Language Selection

பி.இரயாகரன் -2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழ் மக்களுக்கு விடிவு கிடையாது. எந்த சுபீட்சமும் கிடையாது. எந்த நம்பிக்கையும் கிடையாது. இருண்டு போன பாசிச சூழலுக்குள், மக்கள் மீள மீள அழுத்தப்படுகின்றனர்.   

 

புலிபாசிசத்துக்கு எதிரான வரலாறு, மிக வேகமாக மக்களால் எழுதப்படுகின்றது. மக்களின் உணர்வுகளையும் உணர்ச்சியையும் சாகடித்து விட்டு, அவர்களை நடைப்பிணமாக்கியவர்கள், அதன் சொந்த விளைவையே தான் அனுபவிக்கின்றனர். முடிவின் (புலிப்பாசிசத்தின்) நாட்கள் எண்ணப்படுகின்றது.

 

இதன் வரலாற்று வேர் ஆழமானது. பேரினவாதம் மக்களுக்கு எதிராக நிகழ்த்திய கொடூரங்களை எதிர்கொள்ளவே இயக்கங்கள் தோன்றின. அவை படிப்படியாக சமூகவிரோத குண்டர் குழுக்களாக, கொலைகாரக் குண்டர்களாக, மாபியாக்களாக, அன்னிய கூலிக் குழுக்களாக சிதைந்து சின்னபின்னமாகினர். இதன் மூலம் மொத்த மக்களையும் தமக்கு எதிராக நிறுத்தினர். இவர்களிள் இந்த சொந்த நடத்தையைத்தான் தேசிய விடுதலை என்றனர். மக்களுக்கு எதிரான இந்த துரோகத்தையும், சமூக விரோதத்தையும் எதிர்த்தவர்களை, துரோகியாக காட்டிக் கொன்றனர்.

 

இந்த மக்கள் விரோத அரசியல் தமக்கு இடையிலான குழு மோதலாக, புலி படுகொலைகள் மூலம் அனைவரையும் அழித்தொழித்தனர். புலிகள் தமது தனிச் சர்வாதிகரத்தை பாசிச வழிகளில், தமிழ் மக்கள் மேல் திணித்தனர்.

 

இப்படி புலிப் பாசிச சர்வாதிகார நடைமுறைகள் தான், தேசியமாக காட்டப்பட்டது. இப்படி அண்ணளவாக 20 வருடங்கள் புலிப் பாசிசம் தனித்தாடிய வெறியாட்டம், இன்று இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. எப்படி இது நிகழ்ந்தது? ஏன் நிகழ்ந்தது. இந்த நிலையை நாம் மட்டும் தான் கடந்தகாலத்தில் முன்கூட்டியே தெளிவுபடுத்தினோம். அவற்றில் சில கீழே உள்ளது. முழுமையாக அவற்றை பார்க்க (பி.இரயாகரன்) செல்லவும். புலிகளின் அழிவை முன்கூட்டியே அரசியல் ரீதியாக சரியாக காரணகாரியத்துடன் சுட்டிக்காட்டிய நாம், தேசியத்தை சரியாக மீட்டெடுக்கும் அரசியல் வழிமுறைகளைக் கூட முன்வைத்தோம்.

 

1. அரசியல் ரீதியாக தோற்ற புலிகள், இராணுவ ரீதியாகவும் தோற்கின்றனரே ஏன்?

2. புலிகளின் தேனிலவே பேரினவாதத்தின் வெற்றியாகவுள்ளது

3. புலிகள் போராட்டம் தோற்றுப் போவது ஏன்?

4. தமிழீழக் கனவு வெற்றுக் கானல் நீர் தான்

5. தவறாக வழிநடத்தப்படும் போராட்டம் தோற்கடிக்கப்படும்

6. புலியிசத்தை யாராலும் இனி காப்பாற்ற முடியாது.

7. முடிவாக என்னதான் நடக்கப் போகின்றது

8. பாசிசப் புலி தோற்றுக் கொண்டிருக்கின்றது

9. புலிகள் பின்வாங்குகின்றார்களா? அல்லது தோற்கின்றார்களா?

10. புலிகள் தமது சொந்த அழிவை நோக்கி வலிந்து செல்லுகின்றனர்

இன்று இதைத் திரும்பிப்பார்த்தல் மூலம் தான், மீள்வதற்கான வழியையும் சரியாக இனம் காணமுடியும். புலியெதிர்ப்பு பேசும் அரசு சார்பு ஜனநாயகம்,  எல்லாம் கானல் நீர் தான். அவை கூட தமிழ் மக்களுக்கு எதிரானது தான். எப்படி புலித்தேசியம் மக்களுக்கு எதிரானதோ அப்படித்தான் இவையும். மக்களுக்கான போராட்டமாகாத எவையும், மக்களுக்கு எதிரானது. 

