மிழ் மக்களின் அபிலாசைகளென்பவை அதிகாரத்துவத்தை உள்ளார்ந்து நேசித்த தமிழ் மேட்டுக்குடிகளின் கோரிக்கையென்பதை நாம் பல முறைகள் கூறியிருக்கிறோம்.இந்த அதிகாரத்துக்கான நேசிப்பிடம் மக்களின் வாழ்வியல் சார்ந்த மதிப்பீடுகள்,அவர்களது உயிராதாரமான பொருள் வாழ்வு சார்ந்த கோரிக்கைகள் சிறிதளவும் அவர்களது(தமிழ் மக்கள்) நோக்கு நிலையிலிருந்து முன்வைக்கப்படவில்லை.இத்தகைய ஒரு அவலமான அரசியலைக் கடந்த காலத்துத் தமிழர்களின் ஓட்டுக் கட்சி அரசியல் செய்து வந்ததின் தொடர்ச்சியாகப் பற்பல அழிவுகள் நமக்கு வந்து சேர்ந்தன.


இத்தகையவர்களின் இருண்ட அரசியல் சூழ்ச்சிகளால் பலிகொள்ளப்பட்ட தமிழ்பேசும் மக்களின் பொருளாதார உயிர்வாழ்வானது சிதைந்து சின்னாபின்னமாகியபோது, நாம் அதைத் தொடர்ந்து அநுமதித்து வருவதற்கானவொரு அரசியலைத் தமிழரசுக் கட்சியென்ற "ஏகாதிபத்தியத்தின் கைக்கூலித் தமிழ் வக்கீல்கள் அடங்கியவொரு கூட்டம்" மிகக் கயமையானமுறையில் எமக்குள் திணித்தது.அது இலங்கைத் தேசிய இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளைத் தமது நலன்சார்ந்த மதிப்பீடுகளால் கிரகித்துக் கணித்துக்கொண்டு நம்மீது சவாரி செய்தது.இத்தகையவொரு பாரம்பரியமிக்க கட்சியின் காலவதியாகிப்போன தலைவர் ஆனந்த சங்கரிக்கு இந்திய அநுசாரணையுடன்,ஊக்குவிப்புடன்,பரிந்துரைப்போடு "யுனெஸ்கோ விருது" வழங்கப்படுகிறது.இது விருதுகள் குறித்துப் பிரமிப்புகளைக்கொண்ட தமிழர்களுக்குத் துரோகமாகவும்,தமிழ்பேசும் மக்களுக்குத் துரோகஞ் செய்த ஆனந்தசங்கரிக்கு வழங்குவது முறையில்லையென்றும் சிறார்கள் கருத்தாடுகிறார்கள்.


இங்கே இத்தகைய விமர்சனங்களுடாக மறைக்கப்படும் அரசியலைப் புரிவது அவசியம்.சகாத்திய அகடமி விருதிலிருந்து நோபல் விருதுவரை அரசியல் நோக்கம் மறைமுகமாக இருக்கிறது.இந்த அரசியலுக்குள் ஆதிக்க சக்திகளின் ஆர்வங்கள்,பொருளாதார,அரசியல் நோக்கங்கள் இருக்கின்றன.இதைக் காரணமாகக் கண்டுகொள்ள முடியாத தமிழ்ச் சிறார்களுக்கு "துரோகி ஆனந்த சங்கரிக்கு விருதா" என்ற ஆத்திரம்.இது இயல்பாக வரக்கூடியதுதாம்.தமிழ்பேசும் மக்களின் இன்றைய அவல நிலைக்குத் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தாய்க் கட்சியிலிருந்து அன்றய தமிழர் மகாசபை(மகாதேவா: ஐம்பதுக்கு ஐம்பது...) வரை ஆழம் காணமுடியாத துரோகங்கள் நிறைந்த வரலாறு காரணமாகிறது.இதையெல்லாம் கருத்தில்கொள்ளும்போது ஆனந்த சங்கரியென்ற அரசியல் சகுனிக்கு விருது வழங்க முனையும் இந்தியாவுக்குப் பல ஆர்வங்கள் காரணமாவது நாம் புரிந்துகொள்ளத் தக்கதுதாம்!


இந்த விருதுகளினூடாகத் தனது நலன்களைக் காப்பதற்கானவொரு அரசியல் தலைமையைத் தமிழ்பேசும் இலங்கத் தமிழர்களிடம் தோற்றுவித்து,ஒளிவட்டம் கட்டும்போது,இத்தகைய ஆனந்த சங்கரிகள் மக்களின் அகிம்சைத் தலைவர்கள்,ஜனநாயகத் தலைவர்கள் என்ற காவடி ஏற்றப்பட்டு, உலக அரசியல் அரங்குக்கு அறிமுகமாக்கப்படுவது இந்திய அரசியல் விய+கத்தை இலங்கைக்குள் இழுத்து வந்து, அதை உலக அரங்கில் நியாயப்படுத்துவதற்குத்தாம்.இலங்கையில் இதுவரை ஆயுதப்போராட்டத்தைச் செய்யும் புலிகளை வெறும் ஆயுதக் குறுங் குழுவாக்கிய இந்தியா, இப்போது அந்தக் குறுங்குழுவுக்கு நிகரானவொரு அரசியல் தலைமையைத் தமிழ்பேசும் மக்களுக்குள் திணிப்பதற்கும் அதையே தமிழ்பேசும் மக்களின் நியாயமான தீர்வுக்கானவொரு பெரும் சக்தியாவும் தூக்கி நிறுத்துவதில் இத்தகைய விருதுகள் முனைப்படைகின்றன.


