ஒப்பாரி,
ஒப்பாரி இது ஈழப்போர் தந்த ஒப்பாரிங்கோ!

 

பானையிலே போட்டரிசி
பாடையிலே போட்டழ பாதகர்கள் தரவில்லை
பாதகர்கள் தந்திருந்தால்
பால்வார்த்துப் பார்திருப்பேன்!

 

பாவீ நானும் பட்டழ
பரதவித்துப் போனாயோ?
மாவீரர் மகனென்ற மமதையிலே மடி மறந்து போனதுவோ?

 

மந்திகைக்குப் போன கதையாய்
மாசம் சுமந்த கதை போச்சு
மக்களில்லா வீட்டிற்கு மகத்துவமுண்டோ?

 

மடைச்சி நானும் மயங்கிப்போனேன்
மாவீரர் கதைகேட்டு
மகனே உனைமறந்த மரக்கட்டையை மன்னிப்பாயோ
என்ர குஞ்சரமே கொழுக்கட்டையே!

 

2
குஞ்சரமே குளத்தடியே
கொப்பனுக்குக் கற்கண்டே
கொட்டி வைத்த முத்தெல்லாம் மோதுண்டு சிதறியதோ?
மோடர் மலம் மிதித்திட்டால் மூன்றிடத்தில் நாசமென்று
சீலைக்குள்ள தவம் கிடந்து சிக்கனமாய் பெத்த குஞ்சே!

 

சண்டாளி நானெருத்தி சகதிக்குள்ளே கிடந்தழ
சாய்த்துவிட்டார் உனையல்லோ!
சாய்த்து வைத்த சுளகுபோல சாய்ந்தாயோ நீயுமங்கு?
ஏழை பெத்த பிள்ளையெல்லாம் எதிரயிடம் செத்துப்போக
கட்டுடலாய் காத்துவிட்டார் தத்தமது உடலையெல்லாம்

 

காயடித்த கடுகுப்பிஞ்சகள் கருகிவிழ
காலிப்பயல்கள் கதைபோட்டார் மாவீரர் திரைபோட்டு
கால்வலிக்க நடக்கின்றோம் மகவுகளின் உடல் புதைத்த குழி தேடி
காலமெல்லாம் கனவுகளாய் அவர் முகங்கள்

 

3

நாசமாய்ப்போனவங்கள் தேசத்தை ஆளயிங்கு
நாயிலும் கேவலமாக நான் கிடந்து அழுந்திடவோ?
நாதியில்லை நக்குவதற்கு
நமக்கிங்கு நல்வாழ்வாம் கடவுளிட்ட கற்கண்டே
கனியமுதே தேனமுதே

 

கக்கூசு கழுவவைக்கும் காலிப்பயல்கள்
சாதியப் பெருந்தடிப்பில் சதிராடி தமிழீழக் குரலெடுக்க
நாடுவொன்று வேண்டுமென்று நாங்களிங்கு செத்துப்போனோம்

 

;சின்னவயசுப் பயல்களெல்லாம் இப்போ
சீட்டியடிச்சுப் போகையிலே
சித்திரமே பத்திரமே
சிணுங்குகிறேன் உனை நினைத்து

 

கூட்டிவைத்துக் கதை சொன்னார்
கும்மியடி தமிழ் என்றார்
குரைத்து நின்ற எதிரொலியில் குறைகளெல்லாம் குறையுமென்று
குனிந்து நாங்கள் கும்பிட்டோம்

 

குனிந்த தலை நிமிர்வதற்குள் குடிகுலைந்துபோக
குளமாடி நின்ற கண்கள் குளிருடலில் புதைந்தனவே
குஞ்சரமே குண்டலமே நீ
வெஞ்சமரும் வேதனையாய் உணர்ந்தாயோ?

 

4

ஆருதாம் இருந்தென்ன
ஆனை கட்டி வாழ்தென்ன?
அமெரிக்கா சொன்னவுடன் அத்தனையும் பறந்துவிடும்
அப்பனுக்கு வைத்தநேத்தி அம்போவென்று போனதுவே!

