ரு இனத்தின் நலனை முன்வைத்து, அந்த இனத்தின் உயிராதார உரிமைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் போராட்டமென்பது அந்த மக்களின் நலனைத் தழுவிய நோக்கத்திலிருதே முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால் பழைய அரசியல் கட்சிகள்,அதன் தலைவர்கள் தமது கட்சி நலனை முதன்மைப்படுத்தி அதையே மக்களின் அபிலாசையென்னும் சொற் சிலம்பத்தால் ஏமாற்ற முனைதல், இன்றைய இலங்கையரசியலில் மிக இலகுவாக நடைபெறுகிறது.

 

தமிழ்த் தேசத்தின் நேர் எதிர் மறையான முரண்களாக இருப்பவை பதவிக்கான வேட்கையுடைய தமிழ்க் கைக்கூலிக் குழுக்களின் இன்றைய செயற்பாடாகும்! நமது தேசத்தின்-மக்களின் அபிலாசைகளை வேட்டையாடும் நிலைக்குப் போய்விட்ட கூலிக்குழுக்கள் ஒருபுறமும், மறுபுறம் ஜனநாயக வேடம் தரித்த ஆனந்தசங்கரி, டக்களஸ் வகையறாக்கள் ஆகாயத்தில் ஊஞ்சல் கட்டும் வார்த்தை ஜாலக் கதைகளுடன் ஒருபுறமும், அன்னிய சக்திகளைப் பலப்படுத்துவதில்...அவர்கள் பாரீஸ், ஜேர்மனியென ஜனநாயக அரசியல் பேசக் கிளம்பியுள்ளார்கள். குரங்குகள் ஏந்தும் அப்பம்போல் தீர்வுப்பொதிகொண்டு திண்ணைகளில் தவமிருக்கிறார்கள்.

 

இலங்கைச் சிங்களத் தேசமானது தமிழ்த் தேசத்தின் இருப்பை உணரத் தொடங்கியுள்ளது. இன்றைய கணிப்பீட்டின்படி ஈழத்தமிழர்களின் நியாயமான அரசியல் அபிலாசைகள் ஒழுங்கமைந்த அரசியல் முன்னெடுப்பாக உயரும் தரணம் நிலைபெற்றுவரும். அதன் சமூக ஆவேசம் அடிப்படையில் மிகவும் பலவீனமானதாக இருந்தாலும், யுத்தக் காலத்தின் புறச் சூழலைப் பார்க்கும்போது அதன் மேம்பாடானது ஓரளவு திருப்தியைத் தரக்கூடியது. இதையுணரும் சிங்களம் தமது கையை விலத்திச் சென்றுவிட்ட தமது "அரச ஆதிகத்தை" மீளவும் தமிழ்த் தேசத்தில் நிலைப்படுத்த முனைவதில் தீவிரமாகச் செயற்படுகிறது. அதன் உச்சக்கட்டமாக கிழக்கு மாகாண யுத்தத்தில் கிழக்குப்பரப்பை முற்றுமுழுதாகக் கையகப்படுத்தித் தனது ஆதிகத்தை மீளவும் நிறுவ முனைகிறது. சிங்கள அரசுக்குக் கிடைத்த தொப்பிக்கல வெற்றியானது அதை மென்மேலும் யுத்தத்தை நோக்கிப் பேரவா கொள்ள வைக்கிறது. அதற்காகப் போலித் தனமான சேவை நலத் திட்டங்களை, சலுகைகளை இந்த அரசு கிழக்கு மக்களுக்குத் தந்து ஆதிக்கத்தை நிலைப்படுத்தும். இதற்கான ஒழுங்குகளாகப் பல வடிவத் திட்டங்கள் இந்திய மத்திய அரசால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

 

