உடலும் உலோகமும் என்றவுடன் உயர்ந்துகொண்டிருக்கும் தங்க விலை நினைவுக்கு வரலாம். அல்லது பெண்களுக்கு வெள்ளிக்கொலுசும், தங்கச் சங்கிலியும் நினைவில் வந்து போகலாம், ஆனால் இன்றைய அறிவியல் உலகம் தங்கத்தையோ வெள்ளியையோ பற்றி சொல்லப்போவதில்லை. நம் உடலில் செம்பு, துத்தநாகம், வெளிமம் எனப்படும் மெக்னீசியம் ஆகிய உலோகங்களின் இருப்பு பற்றியும் அவை நமது உயிர் வாழ்வுக் காலத்தோடு கொண்ட தொடர்பு பற்றியும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை உங்களுக்கு அறியத் தருகிறோம்.

 

காப்பர் என்று ஆகிலத்தில் கூறப்படும் செம்பு, சிங்க் என ஆங்கிலத்தில் அறியப்படும் துத்தநாகம், மெக்னீசியம் எனப்படும் வெளிமம் ஆகிய உலோகங்கள் உடலில் இருக்கும் அளவும், புற்று நோய், இதய நோய் இவற்றால் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் தொடர்புடையவை என பிரெஞ்சு அறிவியலர்கள் ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளனர்.

 

18 வருட காலத்திலான ஆய்வுகளின் படி அதிக அளவில் செம்பு உடலில் இருப்பவர்களின் உயிரிழப்பு விகிதம் அதிகமாகவும், அதிக அளவில் மெக்னீசியம் உடலில் இருப்பவர்களின் உயிரழப்பு விகிதம் குறைவாகவும், குறைந்த அளவு துத்தநாகம் இருப்பது இந்த இரு உலோகங்களின் பாதிப்புகளுக்கு கூடுதலாக துணைபுரிவதாகவும், லில்லி பாஸ்டர் நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர்.னேத்தாலி லியோன் மற்றும் அவருடைய சகாக்கள் கண்டறிந்துள்ளனர்.

என்றாலும், இந்த உலோகங்கள் உண்மையிலேயே இத்தகைய விளைவுகளுக்கு காரணிகளா அல்லது இவை வெறுமனே புற்று நோய் மற்றும் இதய நோயை உணர்த்தும் அடையாள அறிகுறிகளா என்பது தெளிவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

 

நோய் எதிர்ப்புத் தன்மையை உணர்த்தும் விளைவு, வீக்கங்கள் எரிச்சல், பார்க்கின்சன் நோய் அல்செய்மர் எனப்படும் நினைவிழப்பு நோயை தூண்டக்கூடிய ஆக்ஸிடேட்டிவெ ஸ்ட்ரெஸ் பிராண வாயுவிலான ரசாயண மாற்றத்தால் ஏற்படும் அழுத்தம், இவை உட்பட உடலில் நிகழும் பல்வேறு விடயங்களில் இந்த செம்பு, துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் ஆகிய உலோகங்கள் பங்கு வகிக்கின்றன என்று எபிடெமியாலஜி என்ற இதழில் டாக்டர் லியானும் அவரது உதவியாளர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

 

ஆக இந்த உலோகங்கள் உடலில் இருப்பதன் அளவுக்கும், உயிரிழப்புக்கும் உள்ள தொடர்பை ஆய்வு செய்ய இந்த ஆய்வாளர்கள் 30 முதல் 60 வயது வரையுள்ள 4035 பேரை ஏறக்குறைய 18 வருட காலம் கண்காணித்தனர்.

 

ஆய்வுகளின் தொடர்ச்சியில் 339 பேர் உயிரிழந்ததையும், இவர்களில் 176 பேர் புற்று நோயிலும் 56 பேர் இதய நோயிலும் மரணமடைந்ததையும் அவர்கள் பதிவு செய்தனர்.

 

இந்த ஆய்வுகளின்படி, உடலில் செம்பு உலோகம் அதிகளவில் இருந்தவர்கள் ஏதாவது காரணத்தால் உயிரிழக்கும் அபாயம் 50 விழுக்காடு கூடுதலாக இருந்ததையும், குறைந்தளவு செம்பு உடலில் உள்ளவர்களை விட புற்று நோயால் உயிரிழக்கும் அபாயம் 40 விழுக்காடு அதிகமாக இருந்ததையும் கண்டறிந்தனர்.

மறுபுறத்தில் கூடுதலாக மெக்னீசிய உலோகம் உடலில் இருந்தவர்கள் 40 முதல் 50 விழுக்காடு குரைவான அபாயம் கொண்டிருந்ததாகவும் கண்டறியப்பட்டது.

 

கூடுதலாக செம்பும், குறைவான துத்தநாகமும் இருந்தால் உயிரிழப்பு அபாயம் கூடுதலானது அவ்வண்ணமே, குறைவான மெக்னீசியமும், குறைவான துத்தநாகமும் இருந்தால் உயிரிழப்பு அபாயம் அதிகமானது.

 

அதிக அளவு செம்பு இருப்பது, முதுமை, புகைப்பழக்கம், கூடுதல் கொழுப்புச்சத்து(கொலஸ்ட்ரால்) இவற்றோடு தொடர்புடையது என்றும், குறைவான மெக்னீசிய அளவு, முதுமை, கூட்தல் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் இவற்றோடு தொடர்புடையதாகவும் டாக்டர் லியானும், அவரது ஆய்வாளர்களும் குறிப்பிட்டனர்.

 

உடலில் புற்றுநோயை தூண்டிவிடக்கூடிய, செல்களை சீர்குலைக்ககூடிய சீரழிவு ஏற்படுத்தும் ரசாயண மூலங்களை உருவாக்கூடியது இந்த செம்பு உலோகம், அதேவேளை உடலில் வீக்கம் எரிச்சல் இவற்றை குறைவான மெக்னீசிய அளவு ஏற்படுத்தக்கூடியது என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். செல்களை குலைக்கும், புற்றுநோயைத் தூண்டும் ஃப்ரீ ராடிக்கல்ஸ் எனப்படும் ரசாயண மூலங்களிலிருந்து பாதுகாக்கக்கூடிய குறைவான துத்தநாக அளவு மறுபுறத்தில் நோய் எதிர்ப்புத்தன்மையை பாதிக்கவும் கூடும் எனப்படுகிறது.

 

இந்த வகையில் குறைவான அளவு துத்தநாகம், செம்பு அதிகமான நிலையிலோ அல்லது மெக்னீசியம் குறைந்த நிலையிலோ பிராணவாயுவிலான ரசாயன மாற்ற சேதம் மற்றும் வீக்கத்துடன் கூடிய எரிச்சல் எதிர்விளைவு ஆகியவற்றை கூட்டாக தூண்டக்கூடிய தன்மை கொண்டதாக டாக்டர் லியோன் குழுவினர் மேலும் கூறியுள்ளனர்.

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.