அறிவும் மானமும் கெட்டது ஏன்?

ஜீவப் பிராணிகளில் மனிதனையும் மிருகம் பறவை முதலிய மற்ற பிராணிகளையும் பிரித்துக் காட்டுவதற்கு அறிகுறியாய் உள்ள குணங்கள் இரண்டே இரண்டு குணங்கள் தாம். அவை, பகுத்தறிவு - தன்மானம் என்பனவாகிய இரண்டுமேயாம். அதாவது, ‘அறிவும் மானமுமே மக்கள் தன்மை’ என்பதற்கு ஒப்ப அவை இரண்டும் இல்லாதார் மக்களல்லாதாரேயாவர். இன்றைய மனித வாழ்வில் அவ்விரண்டிற்கும் இடமில்லாமலே போய்விட்டது. மனிதன் பிறக்கும்போது அப் பிறப்பு இயற்கை அமைப்பில் அறிவு பெறும் சக்தி தான் அமையப் பெற்று இருக்கிறான். அனால், அறிவு பெற்று இருக்கவில்லை என்றாலும் வளர்ச்சியில் அறிவு பெற வேண்டியவனாகிறான்.

அப்படிப் பெறவேண்டிய அறிவில் தலையாயதும் வாழ்க்கைக்குப் பயன்படத்தக்கதும் ஆனது இயற்கையின் இயல்பை, தன்மையை உணர்வதேயாகும். ஆனால், மனிதப் பிறவியில் மனிதன் இயற்கையை உணர்ந்து கொள்ள முடியாதபடி மதத்தையும் கடவுளையும் கொண்டு தடுக்கப் பட்டுவிட்டான். கடவுளும் மதமும் தான் இயற்கையை அறியும் தன்மையைக் கெடுத்துவிட்டன. அவை மக்கள் அறிவு வளர்ச்சிக்கே முட்டுக்கட்டையாகிவிட்டன.

கடவுளும் மதமும் இயற்கையை அறியுந் தன்மையைக் கெடுத்து விட்டன என்பது மாத்திரமே அல்லாமல், நமது கல்வி என்பதும் ‘புண்ணில், புழுவும் ஏற்பட்டுவிட்டது’ என்று சொல்வதற்கு ஒப்ப, கடவுளையும் மதத்தையும் தாண்டித் தானாக வளர வாய்ப்பிருக்கும் துறையையும் அடைத்துவிட்டது. மதத்தால் ஏற்படும் முட்டாள் தனத்தைவிட, ‘கல்வி’யால் ஏற்படும் முட்டாள்தனம் மிகவும் கேடானது என்று சொல்லும்படியாகக் கல்வி ஏற்பட்டுவிட்டது. எப்படி எனில், மதத்தால் அறிவு வளர்ச்சி குன்றுகிறது என்று ஏற்பட்டு விட்டால், ‘கல்வியால்’ அயோக்கியத் தன்மை - அதாவது மனிதனை மனிதன் மோசடி செய்து வாழும் தன்மை ஏற்பட்டு, பொய் பித்தலாட்டங்களாலேயே மனிதன் வாழ்வு நடத்தும்படியான - நடத்தித் தீரவேண்டியதான தன்மை ஏற்பட்டு வருகிறது.

இதற்குக் காரணம், கல்வியை மதக் கல்வியாக - மதத்தை அனுசரித்த கல்வியாக ஆக்கியதும், ஆசிரியர்கள் உண்மையான ஆசிரியர்களாய் இல்லாமல் வயிறு வளர்க்க ஆசிரியர் வேலை கற்ற ஆசிரியர்களைக் கொண்டும் - அந்த ஆசிரியர்களும் அடிமைக் கல்வி கற்ற அடிமை ஆசிரியர்களாக இருந்ததும், இருப்பதுமேயாகும். ஆசிரியன் என்பவன் இயற்கை அறிவு பெற்றவனாக - அதில் மேம்பட்டவனாக - உலக அனுபவம் பெற்றவனாக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவன்தான் ஆசிரியர் தன்மைக்கு அருகதை உடையவனாவான். நம் ஆசிரியர்களுக்கு - அதாவது, ‘வைஸ்சான்ஸ்லர்’, ‘டைரக்டர் ஆஃப் எஜுகேஷன்’, ‘பிரின்ஸ்பால்கள்’ முதற்கொண்டு ‘செகண்டரி கிரேட் டீச்சர்’, ‘எஜுகேஷன் மினிஸ்டர்’ என்பவர்கள் வரை யாருக்காவது அத்தன்மை உண்டா? சிலருக்குக் கொஞ்சம் உண்டு என்றாலும் - அதை அவர்கள் கல்வித் துறையில் பயன்படுத்த உரிமை உண்டு என்றாவது, யாராலாவது சொல்ல முடியுமா?

