மனிதர்கள் கழிவுகளாக வெளியேற்றும் பொருட்களும், நகரவாசிகள் அறிந்தும் அறியாமலும் குளியலறைகளில் தவறவிடும் பொருட்களும் சென்று சேரும் இடம் பொதுவாக கடல்தான். கடலுக்குள் இயற்கை நமக்களித்த எத்தனையோ செல்வங்கள் தவிர, கடற்கரைக்கு காற்று வாங்க வந்து வழியில் வாங்கிய இனிப்பு காரம், பட்டாணி சுண்டல் எல்லாம் பொதிசெய்திருந்த காகிதங்களும், பிளாஸ்டிக் உறைகளும், விளையாட்டாய் வீசியெறியும் பொருட்களும், தவறவிடும் காலணிகளும் என பலவற்றைக் காணலாம். கடல் நீரின் ஆழத்தில் சென்றால் இன்னும் பல பொருட்களை கண்டெடுக்கலாம். கடலுக்குள் சென்று ஆராய்ந்து பார்த்தாலும், கடற்கரையோரத்தில் நடந்து சென்றாலும் இயற்கையும் செயற்கையுமாக அலைகழித்து விடப்பட்ட பல பொருட்களைக் காணமுடியும் என்பது மீனவர்களுக்கும், கடலோரக் காற்றுக்கு மனதை தொலைத்த ஆயிரக்கணக்கான மக்களுக்கும் தெரியும்.

 

ஆக கடலுக்குள் நமக்கு தெரிந்தும் தெரியாமலும் பல விடயங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

 

அரபிக்கடலோ, செங்கடலோ, இந்து மாக்கடலோ பெயர்களால் வேறு பட்டாலும் இந்த கடல் என்ற நீர்தான் பூமிப்பந்தின் பெரும்பான்மையை பிடித்துள்ளது.

சிறுவயதிலிருந்தே நமக்குச் சந்தேகங்கள் அதிகம் எழுவதுண்டு. கேள்வி கேட்டு ஒன்றேல் ஆசிரியருக்கு அப்போது பதில் தெரியாததால் நமக்கு அடி, அல்லது கேட்கப்படும் கேள்வி வகுப்பை குழப்படிக்கவே செய்யப்படுகிறதோ என்று ஆசிரியர நமது பகுத்தறிவு வேட்கையின் மீதான சந்தேகத்திலும், குறும்புக்கார பையன் அவன் என்று சொன்ன சக ஆசிரியரின் குரல் தனக்கு நினைவில் வந்த காரணத்திலும் நமக்கு அடி. ஆக இப்படி அடி வாங்கியும் வாங்காமலும் சந்தேகம் தீராமல் கிடந்த கேள்விகளில் ஒன்றை உங்களுக்கு சொல்கிறேன். பூமியின் பெரும்பாலான பகுதி நீர் என்று சொல்கிறார்கள், நீருக்கு அடியில், ஆழத்தில் நிலம்தானே பிறகு எப்படி பெரும்பகுதி நீர் என்று சொல்லலாம்?

 

உம்மை அடிச்சதில் தப்பேயில்லை என்று உங்களுக்குல் சிலர் கூறுவது எனக்கு புரிகிறது.

 

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த சில அறிவியலாளர்கள் அட்லாண்டிக் கடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியை நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளனர். மீன் பிடிக்கவோ, அல்லது கடல் வாழ் உயிரினங்களை பற்றி ஆய்வு செய்யவோ இவர்கள் இந்தப் பயணம் மேற்கொள்ளவில்லை. காணாமல் போன ஒன்றைத் தேடித்தான் அவர்கள் சென்றுள்ளனர். டைட்டானிக் கப்பல் போல கடலுக்கடியில் மூழ்கியிருக்கும் ஏதோ ஒரு கப்பலை தேடி சென்றுள்ளார்களோ என்று யோசிக்க வேண்டாம். அவர்கள் தேடுவது என்னவென்று கேட்டால் சிரிப்புதான் வரும். காணாமல் போன பூமியின் மேலடுக்கு பகுதியைத் தேடி, என்ன ஆனது என்பதை அறியத்தான் அவர்களது இந்தப் பயணம். அட்லாண்டிக் கடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பூமியின் மேலடுக்குப் பகுதி காணவில்லை, மேலடுக்கு பகுதி இல்லாமல் பூமியின் அடியில் உள்ள மேன்டில் எனப்படும் கவசப்பகுதியே காணப்படுகிறது. புரியும் படி சொன்னால் நமக்கு காயமேற்படும்போது, நமது உடலில் உள்ள மேல் தோல் நீங்கி உள்ளே இருக்கும் அடித்தோல் அல்லது எலும்புகளை பார்க்க முடிகிறது அல்லவா அதைப்போலத்தான். ஆக இந்த அட்லாண்டிக் கடலின் குறிப்பிட்ட பகுதியில் பூமிக்கு காயமேற்பட்டு உள்ளே சில ஆயிரம் மீட்டர் அடியில் உள்ள மேன்டில் எனும் கவசப்பகுதி தென்படுகிறது.

 

பூமியில் இப்படியான ஒரு காயம் பற்றி அறியப்பட்ட கடந்த 5 அல்லது 6 ஆண்டு காலத்தில், அறிவியலர்களுக்கு ஆச்சரியமும், குழப்பமும் தொடர்கிறது. இந்த காணமல் போன மேலடுக்கு பகுதி அல்லது பூமியிலான காயம், பல்லாண்டுகளாய் நீடித்து வரும் பூமியின் நிலத்தட்டுகள் அல்லது புவித்தளத்தட்டுகளின் உருவாக்கம் பற்றிய புரிதல்களை, தேற்றங்களை சவால் விடுக்கும்படியாக, பொய்யாக்கும்படியாக அமைவதே அறிவியலர்களின் குழப்பங்களுக்கு காரணம்.