தமிழ் மக்களின் வரலாற்று வாழ்வாதாரங்களையும் அவர்களின் ஐதீகங்களையும் மெல்ல அழித்துவரும் அரசியலைத் தமிழ் மக்களைக்கொண்டே அது அரங்கேற்றி வருகிறது. பேராசை,பதவி வெறி பிடித்த தமிழ் அரசியல்வாதிகள் இப்படித்தாம் சோரம் போகிறார்கள். இவர்களிடம் இருக்கும் அரசியல் வெறும் காட்டிக்கொடுக்கும் அரசியல்தாம். நிரந்தரமாகத் தமிழ் மக்களை ஏமாற்றித் தமது அரசியல் இருப்பை உறுதி செய்வதில் அவர்களின் நோக்கம் மையங் கொள்கிறது. ஆனால்,சிங்கள அரசின் அதீத இனவாதப் போக்கானது இலங்கையில் ஓரினக் கோசத்தோடு சிங்கள மயப்படுத்தப்படும் தூரநோக்கோடு காய் நகர்த்தப்படுகிறது. இந்தத் திட்டமானது மிகவும் இனவொடுக்குதலுக்குரிய மறைமுக நோக்கங்களை இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் முன்னெடுப்புக்குள் வற்புறுத்தி வெற்றி கொள்கிறது.

இந்தவெற்றிக்கு உறுதுணையாக இருப்பவர்களே புலிகள்தாம்.


புலிகள் இன்றுவரை தமிழ் மக்களின் தன்னெழிச்சியை மறுத்துவருகிறார்கள். தமிழ்பேசும் மக்கள் தமது இயல்பான சமூக ஆவேசத்தை வெளிப்படுத்தும் போராட்டத்தை இதுவரை செய்யவில்லை. யார் யாருக்காவோ தமது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள். மக்கள் தமது உணர்வுகளை வெளிப்படையாகக் காண்பிக்கமுடியாதவொரு சூழலில் எல்லாமே மக்கள் சார்ந்த வெளிப்பாடாக அமைவதில்லை. மக்கள் பலமற்ற எந்தக் கோரிக்கையும் எங்கேயும் விலைபோவதில்லை! மக்களே தமது வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்காகப் போராடவேண்டிய இன்றைய போர்காலச் சூழலில் மக்கள் எந்தவுரிமையுமற்ற வெறும் மந்தைகளாகக் காலத்தையோட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த அவலமான சூழலில் மக்களை அணிதிரட்டி அந்த மக்களின் பிரச்சனைகளை வென்றெடுப்பதற்கு வக்கற்ற புலிகள் தம் இருப்புக்கும், தமது இயக்க நலனுக்குமாக மக்களைப் பற்றிப் புரிந்துள்ளார்கள். இது தோல்விமேல் தோல்வியாக அவர்களுக்கு நேரினும், அவர்கள் தமது நோக்கு நிலையிலிருந்து கடுகளவு மாற்றமும் அடைய வாய்ப்பில்லை. புலிகளுக்குச் சரியானவொரு வழிகாட்டும் மத்திய குழு இல்லை. கட்சிக்குள்-அமைப்புக்குள் ஜனநாயத்தன்மை துளியளவுமில்லை. இது இயக்கவாத மாயையைத்தவிர வேறெந்தப் புரிவையையும் உறுப்பினர்களிடம் ஏற்படுத்த வாய்ப்பில்லை.

 

