நேபாளத்தில் மாவோவாதிகள் நிகழ்த்திக் காட்டியுள்ள புரட்சிகர அரசியல் மாற்றமானது தெற்காசியாவிற்கு மட்டுமல்லாமல் முழு உலகுக்குமே ஒரு புதிய வழிமுறையாக புரட்சிகர செயற்பாடாக இருக்கின்றது. 10 ஆண்டு கால நீண்ட போராட்டத்தின் பின்னர் ஜனநாயக வழிமுறையின் மூலம் நேபாளத்தில் நிகழ்ந்தேறியுள்ள புரட்சியானது, 21ம் நூற்றாண்டின் புரட்சிகர போராடும் இனங்களுக்கான போராட்ட இயக்கங்களுக்கான ஒரு புதிய பாதையாகக் கைக்கொள்ள முடியுமா என்ற கேள்விகளும் எழுகிறது. 25 வருடங்களுக்கும் மேலாக தீர்வுக்கான எந்தவொரு வழிமுறையையும் எட்டாமல் முடிவுகளற்றுத் தொடரும் இலங்கை இனப் பிரச்சினையின் தீர்வுக்கான வழிமுறைகளை, பாதைகளை வேண்டி நிற்கும் மக்களுக்கு நேபாளத்தில் மாவோவாதிகளின் சாதனைகள் நல்ல படிப்பினைகளைத் தரமுடியும்.


இலங்கையையும் நேபாளத்தையும் ஒப்பு நோக்குகின்ற போது இனக்குழும, சாதிய அடிப்படையில் நேபாளம் சிக்கல் இருந்தது. மறுபுறம் அரசியல் பல்வகைமை என்ற அம்சத்தில் இலங்கை பல சிக்கல்களை கொண்டது. இலங்கையிலும் நேபாளத்திலும் 2001 முதல் 2006 வரையான காலங்களில் சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருக்கின்றன. நேபாளத்தில் 2001ம் ஆண்டு மற்றும் 2003ம் ஆண்டு நடைபெற்று தோல்வியடைந்த பேச்சுவார்த்தைகளும் 2006 இல் வெற்றி பெற்ற பேச்சுவார்த்தையும் அதில் அடங்கும். இலங்கையில் 2002 முதல் 2006 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற ஐந்தாவது ஆறுகட்ட பேச்சுவார்த்தைகளும் அடங்கும். இலங்கையின் ஐந்தாவது சமாதானப் பேச்சுவார்த்தையின் தோல்வியானது இன்னொரு கொடூரமான யுத்தத்துக்கும், மக்கள் அவலத்துக்கும் நாட்டைக் கொண்டு சென்றுள்ளது. நேபாள பேச்சுவார்த்தைகள் இறுதியில் புதியதொரு அரசியல் மாற்றத்தை நோக்கி நேபாளத்தை நகர்த்தியுள்ளன.

நேபாளத்தில் 10 ஆண்டுகால மக்கள் போராட்டத்தின் விளைவாக உருவாக்கப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தைக்கான சூழலும் அதன் விளைவாக உருவான சமாதான உடன்படிக்கையும் இலங்கையின் சமாதான செயற்பாட்டுடன் ஒப்பிடும் போது ஒரு படி மேலானவை. அந்நிய சக்திகளின் பிராந்திய நலன்களும் இவ்விரு நாடுகளிலும் வெகுவாக ஆதிக்கம் செலுத்துகின்றன. குறிப்பாக அண்டை நாடு என்ற வகையில் இந்தியாவும் உலகப் பொலிஸ்காரனாக அமெரிக்காவும் தங்கள் நலன்கள் பேணப்பட வேண்டிய சூழலை உருவாக்க முயலும் வேளையிலேயே இரு பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன என்பதும் இங்கே கவனிக்கப்பட வேண்டியது.