சாரம்சத்தில் இலங்கையின் இனப்போராட்டமானது அந்நியத் தலையீட்டுக்குள் வீழ்த்தப்பட்ட வரலாறானது காலனித்துவக் காலத்திலிருந்தே தோற்றம் பெற்றிருப்பினும் அதை முற்றுமுழுதாக இந்தியச் செல்வாக்குக்குள் இறுகத் திணிப்பதற்கு இந்த ஆனந்த சங்கரிகள் அவசியமாகிறார்கள்.கூடவே ஆனந்த சங்கரியென்ற தமது கைக்கூலிக்கு சர்வதேச விளம்பரத்தையும், அங்கீகாரத்தையும் கோரும்போது, புலிகளின் கொலை அச்சுறுத்தலில் இருந்தும் தப்பிக்க வைப்பதற்கு இந்தியா மிகவும் பிரயத்தனப்படுகிறது.இன்றைய தமது நோக்கங்களைச் செவ்வனே செய்வதற்கும்,அதைக் "காலிப் பயல்" ஆனந்த சங்கரிய+டாக நியாயப்படுத்தவும், இந்த ஆனந்த சங்கரி அவசியமாகும்.இதைப் பொருட்படுத்திப் புலிகள் "ஆனந்த சங்கரியைப் போட்டால்" இலக்ஷ்மன் கதிர்காமனின் கொலை தந்த நெருக்கடியைவிட ஆனந்தசங்கரியின்மீதான கொலை மிகப்பெரும் அவப் பெயரையும் அரசியல் பின்னடைவையும் புலிகளுக்கு ஏற்படுத்தும்.இதை எதிர்பார்த்திருக்கும் இந்தியா நிச்சியம் பிறிதொரு சந்தர்ப்பத்தில் ஆனந்த சங்கரியைத் தனது கூலிப்படையால் ஒரு நாள் கொன்று, புலிகள்மீது அரசியல் பின்னடைவைச் செய்யும்.ஒரு கல்லில் இரு மாங்காய் விழுத்த முனையும் இந்திய-இலங்கை இராஜதந்திரத்தின் ஒரு வெளிப்பாடே இந்த விருதும்,ஒளிவட்டமும்.


ஆனந்த சங்கரிக்கு அறிவு மங்கிப் பதவி ஆசை,ஆனால் இலங்கை-இந்திய இராஜ தந்திரமோ தமிழ் மக்களை அவர்களது தலைமையாலயே கருவறுக்கிறது.இதில் இவர்கள் பெரிய சாதனையைச் சாதித்தே வருகிறார்கள்.

புலிகள் அரசியலைக் காவு கொடுத்து இன்று இருபது வருடங்களுக்கு மேலாகிறது.எப்போது துரையைப்பாவைக் கொன்றார்களோ அன்றே அவர்கள் அரசியல் மக்குகள் ஆனார்கள்.இதிலிருந்து மீண்டு ஒரு புது யுகம் தமிழ்பேசும் மக்களுக்கு உதயமாவதற்குப் புலிகள் தம்மைத் தயார்ப்படுத்தாதவரை இத்தகைய அந்நிய அரசியல் விய+கத்தை உடைத்தெறிய முடியாது.

புலிகள் என்ன செய்தாகவேண்டும்?

தமிழ்பேசும் மக்களின் நலன்களை மையப்படுத்திய கோரிக்கைகளை முன் வைத்து அவர்களைப் போராடத் தூண்டுவதும்,தமிழ் இடதுசாரிகளை தமது வன்முறைக்குப் பலியாக்காது அவர்களைச் சுதந்திரமாக இயங்க விடுவதும்,அத்தகைய தரணத்தில் மக்களின் நலன்சார்ந்து தமது அமைப்பை மத்திய குழுவின் ஆதிக்கத்துள் கொணர்வதும்,நியாயமான உட்கட்சி ஜனநாயகத்தைக் கோரித் தலைமையைத் தோற்றுவதும், புலி இராணுவத்தைப் புரட்சிகர யுத்த தந்திரோபாயத்துக்குள் திணித்து, அவர்கயைப் புரட்சிப்படையாகக் கட்டிக் கொள்வதும் அவசியமாக இருக்கிறது.இதனடிப்படையில் புரட்சிகர அரசியலை உள்வாங்கிச் சர்வதேச அரசியலை முன்னெடுக்காதுபோனால் புலிகளின் அழிவோடு, தமிழர்களின் அனைத்து உரிமைகளும் அம்போதாம்.

ப.வி.ஸ்ரீரங்கன்
15.09.2004