03012021தி
Last updateவெ, 26 பிப் 2021 11pm

அங்கேயும் கருப்பு நாசிகள், இங்கேயும் வெள்ளை நாசிகள், நாம் போகும் இடம் இனி எங்கே?

இன்றைய ஜேர்மனி குறித்து நிறையச் சொல்லியாகவேண்டும்.எனினும்,இத் தேசத்தைப் பற்றிய பழைய புரிதலில் அதன் மக்கள் விரோத அரசியலானது ஜேர்மனிய ஆளும் வர்க்கமான பெரும் தொழிலகங்களுக்குச் சொந்தக்காரர்களான குடும்பங்களின் நலனைப் பாதுகாப்பதற்காகவே இயங்கி வந்திருக்கிறதை நாம் இரண்டு பெரும் உலக மகா யுத்தத்தின் மூலமாகச் சிந்தித்தும்,வரலாற்று ஆய்வாளர்களின் அறிக்கைகளிலிருந்தும் அறியக்கூடியதாகவே இருக்கிறது.மூலதனத்தின் அதீத திரட்சியானது மனித சமுதாயத்தில் சிறுபகுதியை மிகவுஞ் செல்வத்தில் கொழிக்கவும், பெரும்பான்மை மக்களை வறுமையிலுமாக விட்டுவிடுகிறது.இதை கண்முன்னே காணவிரும்பின் நம் இந்தியாவைக் கண்முன்னே நிறுத்துவோமானால் அதன் கோரமுகம் நம்மை அண்மித்து வருவதை இனம்காணமுடியும்.

 

பசி,பட்டுணி-நோய்,நொடி,ஒட்டிய வயிறும் ஒளியிழந்த விழிகளும் வானத்தை விழிக்கத் தெருவோரம் படுத்துறங்கும் மனிதர்கள்.அத்தகைய மனிதர்களை மேட்டுக் குடிகளின் கார்களே மோதிக் கொன்றுவிடும் ஒரு நொடியுமாகவும்,பழைய பத்திரிகைகளை வீதியில் பொறுக்கி விற்று வயிறு நிறைக்கும் சின்னஞ்சிறு பாலகர்கள் மறுபுறமாகவும் இந்தியா இருபத்தியோராம் நூற்றாண்டில் "வல்லரசாக" மாறிவருகிறது!இது இந்தியாவினது மட்டுமல்ல உலகத்தின் பல முதலாளிய நாடுகளின் கோலமும் இதுவே.இது, முதலாளியப் பொருளாதாரத்தின் நிச வடிவிலான சமூகயதார்ததத்தின் மறு விளைவாக உலகத்தில் யுத்தத்தையும்,பஞ்சத்தையும் ஏற்படுத்தப்படுகிறது.மனிதர்களை இலட்சக் கணக்கில்-கோடிக் கணக்கில் கொன்று குவிக்கிறது,முதலாளியச் சுரண்டல் அமைப்புகளும் அதன் வல்ல இராணுவமும்!கண்ணால் காண முடியாத கோலங்கள் அல்ல இவை!இந்தியாவின் வறுமையையும் அந்தத்தேசத்தின் ஆளும் வர்க்கத்தின் நய வஞ்சகத்தனமான சுரண்டலையும் அம்பலப்படுத்திய மீரா நாயரின் சலாம் பம்பாய் உலகமெல்லாம் திரையிடப்பட்டது.இது இந்தியா பற்றிய பல பிரமைகளைச் சிதைத்தெறிந்து அதன் கொடூரமான முகத்தைச் சாதாரணப் பாமரர்களும் புரிய வைத்த திரைப்படம்.