 

பெட்டுகமே புத்தகமே
பேதையிங்கு தவிக்கையிலே
போண்டியான கோசங்களும் போடும் வரி கொஞ்சமல்ல
வாழ்ந்து நீயும் பார்திருந்தால் நிம்மதிக்காய் வாய்திறப்பாய்
போட்டிருப்பார் உன் கழுத்தில் தமிழினத்தின் துரோகியென்று

 

அம்மாவின் அருமருந்தே அப்பனுக்குப் பொக்கிசமே நீ
கச்சைக்குள்ள வெடி சுமந்த காலமெல்லாம்
கற்பம் கரைந்த கதையாச்சு

 

கண்மணியே கடைக்குட்டியே நீ
கால்தெறிக்கப் போனயோ அன்றி
போகுமிடம் தெரியாது பொழுதெல்லாம் அலைந்தாயோ?

 

வெஞ்சமரும் வேதனையும்
நீ சுமந்த காலமெல்லாம் நான் கலங்கி
நிம்மதிக்காய் அம்மனிடம் மோதிக்கொண்டு

நெஞ்சு நோக வீடுமீளும் காலமதை நீயறிவாய்

 

இன்றோ நித்தமொரு குண்டுபோட்ட ஆமிக்காரன்
நெஞ்சளக்கும் நேசமானாம் கண்ணியத்தின் காவலனாம்
கட்டிப்போட்டுக் கதைசொல்லும் காரியக்குட்டிகளும்
கனவானாய் மாறிவிட்ட தமிழீழத்தாகமும்
சேர்த்துக்கொண்ட சொத்துகளின் சொந்தக்காரர்

 

காட்டிக்கொடுத்தார் பட்டியலில்
காவுகொண்ட குஞ்சரங்கள் ஆயிரமாயிரமாம்
கொண்டைபோட்ட பெண்டுகளின் கோவணத்துள் வெடியமுக்கி
கொலைகொண்ட கோரமெல்லாம் கோசங்களின் கோவணத்துள்!

 

5

கட்டிவைத்து உதைத்தவர்களும்
கழுத்தறுத்துப் பார்த்தவர்களும்
சிரட்டையிலும் போத்தலிலும் நீரருந்த வைத்தவர்களும்
கட்டிவைத்த மனைகளுக்குள் நாம் எட்டிப்பார்க்க மறுத்தவர்களும்
தமீழக்கோட்டைக்குள் சோடிசேர அழைத்தார்கள்

 

சேர்ந்து தோள் கொடுத்த நம்மை
அடக்கிவிட துடிக்குமிவர் ஈழமெனும் கோசத்தால்
ஈட்டியெய்தார் எம் முதுகில்
சொந்த வாழ்வின் சுகத்துக்காய் இன்னுமெமை ஏய்த்தபடி

 

ஐயா குஞ்சரமே!
மாலைவேளை மதியை கருமேகம் காவுகொள்ள நீ
மிதமான கனவோடு மிதிவெடியும் தாட்டு வைத்து
காத்தருந்த காலமதை பெத்தமனம் பித்தாகி பேசும் வாய்க்கு மொழியில்லை

 

கள்ளமனம் படைத்த காசுக்கார கூட்டமின்று
சிங்களத்துச் சந்தையிலே கடைவிரித்துச் சமாதானம் விற்க
கட்டுக் கட்டாய் பணம் சேரும் அவர் கணக்கில்
வறிய நாம் வாடுகிறோம் வாழு;விழந்த எங்கள் மழலைகளுக்காய்

 

தொட்டிலுக்குள் போட்ட குழவி
தொலைந்துவிடும் ஒரு நொடியில்
தோள்கொடுக்கப் போனதாகச் சேதி வரும் மாலைதனில்
மாறி மாறிப் பார்த்துவிட்டு மயங்கிவிடும் தாய்மனது!

 

மடிகடித்த நினைவுகளும் மங்கலாக வந்துபோகும்
வார்த்தையின்றிச் சோர்ந்துவிடும் வந்து போகும் உணர்வுகளும்
வானுயர்ந்த நோக்குக்காகவா
வாழ்விழந்தோம் இன்றுவரை?.

-ப.வி.ஸ்ரீரங்கன்