03012021தி
Last updateவெ, 26 பிப் 2021 11pm

மேலாதிக்கத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிராக நிற்கத் தவறுகிற எந்த ஒரு விடுதலை இயக்கமும் குறுகியகாலத்திற் கூடத் தனது மக்களுக்குத் துரோகஞ் செய்ததாகலாம்!

>>>அரசியல் தலைமைகள் மேலாதிக்க வாதிகளதும் ஏகாதிபத்தியத்தினதும்
முகவர்களாகவும் தரகர்களாகவும் மாற்றப்பட்டு வருகிற ஒரு காலத்தில் வாழுகிறோம். தேசிய
விடுதலைக்கான போராட்டம் சந்தித்துள்ள பின்னடைவுகள் நிலைமைகளை அதற்கு
வலுவாக்குகின்றன. எனவேதான் ஒவ்வொரு தேசிய இனத்தின் சார்பிலும் முன்வைக்கப்படுகிற
கோரிக்கைகளைத் தலைவர்கள் முதலில் சம்பந்தப்பட்ட மக்களுக்கு விளக்கி அவர்களது
உடன்பாட்டைப் பெறாமல் அந்நிய நாடுகளின் குறுக்கீட்டைக் கோருவது சகல மக்களுக்கும்
இழைக்கப்படுகின்ற பெரிய துரோகமாகும். அவ்வாறான செயல்களைக் கேள்விக்குட்படுத்துவது
நம் ஒவ்வொருவரதும் உரிமையும் கடமையுமாகும். <<<

 

இந்தியா சென்றிருந்த அமைச்சர் சந்திரசேகரன் ஜனவரி 10 அன்று இலங்கைத் தமிழர் பிரச்சினையை இந்தியா மட்டுமே தீர்க்க இயலும் என்று சொல்லியிருக்கிறார். தமிழகத்தின் அரசியல்வாதிகட்கும் இது ஒன்றும் புதிதல்ல. எல்லாருமே பலவிதமான முறைகளில் இந்தியா பலவாறான தீர்வுகளை இலங்கை மீது திணிக்க வேண்டும் என்று பேசுகிறார்கள். அதேவேளை அவர்கள் டில்லி மீது எந்த விதமான நெருக்குவாரத்தைச் செலுத்தலாம் என்றும் அதன் வரையறைகள் பற்றியும் அவர்கள் நன்றாக அறிவார்கள். ஆனாலும் அந்த நாடகம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.


இந்தியா குறுக்கிட வேண்டும் என்று சொல்லுகிறவர் இன்று தமிழ் மக்களைக் கொன்று குவிக்கிற ஒரு அரசாங்கத்தின் அமைச்சர். அது அவசரகாலச்சட்டத்தை நீடிக்க வாக்கெடுப்பு நடத்துகிற போது கையை உயர்த்தத் தவறாத அமைச்சர். அவர் இந்தியா குறுக்கிட வேண்டும் என்று சொன்னதற்காக இந்த நாட்டு அரசாங்கத் தலைமை அவரை மெச்சுமா? இல்லை கண்டிக்குமா? இல்லை அமைச்சர் பதவியிலிருந்து அகற்றுமா? அல்லாமல் போனால் இந்தியா குறுக்கிட வேண்டும் என்று அவரும் இந்தியா உதவவேண்டும் என்று சனாதிபதியும் வேண்டிக் கொள்வது ஒரே நோக்கத்துடனா? நம் அமைச்சர் சொல்லுக்கு அங்குஞ்சரி இங்குஞ்சரி பெறுமதி குறைவு.

>>>கடந்த முப்பதாண்டுகளில் இலங்கையின் தமிழ்த் தேசிய இனத்தின் தலைவர்கள்
எனப்படுவோர் எதையுமே கற்கவில்லை என்று நான் நம்பவில்லை. இந்தியாவையும்
அமெரிக்காவையும் சர்வதேச சமூகத்தையும் நம்புமாறு சொல்வதுடன் ஐ.நா. சபையினதும் அதன்
அமைதிப்படையினதும் குறுக்கீட்டை வேண்டுவோர் முற்றிலும் அறியாமையால் சொல்வதாக நான்
நம்பவில்லை. சரியானதைச் செய்யும்படி மக்களுக்கு அறிவுறுத்த இயலாமல் அவர்களைத்
தடுக்கிறது எது என்று நாம் சிந்திக்க வேண்டும். <<<

