09282023வி
Last updateபு, 02 மார் 2022 7pm

நவ்வாப்பழம்: ஜெயமோகனுடன் ஒரு தத்துவவிசாரம்!

தனது நாவல்களின் வாயிலாக கலர் கலரான தத்துவ தரிசனங்களை வாசககர்களுக்குக் காட்டியிருக்கிறார் ஜெயமோகன். அந்த தரிசனங்கள் தோற்றுவித்த புல்லரிப்பிலிருந்து மீளாதவர்களும், பிரமிப்பில் உறைந்து அதன் பின் உருகி சகஜநிலை அடைய முடியாதவர்களும் பலர். ஒரே இரவில் சுந்தர ராமசாமியைப் பற்றி ஒரு புத்தகம் எழுதக்கூடியவரும், தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் டால்ஸ்டாயையும் தஸ்தாவ்ஸ்கியையும் தலைகீழாக ஒப்பிக்கக் கூடியவருமான ஜெயமோகனிடம் இலக்கிய விசாரம் நடத்தும் தகுதி நமக்கு இல்லை. யாரொருவருடனும் ஒரு விசயம் பற்றிக் கதைக்க வேண்டுமென்றால் கதைக்கப்படும் பொருள் குறித்து கடுகளவேனும் நமக்குப் பரிச்சயம் இருக்க வேண்டும். அந்த வகையில் நமக்குப் பரிச்சயமான நாவல் பற்றி ஜெயமோகன் எழுதியிருப்பதை தற்செயலாக அவரது இணையதளத்தில் கண்டோம். எனவே அது குறித்து எழுதும் துணிவு கொண்டோம்.

இனி, பூர்வபட்சம். அதாவது ஜெயமோகனின் கூற்று:

 

 விஷ்ணுபுரத்திலும், கபாலபுரத்திலும், ஸ்டாலின்கிராடிலும், சங்ககாலத்திலும் மனவெளி உலா வந்த ஜெயமோகன், அங்கிருந்து இறங்கி நாகர்கோவிலில் தன் மகனுடன் ஒரு மாலை நேர உலா செல்லுகையில் ஒரு பழக்கூடையில் நாவலைக் காண்கிறார். நாவல் என்று நினைத்தீரோ வாசகரே, அது நவ்வாப்பழம்! நம்மைப் போன்ற சாதாரணர்களுக்குத் தெரிந்த சுவை அதுதானே!


ஆசையுடன் ஒரு பழத்தை வாயில் போட்டு சுவைக்கிறார். வியாபாரியிடம் விலை கேட்கிறார். கிலோ நூறு ரூபாய்!

  

விலை தோற்றுவித்த அதிர்ச்சி நாகர்கோவில் தெருவிலிருந்து ஜெயமோகனை அவருக்குப் பரிச்சயமான மனவெளியை நோக்கித் தூக்கி எறிகிறது. நாவல் காடு, அங்கே காய்த்துத் தொங்கும் கனிகளைச் சும்மா பறித்து தின்ற நினைவுகள்.. பிறகு மீண்டும் நாகர்கோவில்.

  

ஒரு கிலோ நூறு ரூபாய் என்றால் நூறு கிராம் பத்து ரூபாய். எனில் ஒரு பழம் ஒரு ரூபாய். அந்த ஒரு பழத்தில் கொட்டையைக் கழித்துவிட்டால் எஞ்சியிருக்கும் சுளைக்கு இத்தனை விலையா? நாக்கில் நாவலின் சுவையும் மனதில் வலியுமாக வீடு திரும்புகிறார் ஜெயமோகன்.

 

 இரண்டு நாட்கள் கழித்து "கூடை நாவல் பழத்தை நூற்று ஐம்பது ரூபாய் விலைக்கு ஒரு வியாபாரியிடம் விற்ற கதையை" ஒரு ஏழை விவசாயி ஜெயமோகனிடம் விவரி்க்கிறார். "ஒரு கூடை என்பது 20 கிலோ. அப்படியானால் ஒரு கிலோ ஏழு ரூபாய்க்கு வாங்கி 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறதா?" உடனே ஜெயமோகனுக்கு மூளையில் பல்பு பற்றி எரிகிறது.

