அரசு சாராத அமைப்புகள் யுத்தத்துக்கு துணைபோகும் கிரிமினல்களே

அரசுசாராத அமைப்புக்கள் எப்படிப்பட்ட யுத்த கிரிமினல்கள் என்பதற்கு, இலங்கை யுத்தம் சிறப்பான எடுத்துக்காட்டாகி வருகின்றது. மனித விரோத யுத்தத்தை நடத்துபவன் மட்டுமல்ல, அதற்கு துணையாக அதன் பின்னணி தளத்தில் செயற்படுபவனும் குற்றவாளி தான்.

 

 

புலியொழிப்பு என்ற பெயரில் காட்டுமிராண்டித்தனமாக பேரினவாதம் தமிழ் மக்கள் மீதே யுத்தம் செய்கின்றது. இந்த யுத்தத்தின் பின்னணியில், தன்னார்வக் குழுக்கள் யுத்தத்துக்கு துணையாக செயலாற்றுகின்றன.

 

யுத்தம் செய்பவன் இழைக்கின்ற மனிதக் குற்றத்தை மூடிமறைக்கின்ற, அதை சாந்தப் படுத்துகின்ற நடவடிக்கைகள் தான், தன்னார்வக் குழுக்களின் செயல்பாடுகள். இது தான் அவர்களின் அரசியல் நோக்கம். இதன் மூலம் யுத்தத்தை மேலும் நடத்தவும், யுத்தம் நடத்துபவன் மக்களிடம் அம்பலமாகாது இருக்கவும், யுத்தப் பின்னணியை கழுவித் துடைக்கின்ற வேலையை இந்த அரசு சாராத தன்னார்வக் குழுக்கள் செய்கின்றன. யுத்தத்தின் விளைவை எதிர்கொள்ளும் மக்கள் கூட்டமும், அதைச் சுற்றியுள்ள மக்களும், இதை சுயமாக எதிர்கொள்ளும் ஆற்றலை நலமடிப்பதன் மூலம், ஒரு சமூகத்தின் சுய இருப்பை நலமடிப்பதே இதுவாகும்.

 

மனித துயரங்களையும், அவலங்களையும் போக்குதல் என்ற பெயரில், யுத்தத்துக்கு கைகொடுத்து உதவுகின்ற பணியைத்தான், இலங்கையில் அரசுசாராத நிறுவனங்கள் வெளிப்படையாகவே செய்கின்றன. பேரினவாத அரசு இயந்திரம் இராணுவ சர்வாதிகாரமாகி, அது நடத்துகின்ற இன அழித்தொழிப்பு, இன்று அனைத்து தரப்பாலும் என்றுமில்லாத வகையில் ஊக்கப்படுத்தப்படுகின்றது. இதற்கு ஊக்கத்தையும் ஆக்கத்தையும் ஏகாதிபத்திய நிதியில் இயங்கும் இந்த தன்னார்வக் குழுக்கள் செய்கின்றன.

 

யுத்தத்தில் சம்மந்தப்பட்டவர்கள், யுத்தம் ஏற்படுத்தும் மனித அவலத்தை போக்க வேண்டிய உறுப்புகள் அல்ல என்பதே, தன்னார்வக் குழுக்களுக்கு பணம் வழங்கும் எகாதிபத்திய அரசியல் நோக்கமாகும். நிவாரணத்தை வழங்கும் தேவையில் இருந்து, அந்த பொறுப்பில் இருந்து, யுத்தம் செய்பவனை விடுவிப்பதன் மூலம், யுத்தத்தின் பின்னணி ஊக்குவிக்கப்படுகின்றது. உலகமயமாதல் அரசு இயந்திரம் என்பது, ஏகாதிபத்திய நலனை பாதுகாக்கும் ஒரு பொலிஸ் நிறுவனம் தான் என்பதை, இலங்கையின் யுத்த பின்னணி எடுப்பாக உலகுக்கு எடுத்துக்காட்டுகின்றது.

 

பேரினவாத சிங்கள இராணுவம் புலிகள் ஒழிப்பு என்ற பெயரில், தமிழ் மக்களை இராணுவ ரீதியாகவே ஒடுக்குகின்றது. இதற்கு துணையாக இதன் பின்தளத்தில், தன்னார்வக் குழுக்களின் கிரிமினல் செயல்பாடுகள் அமைந்துள்ளது.

 

தமிழ் மக்களை புலிகளின் உருவாக்கத்துக்கு முன்னமே, ஒரு இனம் என்ற ரீதியில் ஒடுக்கியவர்கள் இதே சிங்கள பேரினவாதிகள் தான். காலகாலமாக நடத்திய அதே ஒடுக்குமுறையைத் தான், இன்று புலிகளின் பெயரில் அவர்கள் மறுபடியும் தொடருகின்றனர்.

