08192022வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

செவ்வாய் கோளில் தண்ணீர் பஞ்சம் இல்லை

செவ்வாய்க் கோள் மனிதன் வசிப்பதற்கு ஏற்ற இடம் தானா?அல்லது அங்கேயும் சென்னை நகரைப் போல தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுமா?அந்தக் கவலை வேண்டாம் என்கிறார் அமெரிக்க விஞ்ஞாணி மேரி பெளர்க். அண்மையில் டப்ளின் நகரில் பிரிட்டிஷ் சங்கத்தின் அறிவியல் விழாவில் பேசிய அவர் மக்களின் இந்த சந்தேகத்தை நீக்கக் கூடிய சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

 

சூரியக் குடும்பத்திலேயே மிகப் பெரிய மணல் திட்டுக்கள் செவ்வாய்க் கோளில் உள்ளன. இவற்றில் 50 விழுக்காடு வரை பனியும் உறைபனியும் கலந்திருக்கலாம் என்கிறார். செவ்வாய்க் கோளில் எப்போதாவது உயிரினங்கள் வசித்தனவா? செவ்வாய் கோளின் மண்ணுக்கு அடியில் இன்னமும் சில நுண்ணியிரிகள் புதைந்திருக்கக் கூடுமா? என்ற கேள்விகளுக்கும் விடைகாணத் துடிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

 

ஏனென்றால் செவ்வாய் கோள் முழுவதும் மணல் திட்டுக்கள் நிரம்பியுள்ளன. செவ்வாய் கோளில் மனிதன் காலடி எடுத்துவைத்ததும் அருகில் தென்படக் கூடிய ஒரு மணல் திட்டுக்குப் போய் அதைத் தோண்டினால் தண்ணீர் கிடைக்கக் கூடும் என்று கூறும் மேரி பெளர்க் செவவாய் கோளின் வட துருவத்தில் உள்ள மணல்கடல் மற்றும் தென்பகுதியின் மணல் திட்டுப் பள்ளம் ஆகியவற்றின் செயற்கைக் கோள் படங்களை ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்திருக்கிறார். இவற்றின் புவியியல் தன்மைகளை ஆராய்ந்ததில் தண்ணீரினால் கெட்டிப் பட்டவைதான் இந்த இரண்டு மணல் திட்டுக்கள் என்ற முடிவுக்கு வந்திருக்கின்றார்.

 

இவர் ஆராய்ந்த மணல் திட்டுக்களில் ஒன்று 1000 மீட்டர் உயரமான கெட்டியான குன்று. இதை ஒரு சிறிய மணல் மலை என்று சொல்லிவிடலாம். இது தவிர செவ்வாய் கோளின் மணல் பரப்பில் பிரம்மாண்டமான வண்டல் மண் படிவுகள் இருப்பதும். ஆறு போன்ற நீர் வடிகால் அமைப்புக்கள் இருப்பதும் அன்டார்ட்டிகாவின் உலர் பள்ளத் தாக்கின் மண்ணில் இருப்பது போன்ற LAMINATED கசடுகள் இருப்பதும் மணல் திட்டில் திடீரென தண்ணீர் பீறிட்டுக் கிளம்பி வழிந்தோடி வாயுவாக மாறி செவ்வாய்கோள் காற்றில் கலந்து விட்டதற்கான சான்றுகள் மணல் திட்டில் இருப்பதும் செயற்கைக் கோள் படங்களின் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. சில மணல் திட்டுக்களின் சரிவுகள் மிகவும் செங்குத்தாக உள்ளன. மணல் கெட்டிப்படாமல் இருந்திருந்தால் இது சாத்தியம் இல்லை. அப்புறம் மணல் திட்டுக்களின் மீது குவிந்திருந்த தளர்வான மணலை காற்று அடித்துச் சென்ற பிறகு அதன் மேற்பரப்பு மொட்டைமாடி மீது சிமென்ட் பூசப்பட்டது போல் இருக்கின்றது. தண்ணீர் இல்லாமல் இவ்வாரு ஒரு பரப்பு உருவாக முடியாது என்கிறார் பெளர்க். ஒரு காலத்தில் செவ்வாய் கோள் ஈரமாக இருந்தது என்பதை 1996க்கு பிறகு செவ்வாய் கோளுக்கு அனுப்பப்பட்ட பல கருவிகளும் அதை வலம் வரும் செயற்கைக் கோள்களும் உறுதிப்படுத்தியுள்ளன. இப்போது டாக்டர் பெளர்க் நடத்திய ஆய்வில் பண்டைக்காலத்தில் இடம் மாறும் மணலுக்கு கீழே ஒரு மீட்டர் ஆழத்தில் பனியும் உறைபனியும் இருந்தது தெரிய வந்துள்ளது. அப்படியானால் அது உயிரினங்களின் உறைவிடமாக இருந்திருக்குமா? அநேகமாக இருந்திருக்க முடியாது. ஆனால் ஆதிகால செவ்வாய் கோள் உயிரினங்களின் புதைபடிவுகள் நகரும் பனியில் இருக்கக் கூடும்.

 

செவ்வாய் கோளின் எல்லா இடங்களிலும் பனிக்கட்டி தட்டுப்பட்டுள்ளது. ஆனால் அதன் துருவங்களில் அதிகமாக உள்ளது. ஒரு பெரிய மணல் திட்டில் 500 கனமீட்டர். தண்ணீர் தேங்கியிருக்கலாம் என்று கணக்கிடுகிறார் டாக்டர் பெளர்க்.

 

செவ்வாய் கோள் அவ்வப்போது திடீரென தனது கோணித்தை மாற்றிக் கொள்கிறதாம். இதற்கு முன்பு சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் நடுக்கம் ஏற்பட்ட போது பனி பொழிந்திருக்கலாம் என்று டாக்டர் பெளர்க் கூறினார். இந்தப் பனிப் பொழிவால் மணல் கெட்டிப்பட்டு மணல் திட்டுக்களாக மாறியிருக்கலாம்.

 

http://tamil.cri.cn/1/2005/09/27/இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.