நமது உரிமையென்பது வெறும் அரசியல் கோசமல்ல. அது ஆனந்தசங்கரி வகையறாக்கள் சொல்லும்படியுமில்லை. எங்கள் பாரம்பரிய நிலப்பரம்பல் குறுகுகிறது. நாம் நமது தாயத்தை மெல்ல இழந்து போகிறோம். நமது உரிமைகள் வெற்று வார்த்தையாகவும், ஒரு குழுவின் வேண்டாத கோரிக்கையுமாகச் சீரழிந்து போகிறது. இது திட்டமிட்ட சிங்கள அரசியலின் சதிக்கு மிக அண்மையில் இருக்கிறது. எனவே, சிங்களப் பாசிசம் தன் வெற்றியைக் கொண்டாடுவதும், அதைப் தமிழ்ப் பொறுக்கிகள் ஜனநாயகத்தின் பேரால் வாழ்த்தி வரவேற்பதும் பொறுக்கி அரசியலின் வெளிப்பாடாகமட்டும் பார்ப்பதற்கில்லை. மாறாக எஜமான் இந்தியாவின் வற்புறுத்தலாகவும் இருக்கிறது. இங்கே நாம் வெறும் வெட்டிகளாக இருத்தி வைக்கப்படுகிறோம். புலிகள் எல்லா வகைகளிலும் இந்தப் போராட்டத்தைச் சிதைத்தது வெறும் தற்செயலான காரியமல்ல. இது திட்டமிட்ட அரசியல் சதி. நாம் நம்மையே ஏமாற்றுகிறோம். நமது மக்களின் எதிர்காலத்தோடு விளையாடும் இந்த அரசியலை எங்ஙனம் முறியடிப்பது. மண்டை வலியெடுக்கப் புரண்டு புரண்டு சிந்திக்கிறோம். நமது அரசியல் வெறும் விவாதங்களாகவே விரிவுறுகிறது. நம்மிடம் எந்தக் கட்சிவடிவமும் இல்லை. நமது மக்கள் தம்மையும் தமது வாழ்வாதாரவுரிமைகளையும் வெறும் சலுகைகளுக்காக விட்டுவிட முடியாது. நாம் இதுவரை இலட்சம் மக்களைப் பலி கொடுத்துவிட்டோம். இதற்காகவேனும் நமது உரிமை நிதர்சனமாகிவிட வேண்டும். இதைச் சாத்தியமாக்குவதற்கான ஒருயொரு துரும்பு நமது மக்களே. அந்த மக்களோ இன்று அடிமைகளிலும் கேவலமாக நடாத்தப்படும்போது அவர்களின் உரிமைபற்றி அவர்களுக்கே தெளிவில்லை.

 

எல்லாம் ஒரு தற்செயல் நிகழ்வாக அவர்கள் உணருகிறார்கள். மிக நேர்த்தியாக ஒடுக்குமுறைக்குள்ளாகும் நமது மக்கள் தமது உரிமைகளை வெறும் சலுகைகளுக்காக விட்டுவிடுவதற்கான சமூக உளவியலை ஏற்படுத்தும் நரித்தனமான அரசியலை புலி எதிப்பாளர்களும், இந்திய விசுவாசிகளும் செய்துவரும்போது இந்தக் கேடுகெட்ட புலிகளோ எந்த அரசியல் வியூகமுமற்றச் செத்துக்கிடக்கிறார்கள்! இவர்களுக்காக வம்புக்கு ஐரோப்பியப் புலம்பெயர்ந்த தமிழ் அகதிகள் ஒன்று சேர்ந்து கூடியழுவது பலம் தரும் விடையமல்ல.




இன்றைக்குச் சிங்களப் பாசிஸ்ட்டுக்கள் செய்துவரும் அரசியல் கபடத்தனம் எமது வருங்காலத்தையே இல்லாதாக்கும் பெரும் பலம் பொருந்திய வியூகத்தைக் கொண்டிருக்கிறது. இலங்கையில் பல் தேசிய இனம் இருப்பதே கிடையாதென்கிறது சிங்களம். இலங்கையர்கள் எனும் அரசியல் கருத்தாக்கத்தின் மறுவடிவம் சிங்களம் என்பதன் நீட்சியாகும்! நாம் தமிழ் பேசுபவர்கள். நமது தேசம் பாரம்பரியமாக நமது மக்களின் வாழ்வோடும், வரலாற்றோடும் தொடர்புடைய தமிழ் மண்ணே. அது வெகு இலகுவாகச் சிங்களமாகிவிட முடியாது. நமது மக்களை வெறும் பேயர்களாக்கும் அரசியலைப் புலியெதிர்ப்புப் பூனாக்கள் செய்துவரும்போது நாம் மெளனித்திருக்க முடியாது! சித்தார்த்தனும்,டக்ளசும்,ஆனந்த சங்கரியும் அடுப்பூதுவதற்குக்கூட இலாயக்கற்ற கபோதிகள். இவர்களுக்கு நவீன அரசியல், அது கொண்டிருக்கும் பரிணாமம், அது சார்ந்தெழும் பொருளாதார வியூகங்கள்-விஞ்ஞானம், இன உளவியல் பற்றியெந்த அக்கறையுமில்லை. ஒரே நோக்கம் பதவி, பந்தா, பணம், பொருள். நமக்கோ நமது வரலாற்றுத் தாயகம் சிதைவதில் வேதனை.நம் மக்களின் எதிர்காலம் அழிந்து, அவர்கள் அடிமைகளாக வாழ்வதற்காகவா நாம் இதுவரை கற்றோம். உலகமெல்லாம் சென்று உருப்படியான உண்மைகளை உணர்ந்தும் அதைப் பலத்தோடு நமது மக்கள் சமூகத்துள் பரிசோதிக்க முடியவில்லையானால் நாம் யார்? காட்டுமிராண்டிகளைவிட மோசமானவர்களா? நமது மக்களை ஏமாற்றும் துரோகத்தை நாமும் செய்துவிட முடியாது. இதோ உயிர் வாழ்கிறோம். இது உண்மையானது. எனினும், நாம் அடிமைகளாகவும் நமது வாரீசுகள் நாடற்ற கபோதிகளாகவும் அந்நிய மண்ணில் தவிக்க எங்கள் கையாலாகத்தனமும் காரணமே. புலிகள் என்ற ஒரு குழு தமிழரின் எல்லா அறிவுசார் மதிப்பீடுகளையும் தீர்மானிக்கமுடியாது. அவர்கள் அங்ஙனம் செய்வது துரோகத்தனமாகும். நாம் நடாற்றில் தவிக்கும்போது தமது பதவிகளுக்காக யாராவது ஒரு தமிழர் காரியமாற்றுவது முழுமொத்தச் சமுதாயத்தையுமே புதை குழிக்குள் தள்ளுவதாகும்.

