அங்கில வழி பயிற்றுவிப்பு பள்ளியில் படிக்கும்போது என்சைக்ளோபீடீயா என்ற சொல்லை ஆசிரியர் சொல்லி முதலில் கேட்டபோது, என்னடா இது தமிழ் வார்த்தைகளை சொல்கிறார் என்றுதான் முதலில் எங்களுக்கு தோன்றியது. எங்களுக்கு என்றால் எனோடு சேர்ந்த மற்ற சக மாணவர்களும். பொதுவாகவே என்சைக்ளோபீடியாவை கிண்டலாக என் சைக்கிளை பிடியா என்று நாம் சொல்லக் கேட்டிருப்போம். லத்தீன் மொழியில் என்சைக்ளோபீடியா என்றால் பொதுக் கல்வி என்று பொருள். ஆனால் இது என்குக்லியோஸ், பேய்டியா என்ற இரு கிரேக்க வார்த்தைகளிலிருந்து லத்தீனுக்கு வந்தது. கிரேக்க மொழியின்படி அந்த இரு வார்த்தைகளுக்கான பொருள் முழுமையான, பொதுவான கல்வி என்பதாகும்.

 

தமிழில் கலைக்களஞ்சியம் என்று கூறப்படும் இந்த என்சைக்ளோபீடியா, பல்வேறு தலைப்புகளிலான, பல்வேறு விடயங்களை பற்றிய தகவல் திறட்டாக, அறிவுக்களஞ்சியமாக விளங்குகிறது.

 

ஆக முழுமையான தகவல் திரட்டாக அமையும் இந்தக் கலைக்களஞ்சியம் ஆய்வாளர்களுக்கும், பல்கலைக்கழக மற்றும் பள்ளி மாணவர்களுக்கு உதவியாக அமைகின்றது. சொல்லகராதியில் சில சமயங்களில் நமக்கு புரியாத வார்த்தைகளை தேடி கண்டுபிடித்து விடமுடியும் என்பது உண்மைதான். ஆனால் அந்தச் சொல்லை பற்றிய கூடுதலான தகவல் அறிய விரும்பினால் நமக்கு உதவியாக வருவதுதான் கலைக்களஞ்சியம்.

 

மனித அறிவுக்கு புலப்பட்ட எல்லா விடயங்களையும் நாம் இந்த கலைக்களஞ்சியங்களில் காணமுடியும் என்று சொன்னால் அது உண்மையே. ஏன் மனித அறிவுக்கு இன்னும் புலப்படாத விடயங்களைக் கூட நாம் காணலாம். எதற்காக இதையெல்லாம் சொல்கிறேன் என்றால், உலகின் பல்வேறு தகவல்களைக் கொண்ட திரட்டாக, அறிவுச் சுரங்கமாக உள்ள கலைக்களஞ்சியம் இருக்கிறது என்றாலும், புதிதாக ஒரு கலைக்களஞ்சியத்தை உலகின் மூத்த அறிவியலாளர்கள் உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்த கலைக்களஞ்சியம் உருவாக்கப்பட்டபின் 300 மில்லியன் பக்கங்கள் அதாவது 30 கோடி பக்கங்கள் கொண்ட மாபெரும் புத்தகமாக இது இருக்கக்கூடும் என்கிறார்கள். அதாவது பக்கங்களை கீழே தரையில் வைத்து அடுத்து அடுத்து ஒரே வரிசையாக வைத்தால் ஏறக்குறையா 52 ஆயிரம் மைல் நீளும். நமது பூமியின் பூமத்தியரேகை அல்லது நிலநடுக்கோட்டில் இந்த வரிசைபடுத்தலைச் செய்தால் இரண்டு முறை உலகைச் சுற்றிவரலாம். ஏய் ஆத்தி என்று மூக்கில் விரல் வைத்து, இவ்வளவு பெரிய புத்தகத்தை எப்படி அச்சடிக்க போகிறார்கள், அதை யார் வாங்குவது, அதன் விலை எவ்வளவாக இருக்கும் என்றெல்லாம் யோசிக்க வேண்டாம். காரணம், இது புத்தகமாக அச்சடிக்கபடப் போவதில்லை. இந்தக் கலைக்களஞ்சியம் இணையதளமாக, உலகின் அனைத்து மக்களுக்கும் பார்க்கக்கூடிய ஒன்றாக அமைக்கப்படவுள்ளது. ஆனாலும் இந்தக் கலைக்களஞ்சியத்தை பற்றிய முக்கியமான, ருசிகரமான தகவலை உங்களுக்கு இன்னும் நான் கூறவில்லை. இநதக் கலைக்களஞ்சியம், பூமியின் உயிரினங்களை பற்றிஅயதாக மட்டுமே அமையும் என்பதுதான் அந்த முக்கிய தகவல். அதாவது மனிதனுக்கு இதுவரை தெரிந்த 18 லட்சம் உயிரன வகைகள் பற்றிய அனைத்துத் தகவலும் இந்த கலைக்களஞ்சியத்தில் இடம்பெறும்.