 

புலித் தேசியம், புலியெதிர்ப்பு ஜனநாயகம் மக்களுக்கு எதைப் பெற்றுக்கொடுக்கும்;? மக்களுக்கு கிடைக்காத தேசியம், ஜனநாயகம் மக்களுக்கு எதிரானதே. இது அடக்குமுறையையும் அடிமைத்தனத்ததையும் தவிர வேறு எதையும் மக்களுக்கு வழங்குவதில்லை. உங்கள் யாராலும் இதைத் தாண்டிய ஒன்றை, மக்களுக்கு இவர்கள் வழங்குவார்கள் என்று எதையும் காட்டமுடியாது. ஆனால் இவை இரண்டும் தான், சிலரின் சுயநலத்துடன் போற்றப்;படுகின்றது, பீற்றப்படுகின்றது. எல்லாம் முடிவுக்கு வருகின்றது.

 

இது புலித் தேசியமாகவும், அரச இனவாதமாகவும் மாறி, ஒன்றை ஒன்று அழித்து மேவ முனைந்தது. மக்களுடன் சம்பந்தப்படாத இவை, மக்களை ஒடுக்கியது. ஒடுக்குவதைத் தவிர, இதனிடம் எந்த மக்கள் அரசியலும்; கிடையாது.     

 

இது எத்தனை எத்தனை ஆயிரம் உயிர்களை கொன்று குவித்தது. துரோகியின் பெயரால், பயங்கரவாதத்தின் பெயரால், தியாகத்தின் பெயரால் ஆயிரம் ஆயிரம் உயிர்கள் பலியிடப்பட்டது. இப்படி மனிதம் சந்தித்த துயரங்கள் எல்லையற்றது.  மக்களால் வெறுக்கப்பட்டவர்கள் நடத்துகின்ற இந்த யுத்தம். புலிகளின் முடிவாகி வருகின்றது.

 

புலிகளின் அழிவு எப்படித்தான் சாத்தியமாகின்றது

 

யாரும் இன்னமும் நம்பாத, நம்பமுடியாத வேகத்தில் நடக்கின்றது. புலிகளிடம் பாரிய படை உண்டு. அதே ஒர்மமும் உண்டு. ஆனால் யுத்தத்தில் நிற்க முடியவில்லை. ஒவ்வொரு பிரதேசம் பிரதேசமாக இழக்கப்படுகின்றது.

 

அன்று ஒவ்வொரு பிரதேசமும் புலிகளால் பிடிக்கப்பட்ட போது ஆர்ப்பரித்து கூத்தாடிய  கூட்டம், இன்று ஒப்பாரி கூட வைக்காமல் புலியைப் புதைக்கின்றனர். எதுவும் நடவாத மாதிரியும், தமக்கு எந்த சம்பந்தமுமில்லாத மாதிரியும் காட்டிக்கொண்டு, புலியை திட்டித் தீhப்பதும் இழிவாடுவதும் மெதுவாக வெளிப்படுகின்றது. புதிய அரச ஆதரவுக் கும்பல் ஒன்று, இங்கிருந்து புற்றீசல் போல் உருவாகின்றது.        

 

இந்தக் கும்பலின் சுயநலத்துடன் கூடிய ஆர்ப்பாட்டங்கள், கூத்துகள், வக்கிரங்கள் மனிதத்தை சாகடிக்க வைத்தது. போராட்ட உணர்வையும், உணர்ச்சியையும் உறிஞ்சிக் குடித்தது. சுயநலம் புலித்தேசத்தின் நெம்புகோலாக, அவை வீங்கி வெம்பியது. இது மலிவாக மலினமாக, இதை  புலித்தேசியமாக  ஊட்டப்பட்டது.

 

இங்கு உண்மையும், மனித வாழ்வும் புதைக்கப்பட்டது. மனித அழுகுரல்கள் புலித் தேசிய இசையாக்கப்பட்டு அதற்கு ஏற்பவே பாசிச நடனமாடப்பட்டது.

 

எல்லாம் சரியாக இருப்பதாக காட்டப்பட்டது, நம்பப்பட்டது. ஆம் இது போலியான அடுக்குமாடிக் கட்டிடம் என்பது, யாரால் தான் நம்பமுடியும்? நாம் மட்டும் தான் இதை அரசியல் ரீதியாக, இதன் பொய்யான விம்பத்தை முன் கூட்டியே முன் அறிவிக்க முடிந்தது.   

