எந்தப் பிள்ளையும் நல்ல பிள்ளைதான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே" என்பது கவிஞர் கண்ணதாசனின் கருத்தாழம் மிக்கப்பாடல் வரிகள். இக்கருத்தை மெய்பிப்பது போன்று பிள்ளைகள் பெற்றோரின் கட்டுப்பாடு, கட்டுப்பாடின்மை ஆகிய இரண்டினாலும் பாதிக்கப்படுகின்றார்கள் என்பது உளவியலாளர்களின் ஆய்ந்தறிந்த துணிபு.

பெற்றோர்கள் எவ்வளவு தூரத்திற்குக் கண்டிப்பும், கடினமும், தண்டனை விதிப்பவர்களாகவும் இருக்கின்றார்களோ, அந்தளவிற்கு அவர்களின் பிள்ளைகள் பின்னர் மிகவும் வலுச்சண்டையாளர்களாக, ஊறு விளைவிப்பவர்களாக, இன்னா செய்பவர்களாக வளர்கின்றார்கள் என்பது உளவியலாளர்களின் கணிப்பீடு. இதனை நாம் எமது அனுவபவாயிலாகக் காணலாம். கண்டிப்பான பெற்றோரின் பிள்ளைகள் ஒன்றில் மிகவும் பயந்த சுபாவமுடையவர்களாக அல்லது ஆக்கிரமிப்புத்தன்மை மிக்க வலுச்சண்டைக்காரராக வளர்வார்கள்.

ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர்ச்செயல் உண்டு என்பதனை மனதில் கொண்டு பார்க்கும் போது ஒரு விளைவின் மறுவிளைவினை நாம் காணலாம் என்பதனை உளவியல் ரீதியில் ஆய்வுகள் செய்பவர்கள் கண்டறிந்து அதன் நன்மை தீமைகளை எடுத்துரைப்பதோடு பிள்ளைகளை எவ்விதம் வளர்க்க வேண்டும், அவர்கள் நல்ல பண்பாளர்களாக மாறுவதற்கு பெற்றோரின் நடத்தையில், எண்ணத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படவேண்டும் என்பதனை முன்வைக்கின்றார்கள்.

மிகக் கட்டுப்பாடு நிறைந்த பெற்றோரின் பிள்ளைகள் மிகவும் வன்முறையாளர்களாக வளர்கின்றார்கள். பெற்றோர் தங்கள் செயல்களை மாற்றும் போது பிள்ளைகளின் நடத்தையும் மாற்றமடைகின்றது. National Longitudinal Survey of Children and Youth (NLSCY) என்னும் நிறுவனம் அண்மையில் நடத்திய ஆய்வின் படி, பெற்றோர் மிகக் கண்டிப்பான பிள்ளை வளர்ப்பு முறையினைக் கொண்டவர்களாக இருப்பதால், பிள்ளைகள் மிகக்கூடியளவு வன்முறைத் தன்மைகள், கவலைக்கிடமான, பொதுநல நோக்கற்ற அல்லது குறைந்த பண்புகளைக் காண்பிக்கின்றார்கள் என ஆலோசனை நல்கியுள்ளது.

எவ்வாறாயினும், இந்த ஆய்வு பெற்றோர் குறைந்தளவு கண்டிப்பு உடையவர்களாக இருக்கும்போது, பிள்ளைகளும் மிகக் குறைந்த வன்முறை அல்லது போரூக்கப் பண்புகளையே கொண்டிருக்கின்றார்கள் எனக் காட்டுகின்றது. இதை மறுப்பக்கமாகப் பார்க்கும்போது அது எதிர்விளைவைக் கொண்டிருப்பதும் உண்மையே.

