"...இரவு மட்டுமல்ல

இந்த மண்ணின் இருப்பும்

அச்சத்தைத் தருகிறது

கிழட்டுப் பலாமரத்தில்

பச்சோந்தியொன்று.

வண்ணத்துப் பூச்சிகள்

சிறகடிக்கின்றன..." -செழியன்.(அதிகாலையைத் தேடி,பக்கம்:12.)

 

(1)

ருபத்தியொரு கரும்புலிகளின் மரணத்துக்குப் பின்பான அநுராதாபுர வான்படைத்தளத்தைத் தாக்கிய வெற்றி இன்றையபொழுதுகளில் வலைப்பதிவுகளில் புலி அரசியல் ஆதரவு-எதிர்பார்ளகளிடம் ஏற்படுத்தியிருக்கும் உளவியல் ரீதியான தாக்கம்-மரணமுற்று மண்ணையணைத்தபடி மண்டை பிளந்து கிடந்த தமிழ்க் குழந்தைகளின் உடல்களைக் கடந்து, சிந்தித்த உளவியலைப் பார்த்தறிவது மிக அவசியமாகும்.இத்தகைய மதிப்பீடானது எதிர்வரும் புலி-சிங்கள அரச வியூகத்துக்குள் மக்கள்படப்போகும் போர்காலச் சமூகசீவியத்துக்கு மாற்றீடான அரசியல் நகர்வுக்கு அவசியமான முன் நிபந்தனையில் ஒன்றாகும்.

 

புலம் பெயர்ந்து மேற்கு நாடுகளில் வாழும் தமிழர்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடிய வெற்றியும்,தமது இன்னுயிர்களைத் தமது தேச விடிவுக்கென எண்ணி மரித்த வீரத் தமிழ்ப்பாலகர்களின் கொத்துக்கொத்தான உடல்களைக் கண்டும்,அது குறித்து எந்தவொரு பாதிப்புமேயற்ற விறைத்த பதிவர்கள் மீண்டும்,மீண்டும் தலித் மநாட்டைக் கேலி பண்ணுவதும்,அதன் பின்பு கரும் புலிப் பாடலென்று இணைப்புக் கொடுப்பதுமாக இருக்கிறதும்,பின்பு,போராளிகளின் மரணத்தைக் கண்டு அதிர்பவர்களின் உணர்வுகளைக் கேலி பண்ணுவதுமாகச் சில நறுக்குப் பதிவிடுவதுமாக மனம் பிரண்ட சைக்கோவாகக் கிடந்துழலும் இந்தப் பொழுதுகளில் நாம் இத்தகைய வக்கிரத் தலைமுறையின் உளவியலையும்,புலிகள் மற்றும் சிங்கள அரசியல் நகர்வுகளையும் பார்ப்பது ஆரோக்கியமே.

 

புலி அரசியல்சார் அநுதாபிகளால்கூட போராளிகளின் மரணத்தைக் கண்டு ஒரு காத்திரமான படைப்பைத்தரமுடியாதபோது புலிகளின் அரசியலை மிகக் காட்டமாக விவாதிக்கும் நாங்கள் அதிர்கிறோம்.எங்கள் குழந்தைகளின் மரணம் எம்மைப் பாதிக்கிறது.அவர்களின் மரணத்துக்கூடாக வந்து சேரும் இத்தகைய(அநுராதபுரத்தாக்குதல்போன்றவை)வெற்றிகளால் நமது தேசியவிடுதலை-சுயநிர்ணயம் வந்துவிடக்கூடுமென நாம் நம்புவதற்கு நாம் தயாரில்லை.இந்த மரணங்களை உணர்வு மரத்த இன்றைய புலி அநுதாப இளைஞர்கள் வெற்றியின்படிக்கட்டுகளாகவெண்ணியும் இனிப்புண்டு மகிழ்ந்தும் போகலாம்.நாம் இதை வெறுக்கிறோம்.இத்தகைய மரணங்களால் தேச விடுதலைச் சாத்தியமாவென்று பார்ப்பதற்கு முதலில் புலிகளின் போராட்டத்தையும்,அவர்களின் அந்நிய உறவுகளையும்,அரசியல் வியூகத்தையும்,சிங்கள அரசியல் நகர்வுகளையும்,அந்த அரசைக் காத்துவரும் உலக நலன்களையும் சற்றுப் பார்ப்பது அவசியம்.

