Language Selection

சக்கரவர்த்தி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஐரோப்பியர்கள் முதன் முதலாக வடஅமெரிக்காவிற்கு கப்பலில் வந்திறங்கியதை கண்ணுற்றபோது இம்மண்ணின் மைந்தர்களின் மனதில் உடனடியாக என்ன எண்ணம் தோன்றியிருக்கும்? முற்றுமுழுதாக அந்நிய தோற்றத்தைக்கொண்ட வேற்று மனிதர்களை பார்க்கின்ற போது ஆச்சரியமா, அல்லது அச்சமா, அவர்களிடம் காணப்பட்டிருக்கும்? அச்சம் மேலிட ஓடியிருப்பார்களா? அல்லது ஸ்னேகத்துடன் கை குலுக்க முயன்றிருப்பார்களா?

 

வெள்ளைக்காரர்கள் சொல்வது போல் தங்களை அவர்கள் கடவுளாக நம்பியிருப்பார்கள் என்று சொல்வதை நம்பமுடியாது. ஆக்கிரம்பிப்பாளர்கள் அதிகாரமுடையவர்களாக இருப்பதால் அவர்கள் பதிவே எங்களுக்கு வரலாறாக கிடைக்கிறது. தன் குழுமத்தை சாராத, முன்னம் எப்போதும் பார்த்திராத தோற்றத்தை கொண்ட மனிதர்களைக் காண்கையில் ஆச்சரியத்தை விடவும் அச்சம்தான் முதலில் தோன்றியிருக்கும்.

 

கனடாவின் வட புலத்தில் இருந்து அமெரிக்க கண்டத்தின் தெற்கே நடைபெறும் பண்பாட்டு விழா ஒன்றிற்காக கனடாவின் பூர்வீக மக்கள் குழுமம் ஒன்று அங்கு செல்லும் வழியில் வருடம் தோறும் மிசிசாக்காவில் இருக்கும் எரிண்டேல் பூங்காவில் கூடாரம் அடித்து தங்குவார்கள். பல நூறு ஆண்டுகால பழக்கம். குறிப்பிட்ட பாதையொன்றிலேயே போக்குவரத்து செய்யும் அவர்கள் பாதையில் எரிண்டேல் பூங்கா இருக்கிறது. மிஸிஸாக்கா என்றால் பூர்குடி மக்களின் மொழியில் மூன்று நதிகள் இணையும் இடம்மென்று பொருள். அவர்களின் இடத்தையும், இடப்பெயரையும் எடுத்துக்கொண்டு விட்டு அவர்களை இடம்பெயர வைத்துவிட்டோம்.

 

பல்கலாச்சார நகரில் நாங்கள் வாழ்ந்தாலும், கனடாவின் பூர்வ குடி மக்கள் எங்களுக்கு அந்நியப்பட்டுத்தான் காணப்படுகின்றார்கள். தங்கள் மண்ணை நாங்கள் ஆக்கிரமித்து விட்டோம் என்னும் வன்மமோ குரோதமோ அவர்களிடத்தில் சற்றேனும் இல்லை. புன்னகைக்கின்றார்கள். நெருங்கிச் செல்லும் போது ஸ்நேகத்துடன் கை குலுக்குகின்றார்கள். மாறாக, அப்பூங்காவுக்கு வழக்கமாக வரும் பல்கலாச்சார குடியேற்றவாசிகளிடம்தான் பதற்றமும் எரிச்சலும் காணப்பட்டதை இலகுவாக அவதானிக்க கூடியதாக இருந்தது. தாங்கள் வழக்கமாக இறைச்சி வாட்டித்தின்னும் இடத்தில், தங்கள் குழைந்தைகள் பந்து விளையாடும் திடலில் இந்த செவ் இந்தியர்கள் மூன்று நாட்களுக்கு கூடாரம் அடித்தால் நாங்கள் எங்குதான் செல்வதாம் என்னும் ஆதங்கமும் அதனால் ஏற்பட்ட பதட்டத்தையும் ஏமாற்றத்தையும் அவதானிக் முடிந்தது.

