ஒண்ணாயிருக்க கத்துக்கனும் - இந்த உண்மைய சொன்னா ஒத்துக்கணும் காக்கா கூட்டத்த பாருங்க - அதுக்கு கத்து கொடுத்தது யாருங்க என்ற பாடலை கேட்டிருப்பீர்கள். உணவை கண்டவுடன் காகாவென குரலெழுப்பி தனது இனத்தை அழைத்து இணைந்து உண்பது காகத்தின் பழக்கம். அதன் ஒற்றுமையை எடுத்துக்காட்டி பலரும் அறிவுரை கூறுவண்டு. ஆனால், அவை குரல் கொடுப்பது பகிர்ந்து உண்பதற்கு என நினைக்கிறீர்களா? சிதறிக்கிடக்கும் உணவு நல்லதா அல்லது நச்சு வைத்துள்ளனரா? என அறியாமல், தன்னோடு பலரையும் அழைத்து, இறந்தால் அனைத்து காக்கைகளும் இறந்து விடவே அவ்வாறு செய்கின்றன என்று குதர்க்கமாக விவாதிப்பவர்களும் உண்டு. காகம், குருவி, கோழி போன்ற பலவித பறவை வகைகளும், சிங்கம், யானை, புலி, பூனை, ஆடு, மாடு போன்ற விலங்கினங்களும் தங்களுடைய தனித்தன்மை கொண்ட ஒலிகளால் மொழி பரிமாற்றங்களை மேற்கொள்கின்றன என்று பார்த்திருக்கிறோம், படித்திருக்கிறோம்.

 

தேனீக்கள், கடின உழைப்பு, சுறுசுறுப்பு மற்றும் சேமிப்பு ஆகியவற்றிற்கு புகழ்பெற்றவை. ஓடி, தேடி திரிந்து தேனை சேமித்துவிட்டு, அவை செயல்பட முடியாமல் போகும் குளிர் காலங்களில் அதனை தங்கள் உணவாக பயன்படுத்தும் புத்திசாலிகள். இனிமையான தேனை சேமித்து நமக்கு மருந்தாக அளிக்கும் மருத்துவர்கள், தேனீக்கள். தேன் கிடைக்கக்கூடிய இடங்களை அறிந்து, அதனை எப்படி பிற தேனீக்களுக்கு அறிவிக்கின்றன என்பது வியப்பான செய்தி. தேனீக்களிடம் மொழியோ, பேச்சு வழக்குகளோ இருக்கின்றனவா என்பது இதுவரை முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை. ஆனால் அவை சிறப்பியல்புமிக்க ஒருவகை நடனங்களை மொழியாக பயன்படுத்தி தகவல்களை பறிமாறிக்கொள்கின்றன என்று தெரிகின்றது. நமது உணர்வுகளை பிறருக்கு வெளிப்படுத்த மொழி இருப்பதுபோல் தேனீக்களுக்கு நடனங்கள் உள்ளன. தேனீக்கள் மற்றும் அவற்றின் நடன மொழி பற்றி ஆய்வு செய்த ஆஸ்திரேலிய நிபுணர் Karal Von Frich 1973 யில் நோபல் பரிசு பெற்றார்.

 

நம்மிடம் பல்வேறு மொழிகள் உள்ளன. அதுபோன்று வேவ்வேறு நாடுகளிலான தேனீக்களின் நடன மொழி வெளிப்பாடுகளில் மாற்றங்கள் இருக்கின்றனவா என்ற ஐயம் எழுவது இயல்பு. அது தான் உண்மையும் கூட. பிற கண்டங்களை சேர்ந்த தேனீக்கள் தங்கள் நடன அசைவுகளில் வேறுபாடுகளை கொண்டுள்ளன.

 

ஆசியாவிலுள்ள தேனீக்களின் நடனமும் ஐரோப்பாவிலுள்ள தேனீக்களின் நடனமும் ஒன்றா என்றால், இல்லை. ஏறக்குறைய ஒரேவகையாக இருக்கின்றன என்றாலும் அசைவுகளில் மாற்றங்கள் உள்ளனவாம். நம்மிடம் பல மொழிகள் உள்ளதால் ஒருவரையெருவரை புரிந்து அறிந்து கொள்ள, நாம் ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, உருது, சீனம், பிரெஞ்சு, ஜெர்மன் என பிறமொழிகளை கற்க வேண்டியுள்ளது. அப்படி கற்கும்போது பல்வேறு தாய்மொழி அடிப்படையிலான பாதிப்புக்களால் சிக்கல்கள் எழுவதுண்டு. அதுபோல தேனீக்களுக்கு பிற கண்டங்களிலான நடன மொழியை புரிந்து கொள்வதில் பிரச்சனைகள் இருக்கும் என எண்ணுகிறீர்கள் தானே!