 

இந்தத் தரணம் பொல்லாத தரணமாகும். தமிழருக்கான அரசியல் வெறும் சிறுபிள்ளைத்தனமாக விரிகிறது. ஏதோவொரு நாடு-ஏதோவொரு காரணத்துக்காக நம்மை ஆதரித்தால் உடனடியாக மகிழ்ந்து குலாவுகிறோம். தலைகீழாகத் தாண்டிப் பார்க்கிறோம். இது அரசியல் வியூகமல்ல. நாம் நமது அரசியலை நமது மக்களின் வேதனைகளோடு பரிசோதித்துப் பார்க்கிறோம். எங்கள் அறிவு மாற்றானிடம் தஞ்சமடைவதில் பெரு மகிழ்வு கொள்கிறது. இது ஏற்புடையதல்ல. நாம் சளையாதவர்கள். எங்கள் உடல்வலு மிகப் பெரியது. நாம் தொடர் உழைப்பாளிகள். எங்கள் நாணயம் உலகத் தரத்தோடு ஒப்பிடக்கூடியது. ஆனால, நமது அறிவு உலகத்தோடு ஒப்பிடத்தக்கதல்ல. நாம் அறிவுடையவர்களா என்பதில் எனக்குச் சந்தேகம். எனது சமுதாயம் இவ்வளவு மூடர்களாகப் பதவிக்கும், பவிசுக்கும் தலை சாய்ப்பதா? இந்தச் சமுதாயம் தன் வீரியத்தை இழந்து அகதிகளாக அந்நிய தேசமெங்கும் சருகாக அலையும்போது என்ன தேவையிருக்கு நக்கிப் பிழைப்பதற்கு? உனது தேசம் உருப்படியாக உருப்பெற்றாகவேண்டும். அதைச் சிங்களதேசமும் இந்தியாவும் உணர்கிறதோ இல்லையோ நாம் அந்த வழியில் சிந்திப்பதற்குப் புலிகள் தடையாக இருப்பதே இன்றைய வேதனையான விஷயமாகும். புலிகளின் வர்க்க நலன் எம்மைப் படுகுழியில் தள்ளிச் சிங்களத் தேசத்தின் நவீன அடிமையாக்கும் அரசியலை அது செய்துவருவது இதுவரை நாம் உணரத்தக்க அரசியலாகும். இன்றைய இந்தப்(கிழக்கு யுத்தம்) பெரும் யுத்த அழிவானது மக்களின் நிரந்தரமான வாழ்சூழலாக மாற்றப்பட்டு வருகிறது. தமிழ்பேசும் மக்களின் நாளாந்த அழிவுகள் "புலிகளின் பயங்கரவாத்தை" அழிக்கிறோம் எனும் அரசியல் பரப்புரையூடாக நியாயப்படுத்தும் அதி இழிவான செயலில் ஆளும் மகிந்த அரசு செயற்பட்டுவருகிறது. தினமும் புதுப்புது இராஜ தந்திரத்தோடு புலிகளும் தத்தமது நியாயப்பாடுகளைச் சொன்னாலும், யுத்தம் நிறுத்தப்படும் வாய்ப்புகள் குறைவாக இருக்கிறது. இன்றைய இராணுவச் சமமின்மையான புலிகளின் இராணுவ வலுவானது சிங்கள அரசையும, இந்தியாவையும் பெரு மகிழ்வுக்குள்ளிட்டுச் சென்று, அவர்கள் தமது தந்திரங்களை, சாணாக்கியத்தை செயற்படுத்த வழிவிட்டுள்ளது.