பேச்சுவார்த்தைக்கு காரணமான சூழல்


இருநாடுகளிலும் பேச்சுவார்த்தைகளை நோக்கித் தள்ளிய சூழல் எப்படிப்பட்டது என்று பார்ப்பது பேச்சுவார்த்தைகள் எந்த நோக்கத்தினடிப்படையில் நடைபெற்றது என்பதை அறிய உதவியாக இருக்கும். நேபாளத்தில் பேச்சுவார்த்தைக்கான சூழல் பத்தாண்டுகால மக்கள் போராட்டத்தின் விளைவால் உருவானது. குறிப்பாக 2002 மேயில் மன்னர் அரசாங்கத்தை தனது முழுக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து சர்வாதிகார ஆட்சியை நடாத்த தொடங்கியதன் பின்னர் மாவோவாதிகளின் மன்னராட்சியை ஒழிப்பதற்கான போராட்டம் சரியென்பதை நேபாள மக்கள் உணரத் தொடங்கினர். மன்னருக்கு எதிரான மக்களின் போராட்டங்கள் வலுப்பெற்றதைத் தொடர்ந்து செய்வதற்கு வேறு வழியின்றி நேபாளத்தில் பிரதான ஏழு அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து, ஏழு கட்சி கூட்டமைப்பை உருவாக்கி நாட்டில் ஜனநாயகத்தை உருவாக்குவதற்கு உதவுமாறு மாவோவாதிகளைக் கேட்டார்கள்.

ஆனால் இலங்கையில் விடுதலைப்புலிகள் போர்க்களத்தில் கண்ட சில முக்கியமான இராணுவ வெற்றிகளும் கட்டுநாயக்க விமான நிலையம் மீதான தாக்குதலின் விளைவால் நாட்டில் பொருளாதாரத்திற்கு விழுந்த பலத்த அடியும் நாட்டின் சீர்குலைந்த பொருளாதார நிலையையும் பேச்சுவார்த்தை மேசைகளை நோக்கி இலங்கை அரசாங்கத்தையும் விடுதலைப் புலிகளையும் தள்ளியது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அழுத்தங்களின் விளைவாகவும் இரு தரப்புக்கும் ஒரு சிறிய இடைவேளை தேவைப்பட்டதாலுமே இரு தரப்பும் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டன.

அரசியல் செயற்பாட்டுக்கான இடத்தை உருவாக்குதல்


நேபாள சமாதானப் பேச்சுவார்த்தையில் கவனிக்கத்தக்க இன்னொரு அம்சம் மன்னர் கயனேந்திரா முழு அரசாங்கத்தையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததன் விளைவாக எந்தவொரு அரசியல் கட்சிகளுக்கும் இயங்குவதற்கான சூழலோ அரசியல் இடைவெளியோ இருக்கவில்லை. எல்லா அரசியல் கட்சிகளும் ஓரங்கட்டப்பட்டு எதுவித அரசியல் செயற்பாடுகளும் செய்ய முடியாத வகையில் மன்னர் அதிகாரத்தை பிரயோகித்தார்.

 

மாவோவாதிகள்தான் அரசியல் செயற்பாட்டுக்கான சூழலை, இடத்தை உருவாக்கி ஜனநாயகத்துக்கான போராட்டத்திற்காக மக்களை ஒன்று திரட்டினார்கள். இதன் விளைவால் மன்னருக்கு நெருக்கமான மன்னராட்சியை ஆதரிக்கும் கட்சிகள் வேறு வழியின்றி ஒன்று சேர்ந்து செயற்பட ஆரம்பித்தார்கள். ஓருங்கிணைந்த மக்கள் ஐக்கியத்தை உருவாக்கிப் போராடிய மாவோவாதிகளின் செயற்பாடுகள் தான் நேபாளத்தில் ஜனநாயகத்தை மீட்பதற்கான மூல காரணியாக அமைந்தன.


