இலங்கையில் நடப்பது இதுதான். 'பயங்கரவாத ஒழிப்பின்" பெயரில் பணம் சம்பாதிப்பது ஒருபுறமாயும் நாட்டின் தேசியவளத்தையும் மக்களின் அடிப்படை வாழ்வையும் விற்பது மறுபுறமாயும் அரங்கேறுகின்றது. 'புலிப்பயங்கரவாத ஒழிப்பின்" பெயரில், பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்து சம்பூர் பிரதேசம் இந்திய வல்லாதிக்கத்திடம் தாரை வார்க்கப்பட்டுள்ளது. இதே போல் கொம்பனித் தெருவில் வசித்த 600 குடும்பங்களின் வீடுகள் தரை மட்டமாக்கப்பட்டு, அவர்கள் 'பயங்கரவாத ஒழிப்பு" இராணுவத்தால் நிர்க்கதியாக அடித்துத் துரத்தப்படுகின்றனர். இவை எல்லாம் யாருக்காக? யாருடைய நலனுக்காக? மக்களின் நலனுக்காகவா எனின், நிச்சயமாக அதுவல்ல. மாறாக பணம் கொழுத்தவன் மேலும் கொழுப்பதற்காகத் தான்.
இப்படிப் 'புலிப் பயங்கரவாத ஒழிப்பு" என்பது, நாட்டின் வளத்தை அன்னியனுக்கு தாரைவார்ப்பதற்குத் தான். உழைக்கும் மக்களின் உரிமைகளை பறிப்பது தான் அரசின் குறிக்கோள். இதைத்தான் இந்தப் பேரினவாத பாசிச அரசு, 'புலிப் பயங்கரவாத ஒழிப்பின்" பெயரில் நடைமுறைப்படுத்துகின்றது. இதற்கு வெளியில் எதுவுமல்ல.
இவை அனைத்தையும் புலியாக காட்டி, எதிர்ப்போரை புலி முத்திரை குத்தி நடடைமுறைப்படுத்துகின்றது. மன்னார் எண்ணை வயல், சம்ப+ர் அனல் மின்நிலையம், காங்கேசன்துறை சீமந்து ஆலை இந்தியாவுக்கு வெளிப்படையாக அண்மைக் காலத்தில் தாரை வார்க்ப்பட்டுள்ளது.
இவை தமிழ் மக்களின் தேசிய சொத்துக்கு அப்பால், இலங்கை மக்களின் தேசிய சொத்தும் கூட. ஆனால் இவைகளை எல்லாம் 'புலிப்பயங்கரவாத ஒழிப்பின்" பெயரில் தான் இந்திய வல்லாதிக்கத்துக்கு தாரைவார்த்துக் கொடுத்து விட்டனர். இப்படி எத்தனையோ, தேசவிரோத இரகசிய பேரங்கள், ஒப்பந்தங்கள்.
திருகோணமலை எண்ணைக் குதம் முதல் எத்தனை எத்தனையோ தேச வளங்கள், இலங்கை மக்களுக்கு எதிரான அன்னிய நலனுக்கு ஏற்ப தாரை வார்க்கப்பட்டுள்ளது.
ஒரு அன்னிய நலன் சார்ந்த பாசிச பேரினவாத அரசு, 18.07.2008 கொழும்பு கொம்பனித் தெருவில் அன்னியனுக்காகவும் மூலதனத்துக்காகவும் நடத்திய வெறியாட்டம், இதன் ஒரு தொடர்ச்சி தான்.
நீண்ட பல பத்து வருடங்களாக பரம்பரையாக வாழ்ந்த மக்கள், அவர்கள் வாழ்ந்த மண்ணில் இருந்து பலக்காரமாகவே புடுங்கி நிர்க்கதியாய்த் துரத்தப்படுகின்றனர். இதை அவர்கள் நியாயப்படுத்திய விதம் பாசிச மயமானது. புலிப்பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கவே தான், இந்த நடவடிக்கையாம். யாரைப் பாதுகாக்க? இதன் பெயரில் இங்கு வாழ்ந்த மக்களை, நாயை விட கேவலமாகவே அடித்துத் துரத்துகின்றனர். இந்த மக்களை அடித்து துரத்துபவர்கள் தான், இங்கு உண்மையான பயங்கரவாதிகள் ஆவர். இந்த மக்களின் வாழ்க்கைக்கு வெளியில், உண்மை என்பது கிடையாது.
அரச பாசிசப் பயங்கரவாதிகளோ, இந்த மக்கள் வாழ்ந்த இடத்தை புலிப்பயங்கரவாதிகள் தங்குமிடமாக இட்டுக்கட்டித்தான் தமது பாசிச வெறித்தனத்தை அரங்கேற்றினர். புலியை ஒழித்துக்கட்டுவதாக கூறி உருவான அதே படை, கொம்பனித்தெரு மக்கள் மேல் ஈவிரக்கமின்றி பாய்ந்து குதறியது. இந்தப் படை 'புலிப் பயங்கரவாத ஒழிப்பின" பெயரில் கூட, தமிழ் மக்களை கொன்று குவித்து வருகின்றது.