 

உலகத்தில் எந்தப்பகுதியிலும் இல்லாதபடி இந்திய இந்து அதர்ம முறையானது இந்தியாவில் 240 மில்லியன்கள் மக்களைத் தீண்டத் தகாதவர்களாக்கி வைத்து சமூகக் கிரிமினலாகத் தனது பக்கங்களை உலகத்தில் நிரப்பிவைத்திருக்கிறது.உலகத்தின் இன்றைய அரசியலானது இதே இந்தியாவை ஒத்த முன்னெடுப்பாகவே இன்றுவரையும் நிகழ்ந்து மனித சமூகத்தை அழித்து வருகிறது-ஒடுக்கி வருகிறது!இதன் தொடர்ச்சியில் நாம் தொழில்முறை-இன்டர்ஸ் ரீரீயல் இன அழிப்புக்களை பலகோடி மக்களின் அழிவில்பார்த்தோம்.நாசிய நரவேட்டை,நாகசாகி-கீரோசீமா அணு வன்தாக்குதல் இதற்கு நல்ல உதாரணம்!அதே நாசியத் தாக்குதலே இக்கட்டுரைக்கான கருப்பொருளும் இன்று.கடந்த ஞாயிற்றுக் கிழமை(03.02.2008) நாசியத் தீ மூட்டலில் உயிரிழந்த ஒன்பது துருக்கிய மக்களுக்கும் எனது ஆழ்ந்த அநுதாபம்.ஏனெனில்,நானும் அகதியாக நாசியத் தேசத்தில் வேண்டாத குடியாய்க் காலத்தை ஓட்டும் தமிழர்களில் ஒரு உறுப்பினன்தானே?அதோ,தீ என்னையும் தொடருகிறது.நானே ஒரு கதையில் எனது பிள்ளையைப் பறி கொடுத்ததாகச் சொன்ன "ஆவீன மழை பொழிய..."இன்றைய அன்றாட வாழ்வாக நமக்கு ஐரோப்பாவில்-ஆசியாவில்-ஆபிரிக்காவில் ஆ...என்ன உலகம் பூராகவும் இதே கதைதாமே?பின்ன-இதுதானே முதலாளியமும் அவர்களது ஜனநாயகமும்!நாசி ஜேர்மனியானது கிட்லர் ஊடாக விதைத்த இனவாத்மானது இந்திய இந்து அதர்மச் சாதியத்தின் மனிதவிரோதப் போக்கோடு ஒன்றித்திருப்பது.இது இன்று வரையும் உலகில் கொன்று குவித்த அப்பாவி மக்களின் தொகையானது 140 மில்லியன்கள் மக்கள் தொகையாக இருக்கிறது.இது தனியே ஜேர்மனிய இனவாதக் கழிசடை அரசியல்-உற்பத்தி ஆர்வங்களால் நிகழ்ந்தபோது, இதை வெறும் ஒரு பாசிசக் கோமாளி கிட்லரின் தவறாக நிறுவியது முதலாளிய உலகம்.இன்றோ கிட்லர் அழிந்து கிட்டத்தட்ட 65 ஆண்டுகள் கழிந்த பின்பும் இதே நாசிய இனவாதமானது பல் பத்து வேற்றினதைத் தொடர்ந்து கொன்று குவித்து வருகிறது ஐரோப்பாவில்-ஜேர்மனியில்!

 

இந்த இனவாத முன்னெடுப்பை முதலாளியத் தேசங்கள் எங்கும் மிக இலகுவாக அறியமுடியும்.அதாவது, ஜனநாயகத்தை ஓங்கி ஒலிக்கின்ற எந்தத் தேசத்தை எடுத்தாலும் இந்த இனவாத மனதும் அது சார்ந்த அழிப்புவிருப்பும் நிறைந்தே இருக்கும்.இதையும் இந்தியாவில் உதாரணமாக எடுத்தால் அநுதினமும் இறைவனைப் பிராத்திப்பதாகவும் மனிதர்களுக்கு-உலகுக்குச் சேமம் உண்டாவதற்காவும் பிராத்தனை செய்வதாகச் சொல்லும் பிராமணனின் வீட்டில் சாதிகள் பார்க்கப்பட்டுத் தம்மைப் போன்ற மனிதர்களைச் சமூகவதைக்குள் தள்ளிக் கழித்துவைப்பதை மனதிரைக்குள் கொணரும்போது, இத்தகைய முதலாளியக் கருத்தியலை மிக நுணுக்கமாக அறியமுடியும்.இவற்றைப் பூண்டோடு அழிக்க முனையாத பிராமண அம்பிகள்கூட ஐரோப்பாவில் நாசிகளிடம் வேண்டும் உதையைத் தம்மோடு பொருத்துவதாகத் தெரியவில்லை!மடிக் கணினி எங்கோ ஓரிடத்திலும்,ஐயர் உடல் இன்னொரு புறமுமாகக் கிடந்ததைக் கண்டவர்களும் நாமே.