 

புலிகளின் கடந்த அநுராதபுரத் தாக்குதலுக்குப் பின்பான "தேசிய விடுதலை"ப் போராடச் சூழலையும்,கரும் புலிகளின் வகைதொகையான மரணத்துக்கூடாகக் கட்டப்பட்ட "வெற்றி"யென்ற இந்த அரசியலிலிருந்து புலிகளின் போராட்ட நிலை என்னவென்பதும்,இந்தப் போராட்டத்தால் சாத்தியமாக இருக்கும் இலங்கைத் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் இலக்கு என்னவென்று ஆராய்வதும் மிக முக்கியமாகும்.மரணங்கள்,உடல்கள்,மனிதக் கணங்களை வருத்துபவை.அவை உணர்வின் உந்துதல்களால் மனிதர்களின் எல்லா வகைக் கருத்துக்களையும் மெல்லக் கடைந்தேற்றி "ஓலம்,ஒப்பாரி"என்ற இயலாமையின் வெளிப்பாடாக வெளிவந்துவிடுகிறது.சக மனிதனின் அழிவைப் பார்த்தும்,அவனால் நிர்மூலமாக்கப்பட்ட பொருட் சேதாரத்துக்காக மகிழ்வுறும் சமுதாயமாக இருக்கும் இந்தத் தமிழ் பேசும் சமுதாயத்திடம் முதலில் சில கேள்விகளைக் கேட்டாகவே வேண்டும்?

இவ்வளவு மரணங்களை விலையாகக் கொடுத்து இத்தகைய வெற்றி தேவையாகிறதா?

 

இந்த வெற்றியால் புலிகள் சொல்லும் தமிழீழம் சாத்தியமாகிறதா?

 

இழந்த யுத்த தளபாடங்களை மீளப் பெற்றுத் தன்னை வலுவாகத் தகவமைப்பதற்கு இலங்கைக்கு என்ன தடை வந்துவிடுகிறது இதனால்?

 

இத்தகைய தாக்குதலால் இலாபமடைய முனையும் போர்த்தளபாட உற்பத்தியாளர்கள் எந்த முறையிலும் இலங்கைக்கு உதவும் தரணங்கள் அடைப்பட்டுப் போய்விடுமா?(இந்தியாவே இப்போது உதவுவதாக உருவேற்றி வருவதைக் காண்க).

 

போர்த்தளபாடத்தின் விருத்தியில் இலங்கை அரசியலின் எதிர்காலம் இராணுவத்தன்மையிலான அரசாக விருத்திக்கிட்டுச் செல்லும் சூழலுக்கு இத்தகைய போராட்டச் செல்நெறி ஒத்திசைவாக உண்டா,இல்லையா?

 

இலங்கை அரசின் வீழ்ச்சியைத் தடுக்கும் சக்திகள் எவர்?,அவர்களுக்கும் புலிகளுக்கும்-இலங்கைத் தமிழ் மக்களுக்குமான அரசியல் மற்றும் பொருளாதார உறவுகள் என்ன?

 

இலங்கை இராணுவத்தின் இன்றைய நிலை என்ன?அதற்கு இத் தாக்குதலால் ஏற்படும் விளைவுகள் என்ன?

 

மேற்காணும் கேள்விகளுக்கான விடைகளை எமக்குள் விதைக்கப்பட்ட தேசியவாதக் கருத்து எல்லைக்குள் இருந்து தேடுவதற்குமப்பால் நாம் நமது இன்றைய அரசியல் சூழலின் வெளியிலிருந்து பார்க்காது, நமது மக்களின் இன்றைய வாழ் சூழலுக்குள் இருந்தும்,இலங்கை மற்றும் புலிகள் அரசியலுக்கு அடித்தளமாக இருக்கும் பொருளாதார உறவுகள்,வெளிப்புறச் சக்திகளின் நலன்களையும் பொருத்திக் கண்டடைய முனையவேண்டும்.