 

மக்களைக் கூறுபோட்டுக் கொன்று குவிக்கும் கபடம் நிறைந்த உலக நலன்கள் நம்மையின்னும் பயங்கரவாதிகளாக்கி நமது சுயநிர்ணய உரிமையைக் குழிதோண்டிப் புதைக்க முனையும் ஒவ்வொரு நகர்வும் புலிப் பாசிசத்தின் கொடுமையைச் சொல்லி ஒப்பேற்றப்படுகிறது. புலிகளின் நிலையோ அவர்களுக்கே புரியாதவொரு இருண்ட நிலையில் தம்மைச் சொல்லியே எதிரி அரசியலில் வெற்றியடையுந் தரணங்களில் தாமும் பழிக்குப் பழி அரசியலைச் செய்து பழகிய வரலாற்றிலிருந்து விலகி முற்போக்கான அரசியலை முன்னெடுப்பது அவர்களுக்கே ஆபத்தென்பதால் யுத்தம் செய்வதில் நோக்குடையவர்களாகவும், அந்தத் தரணத்தை எதிர்பார்த்திருப்பதாகவும் புலிகள் மார்தட்டிக் கிடக்கிறார்கள்.

 

நம்மிடம் வர்கங்களாகப் பிளவுண்ட மகள் சமூகமாகவும்,சாதி ரீதியாகப் பிரிந்த மக்கள் சிறு, சிறு இனக்குழுக்களாகவும் இருக்கிறார்கள்.

 

எங்களை இணைக்கும் தமிழ் எனும் மொழியானது அடிப்படையில் நம்மைக் கழுத்தறுக்கிறது. இது ஒடுக்குமுறையை ஏவி விடும், துரோகி சொல்லி அழித்துவிடும்.

 

இந்த நிலையில் நம்மை இன்னொருவினம் அடிமை கொண்டு பல தசாப்தமாகிறது. நாம் நமது மக்களையே பற்பல பிரிவினைகளுக்குள் தள்ளிவிட்டு, அதைக் கூர்மைப்படுத்தி மேய்த்து வந்திருக்கிறோம். இந்த நிலையில் நமது மக்களை இனவழிப்புச் செய்து வந்த சிங்கள இனவாத அரச பயங்கரவாதமானது நம்மைக் காவுகொண்ட வரலாறு நீண்டபடியேதான் செல்கிறது. எதிரி ஆயுதத்தை ஒரு நிலையிலும் பல நிலைகளில் அரசியல் வியூகத்துக்கூடாக நம்மை வெறும் கையாலாக இனமாக்கிவிடுகிறான்.

 

