கபாலம் சிதறக்
குருதி நிலம் நோக்கும்
துடிப்பு மெல்ல விலகி
நெடில் மூக்கைத் துளைக்க
கடுமுழைப்பில் களைத்த மூளை புழுதியுளுறையும்

 

 

ஒரு விரலசைவில்
ஒழிந்த மனிதக் கனவு
உண்மையின் முகத்தில்
துளிர்த்துக் கொள்ளும்

 

 

உறுவுகளின்
மௌனித்திருக்கும்
மனம்
ஒரு
நொடியினில் துயில் கலைத்து
குருதி நெடில் கலைவதற்குள் மலர்களின் புன்னகையில்
இதயத்தை உரசிக்கொள்ளும்

 

வார்த்தையின்றி
எரிந்து கொண்ட மெழுகுவர்த்தியோ
கணப்பொழுதில் கரைந்தவுணர்வில் கரையொதுங்கும்

 

தீட்டுப்பட்ட
மனிதவுடல் தீக்காக
வெளுத்துக் கிடக்கிறது
மீள் நோக்கா வீரவணக்கமோ
மீட்டுவதற்கு முந்திக் கொண்ட
உணர்வுக் கிடங்கில் உருக்குலைந்தது
புகழ் பாடிய வலைப் பூக்களைப்போல்

 

ஒளியைவிட
மரணங்கள் விலகிக்கொள்ள
அள்ளியெடுத்த வாய்க்கரிசி எதற்கென்றறியா
காலமும்,
சில துளிக் கண்ணீருமாய் உறவுக்கோலமும்
சாய்ந்த மெய்யருகே
சென்று திரும்பும்!

 

வினைமுற்றிய
விருப்புறுதி
மீளவும்
முண்டு கொடுப்பதற்கான உடல்களை
துணிவு
தீரர்
வீரர்
அறிஞர்
விற்பனர்
சொற்பனர் என்று தேடிக்கொள்ளும்!

 

ஏனென்ற கேள்வியறியா
கனவுக் குடங்களுக்கு
எழுதிவைத்து இடித்துரைத்தால்
இதயம் முளைக்கும்?

 

02.05.2005
ப:வி.ஸ்ரீரங்கன்