இலங்கையைப் பொறுத்த வரையில் பிரதான அரசியல் கட்சிகளின் ஒற்றுமையீனம் ஒவ்வொரு சமாதானப் பேச்சுவார்த்தையின் போதும்; மிகப்பெரிய தடைக்கல்லாக உள்ளது. குறுகிய அரசியல் இலாபநோக்கில் இக்கட்சிகள் செயற்படுவது எதிர்பார்க்கக் கூடிய ஒன்றே. இதை இல்லாதொழித்து மக்களை ஐக்கியப்படுத்தி அதன்மூலம் அரசியல் கட்சிகளுக்கு மக்கள் ஐக்கியத்தை தெரியப்படுத்துகிற ஒரு வேலைத்திட்டம் இலங்கையில் இல்லை.

அமைதிச் செயற்பாட்டில் நெகிழ்வுத் தன்மை


இரு நாடுகளில் சமாதானச் செயற்பாடுகளின் மிகப் பெரிய வேறுபாடு யாதெனில் மக்களின் பொதுப் பிரச்சினைகளை இனங்கண்டு அதற்கான உழைப்பதற்கும், பிரச்சினைகளுக்கு காரணமான அடிப்படை அம்சங்களை இனங்கண்டு கொள்வதற்கான ஒருங்கிணைந்த அக்கறையுமே. வெறுமனே குறுகியகால தீர்வுகளைத் தேடாமல் நீண்டகால அடிப்படை அம்சங்களை அணுகுவதன் மூலம் நிரந்தர தீர்வுகளை வழி அமைப்பதே மிகவும் முக்கியமானது. அதை தெளிவாக இனங்கண்டு நேபாளத்தில் மாவோவாதிகள் செயற்படுத்தினார்கள்.

மாவோவாதிகளின் பிரதான முன்நிபந்தனை “மன்னராட்சி ஒழித்து புதிய குடியரசை உருவாக்குவது” ஆனால் மக்கள் நல நோக்கில் பேச்சுவார்த்தைகளின் போது அரசியல் நிர்ணய சபையின் ஊடாக அதைச் செயற்படுத்த அவர்கள் உடன்பட்டார்கள். அதற்காக பிரதான அரசியல் நீரோட்டத்தில் இணைந்து பலகட்சி ஜனநாயக முறையில் செயற்படவும் மாவோவாதிகள் முன் வந்தார்கள். நேபாள சமாதான உடன்படிக்கையின் மிக முக்கியமான அம்சம் சகல விதமான உரிமைகளுக்கும் அவ்வுடன்படிக்கை இடம் அளித்ததே. மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் உள்ளடங்கலான சகல உரிமைகளும் உடன்படிக்கையில் இடம்பெற்றிருந்தன.

 

குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உரிமைகளும் பால் சமத்துவத்தைப் பேணுவதற்கான வழிமுறைகளும் அதில் கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தன. மொத்தத்தில் மக்கள் நலன் சார் அம்சங்களனைத்தும் இவ்வுடன்படிக்கையில் உறுதிசெய்யப்பட்டிருந்தன. நீண்டகால மோதல்தவிர்ப்பு வழிமுறையின் ஒரு அம்சமாகவே இதனைக் கருத முடியும்.

இலங்கையைப் பேச்சுவார்த்தைகளைப் பொறுத்தவரையில் அவை எப்போதும் அதிகாரப் பகிர்வு தொடர்பாகவும் ஆட்புல உரிமை தொடர்பாகவும் இடம் பெற்றதே ஒழிய, மக்கள் நலன்களில் அக்கறை கொண்டவையாகவோ, மக்கள் நலன்களை பிரதிபலிப்பனவாகவோ அவை அமையவில்லை.

உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள்


மிக நீண்ட பேச்சுவார்த்தைகளின் பின் உருவான நேபாள சமாதான உடன்படிக்கையை கண்காணிப்பதற்கு ஜ.நா. விற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இரு தரப்பும் சம அளவான ஆயுதங்களை பூட்டி வைப்பதென்றும், இராணுவமும் போராளிகளும் தத்தமது கூடாரங்களில் இருப்பதென்றும் அதனை ஜ.நா. கண்காணிக்கும் என்றும் உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் ஒழுங்காக அமைக்கப்பட்டிருந்தன.