 

இருபத்தியொரு கரும் புலிகளைத் தயார்படுத்தி இவ்வளவு பெருந்தொகைப் போராளிகளின் மரணத்தில் சில விமானங்களை அழிப்பதும்,அதுவே,இலங்கைப் பாசிச அரசின் இராணுவ ஜந்திரத்தை முடக்குமென யாராவது கனவு கண்டால் அவர் நிச்சியம் உலக அரசியலைத் துளிகூட அநுபவப்பட்டுப் புரியவில்லையென்றே எண்ண வேண்டும்.

 

இனி விடையத்துக்குள் நுழைவோம்.

 

சிங்கள அரசும், புலிகளும்:

 

இப்போது நம்முள் எழும் கேள்வி,புலிகளையும் சிங்கள அரசையும் சமமாக்க முடியுமா?இன்றைக்கு இந்தியக்கைக்கூலி ஆனந்த சங்கரி மற்றும் புலிகளால் சொல்லப்படும் ஒட்டுக் குழுக்கள் எனும் குழுக்கள்,கருணா அணி முதல் புலம் பெயர்ந்து வாழும் இயக்கவாத உறுப்பினர்கள்-ஊழியர்கள்,இந்தியத் துரோகத்துக்குத் துணையாகும் வானொலி ரீ.பீ.சி. மற்றும் சிவலிங்கம்-புளட் ஜெகநாதன் கம்பனி,கூடவே ரொக்சிய வாதிகளான அழகலிங்கம்,தமிழரசன் போன்றோர்கள் கூறும் அரசியலில் புலிகளை மதிப்பிடும் தவறான போக்கிலிருந்து நாம் மீள்வதற்கான ஒரு ஆரம்ப நிலையாக இக்கட்டுரைத் தொடரைப் பார்க்கலாம்.

 

இன்றைய நிலையில்,சிங்கள அரசு,புலிகளின் அதிகார வடிவம் இதுள் எந்த அரச-அதிகார அமைப்புத் தமிழ் பேசும் மக்களுக்கு எதிரிகள்?என்ற கேள்வியைக் கேட்போம்.

 

"புலிகளின் அதிகார வடிவம்" என்றே பதிலைத்தர குறைந்த பட்சமாவது 60 வீதமான தமிழர்கள் இப்போது இருக்கிறார்கள்.வடமாகணம் இழந்து,கிழக்கு மாகணம் இழந்து,மன்னாரும் பறிபோய் கிளிநொச்சிக்குள் அதிகார அமைப்பாண்மை பெற்ற புலிகள், கணிசமான தமிழ்பேசும் மக்களின் இலங்கை அரசசார் வாழ்வுக்கு வழிவிட்டுள்ளார்கள்.இங்கே, இலங்கை அரச ஆதிக்கம் மீளவும் விருத்தியாகி அது மக்களின் அன்றாட வாழ்வில் பெரும் தாக்கஞ் செய்யும்போது கூடவே கிளிநொச்சிக்குள்ளும் இலங்கை அரச ஆதிக்கத்துக்கான பொருளாதாரவுறவுகள் நிகழும்போது, இலங்கை அரசு என்பது தமிழ்பேசும் மக்களின் தவிர்க்க முடியாத இரண்டாம்பட்ச எதிரியாவது சாத்தியமே.இதைக் கணிப்பெலெடுத்த சிவலிங்கம் மற்றும் அழகலிங்கம்,தமிழரசன் போன்றோர் புலிகளையே முதற்தர எதிரிகளாக வரையறுக்கிறார்கள்.இதுள் தமிழ்பேசும் மக்களின் இன்றைய புலியெதிர்ப்பு எண்ணங்களும் முட்டிமோதுவதைக் காணாதிருக்க முடியாது.எனினும்,நாம் முன்வைப்பது தமிழ் பேசும் மக்களுக்குள் புலிகள் போன்ற அமைப்பைத் தோற்றுவித்தது இலங்கைப் பாசிசச் சிங்களப் பேரினவாத அரசே என்பதால், அதுவே தமிழ் பேசும் மக்களின் முதல்தர எதிரியென்பதாகும்.இதுகுறித்துக் கீழே பார்ப்போம்.

