பச்சை வயல்வெளி, நீலவானம், மஞ்சள் வெயில் மாலை, வெண்ணிற அலைதவழும் கடற்கரை, மணம்வீசும் மலர்கள் பூத்துக்குலுங்கும் சோலைகள், மேகம் முட்டும் மலை முகடுகள், சில்லென்ற பனிக்காற்று, தலை நனைக்கும் மழைத்துளிகள், குதித்தோடும் அருவிகள், இரவு நேர விண்மீன்கள்...நம்மை சூழ்ந்து நிற்கும் இயற்கையழகை சொல்லிக்கொண்டே போகலாம். நினைக்கும்போதே மனதிற்குள் புத்துணர்ச்சி ஏற்படும் இந்த இயற்கை வனப்புகளை ரசித்து மகிழ நமக்குத்தான் நேரமில்லாமல் போய்விட்டது. அன்றாட வாழ்க்கை ஓட அதிகாலை விழித்து அலுவலகத்துக்கு செல்வதற்கு தயாராகி, போக்குவரத்து நெரிசலில் மீண்டு களைப்போடு அலுவலகம் சென்று அன்றைய பணிகளை முடித்து மீண்டும் ஒருவழியாக களைப்போடு வீடு திரும்பும் நமக்கு எங்கே இயற்கையழகை ரசிக்க வாய்ப்புள்ளது என்பது நம்மில் பலரது கேள்வியாக இருக்கும். ஆனாலும் நமக்குள் இயற்கையின் கவின்மிகு காட்சிகளை கண்டுகளிக்கும் ஆவல் இருப்பதை மறுக்கமுடியாது. நான் கிராமத்தில்தான் வாழ்கிறேன், வாழ்கையே இயற்கையோடுதான் என்பவர்கள் கூட கடற்கரையில் அலையில் கால்நனைக்கவோ, கடலலையை எதிர்த்து நீந்தி மகிழவோ ஆசைப்படாமல் இருக்கமுடியாது. நகரமோ, கிராமமோ, கடலோரப்பகுதியோ நாம் வசிக்கும் இடம் எதுவாக இருந்தாலும், இயற்கையழகை ரசித்து மகிழும் ஆவல் நம் அனைவருக்கும் உண்டு என்பது உண்மை.

 

எதற்காக இதையெல்லாம் சொல்கிறேன் என்று கேட்கும் அன்பர்களுக்கு இனி நான் சொல்லப்போகும் தகவல்கள் விடையளிக்கக்கூடும். நாம் வாழும் உலகம் அழகானது. அழகான இந்த உலகத்தை பற்றிய சில தகவல்கள் இப்போது உங்களுக்காக.

 

*பூமி வளமிழந்து வருகிறது. முன்பு போல் விவசாயம் பலன் தருவதில்லை என்பவர்களுக்கு ஒரு தகவல். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக கடந்த ஆண்டும் 200 கோடி டன்னுக்கு மேலான தானியங்களை உலகம் உற்பத்தி செய்துள்ளது. இது வரலாற்றில் இதற்கு முன்பு எப்போதும் செய்யப்படாத உற்பத்தியளவாகும். அதேவேளை கடந்த 2004ம் ஆண்டில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் ஏற்றுமதி 1590 கோடி அமெரிக்க டாலாராக பதிவானது. 1961ம் ஆண்டில் ஒரு ஹெக்டேருக்கு 0.49 கிலொவாக இருந்த பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு 2004ம் ஆண்டில் ஹெக்டேருக்கு 2 கிலோவாக உயர்ந்துள்ளது. அதாவது 4 மடங்காகியுள்ளது.

 

*அதேவேளை மீன்பிடித் தொழிலின் மொத்த உற்பத்தி அல்லது மொத்த மீன் பிடியளவு 1997ம் ஆண்டு முதல் 13 விடுக்காடு குறைந்துள்ளது, என்றாலும் மொத்த மீன் உற்பத்தி மீன்பண்ணை தொழில்துறையின் வேகமான வளர்ச்சியால் 2003ம் ஆண்டில் 132.5 மில்லியன் டன்னாக பதிவாகியுள்ளது.