 

 மொத்த வியாபாரி முதல் தள்ளுவண்டி வியாபாரி ஈரான காய்கறி வியாபாரிகளெல்லாம் சிண்டிகேட் அமைத்து விலை நிர்ணயம் செய்வதால் விவசாயிகளுக்கு நியாயவிலை கிடைப்பதில்லையாம். இப்படி உள்ளூர் சந்தைகளை ஆதிக்கம் செய்யும் நபர்கள் ரவுடிகளாகவும் இருக்கிறார்களாம். இவர்களது கொள்ளைப்பணம் அரசியல் கட்சிகளுக்கும் போவதால் கட்சிக்காரர்கள் இவர்களை ஆதரிக்கிறார்களாம். இதற்கு ஜெயமோகன் சிபாரிசு செய்யும் விமோசனம் - ரிலையன்ஸ் பிரஷ்.

 

முகேஷ் அம்பானி எட்டு மடங்கு விலை கொடுத்து விவசாயிகளிடம் வாங்கி நுகர்வோருக்கு மலிவான விலையில் விற்பனை செய்கிறாராம். ரிலையன்ஸ் பல இடங்களில் காய்கறி சிண்டிகேட்டை நடுங்க வைத்திருக்கிறதாம். அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, நக்சலைட்டு தோழர்களும் ரிலையன்சை எதிர்க்கிறார்களாம். இதனாலேயே மதுரையிலும், ஊட்டியிலும் கொள்முதல் நிலையங்களை ரிலையன்சு மூடிவிட்டதாம். இதையெல்லாம் ஜெயமோகனிடம் அவரது பத்திரிகை நண்பர்கள் தெரிவித்தார்களாம்..

 

 ஒரு நவ்வாப்பழத்தை மையமாகக் கொண்டு விரிந்த இந்த உண்மைகள் ஜெயமோகனிடம் தவிர்க்க முடியாதபடி அதீத மனத்தாவலைத் தூண்டுகின்றன. இதோ, நாவல் மரத்தின் கீழே தத்துவஞானத்தின் ஒளி பரவத் தொடங்குகிறது.

 

 "முதலாளித்துவ வளர்ச்சிதான் விவசாயிகளின் துன்பங்களைத் தீர்க்கும். காரல் மார்க்சே முதலாளித்துவம் என்பது நிலப்பிரபுவத்தைவிட பல மடங்கு முற்போக்கானது என்று சொல்லியிருக்கிறார். தனியார் மயத்தை எதிர்ப்பது அசட்டுத்தனம். நான் வேலை பார்க்கும் தொலைபேசித் துறையிலேயே பத்துவருடங்களுக்கு முன்னர் தனியார் மயத்தை கடுமையாக எதிர்த்தோம். வேலை போய்விடும் என்று பயந்தோம். தற்போது என்ன நடந்திருக்கிறது? பல செல்பேசி கம்பெனிகள் வந்திருப்பதால் தொலைபேசிக் கட்டணம் பல மடங்கு குறைந்துவிட்டது. எனவே விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டுமென்றால் ரிலையன்சு பிரஷ்ஷும், முதலாளித்துவ வளர்ச்சியும்தான் தீர்வு. இதை ஒரு பொருளாதார அறிஞராக இருந்து சொல்லவில்லை. ஒரு எளிய மனிதனின் பார்வையில் படும் விசயமாகக் கூறுகிறேன்" என்று பணிவுடன் தனது தரிசனத்தை விளக்குகிறார் ஜெயமோகன்.

