உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ''இந்த ஆண்டு முதல் தனியார் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கட்டணம் ரூ.32,500இல் இருந்து ரூ. 62,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது'' என்று கடந்த ஜூன் 6ஆம் தேதி அறிவித்தார்.


கல்வி வியாபாரிகளோ இந்தக் கட்டண உயர்வு தாங்கள் எதிர்பார்த்ததை விட 25,000 ருபாய் குறைவானது என்று ஒப்பாரி வைக்கின்றனர். கட்டண உயர்வு குறித்து ஆராய தமிழக அரசால் நியமிக்கப்பட்ட பாலசுப்பிரமணியன் கமிட்டி, கட்டணத்தை உயர்த்துவது குறித்து கல்வியாளர்களிடமும், பொதுமக்களிடமும் கருத்துக் கேட்டு, அதன்படி நடந்ததாகக் கூறுகிறார் பொன்முடி. இந்தக் கமிட்டியிடம் எந்தப் பொதுமக்கள், கல்வியாளர்கள் கட்டணத்தை உயர்த்தக் கோரினார்கள் என்பது இதுவரை தெரியவில்லை.


கடந்த ஆண்டு நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் ரூ.32,500 கட்டணமாகப் பெற்று பெற்று கல்வி வியாபாரிகள் சம்பாதித்தது மட்டும் 180 கோடி ரூபாய் என்கிறார்கள். இது வெறுமனே கணக்குக் காட்ட மட்டுமே. ஆனால் உண்மையில் ஒரு சீட்டிற்கு ரூ. 2.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை கட்டாய நன்கொடையாகவும், ஆண்டுக்கு ஒரு லட்சம் வரை கல்விக் கட்டணமாகவும் வசூலிக்கிறார்கள்.


கல்லூரிகள் அதிகக் கட்டணம் வசூலிப்பதாகக் கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து கூச்சலிடவே, சென்ற ஆண்டு 18 கல்லூரிகளிலும் அதன் நிர்வாகிகளின் வீட்டிலும் அதிரடி சோதனை நடத்தியது தமிழக அரசு. தனது வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகளிடம், ''என்ன, இப்போது வந்திருக்கிறீர்கள், அட்மிசன் டயத்தில் வந்திருந்தால் இன்னும் அதிகமாகக் கிடைத்திருக்குமே!'' என்று ஜேப்பியார் நக்கலாகக் கூறினாராம். அந்தச் சோதனைக்குப் பின்னர் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.


பொறியியல் கல்லூரி கட்டண உயர்வு குறித்து அறிவிப்பு வந்தவுடன் டாக்டர் ராமதாஸ் ''இந்த அநியாயத்தைக் கண்டித்துப் போராட்டங்களை நடத்துவோம். சுயநிதிக் கல்லூரிகளைக் கட்டுப்படுத்த வேண்டும்'' என்று பொன்முடிக்கு எதிராக அறிக்கைப் போரைத் தொடங்கினார்.


ஆனால், ராமதாசின் கட்சித் தலைவர் கோ.க.மணிதான், கட்டணத்தை நிர்ணயிப்பது பற்றி மார்ச் மாதம் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு கையெ ழுத்தும் போட்டவர். இதைக் குறிப்பிட்ட கருணாநிதி, ''இக்கட்டண உயர்வானது, பொறியியல் கல்லூரிகளில் சட்டவிரோதமாக வசூலித்துவரும் நன்கொடையைக் கட்டுப்படுத்தவே கொண்டு வரப்பட்டது'' என்று நியாயப்படுத்தினார்.


காங்கிரசுக் கட்சிக்கு சென்ற மாதம் வரை தலைவராக இருந்த ராமதாசின் சம்பந்தி கிருஷ்ணசாமி, ''காமராஜர் இருந்திருந்தால் கல்விக் கட்டண உயர்வுக்காகக் கண்ணீர் வடித்திருப்பார்'' என்று அறிக்கை விட்டார். ஆனால் அதே காங்கிரசைச் சேர்ந்த எதிர்க்கட்சித்தலைவர் சுதர்சனம் தான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கட்டண உயர்வுக்காகக் குரல் கொடுத்தவர். ஏனென்றால், சுதர்சனம் பல பொறியியல் கல்லூரிகளுக்கு அதிபர்.


சி.பி.எம்.மின் இந்திய மாணவர் சங்கப் பொதுச் செயலாளர் செல்வா , ''கட்டணத்தை உயர்த்துவதற்கு முன்பு கல்லூரிகளை மூன்று வகையாக இனம் பிரித்துக் கட்டணத்தை அறிவிக்கலாம்'' என்றார். உயர்கல்வி விற்பனைச் சரக்காக ஆக்கப்பட்டுள்ளதை எதிர்த்துப் போராடாமல், வகை பிரித்து வசூலிக்கக் கோருகிறார்கள், போலி கம்யூனிஸ்டுகள். இக்கட்சியின் இளைஞர் அமைப்பின் ''டைபி இளைஞர் முழக்கம்'' பத்திரிகைக்கு ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு விளம்பரம் தரும் சுயநிதிக் கல்லூரிகளின் முதலாளிகளுக்கு எதிராகவா, இவர்கள் போராடப் போகிறார்கள்?


