எதைப்பற்றிப் பேசாதுபோனாலும் பரவாயில்லை.ஆனால் ஈழத்தமிழரின் உயிர்வாழ்வுக்காக-அவர்களது வாழ்வுரிமைக்காக,நாம் கருத்தாடாது மௌனித்திருப்பது கேவலமானது!

 

 

 

 

எமது வாழ்வு பலவகைகளிலும் நாசமாக்கப்பட்டு,மனிதவுரிமைகளற்ற காட்டுமிராண்டித்தனமான சூழலிலெமது மக்கள் வாழும்போது, சுனாமிவேறு தன்பங்குக்கு அவர்களைக் காவுகொண்டு-அவர்தம் சமூகவாழ்வையே சின்னாபின்னாமாக்கியது.இந்த இருள்சூழ்ந்த அவலத்தைத் தமது குறுகிய அரசியல் இலாபத்துக்காகப் பொறுக்கித்தனமாக அரசியல் செய்யும் தமிழ் அரசியல் கிரிமனல்கள் 'பொதுக் கட்டமைப்பு' என்றும்,அதைத் தத்தமது தேவைக்கேற்றவாறு அரசியல் விடையமாகக் குறுக்கி அரசியல் செய்வது,'எரியும் வீட்டில் பிடுங்கியது மிச்சம்'என்பதுபோல் இருக்கிறது. அப்பாவி மக்கள் அழிவுயுத்தால் தமது வாழ்விருப்பிடங்களையிழந்து,உயிரையிழந்து-உடமைகளையிழந்து,அகதிகளாக இடம்பெயர்ந்து வாழும்போது-அவர்களுக்கெந்த உதிவிகளையும் செய்யமுடியாத போக்கிரி இயக்கங்கள், 'சுனாமி உதவித்தொகையை' பங்கீடுசெய்து தமது பணப்பெட்டிக்குள் திணிக்கப்படும்பாடோ பெரும் ஊடகவன்முறையாக விரிந்துள்ளது.

தரங்கெட்ட இயக்கங்களே! தமிழரின் குருதியில் கும்மாளமடித்த காலங்களையெல்லாம் மறந்து- அவர்தம் கொஞ்சநஞ்ச பொருளாதாரவலுவையும் உங்கள் தேவைக்கேற்றவாறு காசாக்கிய கயமையை மறைத்து,இப்போது பொதுக்கட்டமைப்பில் பன்முகத்துவ கட்சிகளின் பங்கை வலியுறுத்தும் நீங்கள், மக்களின் உயிர்வாழ்வின் அதிமுக்கியமான வாழ்விடங்களைச் சிங்களஆதிக்க ஜந்திரம் அதியுச்சப்பாதுகாப்பு வலையமாக்கி, இராணுவச் சூனியப் பிரதேசமாக்கிவைத்துள்ள அவலத்தைப்பற்றி பேசாது- சுனாமி உதவித் தொகைகளைப் பற்றிக் கருத்தாடுவது நியாயமா?சுனாமிக்கோரத்துக்கு மக்களது உயிர்கள் மோசமாகப் பலியாகியது.இந்த மக்களின் உடல்களைக் கும்பல் கும்பலாகப் புதைத்த கையோடு, அவர்களது நியாயமான வாழ்வியிற்றேவைகளோடு அரசியல் நடாத்தி இலாபமிடமுனையும் தமிழியக்கிரிமினகள், இப்போது நம்மைக் கேவலமாக கருத்தியல் வன்முறையால் சிதைக்கிறார்கள்!

எதற்காக?

இந்த ஊடக வன்முறை இவ்வளவுமோசமாக விரிவுறுவதன் நோக்கமென்ன?

