09272021தி
Last updateவெ, 24 செப் 2021 3pm

தலைமை ஏற்கும் தனித்திறமை

சிலர் மட்டும் முன்னால் நடக்கிறார்கள். அவர்களின் பின்னே அநேகம் பேர். தலைமை ஏற்பவர்களுக்கு, மற்றவர்களை தனது பின்னாக வரச் செய்யும் சக்தி எப்படி அமைந்தது? எப்போதாவது நீங்கள் எண்ணிப் பார்த்தது உண்டா? உலகில் எல்லாமே தற்செயலாக நடந்து விடுவதில்லை. தகுதியற்ற ஒருவர் தலைவராவது விபத்து மாதிரி. அவரால் நீடிக்க முடியாது. வரலாற்றில் நிலையான இடம் பெற்றவர்கள் எல்லாம் படிப்படியாக உழைத்து முன்னுக்கு வந்தவர்கள். அவர்கள் பட்ட சிரமங்களுக்கு அளவே இருக்காது.

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். யாரும் பிறவியிலேயே தலைவராகிவிடவில்லை. அவர்கள் உருவாகிறார்கள், உருவாக்கப்படுகிறார்கள். சிறு வயதிலேயே தலைமைக்குரிய மனோபாவத்தை பெற்றோர் அவர்களுக்குள் வளர்த்து விட்டிருப்பார்கள். ஒரு நிறுவனத் தலைவர், விளையாட்டுக் குழுவின் கேப்டன், ஆராய்ச்சித் துறை முதல்வர் என்று அவரவரின் பின்னணியை ஆராய்ந்தால் உண்மை விளங்கும்.

அதென்ன தலைமைக்குரிய மனோபாவம்? கேட்பீர்கள். மனதிடமும், சுயேச்சையான சிந்தனையும்தான் தலைமைக்குரிய திறமை. அது உள்ள குழந்தையை நீங்கள் அடையாளம் காண முடியும். அது தன் வயது ஒத்த குழந்தைகளின் பேச்சுக்கு இணங்கிப் போகாது. தான் நம்புகிறதையே அது பின்பற்றும். மற்ற குழந்தைகளையும் தன்னைப் பின்பற்றுமாறு செய்யும்.

இன்று விதைப்பது, இன்னொரு நாளில்தான் பலன் கொடுக்கும். தலைமை தாங்குகிற மனோபாவமும் அப்படித்தான். குழந்தைப் பருவத்தில் வகுப்புத் தலைமை மாணாக்கனாக இருப்பது, விளையாட்டு, மாணவர் மன்றம் போன்ற இதர நடவடிக்கைகளில் ஈடுபடுவது இவையெல்லாம் பின்னாள் உயர்வுக்கு இந்நாளில் போடப்படும் அடித்தளமாகும். தலைமைக்குரிய தகுதியை, தேர்வில் வாங்கும் மதிப்பெண்கள் நிரூபிப்பதில்லை.

நான்கு, ஐந்து வயதிலேயே எதிர்காலத் தலைவனை நீங்கள் இனம்கண்டு கொள்ள முடியும். அந்தக் குழந்தை பெரியவர்களை மட்டுமின்றி தன் வயதொத்தவர்களையும் மரியாதையாக நடத்தும். அதனுடைய பேச்சிலும், செயலிலும் தன்னம்பிக்கை மிளிரும். நகைச்சுவை உணர்வு கொண்டிருக்கும். தன்னுடைய விளையாட்டு கருவிகளை மற்ற குழந்தைகளுடன் மனமுவந்து பகிர்ந்துகொள்ளும். எதையும் அறிந்து கொள்கிற ஆவலை, எதையும் துணிச்சலுடன் தொடங்குகிற போக்கை வெளிப்படுத்தும்.

டீன்ஏஜ் பிள்ளைகளிடையே அவர்களை எப்படிக் கண்டுபிடிப்பது? அவர்கள் எப்போதும் புன்முறுவலுடன் காணப்படுவார்கள். தங்களை நல்லவிதமாக உணர்வார்கள். மற்றவர்களையும் அப்படியே உணரச் செய்வார்கள்.