 

 மிகவும் எளிய வாசககர்கள் புரிந்து கொள்ளும்படி சொல்வதென்றால், "அம்பானியும் பிர்லாவும் நவ்வாப்பழம வியாபாரத்தில் இறங்காத வரையிலும் நாடு உருப்படாது" என்கிறார் ஜெயமோகன்.

 

 இதென்ன, "ரயில் லேட்டாக வந்தால் எமர்ஜென்சி வரவேண்டும், பஸ் கண்டக்டர் பாக்கி சில்லறை கொடுக்காவிட்டால் தனியார்மயம் வரவேண்டும்" என்று பேசும் ஊசிப்போன நடுத்தரவர்க்க ஜென்டில்மேன்களின் உளறலைப் போல இருக்கின்றதே என்றோ, சோ ராமஸ்வாமியின் அபிப்ராயங்களைப் போலவே இருக்கின்றதே என்றோ வாசகர்கள் கருதிவிடக்கூடாது.
இதெல்லாம் த்த்துவஞானிகளுக்கே உரிய பிரச்சினை.

 

 "பிரம்ம ஸத்யம் ஜகன் மித்யா" என்று உபதேசித்த ஆதிசங்கரனிடம் "அப்புறம் எதுக்கு தெனம் சோறு திங்கிறாய்?" என்று ஒரு பாமரன் கேட்டானாம். "இதென்னடா நியூஸென்ஸ. அதெல்லாம் வியவகாரிக சத்யம்" என்று புறங்கையால் அந்தப் பாமரனின் வாதத்தை ஒதுக்கித் தள்ளினாராம் அந்த த்த்துவஞானி.

 "திங்கிற சோத்துக்கும் நம்ம தத்துவஞானத்துக்கும் என்ன சம்மந்தம்?" என்ற கேள்வி எழ முடியாத அளவுக்கு சிந்தனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த சங்கரனைப் போலவே, மாதாமாதம் கைநீட்டி காசு வாங்கும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கும் தனது தனியார்மயத் தத்துவத்துக்கும் என்ன சம்மந்தம் என்பது பற்றி ஜெயமோகனுக்கும் தெரியவில்லை.

  

தெரியவேண்டியதில்லையே! காலங்களைக் கடந்து மனவெளியில் சஞ்சரிக்கும் ஒரு மனிதனுக்கு, தண்டி தண்டியாக இலக்கிய உன்னதங்களை உமிழ்ந்து கொண்டிருக்கும் ஒரு இலக்கியவாதிக்கு, தினத்தந்தி பேப்பரில் எ்ன்ன வந்திருக்கிறது என்ற விவரமோ, தனக்குப் படியளக்கும் துறையில் என்ன நடக்கிறது என்ற விவரமோ எப்படித் தெரிந்திருக்க முடியும்?

  

அதெல்லாம் நம்மைப் போன்ற சாதாரணர்களு்க்குத் தெரிந்த விவரங்கள். இலக்கியத் தரமோ சுவையோ அற்ற, வலதுசாரி இடதுசாரி சார்பும் அற்ற அந்த உண்மை விவரங்கள் வருமாறு:

  

தனியார் வந்ததனால் செல்பேசிக் கட்டணம் குறைந்ததாம்! கழுதைக்கு கல்யாணம் செய்து வைத்த்தால் மழை பொத்துக் கொண்டு ஊத்தியதைப்போல! தேவையான தொழில்நுட்பம் பி.எஸ்.என்.எல் இடம் இருந்தபோதும், செல்பேசித் துறையில் நுழையவிடாமல் பி.எஸ்.என்.எல் தடுக்கப்பட்டது. தனியார் மட்டுமே கொள்ளையடிக்க ஒதுக்கப்பட்ட அந்த காலகட்டத்தில், ரம்பா, மீனா, ரோஜா போன்ற பில் கட்டத் தேவையில்லாத ஏழை நடிகைகள் நிமிடத்துக்கு 10 ரூபாய் ரேட்டில் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது இன்கமிங் காலுக்கும் பில் இருந்த்து. அது கொற்றவையின் காலமல்ல. காங்கிரசு, பாரதிய ஜனதா ஆட்சிக்காலம். அம்பானியின் அருமை நண்பரான பிரமோத் மகாஜன் அரசுத் தொலைபேசியை பாயின்ட் பிளான்கில் சுட்டுக் கொன்ற காலம் அது.