இன்றைய மலையகத் தமிழ்த் தலைவர்களால் மலையகத் தமிழரது, குறிப்பாகத் தோட்டத் தொழிலாளரது தேவைகள் பற்றி என்ன செய்ய முடிகிறது? தலைவர்களது துரோகங்களால் கசப்படைந்து தொழிற்சங்கங்களின் தலைமைகளை மீறிப் போராடிய தொழிலாளர்களது போராட்டத்தைக் கூடக் காட்டிக் கொடுத்த பெருமை அவர்கட்குரியது. மலையகத் தமிழ் சிறுவர்களது கல்வி உரிமை மறுக்கப்படுகிறது. பாடசாலை நிருவாகங்களில் இவர்கள் குறுக்கிட்டுத் தங்களது அதிகார உரிமையைக் காட்டிக் கொள்கிறதன் மூலம் பொறுப்புள்ள ஆசிரியர்கள் மனமுடைந்து போகிறார்கள். தட்டிக் கேட்கிறவர்கள் பழிவாங்கப்படுகிறார்கள். சாதி, பிரதேசம் போன்ற பலவிடயங்களும் பாடசாலைகள் முதல் வேலைவாய்ப்புகள் வரை பலவற்றிலும் நுழைக்கப்படுகின்றன. மலையகத் தமிழரின் உரிமைகளுக்காக குரல்கொடுக்கவும் போராடத் தலைமை தாங்கவும் வேண்டிய தலைவர்கள் பதவிக்கட்காகவும் சலுகைகட்காகவும் ஒடுக்குமுறை அரசாங்கங்களிடம் சரணடைகிறார்கள். மேல் கொத்மலைத் திட்ட கட்டிக் கொடுப்புக்குக் கூடாகாத மலையகத் தலைமைகளிடம் எதை எதிர்பார்ப்பது என்று எல்லோருக்கும் தெரியும். அதனாலேயே தான் மலையகத் தலைவர்களுக்கு வடக்கு-கிழக்கு பற்றிப் பேசுவது வசதியாகவுள்ளது. அது தமிழகத்தின் உணர்ச்சி அரசியலுக்கு வசதியானது. அங்கு உரிய இடங்களில் பல்வேறு லாபகரமான தொடர்புகளை ஏற்படுத்த வசதியானது.

என்றாலும் எல்லாருக்கும் இந்திய ஆட்சியாளர்கள் என்ன செய்வார்கள் என்று தெரியும். தமிழக அரசில் யார் ஆட்சியிலிருந்தாலும் டில்லியை மீறி எதுவுமே தமிழக அரசு செய்யாது எனறும் தெரியும். நாடகமே உலகம் என்பார்கள். நாடகமென்றால் தமிழகத்தில் நடக்கிற உணர்ச்சி அரசியலல்லவா நாடகம். தமிழ் சினிமாவின் முன்னோடியான நாடகமேடைப் பாரம்பரியம் இன்று தமிழகத்தின் அரசியலை ஊடுருவி நிற்கிறது. தமிழ்ச் சினிமா தமிழகத்தின் சீரழிவு, தமிழகத்தின் பண்பாட்டு சீரழிவின் அடையாளம் என்றால் தமிழகச் சட்டமன்ற அரசியலின் சீரழிவு அதன் உச்சக்கட்டம் எனலாம். தமிழ்ச் சினிமாவை உண்மையான வாழ்க்கை என்று நினைக்கக் கூடியவர்கள் உள்ளனர். அது ஒரு காலத்தில் போதையூட்டும் இன்பக்கனவாக இருந்தது. இப்போது அது பயங்கர கனவாகவுமுள்ளது. போக்கிரிகள் தான் இன்றைய கதாநாயகர்களாகக் காட்டப்படுகிறார்கள். சண்டித்தனமே இன்று தலைமைத்துவப் பண்பாகக் காட்டப்படுகிறது. அந்தளவுக்கு மட்டும் அது தமிழகத்தின் அரசியலை யதார்த்தமாக சித்திரிக்கின்றது.