சி.பி.ஐ.யின் சென்னை மாவட்ட செயலாளர் வீரபாண்டியன், ''ஏழை மாணவர்களைப் பாதிக்கும் வகையில் கட்டணம் உயர்த்தப்பட்டால் போராட்டத்தில் இறங்குவோம்'' என்கிறார். யாருக்கு எதிராக? சி.பி.ஐ. அலுவலகத்துக்குக் கணிப்பொறிகளை அன்பளிப்பாகத் தந்த "கல்வி வள்ளல்' ஜேப்பியாருக்கு எதிராகவா?


இந்தக் கட்டண உயர்வால் மாணவர்களில் 70 சதவீதம் பேர் கடனாளி ஆவார்கள். கந்துவட்டிக் கடன், விவசாயக் கடன் போல ஏழைகளுக்கு வங்கிகள் தரும் கல்விக்கடனால் அல்லல்படுவார்கள் என்று ராமதாசு சொல்வது உண்மைதான். ஆனால் அவர் யாரை எதிர்த்துப் போராடுவாராம்? தனது மாநாடுகளுக்கு இலவச வாகன வசதி செய்து தரும் ''தருமபிரபு'' ஜேப்பியாரை எதிர்த்தா?


அரசு, கல்வி முதலாளிகளுக்கு மேலும் ஒரு சலுகையாக பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களில் 5ஐ அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கும் குறைத்துள்ளது. எதற்காகவாம்? நிறைய மாணவர்கள் பொறியாளர்களாகிட வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்கா? இல்லை; சென்ற ஆண்டு 14 ஆயிரம் சீட்டுகள் விற்பனையாகாமல் தொழில் நட்டமாகி விட்டதாகக் கல்வித் தந்தைகளின் அழு குரல் கேட்டுத்தான் பொன்முடி இவ்வாறு அறிவித்தார்.


தனியார் பொறியியல் கல்லூரிகள், இலட்சக்கணக்கில் பணத்தைப் பிடுங்கிக் கொண்டு தரமான கல்வியைத் தருவதும் இல்லை. பல கல்லூரிகளில் ஆய்வகங்களோ, நூலகங்களோ கிடையாது. தகுதி வாய்ந்த விரிவுரையாளர்கள் கிடையாது. இக்கல்லூரிகளில் படித்து முடித்து விட்டு வெளியே வரும் மாணவர்களில் 30 சதவீதம் பேருக்கு மட்டுமே பொறியியல் திறன் உள்ளதாகக் கூறுகிறார், தனியார் வேலைவாய்ப்பகமான ''மாஃபா''வின் தலைவர் பாண்டியராஜன்.


இதுவொருபுறமிருக்க, தமிழக மாணவர்களின் தலையில் இடியை இறக்கியதைப் போல, சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரி உள்ளிட்ட சில அரசுக் கல்லூரிகளைப் பல்கலைக்கழகங்களாக ஆக்கப் போவதாக அறிவித்திருக்கிறது, தமிழக அரசு. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அரசு கல்லூரிகளைப் பல்கலைக்கழகங்களுடன் இணைத்ததை மாணவர்களுடன் சேர்ந்து கண்டித்துக் குரல் கொடுத்தவர் மு.க. என்பது நம் நினைவில் ஆடிவிட்டுப் போகிறது. அரசு கல்லூரிகள் பல்கலைக்கழகங்களாக ஆக்கப்படும் பொழுது, அதன் தரம் உயருகிறதோ இல்லையோ, நிச்சயம் கல்விக் கட்டணம் உயர்ந்துவிடும் வாய்ப்பு உள்ளது.


மேல் மருவத்தூர் அம்மா, எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் நடத்தும் நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், சவீதா பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில தனியாருக்கு இந்தக் கல்வியாண்டில் தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கிக் கொள்ள மைய அரசால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது; மைய அமைச்சர் ரகுபதி, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில கல்வி முதலாளிகள் மருத்துவக் கல்லூரி அனுமதிக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.


கிராமப்புற மருத்துவ சேவை கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்துப் போராட்டம் நடத்திய தமிழக மருத்துவக் கல்லூரி மாணவர்கள், மருத்துவக் கல்வியில் தனியார் புற்றீசல் போல நுழைந்திருப்பதைக் கண்டு கோபம் கொள்ளவில்லை. இந்த மௌனத்தைக் கோழைத்தனம் என்பதா, இல்லை காரியவாதம் என்பதா?


முதலாளித்துவம் உச்சத்தில் இருக்கும் அமெரிக்காவில் கூட கல்வியில் 22 சதவீதம்தான் தனியார்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் உயர்கல்வியில் 96 சதவீதம் தனியாருக்குத் திறந்து விடப்பட்டுள்ளது.


தமிழக மக்களைக் கொள்ளையடிப்பதற்காகவே கல்லூரிகளைத் திறந்து நடத்தி வரும் தனியார் முதலாளிகளின் ஆதிக்கம், ஆரம்பக் கல்வி தொடங்கி உயர்கல்வி வரை அனைத்து நிலைகளிலும் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். இல்லையென்றால், ஏழைகளுக்கு உயர்கல்வி மட்டுமல்ல, பள்ளிக்கல்விகூட எட்டாக் கனியாகிவிடும்.


· அழகு