  

பிறகு ஆத்தமாட்டாமல் வந்தது அரசு தொலைபேசி. அதன் காலை உடைப்பதற்கு டிராய் என்ற கட்டைப் பஞ்சாயத்து அமைப்பு தயாராக இருந்த்து. அரசுத் தொலைபேசியின் கட்டுமானங்களைப் பயன்படுத்திக் கொண்டு அதற்குப் பணம் கொடுக்காமல் டிமிக்கி கொடுத்தார்கள் முதலாளிகள். அரசுக்கு லைசன்ஸ் கட்டணம் தருகிறோம் என்று ஒப்புக்கொண்டு அதற்கும் நாமம் போட்டார்கள். கிராமத்துக்கு தொலைபேசி வசதி செய்து தருகிறோம் என்று கையெழுத்துப் போட்டுவிட்டு, "முடியாது" என்று கைவிரித்தார்கள்.

  

இதெல்லாம் போதாதென்று நவ்வாப்பழத்துக்கு எட்டு மடங்கு விலை கொடுக்கப்போகும் அம்பானி, பி.எஸ்.என்.எல் ஐ ஏமாற்றி அமெரிக்காவுக்கு திருட்டு கால் கொடுத்தார். 1500 கோடி சுருட்டினார். இ.பீ.கோ 124-ஏ, 120-B இன் கீழ் ஆயுள்தண்டனை தரத்தக்க அந்த குற்றத்தை மன்னித்தது காங்கிரசு அரசாங்கம். பாதி காசு வாங்கிக் கொண்டு அவுட் ஆப் கோர்ட் செட்டில்மென்ட் செய்து கொண்டார் தம்பி தயாநிதி மாறன்.  தன்னுடைய செல்பேசி ஏஜென்டுகளுக்கே அம்பானி சகோதரர்கள் அல்வா கொடுத்தது தனிக்கதை.

 

 சென்னை மாநகரில் கண்ணாடி இழைக் கேபிள் இழுக்க எங்கே வேண்டுமானாலும் தோண்டிக் கொள்ளுங்கள் என்று ஜெயமோகனின் அபிமான தனியார் முதலாளிகளுக்கு லைசன்ஸ் கொடுத்த்து திமுக மாநகராட்சி. இதில் 1300 கோடி இழப்பு என்று துக்ளக்(கே) எழுதியது. இதுவும் போதாதென்று  சிண்டிகேட் அமைத்துக் கொண்டு, அதிகாரிகள் அமைச்சர்கள் ஆதரவுடன் பி.எஸ்.என்.எல் கம்பிகளை ஆள் வைத்து அறுத்தார்கள் முதலாளிகள். அதை எதிர்த்து சென்னை தொலைபேசி ஊழியர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

 

லாபகரமாக நடந்துகொண்டிருந்த விதேஷ் சஞ்சார் நிகாமின் (VSNL) பங்குகளை அதன் ரியல் எஸ்டேட் சொத்து மதிப்புக்கும் குறைவான விலையில் டாடாவுக்கு தாரை வார்த்தார் பிரமோத் மகாஜன். தன்னுடைய கட்டுப்பாட்டில் வந்தவுடனே, VSNL கல்லாவில் இருந்த ரொக்கத்தை வைத்து மூழ்கிக் கொண்டிருந்த டாடா டெலிகாமின் பங்குகளை அதிக விலைக்கு வாங்கி தனது கம்பெனியைத் தூக்கி நிறுத்தினார் டாடா. இப்போது அமர்சிங்கின் ஒப்பந்தப்படி அனில் அம்பானிக்காக ஸ்பெக்ட்ரம் எனப்படும் ரேடியோ அலைவரிசையை ஒதுக்குவதற்குத் தோதாக கட்டணத்தை மலிவாக மாற்றப்போகிறார்கள்.