 

சுனாமி, ஆழிப்பேரலை ஏற்பட்ட பிறகு நம்மில் பலருக்கு இந்த புவித்தளத்தட்டுகள் பற்றி பரவலாக தெரிந்திருக்கும் என்று நம்புகிறோம்.

 

பூமியை ஆப்பிள் போல குறுக்காக வெட்டி பார்த்தால் நான்கு படிவங்களாக அல்லது அடுக்குகளாக பூமி அமைந்திருப்பதைக் காணலாம். பூமிக்கு அடியின் மையமாக உள்ள உட்கரு, சுமார் 1200 கி மீ விட்டம் கொண்டது. அதற்கு மேலே வெளிக்கரு அடுக்கு இது திரவ நிலையில் காணப்படுகிறது. அதற்கு மேல்தான் இந்த வெப்பமான திரவத்தை காக்கும் கவசப்பகுதி, அதற்கு மேல் புவியின் மேலடுக்கு. புவியின் உட்கருவின் வெப்பநிலை சூரியனின் மேற்பகுதியை விட வெப்பமானது. இந்த உட்சூட்டினால் மேற்கரு மற்றும் கவசப்பகுதியிலான பொருட்கள் அசைகின்றன, நகர்கின்றன. புவிக்கடியிலான பொருட்களின் அசைவால், நகர்வால் மேலடுக்கு மற்றும் கவசப்பகுதிகள் அடங்கிய புவித்தளத்தட்டுகள் புவியின் மேற்பரப்பு நோக்கி நகர்கின்றன. இந்த புவித்தளத்தட்டுகள் ஒன்றோடு ஒன்று உரசும்போது அதன் விளைவாக, நிலநடுக்கம், சுனாமி என இயற்கையின் சீற்றத்தை நாம் காணலாம்.

 

ஆக பூமி அல்லது புவியின் செயல்பாடு, அதன் தன்மை பற்றி இப்போது அறிவியலர்களுக்கு ஏற்கனவே இருந்த புரிதல்களும் புரியாமல் போக, பகுத்து அறியும் மனிதகுலத்தின் வேட்கையின் விளைவாக அறிவியலர்கள் தொடர்ந்து ஆய்வுகளில் இறங்கியுள்ளனர். இந்த குறிப்பிட்ட அட்லாண்டிக் கடலடிப்பகுதியில் காயமடைந்து காணப்படும் புவிப்பரப்பையும், காயத்தால் கண்களுக்கு தெரியும் பொதுவாக சில ஆயிரம் மீட்டர்களுக்கு அடியில் உள்ள கவசப்பகுதியையும் கள ஆய்வு செய்ய 20 பேர் கொண்ட பிரிட்டன் நாட்டு அறிவியலர்கள் குழு பயணம் மேற்கொண்டுள்ளது.

 

முன்னர் குறிப்பிட்ட இந்த புவித்தளத்தட்டுகளின் மோதுதலின் விளைவாக இப்படி இந்த காயமேற்பட்டு, புவி மேலடுக்கு காணாமல் போனதா? அல்லது இந்தப்பகுதியில் புவி மேலடுக்கு பகுதி தோன்றவே இல்லையா?

 

இந்த கேள்விகள் ஒரு புறம் என்றால், தற்போதைய ஆய்வுகளுக்கு அறிவியலர்களை உந்தித்தள்ளியது, இனியும் புவி எப்படியெல்லாம் பரிணமிக்க போகிறது என்பதை ஆறியும் ஆவலாகும். பல சதுர கீலோமீட்டர்கள் பரந்துள்ள இந்த புவியின் மேலடுக்கு இல்லாத, பூமியின் காயம் என அழைக்கப்படும் பகுதி குறித்து பிரிட்டன் சவுதேம்ப்டன் தேசிய கடலாய்வு மைத்தின் மூத்த ஆய்வாளரும் அறிவியலருமான பிராம்லி மர்ட்டன் குறிப்பிடும் போது, கடலுக்கடியிலான பூமிபரப்பில் இன்னும் பல மில்லியன் சதுர கிலோமீட்டர் கடலடிப்பகுதி காணாமல் போயிருக்கலாம் என்பதை தற்போது அறிவியலர்கள் உணரத் தொடங்கியுள்ளதாக கூறுகிறார்.

 

சரி இப்படி புவியின் மேலடுக்கு பகுதி இல்லாமல் புவிக்கடி அடுக்குகள் சிரிக்க கிடக்கிறதே இதனால் ஏதும் ஆபத்தில்லையா என்றால். இது இயற்கையாக நிகழ்ந்தது, இயற்கையின் பரிணமிப்பில் ஒரு பகுதியாத்தான் இது அமைந்துள்ளது. ஆனால் இந்த அகன்ற புவியின் தன்மை மற்றும் எப்படி இந்த உலகம் என்ற பூமிப்பந்து இப்படியாக ஒர் தோற்றம் பெற்றது என்பதையெல்லாம் ஆய்ந்தறிவது அவசியமானது. இன்னும் எத்தனை அதிசயங்கள் இயற்கையில் புதைந்துள்ளதோ, யாருக்கு தெரியும்.

http://tamil.cri.cn/1/2007/03/12/62@50418_2.htm