நீரின் அவசியம், அதன் முக்கியத்துவம் நான் அனைவரும் அறிந்ததே. தாகமெடுத்து குடிக்க நீர் இல்லாமல் தவிக்கின்றபோது, நா வறண்டு போக, ஒரு சொட்டு நீர் கிடைத்தால் போதும் என்ற எண்ணம் எழும்போது நீரின் அருமை நமக்கு புரியும். தண்ணீரை நீலத்தங்கம் என்று குறிப்பிடுகின்றனர். ஆம், அதன் பெருமை கடந்த சில ஆண்டுகளாக உலகின் பல்வேறு பகுதிகளது மக்களுக்கும் நன்ராக புரியத் தொடங்கியுள்ளது.

 

நீரால் சூழப்பட்டது நம் உலகம் ஆனால் குடிப்பதற்கு ஏற்ற நீர் நாளுக்கு நாள் அருக்கிகொண்டிருப்பது இயற்கையின் வித்தியாசமான விளையாட்டு என எண்ணத் தோண்றும். இயற்கையை குறைசொல்வதற்கு இல்லை. வளம் பல தந்து நம்மை வாழ்வித்துக்கொண்டிருக்கும் இயற்கையை நாம் சீராக பராமரிக்காமல் விட்டதாலும், இயற்கைச்சூழலை அதன் அமைப்படி சரியாக புரிந்துகொள்ளாமல் போனதாலும்தான் இன்றைக்கு தண்ணீரை விலைகொடுத்து வாங்கி தாகம் தீர்க்கும் நிலை. இதில் பெருமளவில் பாதிப்புகளை சுமந்துகொண்டிருப்பது நிலத்தடி நீர் வளம் என்பது அறிவியலர்கள் மற்றும் சுற்றுச்சூழலியலாளர்களின் கருத்து.

 

சட்டியிலிருந்தால்தானே அகப்பையில் வரும். பூமியின் உள்ளே தேங்கிக்கிடக்கும் நிலத்தடி நீர்வளம் சுரண்டப்பட்டு மாசுபடுத்தப்பட்டு சீர்குலைக்கப்படும் நிலையில், எத்தனை அடிகள் தோண்டினாலும் நல்ல குடிநீர் கிடைக்காமல் போவதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. சீனாவில் இந்த நிலத்தடி நீர் வளம் பல்வேறு பகுதிகளில் சீரழிந்து வருகிறது என்கிறார் மூத்த நீர் நிலவியம் வல்லுனர் ஒருவர். இதற்கு காரணங்களாக அவர் குறிப்பிடுவது அதிகப்படியான சுரண்டலும், அதிகரித்துவரும் மாசுபாடும் ஆகும்.

 

வட சீனாவில் ஆண்டுதோறும் 79 பில்லியன் கியூபிக் மீட்டர் நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. இது இருப்பதில் 51.5 விழுக்காடு நிலத்தடி நீராகும். தென் சீனாவில் ஆண்டுதோறும் 26.7 பில்லியன் கியூபிக் மீட்டர் நிலத்தடி நீர் எடுக்கப்படுகிறது, இது மொத்த நிலத்தடி நீர்ல் 13.2 விழுக்காடாகும் என்கிறார் சீன பொறியியல் கழகத்தைச் சேர்ந்த சாங் சோங்கு. கடந்த பத்தாண்டு கால வளர்ச்சி மற்றும் மேம்பாட்டின் அடிப்படையில் பார்த்தால் சீனாவின் தென்பகுதியில் போதுமான அளவு மழை பெய்வதால் நிலத்தடி நீர் நிலை ஓரளவுக்கு சீராகவே இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. ஆனால் சீனாவின்வடபகுதியின் நிலத்தடி நீர் நிலை மேலும் மோசமடையும் என்று கூறப்படுகிறது.