  

இது செல்பேசி கதை. பெட்ரோல் கதை தனி. பாலியெஸ்டர் கதையை ஏற்கெனவே அருண்ஷோரியும் குருமூர்த்தியும் எழுதியிருக்கிறார்கள். ஹமிஷ் மெக்டொனால்டு என்ற ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் எழுதிய பாலியெஸ்டர் பிரின்ஸ் என்ற அம்பானி பற்றிய நூலை இந்தியாவுக்குள்ளேயே வரவிடாமல் தடுத்துவிட்டார்களாம் அம்பானிகள். ரசியாவில் தடைசெய்யப்பட்ட, ஸ்டாலின் காலம் குறித்த நூல்களையெல்லாம் தோண்டிக் கண்டுபிடித்த ஜெயமோகனின் கண்ணில் இந்த நூல் படவில்லை போலும்! அம்பானியின் பிளாஸ்டிக் ஏகபோகத்தால் அழிந்த சிறு உற்பத்தியாளர்கள் சமீபத்தில் தமது வயிற்றெரிச்சலை தினமணியில் விளம்பரமாகவே வெளியிட்டிருந்தார்கள். ரிலையன்ஸ் பிரஷ்ஷால் பாதிக்கப்பட்ட சிறுவணிகர்கள் நாடு முழுவதும் போராடுகிறார்கள்.

  

உண்மை விவரங்களை இத்துடன் முடித்துக் கொள்வோம்.

  

உண்மை என்ற சொல்லே விவாதத்துக்குரியதாயிற்றே! "தெய்வம் என்றால் அது தெய்வம், வெறும் சிலை என்றால் அது சிலைதான். உண்டென்றால் அது உண்டு, இல்லை என்றால் அது இல்லை. பார்க்கின்ற பார்வையில்தான் இருக்கிறது விசயம். நிலப்பிரபுத்துவத்தை விட முதலாளித்துவம் முற்போக்கானது என்று மார்க்ஸே சொல்லியிருக்கிறார்" என்கிறார் ஜெயமோகன்.

 

 வறுமையோ, பட்டினியோ, படுகொலையோ கூட யாரையும் மார்க்சிஸ்டாக மாற்றிவிடுவதில்லை. ஜெயமோகனுடன் பழகிய  சிபிஎம், சிபிஐ தலைவர்களாலேயே கூட அவரை மார்க்சியவாதியாக மாற்ற. முடியவில்லை. மனிதர்களால் சாதிக்க முடியாத இந்தக் காரியத்தை கேவலம் ஒரு நவ்வாப்பழம் சாதித்துவிட்டதே!

 இருப்பினும், நவ்வாப்பழத்தால் அறிவொளியூட்டப்பட்ட ஜெயமோகனின் மார்க்சிய அறிவு "சுட்டபழம் சுடாத பழம்" ரேஞ்சில் இருப்பதால் நாம் அதற்குள் இறங்கவில்லை.

ஒரு இலக்கியவாதியின் இளகிய மனம், கேவலம் ஒரு நவ்வாப்பழத்துக்காக நாலு கோடி சிறுவணிகர்களை கொல்லத் துணிகிறதே! அதை நினைக்கும்போதுதான் நெஞ்சு நடுங்குகிறது.