 

ஒரு கண்டத்திலுள்ள தேனீக்கள் பிற கண்டத்திலுள்ள தேனீக்களின் சிறப்பியல்புமிக்க நடன அசைவுகளை புரிந்து கொள்கின்றனவா என்பதை ஆராய சீனா, ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனி அறிவியலாளர்கள் முயன்று, வெற்றியும் பெற்றுள்ளனர். ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் Shaowu Zhang, Zhejiang பல்கலைக்கழகத்தின் Shendlu chen மற்றும் ஜெர்மனி Wuerzburg பல்கலைக்கழக Juergen Tautz முதலியோர் இந்த ஆய்வுக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். Zhejiang பல்கலைக்கழகத்தின் விலங்கியல் கல்லூரியின் மருத்துவர் Songkun Su ஆய்வை வழிநடத்தினார்.

 

ஆய்வுகளில், தேனீக்கள் பிற கண்டத்திலுள்ள தேனீக்களின் நடன மொழிகளை புரிந்து கொள்கின்றன என்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர். ஆசியக் கண்டத்தை சேர்ந்த தேனீக்கள் ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த தேனீக்களின் நடன மொழியை புரிந்து கொண்டு, தங்கள் உணவான தேன் கிடைக்குமிடத்தை அறிந்து கொள்கின்றன என்பதை ஆய்வுகள் மூலம் உணர்த்தியுள்ளனர். ஆசிய கண்டத்திலுள்ள தேனீக்கள், உணவு கிடைக்கின்ற இடங்களை தெரிவிக்கின்ற தனித்தன்மையான ஜரோப்பிய தேனீக்களின் நடனத்தை விரைவாக புரிந்துகொள்கின்றன என்பதையும் நிரூபித்துள்ளனர்.

 

தேனீக்களின் மொழி அவைகளின் நடனமே. அதன் மூலம் தங்களிடையில் தகவல்களை பரிமாறிக்கொள்கின்றன. தாங்கள் வாழும் இடத்திலிருந்து தேன் உணவு கிடைக்கின்ற இடத்திற்கான தொலைவை வேவ்வேறான நடனங்கள் மூலம் அவை வெளிப்படுத்துகின்றன என்பதை முந்தைய ஆய்வுகளும் சுட்டிக்காட்டியுள்ளன. சாதராண வட்ட வடிவில் நடனமாடினால் தேன் உணவு மிக அருகில் உள்ளதை குறிக்கும். அரைவட்ட வடிவிலான நடனம் சற்று தொலைவில் உணவு கிடைப்பதை உணர்த்தும். இருபுறமும் அங்குமிங்குமாக அசைந்தாடும் நடனம் உணவு மிக தொலைவில் தான் கிடைக்கும் என்று அறிவிக்கிறது. இருபுறமும் அசைந்தாடும் நடனம் உணவு கிடைக்கும் திசையையும், தொலைவையும் காட்டுகிறதாம்.

 

இதற்கான ஆய்வுகள் பல்வேறு இடங்களில் பல்வித சூழல்களில் மேற்கொள்ளப்பட்டன. Fujian மாநிலம் Zhangzhou வேளான் கல்லூரியின் அருகிலுள்ள Da-mei கால்வாய் ஓரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஆசிய தேனீக்கள் ஐரோப்பிய தேனீக்களைவிட இருபுறமும் அசைந்தாடும் நடனத்தை அடிக்கடி அதிக நேரம் செங்குத்தான திசையில் ஆடி வெளிப்படுத்தின. தேனீக்கள் ஒன்று மற்றதன் நடனத்தை புரிந்து கொள்கிறதா என்பதை அவை ஒன்றாக இருந்தபோது ஆய்வு செய்தனர். ஆசிய தேனீக்கள் ஐரோப்பிய தேனீக்களின் தனித்தன்மையான இருபுறமும் அசைந்தாடும் நடனத்தை எளிதாக புரிந்துகொண்டு அதன் மூலம் தெரிவிக்கப்பட்ட உணவு கிடைக்கும் இடம் பற்றிய தகவலை புரிந்து கொண்டு செயல்பட்டன. ஆனால், ஐரோப்பிய தேனீக்களை புரிந்து கொண்டாலும், ஆசிய தேனீக்கள் அவற்றை போல நடனமாட தொடங்கிவிடவில்லை. தங்களுடைய நடனத்தையே தொடர்ந்து ஆடின. அதேவேளை ஐரோப்பிய தேனீக்கள் ஆசிய தேனீக்களின் நடனத்தை கற்றுக்கொள்ளும் திறன் குறைவான பெற்றிருந்தன என்று ஆய்வில் தெரியவந்தது. 

