நியூசிலாந்தில் அறிவியலாளர் ஒரு பரிசோதனை மேற்கொண்டனர். ஒரு நாளைக்கு 2 மணி நேரத்துக்கும் அதிகமாகத் தொலைக்காட்சியைப் பார்க்கும் குழுந்தைகளும், விடலைப் பருவத்தினரும்-பின்னாளில் பாதிப்புக்கு ஆளாவது, அதில் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களின் உடல், அளவுக்கு மீறி பருமனாகிறது. புகை பிடிப்பதில் ஆர்வம் அதிகரிக்கிறது. கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாகக் காணப்படுகிறது. வாலிப பருவ வாழ்க்கையில், இத்தகைய பாதிப்புகள் ஏற்படுவதற்கு-குழந்தைப் பருவத்தில் கூடுதலாகத் தொலைக் காட்சியை அவர்கள் பார்த்ததே காரணமாம். OTAGO பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ராபர்ட் ஹன்காக்சும் அவர்தம் குழுவினரும், நியூசிலாந்தின் DUNEDIN நகரில் 1972-73 இல் பிறந்த 1000 குழந்தைகளைப் பரிசோதனைக்கு உட்படுத்தினர். 26 வயது வரை அவர்களைப் பரிசோதித்தனர். இந்தக் காலகட்டத்தில், நாள்தோறும் எத்தனை மணி நேரம், அவர்கள் தொலைக்காட்சிக்கு முன்னால் தவம் கிடந்தனர் என்ற தகவலை வாரத்துக்கு ஒரு முறை ஆய்வாளருக்குப் பெற்றோர் தெரிவித்தனர். 26 ஆவது வயதில், அவர்களின் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவு இதய துடிப்பு முதலானவை பரிசோதிக்கப்பட்டன. இவற்றுக்கும், கூடுதலாகத் தொலைக்காட்சியைப் பார்த்ததற்கும் இடையே தொடர்பு இருப்பது, பரிசோதனையில் தெரியவந்தது. 26 வயதடைந்தவர்களில், உடல் பருத்த 17 விழுக்காட்டினர் ரத்த அழுத்த அளவு அதிகரித்த 15 விழுக்காட்டினர், புகை பிடித்த 17 விழுக்காட்டினர், உடல்நலிவுற்ற 15 விழுக்காட்டினர் ஆகிய இவர்கள், கூடுதலாகத் தொலைக்காட்சியைக் கண்டு களித்ததே காரணம் என ஆய்வாளர் மதிப்பீடு செய்கின்றனர். அதாவது-குழந்தைப் பருவத்தில், விடலைப் பருவத்தில்-நாள்தோறும் 2 மணி நேரத்துக்கு அதிகமாகத் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்ததே காரணம்! "26 வயதில், பெரிய பிரச்சினை ஏற்படாது என்றாலும், பின்னாளில், இதயம் தொடர்பான பாதிப்பு ஏற்படுவதற்கும் மரணம் உண்டாவதற்கும் இவை காரணமாகலாம்" என்கிறார் டாக்டர் ஹன்காக்ஸ் ஒரு நாளைக்கு, ஒரு மணி நேரம் மட்டும் தொலைக்காட்சியைப் பார்ப்பது சாலச் சிறந்தது என்கிறார் அவர்.

 

"இது, பெற்றொரைப் பொறுத்தவரை, தலைவலி தான்!" "அவர்கள், முன்மாதிரியாக நடந்துகொண்டால் நல்லது. அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதை பெற்றோர் குறைத்துக் கொண்டு, குழந்தைகளுக்கு வழிகாட்டியாக அமையலாம்!" என்கிறார் டாக்டர் ஹன்காக்ஸ் "இல்லையெனில், மக்களிடையே உடல்நலப் பாதிப்புக்கு இதுவே அடிப்படையாகி விடலாம்!" என்று அவர் தீர்மானமாகக் கூறுகிறார். இந்த ஆய்வின் முடிவை ஒட்டி, ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் டாக்டர் டேவிட் லுட்விக் கருத்து தெரிவிக்கையில், "குழந்தைகளைக் கருத்தில் கொண்டு தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகும் உணவுப் பண்டங்களின் விளம்பரத்துக்குத் தடை விதிக்க வேண்டும்" என்கிறார். குழந்தைகள் எதை உண்ண வேண்டும் என்று, உணவுப் பண்ட தயாரிப்பு நிறுவனங்கள் பரிந்துரை செய்வது அறிவீனமாகும் என்கிறார் அவர். கவர்ச்சியான விளம்பரங்கள்-இளைஞர்தம் எதிர்கால வாழ்க்கைக்குப் பாதிப்பு ஏற்படுத்துகின்றன என்பதில் ஐயமில்லை என்று அவர் உறுதிபடக் கூறுகின்றார். ஆக, தொலைக்காட்சிக்கு ஓய்வு தருவது, நமக்கு நல்லது! அதன் விளைவாக- குழந்தைகள் இளைஞர்கள்-வாலிப பருவத்து வாழ்வில் அடி எடுத்து வைக்கும் போது- உடல் நலத்துடன் வாழ, முடியும்! தொலைக்காட்சி-தொல்லைக் காட்சியாக அமையாமல் பார்த்துக் கொள்வது, நம் கையில்தான் உள்ளது.

 

http://tamil.cri.cn/1/2004/08/24/30@12083_1.htm