அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தோடு, இதுவரை கண்டிராத வகையில் பெட்ரோல்டீசலின் விலைகளும் கடுமையாக உயர்த்தப்பட்டிருக்கின்றன. எரி எண்ணெய் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் வர்த்தகத்தில் தலைவிரித்தாடும் ஆன்லைன் சூதாட்டமே இந்த கிடுகிடு விலையேற்றத்துக்குக் காரணம். பகற்கொள்ளையடிக்கும் பன்னாட்டு நிதி நிறுவனங்களை விரட்டியடிக்கவும், விலையேற்றத்துக்குக் காரணமான தனியார்மயம் தாராளமயம் உலகமயத்தை வீழ்த்தவும் அறைகூவி ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமிழகமெங்கும் தாங்கள் செயல்படும் பகுதிகளில் வீச்சான பிரச்சாரத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றன.

 

தஞ்சையில், கரந்தை சோழன் போக்குவரத்துக் கழக பணிமனை அருகே 12.7.08 அன்று மாலை ம.க.இ.க., பு.மா.இ.மு. ஆகிய அமைப்புகள் இணைந்து எழுச்சிமிகு தெருமுனைக் கூட்டத்தை நடத்தின. ஜூன் 22,24,28 ஆகிய தேதிகளில் மதுரை மாவட் டம் ஆரியப்பட்டி, உச்சப்பட்டி, உசிலம்பட்டி, செல்லம்பட்டி, கருமாத்தூர், செக்கானூரணி முதலான பகுதிகளில் வி.வி.மு. சார்பில் கிராமங்கள்தோறும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. 10.7.08 அன்று திருமங்கலத்தில் ""பெட்ரோல் டீசல் விலை உயர்வு: கொள்ளையடிப்பவர்கள் யார்?'' என்ற தலைப்பில் பொதுக்கூட்டமும் ம.க.இ.க. மையக்கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.


இருட்டடிப்பு செய்யப்பட்ட உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டி மக்களைப் போராட அறைகூவிய இப்பொதுக் கூட்டத்துக்கு வர இயலாதவர்கள், பதிவு செய்யப்பட்ட பொதுக்கூட்ட உரையின் குறுந்தகடுகளை ஆர்வமுடன் வாங்கிச் செல்லுமளவுக்கு, இப்பொதுக்கூட்டமும் கலைநிகழ்ச்சியும் இப்பகுதிவாழ் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
— பு.ஜ. செய்தியாளர்கள்