ஐரோப்பாவிலின்று பற்பல புதிய வானொலிச்சேவைகளும்,புதிய தொலைக்காட்சிச்சேவைகளும் புலம்பெயர்ந்த தமிழ்பேசும் மக்கள் மத்தியில் தோற்றப்பட்டு மக்களைக் குளப்பியெடுக்கும் காரியத்தில் தமிழர் நலனை மறுக்கும் சக்திகள் முயல்வது நமது சாபக்கேடா?பண்டுதொட்டு தமிழ் மக்கள் ஏமாற்றப் படுகிறார்கள்.ஆயுத முனையிலும்,கருத்தியல் முனையிலும் அவர்களின் உரிமைகள் ஏலம் விடப்படுகிறது.இந்த ஈனத்தனத்தை எல்லா இயக்கங்களும் திறம்படச் செய்துமுடிக்கிறார்கள்.தமிழர்களை இராணுவத்தோடு சேர்ந்தழித்த ஈ.பி.ஆர்.எல:எப், ஈ.பி.டி.பி. புளோட் கும்பல்கள் ஒரு புறமாகவும்,புலிகள் ஒருபுறமாகவும் 'பொதுக்கட்டமைப்புக்கு' உரிமைகூறி பைத்தியகாரத்தனமாகக் கருத்தாடி நம்மக்களைக் கேவலமாகச் சுரண்டிக்கொள்ள முனைதல,; மிகக் கேவலமானதாகும். இந்தப் பிழைப்புவாதக் கிரிமினற் கும்பல்கள் இப்போது மக்களிடம் கொள்ளையிட்ட பணதிலும்-அன்நிய நாடுகள் கொடுத்த பணத்திலும் புதிய புதிய வானொலிச்சேவைகளைத் துவக்கி மக்களிள் உரிமைகளுக்கு வேட்டு வைக்கும் காரிமானது மன்னிக்கமுடியாதது!இது, நமது மக்களை அன்நியச் சக்தியிடம் பேரம்பேசி விற்றுப் பிழைப்பு நடத்தும் அரசியலாகும்.காரணமேயின்றி ஒருவரும் வானொலி |வானொளிச் சேவைகளை ஆரம்பிக்கவில்லை.எல்லாமே தமிழரின் உரிமைகளை ஏகாதிபத்தியங்களிடம் விற்றுத் தமது நலன்களையடைவதற்கே முனைவதுதாம், இந்த ஊடகவன்முறையின் நோக்கம்.

மக்களே! பல்லாயிரம் உயிர்களைத் தியாகஞ் செய்தவர்கள் நாம்.

நம்மை,நமது வாழ்வைக் கேவலமாக்கும் கும்பல்களாக்க முனையுமிந்த அரசியல் பொறுக்கிகள், அற்ப சலுகைகளுக்காக நமது ஜனநாயக உரிமைகளை-வாழ்வாதார அடிப்படையுரிமைகளை, அன்நிய நாடுகளின் அரசியல்-பொருளியல் நலன்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கும் பொறிமுறைகளை பன்முகக் கட்சிகள்-அமைப்புகள்,ஜனநாயகமெனும்போர்வையில் செய்து முடிக்கத் தயாராகியபடி.இவர்களே தனிநபர் துதிபாடி,கேவலமான பாசிஷ்டுக்களை தமிழரின் பிரமுகர்களாகவும்-தலைவர்களாகவும்,மகாமேதைகளாகவும் ஒளிவட்டம் கட்டுகிறார்கள்.டக்ளஸ் தேவாநந்தனனோ அல்ல ஆனந்த சங்கரியோ பிரபாகரனுக்கு மாற்றான மக்கள் சார்ந்த அரசியலைத் தரப்போவதில்லை! இவர்களும் பிரபாகரனின் இடத்தைப் பிடித்திடவும்,அவரைவிடப் பன்மடங்கு நம்மையொடுக்கவும் அன்நியரோடு சேர்ந்து காரியமாற்றத் தொடங்கிவிட்டார்கள்.இவர்கள் எவருமே மக்களின் நலனுக்கான ஜனநாயக விழுமியத்துக்காகக் குரலிடவுமில்லை,போராடவுமில்லை.இவர்களிடம் ஆயுத, ஊடக-பணப்பலமுண்டு.இதன்மூலம் நம்மைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வெறும் கொத்தடிமைகளாக்கும் அரசியலை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளார்கள்.இவர்கள் கூறும் ஜனநாயம்,சுதந்திரம்,சுயநிர்ணயவுரிமையென்பதெல்லாம் வெறும் பூச்சுற்றலாகும்.