இந்தக் கோமாளிக் கூத்துக்குள் சில்லறைப் பாத்திரங்கள் மாதிரி ஈழத்து அரசியல்வாதிகள் போய்த் தலையை காட்டிவிட்டு வரலாம். அவர்களுடைய பங்கேற்பை அரசியல் வசதிக்காக அங்குள்ள அரசியல் தலைமைகள் பயன்படுத்துமேயொழிய அதனால் எந்தவிதமான தாக்கமும் ஏற்படாது. 1983 வன்முறையை அடுத்துத் தமிழ்நாட்டின் ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் எதிர்பாராத ஒரு உணர்ச்சி அலை எழுந்தது. ஆனால், 1987 அளவில் தமிழக அரசியல்வாதிகள் அதை எப்படிக் கையாண்டு தங்களது நோக்கங்களுக்காகப் பயன்படுத்த இயலும் என்பதில் போதிய பயிற்சி பெற்றுவிட்டனர். அன்று முதல் இன்றுவரை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லப்படுபவர்களிற் கணிசமான பகுதியினரை இந்திய ஆட்சியாளர்கள் தங்களது முகவர்களாக மாற்றுவதில் வெற்றி கண்டுள்ளனர். இந்திய ஆட்சியாளர்கள் தமிழ் மக்களின் விடுதலைப் போரட்டத்திற்கு மட்டுமல்லாமல் அமைதிப் பேச்சுவார்த்தைகட்கும் செய்துள்ள துரோகத்தையும் குழி பறிப்பையும் நமது தமிழ்த் தலைவர்கள் எனப்படுவோர் நன்கறிவார்கள். ஆனாலும், இன்று வரை ஆக மிஞ்சி அவர்கள் சொல்லக்கூடியதெல்லாம் இந்தியாவின் நிலைப்பாடு பற்றி வருந்துகின்றோம், இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றும் என்று எதிர்பார்க்கின்றோம் என்பதுதான். இந்திய அதிகார வர்க்கமும் அதன் அரச நிறுவனமும் எந்தத் திசையில் என்ன இலக்கை மனதிற்கொண்டு செயற்படுகின்றன என்று அறிய முடியாதளவுக்கு இவர்கள் சின்னப்பிள்ளைகளல்ல.

>>>சீனாவும் ரஷ்யாவும் ஈரானும் இந்தியா-அமெரிக்கா-இஸ்ரேல் என்கிற
அமெரிக்கத் தலைமையிலான கூட்டணி மூலம் அமெரிக்கா ஆசியாவைத் தனது ஆதிக்கத்திற்குக்
கீழ் கொண்டுவருகிற முயற்சிக்கு முன்னாற் சும்மா இருக்கப் போவதில்லை. இது இந்து
சமுத்திரப் பகுதியில் உள்ள நாடுகளில் புதிய நெருக்கடிகளை உருவாக்கலாம். இந்தச்
சூழலில் தேசிய இன மேலும் வலுப்படலாம். எனவேதான் தேசிய இன ஒடுக்கல் விடுதலைக்கான
போராட்டங்கள் தமது மூலோபாயங்களைக் கவனமாக வகுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
எந்த வல்லரசையும் நம்பி ஒரு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பது மூடத்தனம்.
வல்லரசுகளின் அதிகாரப் பகிர்வின் கணக்கு வழக்குகளில் விடுதலைப் போராட்டங்கள்
சில்லரைக் காசுகள் மாதிரி. வல்லரசு அரசியலிருந்தும் பிராந்திய மேலாதிக்கப்
போட்டியிலிருந்தும் சுயாதீனமாக இருப்பதன் மூலமும் மக்களைச் சார்ந்து நிற்பதன்
மூலமுமே தேசிய இன விடுதலையை வெல்ல இயலும். அதிலும் முக்கியமாக மேலாதிக்கத்திற்கும்
ஏகாதிபத்தியத்திற்கும் எதிராக நிற்கத் தவறுகிற எந்த ஒரு விடுதலை இயக்கமும்
குறுகியகாலத்திற் கூடத் தனது மக்களுக்குத் துரோகஞ் செய்ததாகலாம். <<<

ராஜீவ் காந்தி காலத்தில் இந்திய நிலைப்பாட்டில் ஏற்பட்ட முக்கியமான மாற்றம் அமெரிக்காவுடனான நெருக்கம். ரஷ்யா (அன்று சோவியத் யூனியன்) இந்தியாவைப் பிராந்திய வல்லரசாக்க உதவியது என்பது இன்றைய இந்திய ஆட்சியாளர்களது நினைவின் ஏதோ ஒரு மூலையில் ஒட்டிக்கிடக்கலாம். எனினும் இன்னமும் இந்தியாவின் ஆயுதத் தளபாடங்களில் 70 சதவீதம் ரஷ்யாவில் உற்பத்தியானவையயாகவே உள்ளதால் ஏதோ வகையான உறவு தொடரும். எனினும் இந்தியாவின் அமெரிக்கா நோக்கிய நகர்வு, சோவியத் யூனியனின் உடைவையடுத்துத் துரிதமடைந்தது. இந்தியாவின் ஆட்சியாளர்கள் அமெரிக்காவுடன் ஏற்படுத்திவருகிற நெருக்கமான உறவை அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுக்கிற இந்தியாவின் பாராளுமன்ற இடதுசாரிக் கட்சிகளால் தடுக்க இயலாது. தமிழ்த் தேசியவாதமும் தெலுங்கு தேசியவாதமும் பேசுகிற பிராந்தியக் கட்சிகளும் இந்தியாவின் அயற்கொள்கை பற்றியோ உலகமயமாதலுக்கு இந்தியாவை இரையாக்குவது பற்றியோ கவலைகாட்டவில்லை. இந்தியாவின் ஆளும் அதிகாரவர்க்கம் இந்தியாவை அமெரிக்க உலக ஆதிக்க முயற்சிக்கு ஒரு அடியாளாக மாற்றுவதற்கு முழுமையாக உடன்பட்டு வருகிறது. அதற்குப் பிரதியாக இந்தியாவின் பிராந்திய மேலாதிக்க நோக்கங்களுக்கு அமெரிக்கா தடையாக இராது. இதனால் நட்டப்படப்போவோர் இந்தியாவின் உழைக்கும் மக்கள்தான்.