 

*அலுமினியம் உற்பத்தியும் 31.2 மில்லியன் டன் என்ற புதிய உச்ச அளவை எட்டியது. எஃகு உற்பத்தி 1129 மில்லியன் டன்னாக புதிய சாதனை படைத்தது.

 

விவசாயம் சரியில்லை, நகரத்துக்கு சென்றால் ஏதாவது வேலை தேடி பிழைப்பு நடத்தலாம் என்ற எண்ணம் பல ஆண்டுகளாக மக்களிடையில் உள்ளது. வளரும் நாடுகள் பலவற்றில் இந்த எண்ணம் பரவலாக காணப்படுகிறது. வசதி, வாய்ப்புகள் அதிகம் என்பதால் மாநகரங்களுக்கு வேலை தேடி செல்லும் வழமை வளர்ச்சியடைந்த நாடுகளிலும் உள்ளது. இந்த எண்ணம் நகரமயமாக்கல் எனும் சமூக மாற்றத்தை ஏற்படுத்தி, நகரங்களில் அடிப்படை வசதிகளில் ஒன்றோ அல்லது அதற்கு மேலோ இல்லாத வசிப்பிடங்களில் பெரும்பகுதி மக்கள் வாழும் நிலை ஏற்படுகிறது. நகரங்கள், மாநகரங்களில் விண்ணுயர்ந்த கோபுரங்களுக்கு கீழே குடிசைப்பகுதிகள் நெருக்கமாக அமைந்துள்ள நிலைக்கு இந்த நகரமயமாக்கல் என்பதே காரணம். *ஒரு புள்ளி விபரத்தின்படி 100 கோடி மக்கள் அல்லது 3ல் ஒரு நகரவாசி இத்தகைய குடிசைப்பகுதியில் வாழ்பவர். 2002ம் ஆண்டின் நிலைப்படி 110 கோடி மக்கள் மேம்படுத்தப்பட்ட குடிநீர் வசதியில்லா நிலையில் வாழ்கின்றனர், 260 கோடி மக்கள் மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகளற்றவர்களாக உள்ளனர்.

 

*மறுபுறத்தில் வாகன தயாரிப்பில் புதிய உச்ச அளவாக கடந்த 2005ம் ஆண்டில் 64.1 மில்லியன் கார்களும், இலகு ரக சரக்கேற்றி வாகனங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன.

 

*வான் போக்குவரத்து அல்லது விமான போக்குவரத்தும் 2004ம் ஆண்டில் புதிய சாதனை அளவாக மொத்தத்தில் 190 கோடி மக்கள், 34000 கோடி கிமீ தூர பயணம் மேற்கொண்டதாக பதிவாகியது. ஆனாலும் உலகின் 5 விழுக்காட்டு மக்கள் மட்டுமே தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது விமான பயணத்தை மேற்கொண்டுள்ளனர். ஆச்சரியாமாக உள்ளதா, ஆனால் அதுதான் உண்மை. அதாவது உலகின் 95 விழுக்காட்டினர் இதுவரை விமான பயணத்தை மேற்கொண்டதேயில்லை.

 

இத்தகைய சமமற்ற சமுதாயத்தில் வாழ்கிறோமா என்பதை நினைக்கையில் "பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே, நெஞ்சினில் துணிவிருந்தால் நிலவுக்கும் போய் வரலாம்" என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது.

 

*நுகர்வு திறனின் அடிப்படையில் உலகப் பொருளாதாரம் கடந்த ஆண்டில் உச்ச நிலையாக, மொத்த உலக உற்பத்தியளவு 596000 கோடி அமெரிக்க டாலர் மதிப்பு என பதிவானது. இதை வாங்கினால் அது இலவசம், பளிச்சிடும் பற்களுக்கு இந்த வகை பற்பசையை பயன்படுத்துங்கள் என்று விளம்பரப்படுத்த தொழில் நிறுவங்கள் கடந்த ஆண்டில் செலவழித்து தொகை 2.4 விழுக்காடு அதிகரித்து 57000 கோடி அமெரிக்க டாலர் தொகையை எட்டியது. இதில் பாதியளவு விளம்பர செலவினம் அமெரிக்காவில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது.