 

வீங்கி வெம்பிய பிரமிப்புக்கள், அச்சங்கள் எல்லாவற்றையும் தாண்டியது மக்கள் சக்தி. மக்களை ஒடுக்கி அவர்களை இழிபிறவிகளாக சாகடித்துவிட்டு, பெருமை பேசி பீற்றிக்கொண்டிருந்த போதே, மக்கள் உணர்வியல் ரீதியாக, உணர்ச்சி ரீதியாக செத்துப்போனார்கள். விளைவு பிணம் நாறியது. அதுவே புலிக்கு எதிரான நஞ்சாகத் தொடங்கியது.

 

புலிக்கும் மக்களுக்கும் இடையில் இருந்த உறவுகள் செத்துவிட்டன. இதுமட்டுடா இல்லை, புலித்தேசியம் என்ற அரசியலற்ற வெற்றுக்கோசத்தின் பின், உணர்ச்சிகள் எதுவுமற்ற கூலிப்படையாக புலிகளின் அணி பல குறுக்கு வழிகளில் அணிதிரட்டப்பட்டது. இப்படி அவனோ  யுத்தத்துக்கு முன்பே, செத்துக் கிடக்கின்றான்.

 

யுத்தம் செய்யும் உளவியல் பலத்தை, எந்த அரசியலும் வழிகாட்டவில்லை. வெறும் கோசங்கள், பிரமிப்புக்கள், பிரமைகள், நம்பிக்கைகள் எல்லாம் கேள்விக்குள்ளாகின்றது. அடிக்கடி தகர்ந்து போகின்றது. எல்லாவற்றையும் இருட்டடிப்பு செய்தாலும், செத்துப்போன போராட்ட உணர்வை, உணர்வூட்டவே முடியாது.

 

அதற்கு வரம்புண்டு. அவன் தனது சொந்த தலைமையையும், அதன் போலித்தனத்தையும், தனக்கு எதிரான அடக்குமுறையையும், கண்டும் உணர்ந்தும் அனுபவித்த வெறுப்போடு யுத்த முனையில் மரணிக்கின்றான். ஏன் எதற்கு யுத்தம் செய்கின்றோம் என்று தெரியாது, தனக்கு எதிராகவே யுத்தம் செய்கின்றான்.

 

தலைமையோ பழைய பாணியில் மீட்சிக்காக முனைகின்றது. ஒரு பாரிய தாக்குதல் மூலம், எல்லாவற்றையும் மாற்றிவிடலாம் என்று நம்புகின்றது.

 

1. இதில் தோற்றால், அலையலையாக அடுத்தடுத்த தோல்விகள் ஏற்படும். இன்றைய வேகத்தை விட, அதன் வேகம் பல மடங்காக அமையும்.          

  

2. இதில் வென்றால் அலையலையாக வெற்றிவராது. அதற்கான சூழல் எப்போதோ கடந்து வி;ட்டது. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

 

1. புலிகளை மக்கள் எப்போதோ தோற்கடித்துவிட்டனர்.

 

2. பேரினவாதம் முன் எப்போதையும் விட, உறுதியான அரசியல் மற்றும் இராணுவ தலைமையைக்  மிக நேர்த்தியாக புலிக்கு எதிராக அணிதிரட்டியுள்ளது. அரச கூலிகளாக மாறிய தமிழ் குழுக்களின் துரோகத்தை தனக்கு ஏற்ப, நுட்பமாக யுத்தமுறைக்கு ஏற்ப பிரித்தாளுகின்றது.  


   
புலிகளின் வழமையான வழிகளில், மீட்சிக்கான பாதை இனி எதுவும் கிடையாது. புலியின் வழமையான குள்ளநரிப் பாதைகள், இன்றைய நிலையில் வெற்றிக்கான மீட்சிக்கான பாதைக்கு எதிரானதாகி நிற்கின்றது. இதன் விளைவு, புலிகள் துடைத்தெறியப்படுவார்கள். கொரிலா வடிவில் கூட புலிகள் எஞ்சமுடியாது. புலிக்கு முன்னால், இவை கூட புலி வடிவில் காலம் கடந்த ஒன்றாகிவிட்டது.

 

மாறாக இழப்புடன் கூடிய மீட்சிக்கான ஓரேயொரு மாற்றுப் பாதை உண்டு. அது, புலிகள் தம்மைத் தாம் முழுமையாக சுயவிமர்சனம் செய்வது. மக்களுக்காக மக்களின் கோரிக்கைகளுடன் தம்மை புனரமைப்பு செய்வது. இன்றும் தப்பிப் பிழைக்க இதைவிட்டால், வேறு எந்த குறுக்கு வழியும் இனி கிடையாது.  

 

பி.இரயாகரன்.
27.07.2008