 

வீடு, நிலத்தை விற்று மஞ்சள் பையுடன் சென்னை வந்து, குடும்பத்தோடு மளிகைக் கடையிலேயே குடியிருக்கும் இலட்சக்கணக்கான அண்ணாச்சிகளோ, அவர்களின் சங்கத்தலைவர் வெள்ளையனோ ரவுடியல்ல. முதலாளிகளின் கொள்ளைக்காக பருத்தி கொள்முதல் விலை குறைக்கப் பட்டதால்தான் விதர்பாவின் விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்று ஒவ்வொரு தற்கொலைக்குப் பின்னாலும் மறைந்திருக்கும் வாழ்க்கையை கதையாக வழங்கிக் கொண்டிருக்கும் சாய்நாத்தும், அம்பானியின் கோதுமைக் கொள்முதலால் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட பஞ்சாப் விவசாயிகளைப் பற்றி எழுதும் வந்தனா சிவாவும் நக்சலைட்டுகள் அல்ல.

 

இவையெல்லாம் ஜெயமோகனுக்குத் தெரியாத உண்மைகளும் அல்ல. எனினும் ஒரு நவ்வாப்பழத்தின் விலை அவரது இதயத்தில் தோற்றுவித்த வலி, நவ்வாப்பழ பிரின்ஸ் என்றொரு நாவல் எழுதும் அளவுக்கு அவரை வெறி கொள்ளச் செய்திருக்கிறது. அவரது இதயத்தில் தோன்றிய வலி, விவசாயிக்குக் கிடைக்கும் விலையை அறிந்த்தால் வந்த்தல்ல என்பதை அவரது செல்போன் சிலாகிப்பைப் படித்தாலே உணர்ந்து கொள்ள முடியும்.

  

ஜெயமோகன் ஒரு கம்யூனிச எதிர்ப்பாளர் என்பதோ, மார்க்சியவாதி அல்ல என்பதோ நமது பிரச்சினை அல்ல. இப்பிரச்சினையின் நியாயத்தைப் புரிந்து கொள்வதற்கு ஒருவர் பொருளாதார அறிஞராக இருக்கவேண்டிய அவசியமும் இல்லை. எளியாரை வலியார் ஏறி மிதிக்கும் அநீதியைக் கொள்கைபூர்வமாக நியாயப்படுத்தும் ஒரு பாசிஸ்டைக் காட்டிலும் அதனை மனப்பூர்வமாக வழிமொழியும் இலக்கியவாதி ஆபத்தானவன்.

 

மனித மனத்தின் இருட்குகைக்குள் டார்ச் அடித்து, உண்மைக்கும் பொய்க்கும் அப்பாற்பட்ட ஒன்றை, அறிவுக்கும் அனுபவத்துக்கும் சிக்காத ஒன்றைத் தேடுவதாகப் பம்மாத்து செய்து, அந்தப் போலி மன அவஸ்தைக்குத் தனது வாசகர்களையும் ஆட்படுத்தும் வித்தை தெரிந்த ஒரு எழுத்தாளன், இதோ அம்மணமாக நிற்கிறான்.

  

இந்த எழுத்து மனம், கூடு விட்டுக் கூடு பாய்ந்து எந்தெந்தப் பாத்திரங்கள் வழியாக என்ன பேசியது, அவற்றில் உங்களைக் கவர்ந்தவை எவை என்பதை மீளாய்வு செய்வதும் மறுவாசிப்பு செய்து பார்ப்பதும் ஜெயமோகன் ரசிகர்களுக்கு அவ்வளவு உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் ரசனை என்ற சொல்லைப் பயன்படுத்துவோர் யாரும் இதனைத் தட்டிக் கழிக்க முடியாது.

  

"எனக்கு சோன் பப்டி பிடிக்கும், ஜெயமோகனும் பிடிக்கும்" என்று கூறும் ருசிகர்களைப் பற்றி பிரச்சினையில்லை. ஜெயமோகனுக்குக் கூடத்தான் நவ்வாப்பழம் பிடிக்கும். அது ஏன் என்று நாம் கேட்க முடியுமா என்ன?

 

(இந்தக் கட்டுரையை உரிய மூளைகளில் உள்ளீடு செய்வது வாசகர்களின் விருப்பம்)

 

http://vinavu.wordpress.com


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்