சீனாவும் ரஷ்யாவும் ஈரானும் இந்தியா-அமெரிக்கா-இஸ்ரேல் என்கிற அமெரிக்கத் தலைமையிலான கூட்டணி மூலம் அமெரிக்கா ஆசியாவைத் தனது ஆதிக்கத்திற்குக் கீழ் கொண்டுவருகிற முயற்சிக்கு முன்னாற் சும்மா இருக்கப் போவதில்லை. இது இந்து சமுத்திரப் பகுதியில் உள்ள நாடுகளில் புதிய நெருக்கடிகளை உருவாக்கலாம். இந்தச் சூழலில் தேசிய இன மேலும் வலுப்படலாம். எனவேதான் தேசிய இன ஒடுக்கல் விடுதலைக்கான போராட்டங்கள் தமது மூலோபாயங்களைக் கவனமாக வகுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

எந்த வல்லரசையும் நம்பி ஒரு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பது மூடத்தனம். வல்லரசுகளின் அதிகாரப் பகிர்வின் கணக்கு வழக்குகளில் விடுதலைப் போராட்டங்கள் சில்லரைக் காசுகள் மாதிரி. வல்லரசு அரசியலிருந்தும் பிராந்திய மேலாதிக்கப் போட்டியிலிருந்தும் சுயாதீனமாக இருப்பதன் மூலமும் மக்களைச் சார்ந்து நிற்பதன் மூலமுமே தேசிய இன விடுதலையை வெல்ல இயலும். அதிலும் முக்கியமாக மேலாதிக்கத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிராக நிற்கத் தவறுகிற எந்த ஒரு விடுதலை இயக்கமும் குறுகியகாலத்திற் கூடத் தனது மக்களுக்குத் துரோகஞ் செய்ததாகலாம்.

கடந்த முப்பதாண்டுகளில் இலங்கையின் தமிழ்த் தேசிய இனத்தின் தலைவர்கள் எனப்படுவோர் எதையுமே கற்கவில்லை என்று நான் நம்பவில்லை. இந்தியாவையும் அமெரிக்காவையும் சர்வதேச சமூகத்தையும் நம்புமாறு சொல்வதுடன் ஐ.நா. சபையினதும் அதன் அமைதிப்படையினதும் குறுக்கீட்டை வேண்டுவோர் முற்றிலும் அறியாமையால் சொல்வதாக நான் நம்பவில்லை. சரியானதைச் செய்யும்படி மக்களுக்கு அறிவுறுத்த இயலாமல் அவர்களைத் தடுக்கிறது எது என்று நாம் சிந்திக்க வேண்டும்.

அரசியல் தலைமைகள் மேலாதிக்க வாதிகளதும் ஏகாதிபத்தியத்தினதும் முகவர்களாகவும் தரகர்களாகவும் மாற்றப்பட்டு வருகிற ஒரு காலத்தில் வாழுகிறோம். தேசிய விடுதலைக்கான போராட்டம் சந்தித்துள்ள பின்னடைவுகள் நிலைமைகளை அதற்கு வலுவாக்குகின்றன. எனவேதான் ஒவ்வொரு தேசிய இனத்தின் சார்பிலும் முன்வைக்கப்படுகிற கோரிக்கைகளைத் தலைவர்கள் முதலில் சம்பந்தப்பட்ட மக்களுக்கு விளக்கி அவர்களது உடன்பாட்டைப் பெறாமல் அந்நிய நாடுகளின் குறுக்கீட்டைக் கோருவது சகல மக்களுக்கும் இழைக்கப்படுகின்ற பெரிய துரோகமாகும். அவ்வாறான செயல்களைக் கேள்விக்குட்படுத்துவது நம் ஒவ்வொருவரதும் உரிமையும் கடமையுமாகும்.

தூண்டில் தினக்குரல்( மறுபக்கம் )

 


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்