 

இந்த உலகத்தில் யுத்தங்களைச் செய்து மக்களைக் கொன்ற ஐரோப்பாவானது இன்று ஜனநாயகம் வேடம் பூண்டபடி மெல்ல வேற்றின மக்களை அழித்துவருகிறது.இன்றைய ஜேர்மனியில் திடீர் திடீரென ஜேர்மனியர்கள் அல்லாத குடும்பங்களின் வீடுகள் தீப்பற்றி எரிகிறது.ஒவ்வொரு தீ மூட்டல்களிலும் 5-10 என வேற்றின மக்கள் அழிந்து மாண்டு போகிறார்கள்.தீயில் கருகும் மனிதர்களின் அழிவில் ஜேர்மனிய மண்ணைச் சுத்தஞ் செய்துவிட முடியுமென ஜேர்மனிய நாசிகள் கருதுகிறார்கள்.இத்தகைய நாசிய கட்சிகளையும் அவர்களது படையணிகளையும் ஜேர்மனிய ஆளும் வர்க்கத்திலொரு பகுதி ஒத்துழைப்பு நல்கி அதன் பின்னாலிருந்து இயக்கி வருகிறது.சட்டப்படி நாசியக் கட்சிகளுக்கான நிதியை ஜேர்மனிய அரசு வரிப்பணத்திலிருந்து கொடுக்கிறது.உலகம் பூராகவும் இனவாதம் தலைகால் தெரியாது மக்களைக் கொல்லுகிறது!இது ஐரோப்பாவில் நாசியாக நமது நாடுகளில் வர்ணாச்சிரம சாதியத் தாக்குதலாக...

 

கடந்த ஞாயிறன்று 03.02.2008 லூட்விக்ஸ்காபன் எனும் நகரில் துருக்கிய மக்கள் வாழ்ந்த தொடர்மாடி வீடொன்று எரிகிறது.அங்கே,ஒன்பது மக்கள் தீயில் கருகி மரித்துப் போகிறார்கள்.இவ்வீட்டை கடந்த இரண்டு வருடத்துக்குள் மும் முறை நாசிகள் தாக்கித் தீயிட்டபோதும் மூன்றாம் முறையே இது வெற்றியளித்து முழுமையாக எரிந்து, அங்கு உறக்கத்திலிருந்த அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளார்கள்!இதே பாணியிலான துருக்கிய வீட்டின் மீதான தாக்குதல் கடந்த பத்தாண்டுகளுக்குமுன் சோலிங்கன் எனும் நகரப் பகுதியில் ஐந்து மக்களைக் கொன்று குவித்தது.அப்போது பொங்கியெழுந்த துருக்கிய எதிர்புணர்வானது ஜேர்மனிய அன்றாட இயக்கத்தையே ஸ்த்தம்பிக்க வைத்தது.அந்தத் தாக்குதலை நாசிகளே நடாத்தினார்களென உடனடியாக வெளிப்படுத்தப்பட்ட ஊடகங்களின் உண்மைச் செய்திகள், இத்தகைய எதிர்ப்புணர்வைத் தீயாகப் பரப்பியதாக ஜேர்மனி இப்போது உணருகிறபடியால் இந்தப் பெருந்தொகையான மக்களின் உயிரழப்பைத் திட்டமிட்டு மறைப்பதற்கும்,அந்த வீட்டில் நிகழ்ந்தது விபத்தாக இருக்குமோ என செய்திகளை அடக்கி வாசிகிறது ஜேர்மனிய ஊடகங்கள்!