கனடிய புள்ளிவிபரத் திணைக்களத்தின் மூத்த பகுப்பாய்வாளரான எலினோர் தோமஸ் "பிள்ளைவளர்ப்பில் மாற்றங்கள் ஏற்படும் போது, பிள்ளைகளின் நடத்தையிலும் மாற்றம் ஏற்படும் என்பது ஒரு பெரும் செய்தி" எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக கனடிய சமூக அபிவிருத்தி நிலையமும், கனடிய புள்ளிவிபர நிலையமும் இணைந்து 4,129 பிள்ளைகளைப் பின்பற்றிச் செய்து கொண்ட ஆய்வின் விளைவாக இந்த முடிவுகள் பெறப்பட்டன. பிள்ளைகள் இரண்டு வயதிற்கும் ஐந்துவயதிற்கும் இடைப்பட்டவர்களாக இருக்கும்போது 1994-95 காலப்பகுதியிலும், அவர்கள் 10 மற்றும் 13 வயதாக இருக்கும்போது 2002-03 காலப்பகுதியிலும் இவ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலான காலப்பகுதியில் பெற்றோர் தமது கண்டிப்பு, தண்டனைகளைக் குறைவாகக் கொண்டிருந்த போது பிள்ளைகளின் வன்செயல்கள் அல்லது துன்புறுத்தும் பண்பு குறைந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒருபோதுமே தண்டனை அழிக்காத பெற்றோரின் பிள்ளைகளைப் போன்று இந்தப் பிள்ளைகளும் குறைந்தளவு வன்முறைகளைக் கொண்டிருந்தனர் என்பது வெளியாகியுள்ளது. ஆய்வு மேற்கொள்ளப்பட்ட காலத்தில் மிகவும் தண்டிப்பவர்களாக இருந்த பெற்றோரின் பிள்ளைகளே கூடிய வன்முறைப் பண்பினை உடையவர்களாகக் காணப்பட்டார்கள் என்பதும் ஆய்வின் முடிவாகும்.

தண்டனை வழங்கும் பெற்றோரின் பிள்ளைகள், பயந்த சுபாவம் உடையவர்களாகவும், தண்டனை அழிக்காத பெற்றோரின் பிள்ளைகள், சமூகம் சார்ந்த நடத்தை, எந்தப் பயனையும் எதிர்பார்க்காத, ஒருவருக்கு மட்டுமன்றி மற்றவர்களுக்கு நன்மைபயக்கும் செயல்களைச் செய்தல்... போன்ற பண்புகளைக் கொண்டவர்களாகவும் வளர்வதையும் இந்த ஆய்வு எடுத்துக் காட்டுகின்றது.

மக்கள், பிள்ளை வளர்ப்பு முறைகள் எவ்விதம் தாக்கங்களை ஏற்படுத்துகின்றது என்பதில் மிகுந்த அக்கறையாக உள்ளனர். ஆனால் எவ்விதம் இந்த மாற்றத்தை ஏற்படுத்துவது என்பது கடினமான ஒன்றாகும் என தோமஸ் கருத்துத் தெரிவித்துள்ளர்ர்.

பிள்ளைகளின் நடத்தைகளில், பெற்றோரின் வருமான நிலைமைகளும் தாக்கத்தைக் கொண்டுள்ளன. குறைந்த வருமானத்தைக் கொண்ட குடும்பங்களில் இருந்துவரும் பிள்ளைகளிடம் மிகக்கூடியளவு வன்முறைப் பண்பு காணப்படுவதாக ஆய்வு காட்டுகின்றது.

எனினும் இந்த நிலைமைகளுக்குச் சிலர் எதிர்த்தாக்கம் உடையவர்களாகவும் காணப்படுகின்றனர் என்பது ஏறைய வருமானக் குழுக்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது கண்டறியப்பட்டுள்ளது என்பதும் கருத்திற்கொள்ளத் தக்கது.
இவற்றிற்கு குடும்ப அமைப்பிலும் குடும்பத்தில் காணப்படும் ஒவ்வாத நடைமுறைகளிலும் உள்ள குறைபாடுகளும் காரணமாக அமைவதாகக் கருதப்படுகின்றது.