 

பிற கண்டங்களை சேர்ந்த தேனீக்களை ஒரே கூட்டில் வாழ விட்டால் என்ன விளைவு ஏற்படும் என்று ஆய்வாளர்கள் அறிய முற்ப்பட்டனர். ஒரே கூட்டில் வெவ்வேறான இடங்களை சேர்ந்த தேனீக்களை வைத்ததோடு, அவற்றுக்கு தேவையான மிக முக்கிய அம்சங்களான, மாறும் தட்பவெப்ப நிலை, ஈரப்பதம், மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டனர். ஒரே கூட்டில் விடப்பட்ட பிற கண்டங்களை சேர்ந்த தேனீக்கள் ஒன்றாக இருப்பதை விரும்பவில்லை என்பதை ஆய்வுக்காட்டியது. கண்டங்களின் வேறுபாடுகளின்படி வித்தியாசமான நறுமணங்களை கொண்டுள்ளதால் அவை இந்த வேறுபாட்டை உணர்ந்து ஒன்றையென்று கொன்றுவிடுகின்றன. பலவகை தேனீக்கள் ஒரே குடியிருப்பில் இருப்பதை விரும்பவில்லை என்பதை இது தெளிவுப்படுத்தியது. பணிபுரிகின்ற ஐரோப்பிய உழைப்பாளி தேனீக்களையும், ஆசிய இராணித் தேனீ மற்றும் உழைப்பாளி தேனீக்களை ஒரே கூட்டில் வைத்து 50 நாட்கள் எந்த சிக்கலும் இல்லாமல் இணக்கமாக பாதுகாத்தனர். அதற்காவே சுட்டித்தனம் மிகுந்த தேனீக்களை அகற்றியதோடு, பிற தேனீக்களின் மேல் தேன் நீர் தெளித்து அமைதியடைய செய்தனர். ஆனால் ஆசிய உழைப்பாளித் தேனீக்களை ஐரோப்பிய இராணித் தேனீ மற்றம் உழைப்பாளி தேனீக்களுடன் சேர்த்து வைத்தபோது, இந்த இணக்கம் வெற்றிபெறவில்லை. அவை ஒன்றையொன்று கொன்று மாய்ந்தன.

 

இந்நிலையில் தேனீக்களின் சமூக அறிவு பற்றி ஆழமாக விவாதிக்கப்பட்டு வருகின்றது. ஆசிய தேனீக்கள் ஐரோப்பிய தேனீக்களின் நடன மொழியை அறிந்துகொள்ள அதிக திறன் கொண்டவையா? ஆம் என்றால் பிற தேனீ வகைகளில் தரவுகளை எளிதாக புரிந்து கொள்ளும் ஆற்றல் வேறுபடுகிறதா? என்பதெல்லாம் விவாதிக்கப்படுகின்றன. 100 மில்லியன் ஆண்டுகால பரிணாம வளர்ச்சி மற்றும் சமூக மறுமலர்ச்சிக்கு பின்னரும், தேனீக்களின் நடத்தை மனித சமூகத்திற்கு மதிப்புக்குரிய குறிப்பாகும். உயிரினங்கள் அனைத்தும் தத்தமது முறைகளில் உணர்வு பரிமாற்றங்களை மேற்கொள்வதை தேனீக்களின் நடன மொழி உணர்த்துகிறது. அவற்றை சரியாக புரிந்து கொள்ளாதது தான் நமது நிலை

 

http://tamil.cri.cn/1/2008/07/28/121s72928.htm