 

சமாதானத்தின் பெயரில் ஒப்பந்தங்கள், இனப்பிரச்சனைக்கு தீர்வை காணுதல் என்ற பெயரில் வகைவகையான குழுக்கள், கூட்டங்கள், உரைகளை நடத்துகின்ற பேரினவாத அரசு இயந்திரத்தின் நோக்கம், தமிழ் மக்களை அழிப்பதை இதன் மூலம் மூடிமறைப்பது தான். அப்படிப்பட்ட நிகழ்ச்சி நிரலின் ஒரு அங்கம் தான், தன்னார்வக் குழுக்களின் மனிதாபிமான செயல்பாடுகள்.

 

இனவழிப்பு யுத்தத்தில் பேச்சுவார்த்தை முதல் தன்னார்வக் குழுக்களின் செயல்பாடுகள் அனைத்தும் ஒன்றுபடுத்தப்பட்டுள்ளது. அனைத்தும் இராணுவ நடவடிக்கையுடன் ஒருங்குகிணைக்கப்பட்டு செயற்படுத்தப்படுகின்றது. இந்த நிகழ்ச்சி நிரல் இலங்கையில் அப்பட்டமாக காணப்படுகின்றது. இராணுவம் எங்கு யுத்தத்தை தொடங்குகின்றதோ, அங்கு இந்த தன்னார்வக் குழுக்கள் உடனடியாக பின்னணியில் செயலாற்றத் தொடங்குகின்றது.

 

இந்த அரசு சாராத தன்னார்வக் குழுக்களை உருவாக்கி அதன் செயல்பாட்டுக்குரிய நிதியையும் ஏகாதிபத்தியம் என்ற பிசாசே வழங்குகின்றது. ஏகாதிபத்திய நலன்களையும், ஏகாதிபத்திய நலன் சார்ந்த அரசின் நலன்களையும் பாதுகாக்கின்ற, மக்களிடையே அது அம்பலமாகாது இருக்கின்ற அரசியல் தான், அரசுசாராத நிறுவனங்களின் நோக்கமாகும்.

 

உலகமயமாதல் பொருளாதார கட்டமைப்பை உருவாக்கி அதில் மிதக்கின்ற ஏகாதிபத்தியம், மனித குலத்தின் அழிவில் தான் இதைச் சாதிக்க முடிகின்றது. மனித அழிவும் அவலமும், சமூக ரீதியான எழுச்சியாக மாறக் கூடாது என்பதற்காக, அவன் உருவாக்கி அவன் கொடுக்கும் பணத்தில் இயங்குவது தான் இந்த அரசுசாராத தன்னார்வக் குழுக்கள்.

 

ஏகாதிபத்திய பணத்தில் அவனின் நலனை பூர்த்திசெய்வது தான், இதன் அடிப்படை அரசியல் நோக்கமாகும். ஏகாதிபத்தயத்தின் தயவில் இயங்கும் இலங்கை பேரினவாத இராணுவ ஆட்சியை, ஏகாதிபத்தியம் தக்கவைக்க முனைகின்றது. அதற்கு தன்னார்வக் குழுக்கள் உறுதுணையாக செயல்படுகின்றது. பேரினவாத இன ஆக்கிரமிப்புக்கு உறுதுணையாக, அதன் பின்னணி தளத்தில் செயல்படுகின்றது.

 

இனவழிப்பை நடத்தும் இராணுவ நடவடிக்கையின் விளைவுகள் ஏற்படுத்தும் மனித துயரங்கள், வெளி உலக்கும் உலக மக்களுக்கும் தெரியாது மூடிமறைக்கின்ற சதியை செய்வது யார் என்றால், இந்த தன்னார்வ ஏகாதிபத்திய குழுக்கள் தான். இந்த தன்னார்வக் குழுக்களின் நோக்கமும் கருசனையும், அந்த மக்கள் இந்த அவலத்தின் விளைவை சுயமாக புரிந்து அவர்கள் செயல்படாது தடுப்பது தான். மக்கள் இதை சுயமாக எதிர் கொள்ளும் ஆற்றல் ஏற்படாத வண்ணம், அதை நலமடித்து வருகின்றனர். இதனால் தான் ஓடோடிச் சென்று உதவுதாக காட்டி, மக்களின் சமூக செயல்பாட்டை நலமடிப்பதே இதன் அரசியல் பணியாகும்.

 

மற்றவனை நம்பி இருக்க கூறும் ஒரு சமூக இருப்பை, சமூக இழிவை புகுத்துகின்ற ஏகாதிபத்திய கிரிமினல்கள் தான், அரசுசாராத தன்னார்வ நிறுவனங்கள். இப்படி இந்த நோக்கில் இக் குழுக்களின் செயல்பாடுகள் கிரிமினல் மயப்படுத்தப்பட்டுள்ளது. ஏகாதிபத்திய நோக்கத்தையும், பேரினவாத நோக்கத்தையும் ஒருங்கே பூர்த்தி செய்கின்ற பேரினவாத இனவழிப்பு யுத்தத்தின் பின்னணியை, அவன் கொடுக்கும் பணத்தில் சாந்தப்படுத்துகின்றவர்கள் கிரிமினல் மயப்படுத்தப்பட்ட போர் குற்றவாளிகன் தான்.

பி.இரயாகரன்
05.09.2007