ரீ.ரீஎன், ஐ.பி.சி, ஐ.ரி.ஆர், தீபம், வெக்டோன், புலிகளையும்-ரி.பி.சி, இதயவீணை வானொலிகள் டக்ளஸ் தேவாநந்தனையும் அவரது அடிவருடிகளையும் நியாயப் படுத்தும் ஊடகங்களாக 'நமக்குள்' கருத்துக்களைக் கொட்டுகிறார்கள்.மக்களாகிய நாம், அகதிவாழ்வைத் தொலைத்து,நமது தாயகத்தில் அமைதியான அரசியல் வாழ்வை முன்னெடுக்க முடியாத சூழலையிந்தக் கேடுகெட்ட வன்முறையாளர்கள் தோற்றிவைத்துக்கொண்டே, தமது அரசியலை நமக்குள் திணிப்பது விபச்சாரத்தனமானதாகும்.

நமது வேதனைகள் இவர்களுக்குப் பணம் ,பதவி தரும் பெரும் அரசியல் வியூகமாக மாறுகிறது.நம்மிடம் அறவிடப்பட்ட-சேகரிக்கப்பட்ட பணமே அவர்களது பிரச்சார ஊடகங்களைத் தூக்கிநிறுத்தும் பொருளாதார அடிப்படையாக மாறுகிறது.இவர்களது அரசியலில் நாம் மந்தைகளாக மாறுவதும்,அவர்களை'மாட்சிமைதாங்கிய' மனிதர்களாக மதித்துக் காவடியெடுப்பதையும் இனியும் தாங்கிக்கொள்ள முடியாது.இத்தகைய பரப்புரைகளை நாம் ஜனநாயகத்தின் குரெலென்று கூறிக்கொள்வோமென்றால், நம்மை நாமே புதைகுழிக்குள் புதைப்பதாகும்.எந்தவொரு அமைப்பும் நமது மக்களின் சுய அமைப்பாண்மையை விரும்பவில்லை.இவர்களெமை ஆணிவேறு அக்குவேறாகப் பிரித்தெடுத்து, தத்தமது நலனுக்காய்ப் பயன்படுத்தத் திட்டமிட்டுக் காரியத்தில் இறங்கியுள்ளார்கள்.இந்தத் தரணத்தில் தமிழ்பேசும் மக்களின் நலன் என்பதெல்லாம் தத்தமது அரசியல் இருப்பையும்,பதவிகளையும் நோக்கிய வாதங்களாகும்.

சிங்கள பௌத்த சியோனிஸ ஆட்சியாளர்களுக்கு உடந்தையாகவும்,அன்நிய மூலதனத்துக்கும் அதன் எஜமானர்களுக்கும் கூஜாத் தூக்கிகளாக மாறிய அனைத்து இயக்கங்களும், ஒருபோதும் நமது மக்களுக்கு விடுதலைக்குரிய போராட்ட வடிவங்களைத் தரப்போவதில்லை.இவர்கள் தமது நலனுக்கேற்றவாறு நம்மைப் பயன்படுத்தும் வியூகத்தோடு ஊடகவன்முறையிலீடுபடுவதை, நாம் இனம் கண்டு,நமது பரிபூரணமான விடுதலைநோக்கிய 'புதியஜனநாயகப் புரட்சிக்கு'பங்களிக்க நமது கருத்தியல் நிலையை வளர்த்தெடுப்போம்.இதற்காக நமது அகத்தைத் திறந்துவைத்துக்கொண்டு,இந்தப் பயங்கரவாதப் புனைவுகளை வேரறுப்போம்!

காலத்துக்கு முந்தியபோராட்ட வடிவங்கள் நம்மைக் காவுகொள்வதாகும்.