 

ஐ நாவின் ஒரு தகவலின்படி 30லிருந்து 40 விழுக்காட்டு நீர், குழாய்களில் உள்ள ஓட்டை, விரிசல் மற்றும் கால்வாய்களில் ஏற்படும் விரிசல், சட்டவிரோதமாக நீரை எடுத்தல் முதலியவற்றால் கணக்கில் வராமல் போகிறது அல்லது வீணடிக்கப்படுகிறது. உலகின் 25 முதல் 40 விழுக்காட்டு குடிநீர், நிலத்தடி நீரால் பூர்த்தி செய்யப்படுகிறது. 20ம் நூற்றாண்டில் இறுதி 5 வருடங்கள் பனிப்பாறை உருகுதல் தொடர்ந்த நிலை காணப்பட்டது. இது இயற்கைச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தகூடியது என்கிறார்கள். 1900 ஆண்டிலிருந்து நீர் தேவையும், நீர் பயன்பாடும் ஆறு மடங்கு அதிகரித்துள்ளது. ஆக மனிதர்களின் தேவை ஒருபுறம் அதிகரிக்க, இயற்கையை பற்றிய இயற்கைச் சூழலை பற்றிய புரிதல் இல்லாமல் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் இயற்கையை பாதித்து, இயற்கையை நம்பியுள்ள எல்லா உயிர்களையும் (மனிதர்கள் உட்பட) பாதிக்கிறது.

 

நிலத்தடி நீர்வளம் குறைவதால் இயற்கையில், சுற்றுச்சூழலில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. நில அமுக்கம், வறட்சி மற்றும் பாலைவனமயமாக்கம், கடலோர பிரதேசங்களில் உப்பு நீர் நிலத்தடி நீரோடு கலப்பது என சுற்றுச் சூழலுக்கு சேதங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.

 

வகை தொகையில்லாமல் நிலத்தடி நீர்வளம் சுரண்டப்படுவதால், சுற்றுச்சூழலில் சேதங்கள் விளைவது கண்கூடாக நாட்டின் பலபகுதிகளில் காணமுடிகிறது என்கிறார் சீன நிலவியம் ஆய்வு நிறுவனத்தின் நீர் நிலவியல் மற்றும் சுற்றுச்சூழல் நிலவியல் துறையின் இயக்குனர் யின் யுபிங்க். இந்த நிலத்தடி நீர் சேதமடைவதை மாற்றும் வகையில் நிலத்தடி நீர் ஆய்வை தேசிய பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தில் சீனா உள்ளடக்கியுள்ளது. ஆனாலும் சீனாவில் நிலத்தடி நீர் மேலாண்மை போதிய அளவில் இல்லை, உலக அளவில் இரண்டு தசாப்தங்கள் பின் தங்கிய நிலையில் உள்ளது என்கிறார் யின் யுபிங்க். யாங்ட்சி ஆறு, முத்து ஆறு ஆகிய டெல்டா பகுதிகளின் நீலத்தடி நீர் மாசுப்பட்டுள்ளது என்று கூறும் அவர் கண்காணிப்பு முறைகள், பழமையான மாசுபடுதலை சீர்படுத்தும் முறைகள் ஆகியவை நிலத்தடி நீர் மேலாண்மையில் முறைகளாக தொடர்கின்றன என்று சுட்டிக் காட்டுகிறார்.

 

நீர் வளம் அருக்கிக்கொண்டிருக்கிறது. இருக்கும் நிரை பங்கிட்டு அனைவரும் பயன்பெறலாம் என்றால் அதிலும் சிக்கல், பிரச்சனை, மோதல்கள். கிட்டத்தட்ட 3800 ஒரு சார்பான, இருதரப்பிலான மற்றும் பலதர்ப்பு தீர்மானங்கள் அல்லது புரிந்துணர்வுகள் உலகில் உள்ளன. எதற்கு என்கிறீர்களா, நீரை பங்கிடவும், பயன்படுத்தவும்தான். ஆக நீரின் தேவை என்பது எப்போது குறையப் போவதில்லை. நாளுக்குநாள் அதிகரிக்கத்தான் போகிறது. இந்தச் சூழலில் இந்த பிரச்சனையைக் களைவது எப்படி என்று சர்வதேச நீர் நிலவியல் வல்லுநர்கள் தங்களது 34வது ஆண்டு பொது அமர்வில் விவாதித்துள்ளனர். இருக்கும் நிலத்தடி நீர் வளத்தை பாதுகாப்பது எப்படி, எதிர்காலத் தேவைக்கான நீரை இந்த நிலத்தடி நீர்வளம் சிரழியாமல் பெறுவது எப்படி என்பதை இந்த வல்லுனர்களின் கருத்தரங்கு ஆராய்ந்து புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்தும் என்பது பரவலான நம்பிக்கை.

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.