இந்த அரசு, இந்தப் படை, புலியொழிப்பு யுத்தம் எதுவும், மக்களின் நலனுடன் தொடர்புடையவையல்ல. இதைத் தான் கொம்பனித்தெருவில் அரசு மீளவும் நடத்திக் காட்டியது. இந்த அரசின் அமைச்சர் ஒருவர், பி.பி.சிக்கு வழங்கிய பேட்டியில், நகரை அழகுபடுத்த இப்படி அடித்து துரத்துவது அவசியம் என்கின்றார். இந்த அரசு இதற்காகத் தான் இருப்பதாக பீற்றிக்கொண்டார்.
இவர்கள் யாருக்கு எதை அழகுபடுத்திக் காட்ட முனைகின்றனர். மற்றொரு அமைச்சர் சாக் உச்சிமாநாட்டு பாதுகாப்புக்கு அடித்து விரட்டுவது அவசியம் என்கின்றார். இவர்கள் எந்த வர்க்கத்தின் தேவையை, எப்படி எந்த நலன்களுடாக பூர்த்தி செய்ய முனைகின்றனர்.
ஏழை எளிய மக்களோ வாழவழியற்ற நிலையில், எந்த போக்கிடமுமற்ற ஒரு நிலையில், அவர்கள் வாழ்வாதாரங்கள் செல்வந்தர்களுக்காக குதறப்பட்டன. வாழ்ந்த வீட்டை இழந்து, அற்ப சேமிப்iபுக்களையெல்லாம் இழந்து, அடிப்படை வாழ்வியல் தேவைகளை எல்லாம் இழந்து, செய்த தொழிலையும் இழந்து நிற்கும், இந்த மக்கள் யார்? பெரும்பான்மை, ஏழை எளிய உழைக்கும் மக்கள் தான்.
பெரும்பான்மை மக்கள் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள். தமிழ், சிங்கள, மலையக, முஸ்லீம் என்று எல்லா இனைத்தையும் சேர்ந்தவர்கள். இவர்கள் கொழும்பை தமது சொந்த உழைப்பால் உருவாக்கியவர்கள். ஏன் சுத்தப்படுத்தியவர்கள் அழகுபடுத்தியவர்கள் கூட.
இன்று அவர்களை அப்புறப்படுத்தி, நகரை அழகுபடுத்தப் போகின்றனராம். யாருக்காக! உழைத்து வாழ்ந்த அந்த மக்களை, உழையாது சுரண்டி வாழும் பன்றிகள் இப்படித் தான் உலகெங்கும் ஏறி மிதிக்கின்றனர்.
இப்படி புலிப் 'பயங்கரவாத ஒழிப்பு" வெற்றிக் கூச்சலுக்கு இடையில், தென்னாசிய மக்களையே அடக்கியாளும் கொள்ளைக் கூட்டத்திற்கு வழங்கும் பாதுகாப்பு என்ற பெயரில், இது அவசரமாகவே அரங்கேற்றப்பட்டது. இப்படி அவர்கள், தாம் தரையிறங்கு முன்னமே வெறியாட்டத்தை இலங்கை மக்கள் மேல் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். அவர்கள் வருகையே, இப்படி மக்களுக்கு எதிரான மேள தாளத்துடன் தான் அரங்கேறுகின்றது அங்கு வாழ்ந்த மக்களை குண்டாந் தடிகளாலும், கண்ணீர்ப் புகை குண்டுகளுக்குள்ளும் திணித்து, அவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி அவர்களது வாழ்க்கையை நிர்க்கதியாக்கி சூறையாடிவிட்டனர்.
தமிழ் சிங்கள முஸ்லீம் மலையக மக்கள் என்று எந்தப் பாகுபாடற்ற வகையில், அவர்களின் வாழ்விடங்களைச் சூறையாடியவர்களின் அரசியல் நலன் என்ன? ஊர் உலகத்தை மேய்ந்தவர்கள், அதை கொள்ளையடித்து வாழ்பவர்கள், அவர்கள் பாதுகாக்கும் அரச பயங்கரவாதிகள், கண்ணுக்கு குளிர்ச்சியாக ரசித்து வாழவும், தின்று தீர்க்கவும், அவர்களைச் சுற்றியுள்ள ஏழை எளிய மக்கள் ஒழித்துக்கட்டப்படுகின்றனர்.
உலகமயமாக்கத்தின் நாகரீகம், அழகின் அளவீடே இது தான். இது தான் கொழும்பில் புலிப்பயங்கரவாத ஒழிப்பின் பெயரில் அரசபயங்கரவாதிகள் அரங்கேற்றினர்.
பி.இரயாகரன்
19.07.2008
கொம்பனித் தெரு சம்பவம் : புலிகளின் பெயரில் தான், நாட்டை அன்னியனுக்கு விற்கின்றனர், மக்களின் வாழ்விடங்களையும் கூட அன்னியனுக்காக தரை மட்டமாக்குகின்றனர்.
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode