மதுரையை அடுத்த யானைமலைஒத்தக்கடையில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த எவர்சில்வர் பாத்திர உற்பத்தித் தொழில், தாராளமயஉலகமயமாக்கலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 5000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டு வந்த இத்தொழிலில், தற்போது ஏறத்தாழ 2000 பேர் மட்டுமே வேலை செய்கின்றனர். அவர்களும் உரிய கூலி கிடைக்காமல் பட்டினியில் பரிதவிக்கின்றனர்.


 கூடுதல் கூலி கோரி தொழிலாளர்கள் போராடியதாலும், ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் தொழிலாளர்களின் கூலியைக் குறைத்து மோசடி செய்த முதலாளிகளை அம்பலப்படுத்தி தொழிலாளர்கள் சுவரொட்டி வெளியிட்டதாலும் ஆத்திரமடைந்த முதலாளிகள் கடந்த இரு மாதங்களாக உற்பத்தியையே நிறுத்தி, தொழிலாளர்களைப் பட்டினி போட்டு வருகின்றனர். சங்க நிர்வாகிகளை நீக்க வேண்டும்; சுவரொட்டி வெளியிட்டதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முத லாளிகள் எதிர் கோரிக்கை வைத்துப் பட்டறைகளைத் திறக்க மறுத்தனர். இக்கொடுமைக்கெதிராக பலமுறை மனு கொடுத்தும் அதிகார வர்க்கம் அசைந்து கொடுக்காததால், 18.6.08 முதல் பட்டினியால் தவிக்கும் தொழிலாளர் குடும்பங்களுக்காக கஞ்சித் தொட்டி திறக்கப் போவதாக சுவரொட்டி வெளியிட்டு, தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். ஆனாலும் முதலாளிகளோ அதிகாரிகளோ சலனமின்றிக் கிடந்ததால், முதலாளிகளின் கொட்டத்தை எதிர்த்து 28.6.08 அன்று மதுரைமேலூர் நெடுஞ்சா லையில் மறியல் போராட்டம் நடத்தினர். போலீசாரோ பேச்சு வார்த்தைக்கு அழைத்து ஏமாற்றி, முன்னணியாளர்களைக் கைது செய்தனர். இதை எதிர்த்து தொழிலாளர்கள் குடும்பத்தோடு போலீசு நிலையத்தை முற்றுகையிட்டு, கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர். இத்தனைக்கும் பிறகும் அதிகார வர்க்கமும் போலீசும் நீதித்துறையும் கொட்டமடிக்கும் முதலாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


 தாராளமயமாக்கலாலும்  முதலாளிகளின் திமிராலும் இன்று ஈராயிரம் தொழிலாளர் குடும்பங்கள் பட்டினிச் சாவுக்குத் தள்ளப்பட்டுள்ளன. கண்ணெதிரே நடக்கும் இக்கொடுமைக்கு எதிராக நின்று, தமது வாழ்வுரிமைக்காகப் போராடிவரும் தொழிலாளர்களுடன் அணிதிரண்டு போராடுவதே உழைக்கும் மக்களின் முன்னுள்ள உடனடிக் கடமை; நமது கடமை.
தகவல் : மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரைக் கிளை.