ஆகவேதான், மக்கள் அறிவு வளர்ச்சியைக் கடவுள், மதம் ஆகியவை கெடுத்ததானது ஒரு பகுதி என்றும், ‘கல்வி’ கெடுத்தது மற்ற மீதிப் பகுதி என்றும் சொல்ல வேண்டியதாயிற்று. அறிவின் தன்மை இத்தகையது என்றால், இனி மானத்தின் தன்மை எத்தகையது என்று பார்த்தால், அடியோடு மானம் கெட்டவனே சிறந்த மனிதனாகப் பாவிக்கும்படியான அளவுக்கு மானமற்ற தன்மை மதிப்புப் பெற்று விட்டது.

மனிதனுக்கு மானம் எவ்வளவு முக்கியமானது என்பதை மக்கள் உணர்ந்து அதற்கு மதிப்புக் கொடுத்தால், மனித வாழ்வில் கடுகளவுகூட குறையும் ஒழுக்கக்கேடும், அசவுகரியமும் ஏற்பட இடமிருக்காது. மனிதன் மானத்தில் இலட்சியமற்றவனாக ஆகிவிட்டதினாலேயே பகுத்தறிவுள்ள மனித ஜீவனின் கூட்டு வாழ்வு - காட்டில் கெட்ட மிருகங்களிடையில் வாழும் தற்காப்பற்ற சாது ஜீவன்கள் தன்மையாக மனிதன் நிலைமை ஆகிவிட்டது. நம் நாட்டில் மக்களிடத்தில் மான உணர்ச்சியைத் தூண்ட சாதனமே இல்லாமல் போய்விட்டது. இதற்கு நம் சமுதாய வாழ்வு அமைப்பும், பொருளாதார அமைப்பும் பெரும் காரணமாக இருந்தாலும், இன்றைய அரசியலமைப்பு எல்லாவற்றையும் விட மேம்பட்ட காரணமாக இருந்துவருகிறது.

சமுதாயத் துறையில், மேல்பிறப்பு - கீழ்ப்பிறப்பு என மக்களைப் பிரித்து அமைத்த பிறகு, கீழ்ப்பிறப்பில் பட்ட மக்களுக்கு மான உணர்ச்சி என்பது செயற்கையால் போலியாகத் தோன்றி மறையுமே அல்லாது இயற்கையான உணர்ச்சி அச்சமுதாயதுக்கு எப்படி இருக்க முடியும்? மனித சமுதாயத்தில் அதோடு கூடவே ‘குச்சிக்கார தாசி பிழைப்பு’ - அதற்கொரு சமுதாயம்; துரோக எண்ணமே கை முதலாக உடைய வியாபாரத்துறை - அதற்கொடு கூட்டம்; பொய்யும் பித்தலாட்டமும் மனதறிந்து பயன்படுத்தித் தொழில் செய்து வாழும் வக்கீல் துறை - அதற்குப் பெரும் ஸ்தாபனம் ஆகிய இவைகளுக்கு சமுதாயத்தில் மரியாதையும் உயர் வாழ்வும் ஆகிய தன்மைகளும் இருந்து வருமானால், மக்களுக்கு மானத்தைப் பற்றிய, ஒழுக்கத்தைப் பற்றிய கவலை எதற்காக வரவேண்டும்?

ஒழுக்ககேடு என்பது மானத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒழுக்கமுள்ளவன் மானியாய் இருப்பான்; மானி, ஒழுக்கமுள்ளவனாக இருப்பான்.அறிவு என்பது இயற்கையைப் பற்றிய தெளிவை அடிப்படையாகக் கொண்டது. அறிவுள்ளவன், இயற்கைவாதியாய் இருப்பான்; இயற்கை வாதி, அறிவாளியாய் இருப்பான். ஒழுக்கம் என்றால் மானம் என்றும் - ஒழுக்கமுடையவன் என்றால் மானி என்றும் கொள்ளலாம். அதுபோல், அறிவு என்றால் இயற்கை என்றும் அறிவாளி என்றால் இயற்கையை அறிந்தவன் என்றும் கொள்ளலாம். ஆகவே, மனித சமுதாயத்துக்கு அல்லது தனி மனிதனுக்கு கூட்டு வாழ்க்கைக்கும் மனிதன் ஓர் உயர்ந்த பிறவி என்பதற்கும் அத்தியாவசியமானவை அறிவும் மானமும் என்பதும், இவை இரண்டும் இன்று மக்களிடையில் இல்லாமல் போய்விட்டன என்பதும், அதற்கு முக்கியக் காரணம் கடவுளும் மதமும் கல்வியும் சமுதாய - பொருளாதார அரசியல் அமைப்பும் ஆகும் என்பதும் எனது அபிப்பிராயமாகும்.
- ‘விடுதலை’ - தலையங்கம், 2.1.1950