05282022
Last updateபு, 02 மார் 2022 7pm

அகிம்சையைப் பேசி நாசமாய்ப் போய் விட்டோம்

தாய்மார்களே! தோழர்களே! அகிம்சை என்பதைப் பற்றிக் கேட்டால் அது கோழைத் தனம் என்பேன். பழங்காலத்தில் அது பொருத்தமாக இருந்திருக்கலாம். அதை இப்போது ஏற்று அதன்படி நடப்பதென்பது சாத்தியம் இல்லை. அகிம்சை பிரயோசனப்படாது. இப்போது ஏதோ மற்றவர்களைக் கோழையாக்கி, அடக்கித் தாங்கள் வாழ - தந்திரக்காரர்கள் அகிம்சை என்று பேசுகிறார்கள்.

அகிம்சை என்பது ‘தெய்வீகக்’ கருத்தின் பேரில் சொன்ன உபதேசம். முதலில் நம் நாட்டில் அகிம்சையைப் பற்றிப் பேசியவர்கள் பவுத்தர்கள், சமணர்கள். இரண்டாவது, மேல் நாட்டில் ஏசுபிரான் பேசினார். அதற்குப் பிறகு யாரும் பேசவில்லை. சமணர்கள் நடைமுறைகளைப் பார்த்தால் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றும். சமணர்கள் தலையை மொட்டையடித்துக் கொண்டார்கள்; தலையில் பேன் பிடித்தால் பேனைக் கொல்ல வேண்டி வரும் என்பதற்காகவே மொட்டையடித்துக் கொண்டார்கள். கையில் மயில் தோகையை வைத்து முன்னால் கூட்டிக் கொண்டு நடக்கவேண்டும்; விளக்குமாற்றால் கூட்டக்கூடாது, விளக்குமாற்றால் கூட்டினால் எறும்பு, பூச்சிகள் செத்துவிடும். இப்படியெல்லாம் என்னென்னமோ செய்து அகிம்சையைப் பற்றிப் பெருத்த உபதேசம் செய்தார்கள். பலன் என்ன? அவர்களுடைய தலைகள் பனங்காயாட்டம் வெட்டப்பட்டன. இதைக் கொண்டாட இன்னும் பண்டிகை நடக்கிறது. ‘அன்பே சிவம்’; ‘சிவமே அன்பு’ என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள். இவர்கள்தான் ஆயிரம், பதினாயிரம் என்று சமணர்களை வெட்டிச் சாய்த்தார்கள். எதற்குச் சொல்கிறேன் என்றால், சமணர்கள் பேசிவந்த அகிம்சை அவர்களுக்குப் பயன்படவில்லை என்பதைக் காட்டத்தான். அகிம்சை பேசியதன் காரணமாகவே சமணர்கள் அழிக்கப்பட்டார்கள். பலன் என்ன?

ஏசு, ‘ஒரு கன்னத்தில் அடித்தால் மற்றொரு கன்னத்தைத் திருப்பிக் காட்டு’ என்று சொன்னார். இன்று அதுபோல் நடந்தால், பல் போய்விடும். ‘மேல் வேட்டியைக் கேட்டால் இடுப்பு வேட்டியையுங் கொடு’ என்று சொன்னார். இப்போது அப்படிச் செய்தால், என்ன ஆகும்? எல்லோரும் நிர்வாண சங்கத்தில் தான் சேரவேண்டும். இன்றைக்கு அந்த கிறிஸ்தவர்கள் தான் வெடிகுண்டு, அணுகுண்டு செய்கிறார்கள். இம்சை செய்வதற்கு என்பதல்ல; எதிரியிடம் ஓர் அணுகுண்டு இருக்கும்போது என்னிடமும் 2, 3 இருக்கிறது என்றுசொன்னால்தான், தான் தப்பிக்க முடியும் என்ற நிலை இருக்கிறது.

நாம் அகிம்சையை நம்பிப் பேசி நாசமாய்ப் போய் விட்டோம், இல்லாவிட்டால் 3000 வருடங்களாக தேவடியாள் மகன், சூத்திரன் என்று நம்மை இழிவு செய்கிறபோது இங்கு ஒரே ஒரு பார்ப்பாரக் குஞ்சு இருக்குமா? இது ரொம்பக் கேடு. உலகத்தில் வேறு எந்த ஜீவனும் தன் இனத்தைச் சேர்ந்த மற்றொரு ஜீவனை அடித்துச் சாப்பிடுவதில்லை. மனிதன்தான் தன் இனத்தையே அடிப்பது, கொல்வது, சதி செய்து வாழ்வது எல்லாம். மனிதனை மனிதன் கொலை செய்வது எவ்வளவு? மனிதனை மனிதன் கொடுமைப்படுத்துவதைக் காணமுடியுமே தவிர, மாடு மாட்டைக் கடித்தது, நரி நரியைக் கொன்றது, மான் மானை அடித்தது என்று காணமுடியாது. மனிதனை மனிதன் வஞ்சிப்பது, கொடுமைப்படுத்துவது, வதைப்பது வளர்ந்துவிட்டது.

ஆகையினால் நமக்கு அவசியம் கத்தி வேண்டும். அரசர்களை எடுத்துக் கொண்டாலும் எந்த அரசன் கையில் கத்தி இல்லாமல் இருந்தான்? முதலாவது செங்கோல் தடி; இரண்டாவது உடைவாள்; இவை இல்லாத அரசனே கிடையாது. கத்தியும் கழுவுமே சைவத்தைக் காப்பாற்றின. கடவுளை எடுத்துக் கொண்டாலும், எந்தக் கடவுள் ஆயுதம் இல்லாமல் இருக்கிறது? குழவிக்கல் மாதிரியான இலிங்கம் தவிர, உருவமாகக் காட்டுகிற சிவனுக்கெல்லாம், கையில் கொழு, மழு, கோடரி, அரிவாள், ஈட்டி, வேல், சூலாயுதம், அப்புறம் கொஞ்சம் பக்குவப்பட்ட பிறகு திரிசூல ஆயுதம், அதற்குமேல் பக்குவ மேற்பட்ட பின் வில், சக்கரம் இப்படியாக உள்ளனவே. அகிம்சை எங்கே போகிறது? பேரோ, சைவக் கடவுள் - அதற்குக் கத்தியும், கொழுவும், மழுவும் ஆயுதம், ஆயுதம் இல்லாவிட்டால் ஏது சைவம்? சமணர்களை வெட்டி, குத்தி, கழுவில் ஏற்றித் தீர்த்த பிறகுதானே சைவம் மிஞ்சிற்று? சமணர்களிடம் ஆயுதம் இல்லாத காரணத்தாலேயே சமணம் அழிந்தது. சைவம் ஆயுதத்தினாலேயே மிஞ்சிற்று. ‘சைவம்’, ‘அன்பு’ என்பதெல்லாம் தாசியின் காதல் போன்றதே.
திருச்சியில் 21-10-1956-ல் சொற்பொழிவு, (‘விடுதலை’,25.10.19