 

உயிர் கலைக்களஞ்சியம் என்ற இந்தத்திட்டப்பணியின் முதல் இரண்டரை ஆண்டுப்பணிகளுக்கு மட்டுமே 12.5 மில்லியன் அமெரிக்க டால்ர் தொகையை மெக்கார்த்தர் & ஸ்லோன் அமைப்பு அளித்துள்ளதாம். இந்தக் கலைக்களஞ்சியத்தை தொகுத்து முடிக்க 10 ஆண்டுகள் தேவை என்று கூறப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட உயிரனத்தின் புகைப்படம், ஓளி மற்றும் ஓலிப்பதிவுகள், அவை வாழும் பகுதிகள் பற்றிய வரைபடம், அவற்றின் மரபணுத்தொகுதி பற்றிய தகவல், அந்த உயிரனம் தொடர்பான அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் எல்லாமே இடம்பெறும். இந்த மாபெரும் அறிவியல் தகவல் திரட்டு மற்றும் தொகுப்புப்பணியில் உலகின் முன்னணி அறிவியலாளர்கள், அருங்காட்சியகங்கள், பல்கலைக்கழகங்கள், ஆய்வுக்கூடங்கள் என பலரது பங்கேற்பு இடம்பெறும்.

 

இந்த இணையதளம் ஒரு ஊடாடும் விலங்கியல் பூங்காவாக அமையும் என்கிறார் இந்தத் திட்டப்பணியின் செயல் தலைவராக பொறுப்பேற்கும் எட்வர்ட்ஸ் என்பவர். அதாவது நேரடியாக நாம் விலங்கியல் பூங்காவுக்குச் சென்றால் தேவைப்படும் இடத்தில் நின்று பார்த்து, நாமாக தெரிவு செய்து அடுத்த பகுதிகுச் சென்று பார்த்து அறிவது போல், இந்த இணையதளத்திலும் தகவல்களை பெறலாம்.

 

இது உலகளாவிய மாபெரும் முயற்சி என்பதோடு, அறிவியல் துறையில் ஒரு பெரும் எம்பிக் குதிப்பு போன்ற முயற்சியாகும் என்கிறார் அமெரிக்காவின் வாஷிங்கடனில் உள்ள புகழ்பெற்ற ஸ்மித்சோனியன் நிறுவனத்தைச் சேர்ந்த கிரிஸ்டியன் சாம்பர். கடந்த ஒரு தசாப்த காலமாக புவியிலுள்ள மனிதனுக்கு புலப்பட்ட அனைத்து உயிரின வகைகளையும் கொண்ட ஒரு பட்டியலை உருவாக்க அறிவியலாளர்கள் முயன்று வருகின்றனர். ஆனால் இது பாரமான பணி, அதிக நிதி தேவைப்படும் முயற்சி, சிக்கலானதும் கூட என்பதால், இதுவரையிலும் இந்த பட்டியலோ அல்லது தகவல் திரட்டோ வெற்றிகரமாக உருவாக்க முடியவில்லை. ஆனால் தற்போது உலகின் அறிவியலாளர்களும், முன்னணி பல்கலைக்கழகங்களும், ஆய்வுக்கூடங்களும் கைகோர்த்து உயிரினங்களின் தகவல் திரட்டை, கலைக்களஞ்சியமாக உருவாக்க மேற்கொள்ளும் முயற்சி நிச்சயம் வெற்றிபெறும் என்று நாம் நம்பலாம்.

 

http://tamil.cri.cn/1/2007/05/21/This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.