 

இங்கே,பற்பல இடங்களில் இத்தகைய நாசியத் தாக்குதல்கள் தினமும் நடந்தேறுகிறது.நாசிய இனவாதத் தாக்குதலுக்குள்ளாக்கப்படும் மனிதர்கள் யாவருமே ஏதோவொரு முறையில் உடல்-உளப் பாதிப்புள்ளாக்கப்பட்டு வருகிறார்கள்.கடந்த மூன்று மாதங்களுக்குமுன் கிழக்கு ஜேர்மனியப்பகுதியான மூகெல்ன் எனும் நகரப் பகுதியில் பத்துக்கு மேற்பட்ட இந்தியச் சீக்கிய இனத்தவர்கள் நாசிகளால் தாக்கப்பட்டு, மண்டைகள் பிளந்து வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்கள்.இனவாதத் தாக்குதல்களின் தொடர் நிகழ்வில்,கடந்த ஞாயிற்றுக் கிழமைத் தாக்குதல் முற்றிலும் திட்டமிடப்பட்டுத் தீ வைக்கப்பட்டதாகவே இனம் காணத்தக்கதாக இருக்கும்போது, ஜேர்மனியப் புலாய்வுத்துறையோ அதை இதுவரை திரையிட்டு மறைப்பதற்கான முறையில் உண்மையை மறைப்பதற்காகவே தமது ஆய்வுகளைப் பின்போடுகிறது.இங்கே,உண்மையை வெளிப்படுத்திய துருக்கிய ஊடகங்களை "பொறுப்பற்ற ஊடகங்கள்"என ஜேர்மனிய ஊடகங்களும்,அரசும் குற்றஞ் சொல்லும் அவசரத்தைக் கொல்லப்பட்ட மக்களின் குடியிருப்பில் ஏற்பட்ட-மூட்டப்பட்ட தீயின் முலம்பற்றிய ஆய்வில்காட்டவில்லை!தீயிட்டுக் கொளுத்தியதைப் பச்சைப் பாலகர்கள் கண்டதாகச் சாட்சியம் சொல்லப்பட்டும்,அதைக் கணக்கெடுக்காத ஜேர்மனிய அரசு!


ஜேர்மனிலிருந்து வெளி நாட்டவர்களைப் பூண்டோடு அழித்தும், வெருட்டியடித்தும் ஓட்டிவிட முனையும் புதிய-இளைய கிழக்கு-மேற்கு இணைவுக்குப் பின்பான கூட்டு ஜேர்மனிய மனமானது கனவுகாண வைக்கப்படுகிறது.எனினும், அந்நியத் தேசங்களின் மூலவளம்-கனிவளம் இன்றி ஐரோப்பாவானது ஒரு நிமிடம்கூட உயிர்வாழ முடியாதென்பதை ஐரோப்பிய விஞ்ஞானிகள்-அரசியல்வாதிகள் அறிந்தேயுள்ளார்கள்.என்றபோதும், இனவாதத் தீயை அணைப்பதற்கான எந்த முன்னெடுப்புமின்றி அதை ஊட்டிவளர்க்கும் ஓட்டுக்கட்சிகள் தமது தேர்தல் வெற்றிகளை நிர்ணியிக்கும் ஒரு ஊடகமாக இந்த"ஜேர்மன் ஜேர்மனியர்களுக்கே"எனும்படியான இனவாதத்தைக் இனம்கண்டு அப்பப்பத் தமது தேவைக் கேற்றபடி வளர்த்தெடுக்கிறார்கள்.இதன் உச்சக்கட்டமானது இப்போது ஜேர்மனியக் கெசன் மாநில முதல்வர் றோலான்ட் கொக் வாயிலாக "சிறுவர்கிரிமினல்"களுக்கான சட்டமாக வருகிறது.14 வயதுக்குமேற்பட்ட வெளிநாட்டுச் சிறார்கள் செய்யும் குளப்படிகள் இந்தச் சமூகத்துக்கு எதிரானதாகவும்,இது வெளிநாட்டுச்சிறார்களின் கிரிமினல்களாக இனம் கண்டு அதை ஒடுக்குவதற்காகச் சிறார்களை உள்ளே தள்ளும் சட்டம் வேண்டுமென்று தேர்தலில் பிரச்சாரம் செய்து, தனது படுதோல்வியைத் தடுத்து நிறுத்தி மீளவும் ஆட்சியைக் கூட்டுக்கட்சிகளோடு பேரமிட்டுத் தொடரும் சூழலை ஏற்படுத்துகிறார்,திரு.ரோலான்ட் கோக்.இதேவகை அரசியல் இனிமேல் ஜேர்மனியெங்கும் படையெடுத்து அந்நிய மக்களைத் தொடர்ந்து உளவில் ஒடுக்கு முறைக்குள் தள்ளும் ஓட்டுக்கட்சிகளோ தாமே நாசிகள்தாமென்று தொடர்ந்து நிலை நிறுத்திவரும்போது, துருக்கியப் பிரதமரோடு நட்புறவு பாராட்டி அறிக்கைகள்விடுகிறது§ர்மனிய ஆளுங்கட்சிக் கூட்டணிகள்.அதுவும்,தீயினுள் கருகி மாண்டவருக்காக வருத்தம் தெரிவித்து!இதன் பின்னே இருக்கும் அரசியலை துருக்கிய இனத்தவர்கள் அறியாதவர்களா?

