தென்னாப்பிரிக்கா தான் ஆதிமனிதன் உருவெடுத்த இடம் என்பது மட்டுமல்ல டைனோசர்களின் பிறப்பிடமும் அதுதான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் தென்னாப்பிரிக்காவில் ஒரு தேசியப் பூங்கா அருகில் கிடைத்த 7 டைனோசர் முட்டைகளை ஆராய்ந்த புதைவடிவ ஆய்வாளர்கள் உலகிலேயே மிகப் பழமையான டைனோசர் கருவை தாங்கள் கண்டுபிடித்திருப்பதாக அண்மையில் கூறினார்கள். இந்த டைனோசர் முட்டைக்கரு 190 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று கூறுகின்றனர்.

 

இத்தகைய இரண்டு தொன்மையான கருக்களைக் கண்டு பிடித்திருப்பதால் டைனோசரின் வளர்ச்சிப் பாதையை சிறுவயது முதல் பெரியதாகும் வரை அறிவியல் அறிஞர்கள் முதல் தடவையாக மறு உருவாக்கம் செய்துள்ளனர். இந்த இரண்டு முட்டைக்கருக்கள் தரையில் வாடும் முதுகெலும்புள்ள பிராணிகளிலேயே மிகவும் பழமையானது என்று கூறப்படுகின்றது.

 

ஜோகன்னஸ்பர்கில் உள்ள விட்வாட்டர்ஸ்ரேன்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வகக் காப்பாளர் மைக் ராத் இந்தக் கண்டுபிடிப்பு பற்றி செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார். அப்போது பேசுகையில் இதுதான் உலகிலேயே மிகவும் பழமையான தரைவாழ் மிருகத்தின் முட்டைக்கரு என்றார்.

 

சிறியதலையும் நீண்ட கழுத்தும் நீண்ட வாலும் உடைய MASSOS PONDILUS CARINATUS என்ற ஆரம்பகால டைனோசர் இந்த முட்டை போட்டிருக்க வேண்டும். இந்த டைனோசரின் வால் ஐந்து மீட்டர் நீளத்திற்கு வளர்ந்தது என்கிறார்கள். இந்த டைனோசர் ஜுராசிக் காலகட்டத்தின் ஆரம்பத்தில் தென்னாப்பிரிக்கச் சமவெளிகளில் அலைந்து திரிந்ததாம். உணவுக்கு பெரும்பாலும் தாவரங்களையே உண்டது. சிலசமயங்களில் கறையான் புற்றுக்களை தனது நகங்களால் உடைத்தும் பசியாறியது.

 

இந்தக் கண்டுபிடிப்பு முயற்சி சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. 1977ம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவின் மத்திய பகுதியில் உள்ள கோல்டன் கேட் தேசியப் பூங்காவுக்கு அருகில் புதிதாகப் போடப்பட்ட சாலை ஓரத்தில் புகழ்பெற்ற தென்னாப்பிரிக்க புதைவடிவ ஆராய்ச்சியாளரான ஜேம்ஸ் கிட்சிங் 7 முட்டைகளின் புதைபடிவுகள் ஒன்றாகக் கிடப்பதைக் கண்டார். நீண்டகாலமாக அந்த முட்டைகளின் புதைவடிவங்கள் விம்ஸ் பல்கலைக்கழகத்திலேயே கிடந்தன. சில சென்டிமீட்டர் நீளமே உள்ள முட்டைகளையும் முட்டைக் கருவையும் பாறையில் இருந்து பிரித்தெடுக்கும் பயிற்சியும் திறமையும் எவரிடமும் இருக்கவில்லை.

 

2000மாவது ஆண்டில் ஆராய்ச்சிக்காக அங்கு சென்ற கனடாவின் டொரோன் டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராபர்ட் ரெய்ஸ் என்பவர் அந்த முட்டைகளை திருப்பித் தருவதாகக் கூறி தனது ஆய்வுக் கூடத்திற்கு எடுத்துச் சென்றார். அங்கு அவருடைய உதவியாளரான டியான்ஸ்காட் மிகவும் கஷ்டப்பட்டு டைனோசர் முட்டைகளை சுத்தம் செய்தார். அதன் விளைவாக நன்கு உருவான இரண்டு கருக்கள் கிடைத்தன. அவற்றை விஞ்ஞானிகள் ஆராய்ந்ததில் சுவையான பல தகவல்கள் தெரிய வந்துள்ளன. குழந்தைப் பருவத்தில் இருந்து இந்த டைனோசர்கள் எப்படி பெரியவையாக வளர்ந்தன என்பதையும் தனது குட்டிகளை எவ்வாறு பராமரித்தன என்பதையும் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக இந்த வகை டைனோசர்கள் நல்ல பெற்றோராக இருந்துள்ளன என்கிறார்கள்.

 

இந்த டைனோசர் குட்டி பெரிய தலை பெரிய கண்கள், நான்கு பெரிய கால்கள் என்று பார்ப்பதற்கு அருவருப்பாக இருக்குமாம். ஆனால் பெரிதாக வளர வளர அதனுடைய கழுத்து வேகமாக வளர்ந்து உடம்பின் அளவு திடீர் மாற்றம் பெற்று கவர்ச்சிகரமான தோற்றம் பெற்று விடுகிறது.

 

இதற்கு முன்பு இந்த வகை டைனோசர்களின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் முட்டைகள் கண்டு பிடிக்கப்பட்டது இதுவே முதல் தடவை மேலும் முட்டையின் கருவை ஆராய்ந்ததில் இந்த டைனோசர்கள் தங்களது குட்டிகளை பாசத்துடன் வளர்த்ததும் தெரிய வந்துள்ளது. குட்டி டைனோசர்களுக்கு பற்கள் கிடையாது என்பதால் அவற்றின் பெற்றோரே இரை ஊட்டின என்கிறார் மைக்ராத். பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து அலகால் இரை எடுத்து வந்து குஞ்சுகளுக்கு ஊட்டுவதைப் போல டைனோசர்களும் தாய்ப்பாசத்தைக் காட்டியுள்ளன. டைனோசரின் பிள்ளைப் பாசத்திற்கு இந்த முட்டைக் கரு ஆராய்ச்சியே பழமையான சான்று என்கிறார் அறிவியல் அறிஞர் மைக் ராத்.

 

http://tamil.cri.cn/1/2005/11/22/This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.