இதை எதிர் கொள்வதற்கான எந்த வியூகமும் தமிழ் பேசும் மக்களிடமில்லை. எமது மக்களின் அனைத்துத் தளைகளும் அப்படியேதான் இருக்கின்றன. அவற்றைக் களைந்துவிடும் புரட்சிகரமான அரசியல் நம்மிடமிருந்து முன்னெடுக்கப் படவில்லை. சிங்கள இனவாதத்துக்கு எதிராகத் தமிழ் இனவாதம் தூக்கி நிறுத்தப்படுகிறது. இது நமக்கு வெற்றியைத் தரமுடியாது.சிங்கள இனவாத்தை சிங்கள ஆளும் வர்க்கம் மட்டுமல்ல அங்கீகரிக்கப்பட்ட அரசுகளும், அவைகளின் வர்த்தக-வர்க்க நலன்களும் முன் நகர்த்துகிறது. இத்தகைய நலன் நம் இனத்தின் மத்தியிலுள்ள ஓட்டுக்கட்சி அரசியல் வாதிகளை, இயங்கங்களை தமக்குச் சார்பாக அணைத்தெடுத்து நமக்கு எதிராக முன் நிறுத்துகிறது. இன்றைய சந்தைப் பொருளாதாரம் மக்களை இனங்களுக்கூடாக-மதங்களுக்கூடாக-மொழிக்கூடாகக் கோடு கிழிப்பதைத் திவிர்க்க முனைகிறது, கூடவே ஒரே மொழி, மத, பண்பாட்டை வலியுறுத்தித் தனது இருப்பை உறுதிசெய்யமுனையும் பல் தேசியச் சந்தைப் பொருளாதார மூலதனச் சுற்றோட்டம் பற்பல வர்ணக் கனவுகளை இளைஞ(ஞி)ர்களிடம் கொட்டி வரும் சூழலில் இந்தியத் துணைக்கண்டம் போன்ற குறைவிருத்திச் சமுதாயங்களில் பழைய பூர்சுவாக்கருத்தாக்கங்களும் - படிமங்களும் இன்னும் மலினப்பட்டுக் கிடப்பது இங்கெல்லாம் வெறும் குறுந்தேசிய வெறிகளும், கிட்லர் பாணியிலான இனவாத அரசியற்போக்கினதும் திட்டவட்டமான அரசியற் சூழலின் வெளிப்பாடே. இது மேற்குலக மூலதனத் திரட்சியின் தொடர்ச்சியாகவெழுந்த மதிப்பீடுகளினது வடிவமே. இங்குதாம் நிலம் சா¡ந்த-மொழிசார்ந்த-மதம் சார்ந்த புனைவுகளாற் மனிதவுடல்கள் இனம் காணப்பட்டதும், பயிற்றுவிக்கப்பட்டததும் நடந்தேறியது. அது மானுடர்தம் வாழ்வை பொருள் சார்ந்த குவிப்புறுதியூக்கத்துக்கேற்வாறு மீள் மதிப்பீடுகளைக் காலாகாலம் ஏற்படுத்தித் தீர்மானகரமானவொரு உளவியற்றளத்தை வியூகமாக்ககொண்டு முதலாளிய நலன்களைக் காக்கிறது. இன்று பல்தேசிய உற்பத்தி-நுகர்வுக் கொள்கையானது தேசங்கடந்த பெருமூலதனத்தின் நலனின் பொருட்டு பற்பல மதிப்பீடுகளை மீளுருவாக்கஞ் செய்கிற இன்றைய நிலையில்-பல்தேசியக் கம்பனிகளுக்கு ஈடுகொடுக்க முடியாத நடுத்தர முதலாளி வர்க்கம் வெறுமையோடு, விரக்திக்குள்ளாகித் தனது இருப்புக்கான ஜீவமரணப் போராட்டத்தை குறுந்தேசிய வெறியாகவும்-தேசப் பாதுகாப்பு, தேச நலன் எனும் மாய்மாலக் கருத்துகளாலும் மக்களைக் கோடுகிழித்துத் தனது சந்தைவாய்பைத் தொடர்ந்து பாதுகாக்க முனைகிறது.

 