இதற்கு
1. மிகக்குறைந்த வருமானத்தை உடைய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் மிகக் கூடியளவு வன்முறை உடையவர்களாகக் காணப்படுவதற்கு குடும்பங்களின் குழப்ப நிலை காரணமாகின்றது.
2. தாய்வழி மனவழுத்தத்திற்குக் காரணமாக குறைந்தளவு வருமான நிலை காரணமாகின்றது
3. குழந்தைகளின் பயந்த நிலைக்கு குடும்பத்தின் குழ்பபநிலை காரணமாக அமைகின்றது எனக் கண்டறிய்ப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வின் படி பெற்றோர் பிள்ளைகளோடு ஒட்டி உறவாடவேண்டியதும், கண்டிப்பிற்குப் பதிலாக அன்பினால் ஆட்சி செய்யவேண்டும் என்பதும் எடுத்துக் கூறப்படுவது அவதானிக்கத்தக்கது. பிள்ளைகளின் நன்னடத்தைக்காக, அவர்களின் நல்லொழுக்கத்திற்காகத்தான் நாம் அவர்களைத் தண்டிக்கின்றோம் என்று அடிக்கடி கூறும் பெற்றோர்களை நாம் கண்டிருக்கின்றோம். ஆனால் அவர்கள் தண்டனை அளிப்பதால் பிள்ளைகளின் பிஞ்சு உள்ளத்தில் அது ஏற்படுத்தும் தாக்கம் அல்லது பாதிப்பு எத்தகையது என்பதனை பலர் உணர்ந்து கொள்வதில்லை. தண்டனை பெற்ற பிள்ளை பெற்றோருக்குத் தான் செய்த தவறுக்குத் தானே பொறுப்பு என்பதனை உணர்ந்து கொள்வதோ அல்லது அதன் தாக்கத்தை அறிந்து கொள்வதோ இந்தத் தண்டனையின் பாற்படுமா? என்பதனைச் சிறிதேனும் சிந்தித்துப்பார்க்கும் நிலை பெற்றோருக்கு உண்டா? அல்லது சிந்தித்துப்பார்க்கிறாரர்களா? என்பது கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.

பெற்றோரின் நெருக்கமான தொடர்பு, பிள்ளைகளிளிடம் இன்பகரமான சூழலைத் தோற்றுவிக்கின்றது என்பது உளவியலாளர்களின் முடிவு. கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் அறிக்கையின் படி பதின்ம வயதினை எட்டிப்பிடிக்கும் பிள்ளைகளின் மனத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகளில் பெற்றோரின் பிள்ளை வளர்ப்பு முறைகள் அவர்கள் பிள்ளைகளோடு கொண்டுள்ள தொடர்பு என்பன முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஆளுமை நிறைந்தவர்களாகப் பிள்ளைகள் வளர்வதற்குப் பெற்றோரின் வளர்ப்புமுறை மிக அசியமாகும். பிள்ளைகள் உள, உடல் வலுமிக்கவர்களாக வளர்வதற்கு அவர்களுக்கு இயல்பாகவே தேவைப்படும் அடிப்படை உளவியற் தேவைகள் பூர்தி செய்யப்படவேண்டியது இன்றியமையாதது. காப்பு, அன்பு, அரவணைப்பு, மதிப்பு (கணிப்பு), போன்ற அடிப்படைத் தேவைகள் பிள்ளைகளுக்கு மிக அவசியமானவை. இவற்றை அவர்களுக்குக் கிடைக்கும் வண்ணம் தங்களை அற்பணித்துச் செயற்படவேண்டியவர்கள் வேறுயாருமல்லர். அது தாய், தந்தையரே.

குழந்தை ஆரம்பத்தில் தாயின் அணைப்பினிலேயே வளர்கின்றது. பெரும்பாலான உயிரினங்களின் தன்மைகளில் தாய்மையின் பங்கு அதிகமானதாகவே அமைகின்றது. கருத்தரித்து, பெற்று வளர்ப்பதில் தாயின் பங்கு அதிகம். அது பறவையானாலும் சரி விலங்குகளாக இருப்பினும் சரி தாயின் அணைப்பினிலேயே குழந்தைப் பருவம் தங்கியிருப்பதைக் காணலாம். எடுத்துக்காட்டாக குரங்கின் பழக்கவழக்கத்தை நாம் எடுத்து நோக்கினால் அங்கு குழந்தைப்பருவத்தில் தாயே தனது குட்டியை கட்டி அணைத்துச் செல்வதைக் காணலாம் இதன் படி மனித வளர்ச்சிப் பருவங்களிலும் இத்தகைய பண்புகளை நாம் காணமுடிகின்றது.

மனித வளர்ச்சிப் பருவத்தில் பதின்மவயதுப் பருவம் மிகவும் சிக்கல் நிறைந்ததாகக் காணப்படுகின்றது. இந்தக் காலத்தில் தாய் தந்தை இருவரதும் அணைப்பு, நெருக்கம் பிள்ளைகளை நல்வழிப்படுத்த அவசியமானதாகக் காணப்படுகின்றது. மனமுறிவுற்ற பிள்ளைகளை ஆராய்ந்ததில் தந்தையுடனான நெருக்கமான போக்கு பெண்பிள்ளைகளுக்கு மனமுறிவை, அல்லது மன அழுத்தத்தைக் குறைப்பதாகக் காணப்படுகின்றது என ஆய்வுகள் புலப்படுத்துகின்றன.