நமது வாழ்வு இனியும் அழிந்து போகாதிருக்கவும்,நமது சமூக உயிர்வாழ்வு சிதைந்து சின்னாபின்னமாகாதிருக்கவும், நாம் யுத்தங்களையும்,ஏமாற்று அரசியலையும் மறுப்போம்.

அடிப்படை மனிதவுரிமைகளுக்காகவும்,ஜனநாயகத்துக்காகவும் மக்களாகிய நாம் இலங்கைக்குள் அனைத்துச் சமூகத்தோடும் கைகோர்த்து இந்த அரசியலை அம்பலப்படுத்தி, நேர்மையானவர்களை அரசியலரங்குக்குக் கொண்டுவருவோம்.இவர்களுடாய் குறைந்த பட்ச அடிப்படையுரிமைகளையாவது பெறுவதற்குப் போராடி,அதன் வாயிலாக அடுத்தகட்டத்தைத் தாண்டமுனைவோம்.இந்த தேவைகளை வலியுறுத்தும் புலிகளோ அல்ல மற்றெந்த இயக்கங்களோ ஜனநாயகபூர்வமாக இதுவரை காரியமாற்றத் தவறுவது எதனால்?

பழைய பெரிச்சாளிகள், மானுடவிரோதிகள்-யுத்த தாசர்கள்,அரசியல் கிரிமினல்கள்,இன்னபிற பிழைப்புவாதிகள்-கொலைகாரர்களால் பரப்புரையாக்கப்படும் அரிசியல் கருத்துரைகள், எம்மை அழிவுப்பாதைக்கே இட்டுச் செல்லும்.இந்தக் கொலைக்காரர்கள் ஜனநாயகம்,பன்முக அமைப்புகள்,மனிதவுரிமைகள் என்ற மிக,மிக அழகான முகமூடிகளோடு நம்மையணுகிறார்கள்,இது நம்மையின்னும் ஏமாற்றிக்கொள்வதற்கே!நாடறிந்த நயவஞ்சகர்கள் நல்ல மனிதர்களாம்,வரலாறு தந்த மணிமகுடங்களாம்.இப்படிப்போகும் ஊடகப்பரப்புரைகள் நமக்கு விடுதலையல்ல மரணத்தையே தந்துவிடும்.டக்ளஸ் தேவாநந்தன் என்பவன் தமிழரின் சாபக்கேடன அரசியலின் சகுனி.

இன்று இடம்பெற்றுவரும் மிகக் கேவலமான புலி எதிர்ப்பு-புலி ஆதரவுப் பரப்புரைகள் நம்மை முட்டாளாக்கிவிட்டு,தம்மைத் தலைவர்களாக்கும் வியூகத்தைக் கொண்டிருக்கிறது.புணம் தின்னிகளான இந்த ஆயுததாரி மனிதர்கள் இப்போது பற்பல முகாமுக்குள் நின்று, நம்மைக் குழப்பியெடுக்கிறார்கள்.டக்ளஸ் தேவாநந்தா என்ற பயங்கரவாதியும்,புலிகளும் இப்போது நடாத்தும் அரசியலில் நமது மக்களின் நலன்கள்தாம் பலியாகிவிட்டது!இந்தியவோடுசோந்து இலங்கையும்,இந்த மக்களின் (தமிழ்பேசும் மக்கள்) உரிமைகளைச் சிதைத்து> எம்மை நிரந்தரமாக அடிமைக்கூட்டமாக்கி விடுவதில் அதன் வெற்றி,இந்தக் கேடுகெட்ட அரசியலால் உறுதியாகிவருகிறது.

நாமோ அகதிகளாகி,அடிமைகளாகிச் செத்துக்கொண்டிருக்கிறோம்.இந்தக் கிரிமினல்களோ பணத்துக்காக-பதவிக்காக நம்மைக் கருவறுத்தபடி...

'....................'

ப.வி.ஸ்ரீரங்கன்
16.05.05