அபாரகுணங்களைக் கொண்ட ஒரு பரம்பொருளைப் பற்றித் தத்துவவிசாரணை செய்கிறவர்கள் இந்த 6, 7 கேள்வி மாத்திரமல்லாமல் இன்னும் 60, 70 சோதனைகளை செய்து பார்க்கவேண்டும்.

பக்தனுக்கு இது தேவை இருக்காது. தத்துவ விசாரணைக்காரனுக்கு இது அவசியமாகும். கடவுள் மூடபக்தியால், குருட்டு நம்பிக்கையால் விளங்குபவராக இருக்கக்கூடாது. வேறு யாருக்காகிலும் அப்படி விளங்கினாலும் பகுத்தறிவுள்ள மனிதனுக்கு அதிலும் தத்துவ விசாரணைக்காரனுக்கு அப்படிக் குருட்டு நம்பிக்கையால் விளங்கக்கூடாது என்பேன்.

எதற்காகக் கடவுள்? ஏன் கடவுள்? எது கடவுள்? என்கிற விளக்கம் அவசியம் ஒவ்வொரு தத்துவ விசாரணைக்காரனுக்கும் விளங்கி ஆகவேண்டும். மனிதனுக்குப் பகுத்தறிவு இருக்கிறது. அது ஆராய்ச்சிக்காக ஏற்பட்டதே தவிர, கண்மூடித்தனமான மிருகத் தன்மைக்கு ஏற்பட்டதல்ல பகுத்தறிவை மனிதன் தப்பாகப் பயன்படுத்தி, அதிகமான தொல்லையில் மாட்டிக் கொண்டிருக்கிறான். இந்தத் தொல்லைக்குப் பரிகாரமாகக் கடவுளைச் சிருஷ்டித்துக் கொண்டான். அரசன் ஏன்? குடிகள் ஏன்? ஏழை, பணக்காரன் ஏன்? மேல் ஜாதி, கீழ் ஜாதி ஏன்? உழைப்பாளி அடிமையும் சோம்பேறி எஜமானனும் ஏன்? பிச்சைக்காரன், பிரபு ஏன்?

இந்தத் தன்மைகளை ஏற்படுத்தவும் நிலைநிறுத்தவும் பாதுகாக்கவும் அல்லாமல் கடவுளால் கண்ட பயன் என்ன? அவர் செய்த நல்ல காரியம் என்ன? இந்த வேலைகளுக்கு ஒரு கடவுள் வேண்டுமா?

பகுத்தறிவு கொண்ட மனிதன் சாந்தி, அன்பு, திருப்தி இல்லாமல் கவலையில், அதிருப்தியில் குறையோடு சாவதற்குக் காரணம் கடவுள் அல்லாமல் வேறு என்னவாய் இருக்கக்கூடும்?

அவனவன் முட்டாள்தனம் காரணம் என்றால் பகுத்தறிவு இருப்பது எதற்காக? முட்டாள் தனத்தை உண்டாக்கவா? பகுத்தறிவு இல்லாத ஜீவன்களுக்கு இல்லாத கெட்ட குணங்கள், கவலைகள், குறைபாடுகள் இனவெறுப்புகள், துரோகங்கள் பகுத்தறிவுள்ள ஜீவனான மனிதனுக்கு ஏற்படுவானேன்? பகுத்தறிவுற்ற துஷ்ட ஜந்துக்களிடமும் இல்லாத கெட்ட குணங்கள் பகுத்தறிவு உடைய மனிதனிடத்தில் இருப்பானேன்? கடவுளைக் கண்டதாலா? கடவுளைக் கற்பித்துக் கொண்டதாலா? கடவுள் தன்மையை, கடவுள் சக்தியைத் தவறாகக் கொண்டதாலா? எதனால் என்பது பகுத்தறிவுக்குக்கூட எப்படிப் பரிகாரம் செய்து கொள்வது என்பது முடியவில்லையானால், பகுத்தறிவின் பயன்தான் என்ன? கடவுளின் தன்மைதான் என்ன?

 

http://karuppupaiyan.blogspot.com/2007/10/116.html