பெற்றோர் பிள்ளைகளுடன் அன்பாகப் பழகுவதனால் பிள்ளைகள் சாந்தமுடையவர்களாக வளர்கின்றார்கள் எனவும், கூடியளவு கண்டிப்பும், தண்டனையும் வழங்கும் பெற்றோரின் பிள்ளைகள் வன்முறையாளர்களாக வளர்கின்றார்கள் என்னும் கருத்துக்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

நம்பிக்கையும், விசுவாசமும் உடையவர்களாக உங்கள் பிள்ளைகளை வளர்ப்பதனால், நடத்தை மாற்றங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களை அவர்களே தவிர்த்துக் கொள்ளும் தன்மையைப் பெறுவார்கள். சிலர் கடவுளை அல்லது வேறொரு உயர்ந்ததொன்றை அல்லது சக்தியை நம்புகின்றார்கள். வேறுசிலர் தமது நம்பிக்கையினை நாட்டின்மீது, அல்லது வேறு மக்கள், பொருட்கள், அல்லது தம்மீது வைக்கின்றார்கள். நம்பிக்கை என்பது நம்புகின்றவை உங்களுக்காக வேலை செய்பவை. சித்தியடைவோம் என்று நம்பிக்கை வைத்தால் சித்தியடைவது சுலபம். இல்லை சித்தியடைய மாட்டேன் என்னும் அவநம்பிக்கை கொண்டால் சித்தியடையவே முடியாது. எனவே இலக்கை எட்ட நம்பிக்கை கொள்ளவேண்டும். ஒவ்வொருவரும் தன்னம்பிக்கை மிக்கவர்களாக இருக்கும் போது வெற்றி பெறுவது இலகுவானதாகின்றது. தன்னம்பிக்கையும், தனது செயல்களில் விசுவாசமும் கொள்பவனே விடாமுயற்சி உடையவனாகவும் வளர்கின்றான். விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் ஒருவனிடத்தில் குடிகொள்ளும் போது, அது வெற்றிப்பாதைக்கு இட்டுச்செல்லும். "பாரம்பரியமாக நம்பப்பட்டு வந்த மரபுவழிக் கதைகள் மறையும்போது, அதனோடு ஒட்டிய கனவுகளும் மறைந்துபோகின்றன. கனவுகள் மறைந்துபோகும் போது அங்கு எந்த மேன்மையும் இருக்காது" என யூட் இந்திய சமூகத்தினர் சொல்வதனையும் அவதானிக்கலாம்.

பிள்ளைகளின் நடத்தையில் மாற்றங்களை ஏற்படுத்த அல்லது நல்ல நடத்தை(நல்லொழுக்கம்) உடையவர்களாக, நல்ல பண்பாளர்களாக வளர்வதற்குப் பெற்றோரின் நல் உறவு, பாசம், அன்பான கலந்துரையாடல், தங்களை அர்ப்பணிக்கும் தன்மை என்பன உதவுவதாகக் கொள்ளப்படுகின்றது. இதனால் பிள்ளை வளர்ப்பு முறைகளில் பெற்றோர் தமது போக்கையும், நடத்தையைம், நோக்கத்தையும் மிகுந்த அவதானத்தோடு பின்பற்றவேண்டியது அவசியமாகும்.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து என்பது போன்று பிள்ளைகளின் உளமோ மென்மையான மலரிலும் மென்மைவாய்ந்தது. அவர்களின் உளமாகிய மலர் வாட்டமடையாது என்றும் நறுமணம் வீசி இன்பகரமாக இங்கிதமான சூழலை ஏற்படுத்த அவர்களின் மனத்தில் மாசு படியாதபடி பெற்றோர் நடந்து கொள்ளுதல் இன்றியமையாததே.

- த.சிவபாலு எம்.ஏ. -
நன்றி - வடலி (June-2005)

 

http://kulanthaikal.blogspot.com/2005/06/blog-post_15.html