காசநோயற்ற எதிர்கால இலங்கையை நோக்கி...' என்ற கருப்பொருளில் காசநோய் தொடர்பான தேசிய வைபவம் நேற்று சனிக்கிழமை பண்டாரநாயக்க ஞபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உலக சுகாதார நிறுவனப் பிரதிநிதி உள்ளிட்ட மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இங்கு காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய வேலைத்திட்டப் பணிப்பாளர் டாக்டர் சந்திரா சருக்காலி கருத்துத் தெரிவிக்கையில்,

2010 ஆம் ஆண்டில் இலங்கையில் ஒரு இலட்சம் பேருக்கு 42 பேர் என்ற அடிப்படையில் காசநோயாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும்.

2015 இல் இந்த இலக்கு சனத்தொகையில் 30/100000 ஆகவும், 2050 இல் காசநோயை முற்றாக ஒழித்து விட வேண்டுமென்பதும் எமது தேசிய வேலைத்திட்டத்தின் இலக்காகும்.

அண்மைய காலங்களில் காசநோய் கட்டுப்பாட்டு விடயத்தில் ஊடகங்கள் பெரும் பங்காற்றி வருகின்றன. இதன் காரணமாக நோயாளர்களுக்குப் பயன்கள் ஏற்பட்டுள்ளன.

இதனால் ஒப்பீட்டளவில் 2005 ஆம் ஆண்டில் இனம்காணப்பட்ட காசநோயாளர்களின் எண்ணிக்கையைவிட 2006 ஆம் ஆண்டில் மிகக் குறைவான காசநோயாளர்களே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

2005 இல் சிகிச்சையைக் கைவிட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 8.2 சதவீதமாகும். இது 2006 இல் 6.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதேவேளை, 1982 இலிருந்து உலக காசநோய் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. காசநோயை உருவாக்கும் பெஸிவி வைரஸால் உலக சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கு பாதிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் வருடாந்தம் 100 மில்லியன் மக்கள் இந்நோயால் தாக்கப்படுகின்றனர். இவர்களுக்குள் சுமார் 8 மில்லியன் பேர் தீவிரமான காசநோய்த் தாக்கத்திற்கு ஆளாகி 20 இலட்சம் பேர் மரணமடைகின்றனர்.

காசநோய் உலகிலும் இலங்கையிலும் தொடர்ந்தும் ஒரு பொதுவான சுகாதாரப் பிரச்சினையாக இருந்து வருகிறது. காசநோய்க்கு எதிரான போராட்டத்திற்கு மொத்தச் சமூகத்தினதும் ஆதரவு அவசியமாகும் என்றார்.
http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1174823378&archive=&start_from=&ucat=2&