இதன் அப்பட்டமான வடிவமே இராஜபக்ஷவின் "நாம் இலங்கையர்கள்"எனம் வாதம். இது சாரம்சத்தில் சிறுபான்மையினங்களையும், அவர்களின் பண்பாட்டையும் மறுத்தொதுக்கிறது. இனவாதத்தைப் புதியபாணியில் தேசியக் கோசமாக்கிறது. இதற்கு இன்றைய பல்தேசிய உலகமயமாக்கல் ஏதுவாகச் செயற்படுகிறது. புலிகளிடம் இருக்கின்ற அரசியல் புரட்சிகரமற்றது. அது பிற்போக்கான முதலாளிய நலன்களுடன் உறவுடையது. அதனால் மக்கள் நலன் சார்ந்த புரட்சிகரமான அரசியலை எப்போதுமே தரமுடியாது. இது அவர்களது இயக்க நலனினால் தீர்மானக்கப்பட்டவொன்று. இந்த வகை அரசியல் எந்தத் தரப்பைப் பிரதிநித்துவஞ் செய்கிறது என்பதைப் புரியாத இயக்கவாத மாயைக்கு முகம்கொடுப்பது பாரிய உபத்திரமானது. அவர்களுக்குச் சமூகத்தை விஞ்ஞான பூர்வமாகப் பார்க்க முடியவில்லை. உணர்ச்சிவகை அரசியற்பார்வையால் சமூகத்தை விஞ்ஞான பூர்வமாக ஆய்வுசெய்யமுடியாது! இதனால் புலிகளின் சிந்தனாமுறை, வேலைத்திட்டம், அரசியல் அமைப்பு, இவர்கள் பின்னாலுள்ள வர்க்கச் சக்திகள்-இராணுவ உபாயங்கள், போராட்டச் செல் நெறி போன்ற யாவும் விரிவாகப் பரிசீலிக்க முடியாமல் போய்விடுகிறது. இங்கேதாம் மகிந்தாவின் வியூகம் தொடர் வெற்றிகளைப் பெறுகிறது. அது இராணுவரீதியாகவும், அரசியல் ரீதியாகவம் பலமுடைய வெற்றிகளையீட்டுவதற்கு நமது சிந்தனா முறையின் வீழ்ச்சியல்லக் காரணமாகும். இதன் காரணத்துக்கு எமது வர்க்க உறவுகளே காரணமாகிப் போகிறது. நாம் வெறும் பிற்போக்குவாதச் சக்திகளோடு கூடி குலாவிய அளவுக்கு முற்போக்குத் தளங்களை அண்டவேயில்லை. நமது காலாகாலமான ஓட்டுக் கட்சி அரசியலானது பிற்போக்குத் தனத்தின் கடைக்கோடி அரசியலையே தமிழரின் வீர அரசியலாக்கியது. அதன் அறுவடையே இன்றைய இந்தத் தோல்விகள், குழறுபடிகள்-குழிப்பறிப்புகள். ஒவ்வொரு பிரதேசமும் தனக்கெதிராகவே செயற்படுகிறது. குறுகிய நலன்கள் எதிரிக்கான நீண்டகால நலன்களை உறுதிப்படுத்துகிறது. தமிழர்கள் தத்தமது குறுகிய நலன்களுக்காக முழுமொத்த மக்களினதும் நீண்டகால நலன்களை இழப்பது மிகக் கேவலமான சிந்தனையற்ற சிறுபிள்ளைத்தனமானதாகும். இது மக்களை உயிரோடு புதைப்பதாகும்.

 

இத்தகையவொரு சந்தர்பத்தில் ஜேர்மனி, பிரான்ஸ் என்று ஊர் சுற்றித் திரியும் புலியெதிப்புக் கபோதிகள் தங்கள் அரசியல் இலாபங்களுக்காகத் தமிழ்பேசும் மக்களக்கான "தீர்வுப் பொதிகளை"தயாரித்து உலக அங்கீகாரத்துக்காகத் காத்திருப்பதென்பது இந்தியாவின் நலனை ஐரோப்பாவினது ஒத்திசைவோடு இலங்கையில் ஊன்றுவதற்கானதாகவே பார்க்கலாம். இப்போது உலகம் சுருங்கிவிட்டது. இலங்கையின் இனப் பிரச்சனை வெறும் இரு இனங்களுக்கிடையிலான சிக்கலல்ல. அது முழு மொத்த தென்னாசியப் பிராந்தியத்தினதும் பிரச்சனையாகும். இங்கேதாம் தமிழ் அரசியல்வாதிகள் நம்மை ஏமாற்றித் தத்தமது எஜமானர்களைத் திருப்பத்திபடுத்தும் காரியத்தில் இறங்கி, நமது மக்களை அடியோடு கொன்றடிமையாக்கும் அரசியலை ஜனநாயகத்தின் பெயராலும், புலிப் பாசிசத்தின் பெயராலும் ஒப்பேற்றி வருகிறார்கள். இவர்களே தமது பழைய பெரிச்சாளிகளை ஜேர்மனியிலும் பிரான்சிலும் சந்தித்து அனைத்து ஒத்துழைப்பையும் மக்களின் பெயரால் செய்து தரும்படி காத்துக்கிடக்கிறார்கள்.

ப.வி.ஸ்ரீரங்கன்
22.07.2007