 

*மக்களின் சுகாதாரம் மற்றும் சமுதாய ரீதியிலான கண்ணோட்டத்தில், கடந்த ஆண்டில் உலக மக்கள் தொகையில் 7கோடியே 40 லட்சம் பேர் அதிகரித்து மொத்த உலக மக்கள் தொகை 645 கோடியானதாக ஒரு புள்ளி விபரம் கூறுகிறது. 2005ம் ஆண்டில் மட்டும் 50 லட்சம் பேர் எச்.ஐ.வி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர், 30லட்சம் பேர் எய்ட்ஸ் தொடர்பான நோய்களுக்கு பலியாகினர்.

 

ஆறுதலான செய்தி எதுவுமில்லையா என்றால், இருக்கிறது. இளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் 7 விழுக்காடு குறைந்துள்ளது. 1995 முதல் 2000ம் ஆண்டு வரையில் பிறக்கும் 1000 குழந்தைகளில் 61.5 பேர் பலியான நிலை மாறி 2000 முதல் 2005 வரையில் பிறக்கும் 1000 குழந்தைகளில் 57 பேர் பலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

*மொழி என்பது கலாச்சாரத்தின் ஆணிவேர் போன்றது. ஒரு மனிதனின் சிந்தனை, செயல்பாடு, தொடர்பு முறை எல்லாவற்றிலும் மொழி முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் இன்றைக்கு உலகின் 7000 மொழிகள் அழியக்குடிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதை நாம் அறிவோமா. அவ்வளவு ஏன் ஏறக்குறைய 500 மொழிகள் விளிம்பில் இருக்கின்றதாக ஒரு புள்ளி விபரம் கூறுகிறது. அதாவது இத்தகைய மொழி என்ற ஒன்று இருந்தது என்று வரலாற்று பாடத்தில் பின்வரும் சந்ததியினர் படிக்கும் நிலைக்கு இந்த மொழிகள் தள்ளப்பட்டுள்ளன.

 

*எரிபொருள் எண்ணெய் பயன்பாடு கடந்த ஆண்டில் 1.3 விழுக்காடு அதிகரித்து 38000 கோடி டன்னாகியது. காற்று மண்டலத்திலான கரியமில வாயுவின் தீவிரம், பரும அளவு அல்லது கன அளவை பொறுத்தவரை 2004ம் ஆண்டில் அதிகபட்ச உயர்வாக 0.6 விழுக்காடு அதிகரித்து லட்சத்தில் 37.96 பகுதியாக உயர்ந்தது.

 

*2005ம் ஆண்டில் சராசரி உலக வெப்பநிலை 14.6 டிகிரி சென்டிகிரேட், பூமியின் பரப்பில் இதுவரையில் மிக அதிகமாக பதிவான வெப்பநிலை இதுவாகும்.அதாவது பூமியில் இதுவரையில் மிக அதிகபட்ச வெப்பமான ஆண்டாக 2005ம் ஆண்டு பதிவாகியுள்ளது. 1880ம் ஆண்டில் இந்த உலக வெப்பநிலை கணக்கெடுப்பு தொடங்கப்பட்டபின் இதுவரை 5 முறை பதிவான உயர்ந்த வெப்பநிலை ஆண்டுகள் எல்லாம் 1998க்கு பிறகே பதிவாகியுள்ளன என்பது குறிப்பிட்டு சொல்லவேண்டிய தகவலாகும்.

 

*பருவநிலை தொடர்பான இடர்பாடுகள், சீரழிவுகளால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகள் கடந்த ஆண்டில் மட்டும் 204 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் ஆகும். இதற்கு முன்பாக அதிகபட்சமான இழப்பாக பதிவான 112 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் என்ற 1998ம் ஆண்டின் இழப்பைக்காட்டிலும் இது ஏறக்குறைய இரண்டு மடங்காகும்.

 

*2000ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் உலக அளவிலான வனப்பகுதி 36 மில்லியன் ஹெக்டேர் அளவு குறைந்தது. கடந்த 25 ஆண்டுகளில் 20 விழுக்காட்டு சதுப்புநிலக் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. 2005 ஆண்டின்படி 12 விழுக்காட்டு பறவையினங்கள் அழியும் தருவாயில் உள்ளன என்ற வகையில் இணைக்கப்பட்டுள்ளன. 3 விழுக்காட்டு தாவர இனங்கள் அழிந்துவிடும் நிலையில் உள்ளன.

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.