 

அந்நிய மூலவளங்களான எரிவாயு,மசகு எண்ணை,காரீயம்,யுரொனியம் முதல் சாதரண மரத்தளபாடங்களேயே ஜேர்மனி அந்நியத் தேசங்களிடமிருந்து எதிர்பார்த்திருக்குபோதும், அது இவற்றைத் தனது ஒடுக்குமுறை வியூகத்தோடே மிக வலுவாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்திருக்கிறது.இதைத் தொடர்ந்து நிலைநிறுத்தத் துருக்கி என்ற ஐரோப்பாவின் கதவு அவசியமானது!துருக்கிய மக்கள் மூன்று மில்லியன் மக்கள் ஜேர்மனியில் வாழ்கிறார்கள்.அவர்கள் ஜேர்மனியர்களின் வேலையிடங்களை திருடுவதென்பது எப்பவும் ஏற்க முடியாதது.இரண்டாவது உலகமகாயுத்தத்தில் சிதைந்த ஜேர்மனியைக் கட்டியெழுப்பியவர்கள் துருக்கிய மூதோர்கள்.அவர்கள் இன்று நடைபிணமாக நோய் நொடியோடு வாழும்போது அவர்களின் குழந்தைகளை இன்னும் இத்தேச மக்களின் ஒரு பகுதியகக் கணிக்காத ஜேர்மனியின் மனது மிக மோசமானதே!எண்பது மில்லியன்கள் ஜேர்மனியர்களின் குடும்பத்தில் ஆணும் பெண்ணுமென்று அனைவரும் வேலை செய்ய முற்படும் தேவைக்கு ஏற்ற தகமையை ஜேர்மனிய உற்பத்தி வீச்சு ஏலவே கொண்டிருந்தது.எனினும்,கிழக்கு ஜேர்மனியின் இணைவுக்கும் அதன் பின்பான கால உலகப் பொருளாதாரத்தில் பல் தேசியக் கம்பனிகள் சீன-இந்தியக் குறை கூலிகளைத் தேடிய வேட்டையிலும் இன்றைய ஜேர்மனிக்கு ஆணும் பெண்ணும் ஒரு குடும்பத்தில் வேலை செய்யும் அவசியத்துக்குத் தீனீபோடும் ஆற்றலில்லை!இது முதலாளியத்தின் தவிர்க்க முடியாத இருண்ட நிலை.எனினும்,இம் முரண்பாட்டை ஜேர்மனில் வாழும் அந்நியக் குடும்பங்கள்மீதான தாக்குதலாக மாற்றுஞ் சதி மிகக் கெடுதியானது.கடந்த சோலிங்கன் தீ மூட்டல் மற்றும் இன்றைய லூட்விக்ஸ்காபன் தீ மூட்டல்கள் இத்தகைய அரசியலின் கோர முகத்தை அம்பலப்படுத்திவிடுகிறது!எரீயூட்டப்பட்ட லூட்விக்ஸ்காபன் துருக்கிய இல்லத்துக்கு வருகை தரும் துருக்கியப் பிரதமர் ஏர்டோகன் துருக்கிய மக்களுக்கு அமைதியையும்,நேசிப்பையும் புகட்டுகிறார்,கூடவே துருக்கிய மொழியில் கற்கும் பட்டப்படிப்பு-உயர்கல்லூரிகளை ஜேர்மனிய அரசு திறந்து அவர்களுக்கு உதவும்போது,அவர்கள் தாய் மொழியில் சிறப்பாகத் தேறும்அதே தரணம் ஜேர்மனிய மொழியிலும் மிகத் திறமையாகத் தேற்சியுறும் காலம் வருமென்கிறார்.இதையும் ஜேர்மனியக் கட்சிகள் எதிர்த்து"இது இனக் கலப்புக்கு-கலந்து இணைந்து வாழும் சமூகவியத்தைத் தடுக்கும்"என்று தமது இனவாத்தைப் புதிய பாணியில் ஒப்புவிக்க, அவரது பயணத்தின் உண்மை முகம் அம்பலப்படுகிறது.ஒப்பந்தம்-எண்ணைக் குழாய் உரையாடலானது இங்கே அழிவுற்ற மக்களின் அரசியல் வருகையாக ஒப்பேறுகிறது!அவரது வருகையில் அமைதிகொண்ட துருக்கிய இளைஞர்களின் மனது ஜேர்மனியச் சதி வலைக்குள் வீழ்ந்து அமுங்கிவிடுமாவென்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.ஆனால்,துருக்கியயென்பது தவிர்க்க முடியாதவொரு அயற் தேசமாகவே இருக்கிறது ஐரோப்பியக் கூட்டமைப்புக்கு-குறிப்பாக ஜேர்மனிக்கு.எனவே,துருக்கிய முதலாளிகளுக்குத் தமது தேசம் ஐரோப்பியக் கூட்டமைப்புக்குள் வருவது தவிர்க்க முடியாதென்பது தெரிந்தே இருக்கிறது!அவர்கள் தமது ஆர்வத்துக்காக இங்கே வாழும் துருக்கிய மக்களின் கழுத்தையும் அறுக்க முனைவர்.இதுதாமே முதலாளியம்?

 

அடுத்த ஆண்டு தொடரப்போகும் 3300 கிலோமீட்டர் நீள எண்ணைக் குழாய் அமைப்புத் திட்டம் துருக்கியை ஊடறுத்தே தாக்கப்படுகிறது-நிர்மாணிக்கப்படுகிறது.துருக்கியைத் தாஜா பண்ணாது விடும் ஒவ்வொரு பொழுதும் இந்த 500 கோடி யூரோ திட்டம் கிடப்பில் போடப்படும் அபாயம் நீடிக்கிறது!இதன் தொடர்ச்சியாக ஐரோப்பில் எருபொருள்-சக்தி-எரிவாயுவில் தனி ஆதிக்கஞ் செய்யும் இருஷ்சியாவில் தாம் தொடர்ந்து தங்கிவருவதைத் துருக்கியின் பகமை ஏற்படுத்திவிடுமோ என ஒவ்வொரு பொழுதும் அச்சம் கொள்ளும் ஐரோப்பிய-ஜேர்மனிய ஆளும் வர்க்கம் சில கண் துடைப்புச் சட்டங்களை நாசிகள்மீது ஏவும் வாய்புண்டு.இத்தகைய கண்துடைப்போடு அமைக்கப்படும் 3300 கிலோமீட்டர் நீளமுடைய குழாயில் தொடர்ந்து அவ்கானிஸ்த்தான்-ஈரான் எரிவாயும்,எண்ணையும் வந்தாக வேண்டும்.இல்லையேல் அக் குழாய்க்கு எந்தப் பெறுமதியுமில்லை.இதைத் தடுக்க இருஷ்சியாவின் முட்டுக்கட்டை கொசோவோ அங்கீகரிப்பை மறுப்பதாகவும் தொடரும்போது, அமெரிக்காவின் நிலையோ பரிதாபகரமாக நேட்டோவுக்குள் இயங்கும் நாடுகளை மேலும் துருப்புகளைத் தரும்படியும் அவ்கானிஸ்தானின் பயங்கரப்பகுதிக்குள்-மரணப் பொறிக்குள் அனுப்பும்படியும் ஜேர்மனியை மிரட்டுவதாக இருக்கிறது.கூடவே,இக் குழாயில் ஈரானின் எண்ணை ஐரோப்பாவுக்குள் வருவது கூடாதென்றும் மிரட்டுகிறது.இந்த இலட்சணத்தில் துருக்கியின் முக்கியம் இருக்க, துருக்கிய மக்களை மிகக் கேவலமாக அடக்க முனையும் ஜேர்மனிய நாசிகளை நினைக்கும்போது இதன் அடுத்த நகர்வு இன்னும் மோசமாக விரியும்.மாற்றாகளின் தயவில் தாங்கள் வாழ்ந்தாலும் தமது தேசம் தமக்கு மட்டுமேதாம் என்பது ஐரோப்பிய இனங்களுக்கு வழிவழி வந்த மனதின் விருப்பத் தொடர்சியாகும்.

 

