Language Selection

சமுதாய சீர்திருத்தம் என்பது வெறும் சாதியை பற்றிப் மட்டும் பேசுவது என்பது அல்ல; சமயத்தைப் பற்றியோ, "அரிஜனங்கள்' என்று கூறப்படுபவர்களைப் பற்றியோ, நிலம் இல்லாதவர்களைப் பற்றியோ பேசுவது முக்கியம் அல்ல. இவை சாதாரண விஷயம். இதற்கெல்லாம் காரணம் எவை என்று பார்க்க வேண்டும். "அரிஜனங்'களுக்கு வீடு இல்லை என்றால், யார் என்ன பண்ணுவது? ஏன் அவர்களுக்கு வீடு இல்லை? எனக்கு ஏன் 150 வீடுகள் இருக்கின்றன? அரை ஏக்கர் நிலம்கூட ஏழைகளுக்கு இல்லை. ஏன் இல்லை? ஏன் இந்த நிலை? ஒருவனுக்கு 5,000 ஏக்கர் இருக்கின்றது என்றால் எப்படி வந்தது? யாரை ஏமாற்றி எழுதி வாங்கினான்? இந்தச் சீர்கேட்டை ஒழிக்க – பரிகாரம் காண "அரிஜனங்'களுக்கு வீடு கட்டிக் கொடுப்பதோ, ஏழை மக்களுக்கு அரை ஏக்கர் நிலம் வாங்கிக் கொடுப்பதோ போதுமா?

தோழர்களே! இந்தக் கோவையை எடுத்துக் கொள்ளுங்கள். இங்கு கொசுத் தொல்லை ஏராளமாக இருக்கின்றது. இதற்குப் பரிகாரம் தேட, ஆளுக்கு ஒரு கொசுவலை வாங்கிக் கட்டிக் கொண்டு படுங்கள் என்று கூறினால் போதுமா? உள்ளவன் வலை வாங்கிக் கட்டிக் கொள்ளுகிறான். வசதியற்றவன் வலைக்கு எங்கே போவான்? ஒருவன் யோக்கியமாக இருந்து கொசுவால் வரும் மலேரியா காய்ச்சலுக்குக் கொய்னா தின்றால் போதும் என்று கூறுவானா? என்ன சொல்ல வேண்டும்? நகரில் சாக்கடை நீர் கசுமாலங்கள் தங்குவதன் காரணமாக கொசு உற்பத்தி பெருகுகின்றது. அதன் மூலம்தான் மலேரியா காய்ச்சல் வருகின்றது. எனவே சாக்கடை நீர் கசுமாலங்களை அப்புறப்படுத்துங்கள். இதன் மூலம்தான் கொசுத் தொல்லை யும், தொற்று நோயையும் ஒழிக்க முடியும் என்றுதானே கூறுவான். இதை விட்டுவிட்டு கொய்னாவும், மருந்தும்தான் சாப்பிட வேண்டும் என்று கூறினால் டாக்டர்தான் பிழைப்பான்.

சும்மா பணக்காரன் ஏழை என்ற வித்தியாசம் கூடாது என்று கொஞ்சம் பணத்தைப் பணக்காரனிடம் இருந்து வாங்கிக் கொடுத்தால், பணக்காரன் ஒழிந்து விடுவானா? இப்படிச் செய்தால் போதுமா? நீங்கள் நன்கு சிந்தித்துப் பார்க்க வேண்டும். நம் நிலைமை வாழ்வு எல்லாம் எதனைப் பொறுத்து இருக்கின்றன? நம் கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர்கள் நடப்பு இவற்றைத் தானே பொறுத்து இருக்கின்றன? நாம் ஏன் சூத்திரன்? நாம் ஏன் இழிமகன்? நாம் ஏன் படிக்கக் கூடாதவன்? நாம் ஏன் வீடு இல்லாமலும், நிலம் இல்லாமலும் இருக்கின்றோம். நாம் ஏன் நாள் முழுவதும் பாடுபட்டும் அரை வயிற்றுக் கஞ்சிக்கு வழியில்லாதவர்களாக இருக்கின்றோம். எல்லாம் நம் கடவுள், மதம், சாஸ்திரம் காரணமாகத்தானே?

சமுதாய சீர்த்திருத்தத்திற்கு வந்தவருக்கு எந்தவிதத் தொடர்பும் பற்றும் இருக்கக் கூடாது. கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர் நடப்பு ஆகியவற்றில் பற்று இருக்கக் கூடாது. அது மட்டும் அல்ல. நாட்டுப் பற்று, மொழிப் பற்று முதலியனவும் இருக்கக் கூடாது. இந்தப் பற்றுகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் மனதில் புகுந்து இருந்தும், இவற்றால் ஒன்றுமே ஆகவில்லை என்றால், நாம் என்ன பண்ண வேண்டும்? இந்தப் பற்றுகளை எல்லாம் விட்டு நம் மனதைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டாமா?

அடுத்து, அரசியலில் என்னைத் தவிர சன்னிதானம் அவர்களைத் தவிர, மற்றவர்கள் எல்லாம் அரசியலில் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கின்றீர்கள். நாட்டில் அரசன்தான் இல்லையே! பிறகு யாரைக் குற்றம் கூற அரசியல் என்று பெயர் வைத்துக் கொண்டு இருக்கின்றீர்கள்? நமக்கு யார் ராஜா? தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், ஏழைகள், பிச்சைக்காரர்கள், தற்குறிகள் – இப்படி எல்லோரும்தானே ராஜா! இவர்களிடம் ஓட்டு வாங்கிக் கொண்டு வந்து வெற்றி பெற்றுத்தானே ஆள்கின்றார்கள். பிறகு எப்படி தப்பு கூற முடியும்?

அடுத்து சாதி. சாதி ஒழிப்புக்காக 30 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் பாடுபட்டுக் கொண்டு வருகின்றோம். காமராசர் தமது ஆட்சிக் காலத்தில் நடைமுறையில் சாதி ஒழியும்படியாகத் திட்டம் போட்டு அமல் நடத்தினாரே! இன்றும் திட்டம் போட்டுக் கொண்டு உள்ளார். தாழ்த்தப்பட்ட இனத்தில் வந்தவருக்குப் பெரிய உத்தியோகம் எல்லாம் கொடுக்கின்றார். ஜில்லா சூப்பிரண்டு வேலை கொடுக்கின்றார். பார்ப்பனருக்குச் சர்க்கிள் இன்ஸ்பெக்டர், சப்இன்ஸ்பெக்டர் வேலை கொடுக்கின்றார். உயர் சாதிக்காரன் என்பதால் பார்ப்பன இன்ஸ்பெக்டர், தாழ்த்தப்பட்ட ஜில்லா சூப்பிரண்டை பறைய சூப்பிரண்டே என்றா கூப்பிடுவான்? பறைய சூப்பிரண்டைக் கண்டால் தொடை தட்டி, பார்ப்பான் சலாம் போட்டுத்தானே தீர வேண்டும். மேலும், தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கலெக்டர் வேலை கொடுக்க இருக்கின்றார். சேலத்தில் இன்று தாழ்த்தப்பட்டவர்தான் கலெக்டர். இப்படிப்பட்ட காரியங்களால்தான் சாதியை ஒழிக்க முடியுமே ஒழிய, ஒரு ஏக்கர், அரை ஏக்கர் நிலம் வாங்கிக் கொடுப்பதாலோ, வீடு கட்டிக்கொடுத்து விடுவதாலோ சாதி ஒழிந்துவிட ஏதுவாகாது.

11-1-1964

http://www.keetru.com/rebel/periyar/81.php