10272020Tue
Last updateMon, 26 Oct 2020 2pm

ஆதிமனிதன் யார்?

கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடி என்று நாம் நமது மரபுவழியைப் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கின்றோமே. முதல் மனிதன் எங்கே தோன்றினான்?அவன் எப்படிப்பட்டவனாக இருந்தான்? அவனுடைய உயரம் என்ன? இதெல்லாம் நமக்குத் தெரியுமா? இந்தப் புவியில் மனிதனின் தோற்றம் பற்றிப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. ஆனால் GREAT RIFT VALLY எனப்படும் மகாப் பிளவு பள்ளத்தாக்குப் பகுதியில் தான் முதல் மனிதன் தோன்றினான் என்று பொதுவாக நம்பப்படுகின்றது. இந்தப் பள்ளத்தாக்கில் தான் எதியோப்பியாவும் கீன்யாவும் உள்ளன. இப்பகுதியில் சுமார் 70 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு முதல் மனிதன் இருந்ததாகக் கருதப்படுகின்றது. அவனுடைய எலும்புகளின் புதைபடிவுகள் 2002ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டன.

 

மத்திய பிரான்சில் உள்ள பாயிட்டியர்ஸ் பல்கலைக்கழகத்தின் மைக்கேல் புருனெட் என்பவரின் தலைமையிலான குழு புதைப்படிவுகளில் கிடைத்த முதல் மனிதனின் தாடை எலும்புகளையும் பற்களையும் ஒருங்கிணைத்து மண்டை ஓட்டை முழுமைப் படுத்தியுள்ளது. துமாய் எனப்படும் இந்த புதைபடிவத்திற்குச் சொந்தக் காரரான மனிதன் தான் ஆதிமனிதனாக இருக்க முடியும் என்று பிரெஞ்சு அறிஞர்கள் உறுதியாகக் கருதுகின்றனர். சாத் பாலைவனத்தில் கிடைத்த இந்த எலும்புப் புதைபடிவுகள் மற்ற பிராணிகனின் படிவுகளுடன் கிடந்தன. அந்த விலங்குகளின் காலம் 70 லட்சம் ஆண்டுகள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் கண்டுபிடிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நிபுணர்கள் துமாய் மண்டை ஓடு மிகச் சின்னதாக இருக்கின்றது. இதற்குள் மனித மூளை அடங்கியிருக்க முடியாது என்கின்றனர். மேலும் மண்டை ஓட்டின் அளவை வைத்துப் பார்க்கும் போது அதன் உடைமையாளரின் உயரம் 1.2 மீட்டர் தான் இருக்க முடியும். இது ஒரு நடக்கும் சிம்பன்ஸியின் உயரம் தான் என்று கூறுகின்றனர். ஆகவே துமாய் புதைப்படிவை ஆதிமனிதனுக்கு உரியது என்று பட்டம் கட்டிவிடக் கூடாது என்று அவர்கள் வாதிடுகின்றனர். ஆனால் துமாய் படிவுகள் ஆதி மனிதனுக்கு உரியவைதான் என்று உறுதிப்படக் கூறுவோர். இயற்கை எனும் ஒரு பிரிட்டிஷ் அறிவியல் ஏட்டில் இரண்டு கட்டுரைகளை வெளியிட்டுள்ளனர். 3 டி எனப்படும் முப்பரிமாண கணிணி மூலம் மறுஉருவாக்கம் செய்து கொரில்லா மற்றும் சிம்பன்ஸிகளின் மண்டை ஓடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்த போது மண்டை ஓட்டின் கோணங்களும் கொள்ளளவும் அது ஆதிமனிதனுக்குரிய புதைபடிவுதான் ஆப்பிரிக்க குரங்கிற்கு உரியதல்ல என்று முடிவு கட்டியுள்ளனர் கிறிஸ்டோபர் டோலிகோபஃர் தலைமையிலான நிபுணர்கள். மேலும் இந்த துமாய் மனிதன் 0.6 மீட்டர் உயரத்துடனே கூட நிமிர்ந்து நடக்க முடிந்தது என்கின்றனர். இது போல குரங்குகளால் நடக்க முடியாது என்றும் அவர்கள் வாதிடுகின்றனர். பாலைவனத்தின் வடபகுதியில் கிடைத்த பற்கள் மற்றும் தாடை எலும்புத் துண்டுகளின் புதைபடிவுகள் ஆப்பிரிக்கக் குரங்குகளின் அமைப்பில் இருந்து மாறுபடுகின்றன என்று மைக்கேல் புருடனெட் கண்டுபிடித்துள்ளார்.

 

அந்தப் பகுதியில் பேசப்படும் கோரன் மொழியில் துமாய் என்றால் வாழ்க்கையின் நம்பிக்கை என்று பொருள். GREAT RIFT VALLYக்கு மேற்கே 2500 கிலோமீட்டர் தொலைவில் கிடைத்த இந்த புதைபடிவுதான் ஆதிமனிதன் என்று இப்போது ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. குரங்கில் இருந்து மிக வேகமாக உருமாற்றம் பெற்று ஆதிமனிதன் தோன்றினான். இந்த ஆதிமனிதன் ஹோமினிட் எனப்படுகின்றான். அதாவவது ஹோமோ சேப்பியன்களுக்கு முன்னோடி நவீன உடலமைப்புடன் கூடிய நமது முன்னோர்கள் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றினார்கள். அவர்களுக்கு மூதானதயர் தான் இந்த ஹோமினிட். இவ்வளவு நம்பிக்கையூட்டும் வாதங்களுக்கு இடையிலும் நெருடலாக இருக்கும் ஒரே ஒரு பிரச்சினை சின்னஞ்சிறிய குரங்கு போன்ற ஒரு உருவத்தில் இருந்து மகத்தான மூளைபலம் பெற்ற ஹோமோ சேப்பியன் மனிதன் எப்படி உருவானான்?அவனுடைய மரபணு வழி என்ன?இந்தக் கேள்விக்கு இன்னமும் விடை காண முடியவில்லை.

 

http://tamil.cri.cn/1/2005/05/19/This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.