மூலதனச் சுற்றோட்டம் உலகைத் தொடர்ந்து இனவாத-மதவாதச் சீரழிவுக்குள் தொடர்ந்து இருத்திவைக்கும்போது நமது தேசங்களிலோ நடைபெறும் நியாயமான தேசிய விடுதலைப்போராட்டங்களைப் பயங்கரவாதமாகச் சித்தரித்து இதே நாடுகள் ஒடுக்கி வருகின்றன.அதிலொரு பங்கைக்கூட நாசிய அமைப்புகளிடம் இவர்கள் காட்டுவதுகிடையாது.நாசிகள் ஜனநாயகத்துக்குட்பட்டே கட்சிகட்டுகிறார்கள் என்பது ஐரோப்பியச் சட்டவாதத்தின் கதை.

 

இனியென்ன செய்ய முடியும்?

 

ஐரோப்பாவில் வாழும் ஒவ்வொரு குடியேற்ற வாசிகளும் கொடுங்கரங்கள் நாசிய வடிவில் தம்மைப் பின் தொடர்வதை உணரும்போது தத்தமது தேசத்தில் ஒரு விடிவுக்காக ஏங்குவது தவிர்க்க முடியாது!ஆனால்,இந்த மனிதர்களின் தேசங்கள் நாளும் பொழுதும் தமது சொந்த மக்களையே குண்டுகள்போட்டும்,வெடிக்க வைத்தும் நரவேட்டையாடும்போது,அத்தகைய தேசங்களின் விடிவு இந்த நூற்றாண்டில் இல்லை என்பதே நம் முன் நிற்கும் உண்மையாகும்.

 

அங்கேயும் கருப்பு நாசிகள்,இங்கேயும் வெள்ளை நாசிகள்.நாம் போகும் இடம் இனி எங்கே?பயப்பட வேண்டாம்,அதோ இடுகாடு.ஆ... அங்கேயும் ஒரு குழியை வேண்ட வேண்டும்-பராமரிக்க வேண்டும்!ஆக,இழப்பதற்கு எதுவுமே இல்லை.அப்ப பிறகென்ன போராடு, இவற்றைப் பெறுவதற்கு.அதாவது,கெளரவத்தோடு உழைத்து உயிர்வாழ ஒரு தேசம்!இதைவிட மாற்று வழி எவருக்கும் இல்லை என்பதே உண்மை!

ப.வி.ஸ்ரீரங்கன்
10.02.2008


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்