இலங்கையின் ஒவ்வொரு பேச்சுவார்த்தைகளிலும் நிறைவேறாத உறுதிமொழிகளே தோல்வியின் உரைகல்லாக இருந்து வந்துள்ளது. பேச்சுவார்த்தை மேசையில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதும், அதற்கான வழிமுறைகளை தெளிவாக வரையறுக்காமையும்;இ உறுதிமொழிகளை செயற்படுத்தாமல் இருப்பதற்கு வசதியாக அமைந்து விடுகிறது.

போராட்டத்தில் நிலைத்திருத்தலும் பேச்சுவார்தைகளைத் தொடர்வதும்


நேபாளத்தில் மாவோவாதிகள் 10 ஆண்டு கால போராட்டத்தின் விளைவாக மக்களை ஒன்றுதிரட்டி மன்னராட்சிக்கு எதிராக போராடினார்கள். அவர்கள் 80மூ நேபாளத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். சமாதான பேச்சுவார்தைகளுக்குள் நுழையும் போது முழுமக்களின் ஆதரவை தங்கள் பலமாகக் கொண்டிருந்தார்கள். மக்களின் நலன்களுக்கு எதிராக எதனையும் ஏழு கட்சி கூட்டமைப்பு செய்ய முனைந்த போதும், இந்தியா மன்னராட்சியைக் காக்க பேச்சுவார்தைகளை குழப்ப முயன்றபோதும் மாவோவாதிகளால் மக்கள் போராட்டத்திற்கு திரும்பக் கூடிய வழிமுறை கைவசம் இருந்தது. உடன்படிக்கையில் உடன்பட்டபடி பாராளமன்றத்தில் மன்னராட்சியை ஒழிப்பதற்கான சட்டமூலத்தை ஏழு கட்சி கூட்டமைப்பு நிறைவேற்றத் தவறியதையும் விகிதாசாரத் தேர்தல் முறையை அறிமுகப்படுத்தாமையையும் காரணம் காட்டி மாவோவாதிகள் இடைக்கால அரசாங்கத்திலிருந்து விலகினார்கள். உடன்பட்டபடி கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மக்கள் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்தார்கள். தொடர்ச்சியான மக்கள் போராட்டத்தின் விளைவால் பாராளமன்றம் விகிதாசாரத் தேர்தல் முறையை அறிமுகப்படுத்தியதுடன் அரசியல் நிர்ணய சபை மூலம் மன்னராட்சியை ஒழிப்பதற்கான சட்டமூலத்தை நிறைவேற்றியது.

நேபாள மாவோவாதிகள் மக்கள் ஜக்கியத்தின் ஊடாக போராட்டத்தை முன்னெடுத்தன் விளைவால் பேச்சு மேசையில் மக்களுக்கு வேண்டியதைப் பெற்றுக் கொள்ளக் கூடிய பலமான நிலையில் இருந்தார்கள். இது நாம் கற்றுக் கொள்ள வேண்டிய மிக முக்கிய பாடம். மக்கள் ஐக்கியத்தை கட்டியெழுப்புவதன் ஊடாகவே உரிமைகளை வென்றெடுக்க முடியும். இதை நேபாள மாவோவாதிகள் நிரூபித்திருக்கிறார்கள். கொசோவை உதாரணமாகக் கொண்டு யாரோ ஒருவரின் தயவிலே பெறும் சுதந்திரம் மக்களுக்கான விடுதலையாக இராது. அது இன்னொரு அடிமை வாழ்கைக்கு வழி அமைப்பதாகவே இருக்க முடியும். விடுதலை என்பது போராடிப் பெறுவது. இரந்து கேட்கும் பிச்சையல்ல.

http://tamilgarden.blogspot.com/2008/07/blog-post_17.html