 

புலிகளால் நிகழ்ந்த மக்கள்சாராக் கருத்தியல்-அரசியல்,அதிகாரத்திமிர்,அத்துமீறிய சமூக(பிள்ளைபிடி-வீட்டுக்கொருவர் போரிட அழைத்தல்) மற்றும் வாழ்வாதாரங்களின் பறிப்பும்,இவைகளைச் செய்து முடிப்பதற்குமான கொலை அரசியலும் காரணமாகிறது.எனவே, மக்களில் கணிசமானோர் புலிகளிடமிருந்து மெல்ல விடுபட முனையும்போது அங்கே புலிகளுக்கெதிரான அரசியல் இலங்கை அரசுக்குச் சாத்தியமாகிறதென்பதையும் கவனத்தில் எடுப்போம்.இந்தக்(புலிகளா இலங்கை அரசா தமிழ்பேசும் மக்களின முதற்தர எதிரி?); கேள்வியை 15 ஆண்டுகள் முன் கேட்டிருந்தால் குறைந்தது 30 வீதமாவது புலிகளே என்றிருப்பார்கள்.இதிலிருந்து புலிகள் கற்றிருக்கிறார்களா என்றால் இல்லை என்பதே பதில்.

 

தமிழ் பேசும் மக்களின்மீதான சிங்கள இனவாத ஒடுக்குமுறைக்கு எதிரானவொரு போராட்டம்,தமிழ் பேசும் மக்களுக்கான அனைத்து உரிமைகளையும் வழங்குவதற்காகவும்,அதன் உந்துதலோடு சோசலிசச் சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதுமாகச் சொன்ன இந்தப் போராட்டம் எங்ஙனம் தமிழ்பேசும் மக்களுக்கே எதிரானது?இக்கேள்வியைக் கேட்காமல் எவரும் தப்பித்து ஓட முடியாது!அப்படி ஓடும்போது அவர் முழு மொத்தத் தமிழ் பேசும் மக்களின் அழிவுக்கு உடந்தையாக இருக்கிறார் என்பதே இன்றைய அரசியல் சூழலிலிருந்து(பெருந் தொகையான கரும் புலித்தாக்குதல்...மரணம்,போராளிகளின் மிகப் பெரும் அழிவு இத்தியாதிகள்) நாம் முன் வைக்கும் பதிலாகும்.

 

புலிகள் என்பவர்களையும்,சிங்கள அரசையும் உண்மையில் சமப்படுத்திவிட முடியாது!சிங்கள அரசோ பெளத்த சிங்களப் பேரினவாத பாசிசத் தரகு முதலாளிய அரசு.தனக்குள் ஏற்பட்ட முதலாளிய நலன்களாலும்,அதைப் பகிர்ந்தளிக்க வேண்டிய இனங்களுக்குள் முளைவிட்டத் தரகு முதலாளிக்களை ஓரங்கட்டுவதற்காகவும் இலங்கையின் சிறுபான்மை இனங்களான தமிழ்,முஸ்லீம்,மலையக மக்களை திட்டமிட்டு அடையாளமற்றதாக்கும் அரசவியூகத்துள் முழுமொத்தச் சிங்கள இன வலுவையும் பயன்படுத்தி பேரனவாதத்தை இறுக்கிப் போராடும் அரசு.இதற்காக அனைத்து உபாயங்களையும் உட்படுத்தி,இலங்கையின் பெயரளவிலான ஜனநாயகத்தையே படுகுழிக்குள் தள்ளி, இராணுவ அரச வடிவமாகிய சிங்கள அரசு உலக நலன்களால் நிலைப்படுத்திப் பாதுகாக்கப்படும் அரசாக இலங்கையில் ஆதிகத்தை நிலைப்படுத்துகிறது.

 

இங்கே,புலிகளோ ஒருவகைமாதிரியான(வெளியில் மக்களின் நண்பனாகவும் உட்கட்டமைவில் அதே மக்களின் விரோதியாகவும்)அமைப்பாகவும்,ஜனநாயக விரோதப் பாசிச இயல்புளைக்(மக்களின் சுயவெழிச்சுக்குத்தடை,மாற்றுச் சக்திகள்-இயக்கங்களுக்குத்தடை,கருத்துச் சுதந்திரத்தின்மீதான அதீத கண்காணிப்பு,தம்மை விமர்சிப்பதன் தளத்தைத் தகர்ப்பதற்காகக் கட்டப்பட்ட துரோகி எனும் கருத்தியல் மற்றும் அதுசார்ந்த அரசியற் கொலைகள்)கொண்ட ஒரு இராணுவ ஜந்திரத்தைக்கட்டிய அதிகார வடிவம்.எனவே,புலிகள் தமிழ்பேசும் மக்களின் நலனைப் பேணுவதாகச் சொன்னபடி அவர்களின் நலனின்மீது தமது அதிகாரத்தைக்கட்டிக்கொண்டவொரு வர்க்கமாக இருப்பதன் தொடர்ச்சியில் தமிழ் மக்கள் மத்தியிலுள்ள புதிய தரகு முதலாளிகளாகி வருகிறார்கள்.இதற்கும் சிங்களத் தரகு முதலாளியத்துக்குமான முரண்பாடுகள் தீர்க்குமொரு அரசியல் நகர்வில்(இது பெரும்பாலும் நிகழ்வதற்காக இந்தியாவோடு மனோ கணோசன் போன்றார் பாடுபடுவதாகச் சொல்லியுள்ளார்கள்) புலியின் இராணுவ மற்றும் அதிகார வடிவம் சிதைந்து சிங்கள அரச அமைப்புக்குள் சங்கமமாகும்.

 

இவர்களையும்(புலிகள்)சிங்கள அரசையும் எப்போதும் சமப்படுத்திவிட முடியாது.இந்தச் சங்கதியைப் புரிந்துகொள்வதற்குத் தடையாக இருப்பதே புலிகளின் அரசியல்தாம்.புலிகளின் பாத்திரத்தைப் புரிந்துகொள்ள முடியாத அரசியலின் விருத்திக்குக்காரணமாக நாம் இனம் காணுவது எமது போராட்டத்தைத் தக்கபடி நகர்த்தமுடியாது தடுத்த இந்தியாவினது தலையீடும்,புலிகளின் ஏகாதிபத்தியத் தொடர்புகளுமே.இக் காரணங்கள் எமது மக்களின் நோக்கு நிலையிலிருந்து போராட்டச் செல் நெறியை வகுக்க முடியாதவொரு பாரிய சதியைத் தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயப் போராட்டத்துக்குள் திணித்த உலக நலன்களின் இன்றுவரையான அழுத்தம் எமக்கான திசைவழியில் போராட்டச் செல்நெறி அமையவில்லை.எனவே, இதைப் புரியும் நிலையில் நமக்குத் தொடர்ந்து பொய் முக அரசியல் சிந்தனைக்குள் திணிக்கப்பட்டு மக்களை உளவியல் ரீதியாக முடக்கிய வரலாறு தொடர்ந்தபடி இருப்பதுதாம்.எண்பதுகளின் மத்தியில் இயக்கங்களின் ஐக்கியம் மிகவும் அவசியமாக இருந்தது.அந்த ஐக்கியத்தூடாகக் கட்டப்படிவேண்டிய தேசியப் போராட்டச் செல்நெறி கட்டப்படவில்லை.இலங்கை இராணுவமானது இக்காலக்கட்டத்தில் மிகவும் முடங்கி,முகாங்களுக்குள்ளிலிருந்து வெளியில்வருவதே முற்றிலும் தடைப்பட்ட வேளையில், இயக்கங்களின் ஐக்கியத்தினூடாகக் கட்டபடவேண்டிய போராட்டச் செல்நெறியும் அதனூடாக வளர்த்தெடுக்க வேண்டிய மக்கள் எழிச்சி மற்றும் மக்கள் மன்றங்கள் யாவும் அந்நியத் தலையீட்டால் முற்றுமுழுதாகச் சிதறடிக்கப்பட்டு,இறுதியில் இந்தியாவின் கைக்கூலிகளாக மாறிய இயக்கங்களாகச் சில தோற்றமுற்றன.அதில் புலிகளின் பாத்திரம் முக்கியமானது.ஏனெனில்,இந்தியா எப்படிப் புலிகளை வளர்த்தெடுத்ததென்பதை நாம் அறிவது அவசியமாகிறது.

 

இப்போதைய நிலைமைகளில் இலங்கை இராணுவம் பரவலாகத் தமிழ்ப் பிரதேசமெங்கும் தனது முகாங்களை நிறுவிப் பலாத்தகாரமான இராணுவ அதிகாரத்தை நிறுவித் தமிழ்ச் சமுதாயத்தின் அனைத்து வாழ்வு முன்னெடுப்பையும் தீர்மானிக்கும்போதும் நமது போராட்டத்துள் சரியானவொரு போராட்டச் செல்நெறி கட்டப்பட முடியாதிருக்கிற சூழலே எம்முன் வந்துள்ளது.தமிழ் பேசும் மக்களினதும்,அவர்களினது சுயவெழிச்சி மற்றும் முழுமொத்தப் பங்களிப்புமின்றித் தேசியவிடுதலைப் போராட்டத்துக்கானவொரு புரட்சிகரமான போராட்டச் செல் நெறி சாத்தியமில்லை.

 

புலிகளின் நிலை மிக மோசமான நிலையாகும்.அவர்கள் தமிழ்பேசும் மக்களில் கணிசமானவர்களைப் போராட்டத்திலிருந்து பிரித்துத் தமக்கெதிரான நிலைக்குள் தள்ளுவதற்கான முறைமைகளில் அந்நியச் சக்திகளால் திட்டமிடப்பட்டு மிகக் கறாராகக் கண்காணிப்பட்டுள்ளார்கள்.இதற்கான தகுந்த ஆதாரமாக நாம் முன்வைப்பது இந்திய இராணுவத்துக்கும் புலிகளுக்குமிடையிலான யுத்தம்.இந்த யுத்தம் மிகத்திட்டமிடப்பட்டவகையில் நடந்தவை.ஆனால், இந்த யுத்தத்துக்குள்ளும் புலித்தலைமை இராஜீவ் காந்தியோடு சமரசம் செய்ய முயன்றது.இதைப் புலித்தலைமையே ஒத்துக்கொண்டது.அவ்வண்ணமே வன்னியில் நடந்த சர்வதேசப் பத்திரிதையாளர் மாநாட்டிலும் புலிகளின் தலைவர் இதையே மீளவும் சாடைமாடையகச் சொல்லியிருக்கிறார்(கவனிக்க:பாலசிங்கத்துக்கும் பிரபாகரனுக்குமிடையிலான உரையாடல்,"நாங்கள் அவர்களோடு பேசிக்கொண்டுதானே இருக்கிறம்"என்று பிரபாகரனே அதுள் முணுமுணுக்கிறார்).இந்திய இராணுவத்தின் கொடூரமான அழிப்புக்குப் பின்பும்கூடப் புலிகள் இந்திய அரசுடன் நட்புப்பாராட்டவே முயன்றார்கள்.

 

இப்போது நாம் சொல்வது தமிழ் பேசும் மக்களின் முதற்தரமான எதிரிகள் இலங்கை அரசும்,அந்த அரசைத் தூக்கி நிறுத்துவதற்காவும்,தமிழ்பேசும் மக்களின் போராட்டத்தையே சிதைப்பதற்காகவும் புலிகளை நிரந்தரத் தலைமையாக்கிய இந்நிய அரசுமே தமிழ்பேசும் மக்களின் அதிமுதல் எதிரிகள்.இந்திய அரசு இல்லாமல் புலிகள் இல்லை.இன்றைய புலியின் இருப்புக்கு இந்திய அரசு எவ்வகையில் செயற்பட்டதென்பதை ஆராய்பவர்,இலங்கை இந்திய ஒப்பந்தம்,அவ் ஒப்பந்தத்தில் புலிகளைத் தவிர்த்தபடி அதிகாரத்தை ஏனைய இயக்கங்களிடம் கையளித்து,அத்தகைய இயக்கங்களின்வாயிலாக மக்களை நரவேட்டையாட வைத்து,எக்காலத்திலும் ஒரு ஐயக்கியம் ஏற்படாதபடி இந்தியா பார்த்துக்கொண்டது.இத்தகையவொரு நிலையில் மக்களோடு ஐக்கியமுறக்கூடியவொரு நிலையை இவ்வியக்கங்கங்கள் இழந்தபோது புலிகளே தமிழ்பேசும் மக்களின் ஏகப்பிரதிநிதியாகும் நிலைமை தோற்றம் பெற்றது.இது இந்திய முதலாளிகளுக்குகிடைத்த முதல் வெற்றி.

 

தொடரும்.

ப.வி.ஸ்ரீரங்கன்

28.10.2007