 

ரொராண்டோ என்பது பூர்வகுடி மக்களிள் மொழிச்சொல். சந்திப்பு என்னும் பொருள் கொள்ளும் அவர்களின் அந்தக்கால பெரு நகரம். வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் பூர்வ குடி மக்கள் ஒன்றிணைந்து கொண்டாடிக் களிக்கும் அவர்களது டொரண்டோவை நாங்கள் ஆக்கிரமித்து, இம்மண்ணின் மைந்தர்களை அந்நியர்களாக்கி விட்டிருக்கின்றோம்.

 

மனிதர்கள் குழுக்களாகவும் தனியர்களாகவும் நாடோடித்திரிவதைப்போல் மிருகங்களும் பிராணிகளும் பறவைகளும் கூட காடோடித் திரிபவைகளும் உண்டு. ஆறறிவுள்ள மனிதர்களைப் போலவே அவைகளும் குறிப்பிட்ட பாதையைத்தான் காடோட எப்போதும் பயன் படுத்துகின்றன என்பது ஒன்றும் புதிய தகவல் அல்ல. பூர்வ குடி மக்கள் தங்கள் உறவுகளை தேடிச் செல்லும் பாதைகள் எல்லாம் நகரங்களை நிர்மாணித்தது போல் மிருகங்கள் காடோடித்திரியம் பாதைகள் எல்லாம் கூட வீடுகளும் தொழில் பேட்டைகளும் கட்டப்பட்டு விட்டன.. தன் பாதையின் குறுக்கே தார் சாலை புதிதாய் போடப்பட்டது தெரியாமல், நகரச்சாலையில் மான்கள் தடுமாறி கிழே வீழ்வதை பார்க்கும் மனிதன், மனித நாகரீகத்தை உயர்ந்ததென சொல்வானா என நம்ப முடியாது.

 

ரொண்டோவின் ஹைபார்க் பகுதியில் நஞ்சூட்டப்பட்ட உணவை உண்ட ரக்கூன் பிராணிகள் அடுத்ததடுத்ததாக இறந்து போயிருக்கின்றன. செவ்விந்தியர்களைப் போல் ரக்கூனும் ரொண்டோவின் பூர்வகுடிதான். அவைகளின் வாழ்விடத்தை பறித்து நாங்கள் வீடுகள் கட்டிக்கொண்டதால் அவைகளுக்கு வாழ்விடமும் இல்லை. உணவும் இல்லை. காண்கின்ற சிறு சிறு பற்றைக்காடுகள் எல்லாம் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் ரக்கூன்கள் மனிதர்களின் உணவுக் கழிவை தின்றே உயிர்வாழப்பழகி இருக்கின்றன. மனிதர்களுக்கு எந்தவகையிலும் ஆபத்தை விழைவிக்காத இப்பிரணிகள் நஞ்சூட்டப்பட்ட உணவை உண்டதால் இறந்ததை கவலை கொள்ளாத நாங்கள்.. இரண்டு நாய்களும் அதே உணவால் இறந்ததற்காக விசாரணைக்குழுவும் துப்பறியும் குழுவும் அமைத்திருக்கிறோம்.

 

மற்றய பிராணிகளை விடவும் மனிதர்களின் கண்களை நேரடியாக பார்த்தது தனது மன ஓட்டத்தை சொல்லக்கூடிய சக்தி ரக்கூனுக்கிறது இருக்கிறதோ என நான் நம்புவதைப்போல.. ரக்கூனை நேரடியாக பார்த்த பல பேர், அதே கருத்தை சொல்வதை கேட்டிருக்கிறேன்.. ரக்கூனை இரண்டு சந்தர்ப்பங்களில் நாம் பார்கலாம். தெருவில், வாகன சக்கரத்தில் நசிபட்டு இறந்து கிடக்கையிலும்... உணவுக்கழிவுகள் இருக்கும் பைகளை இரவு நேரத்தில் அவைகள் பிய்த்து உண்ணும்போதும். இச்சந்தர்ப்பத்தில்தான் ரக்கூன்கள் மனிதர்களின் கண்களை மிக நேராகவும், நிதானமாகவும் பார்க்கின்றன. அதன் பார்வையில் இருக்கும் ஏழ்மையில், மனித குலத்தின் குரூரம் பட்டவர்தனமாக விமர்சிக்கப்படுகிறது. இந்தக்கழிவையாவது என்னை உண்ண விடமாட்டாயா ஏன்னும் பார்வைக் கேள்வியுடன் நிமிடங்களைக் கடந்தும் ரக்கூன்கள் நகர மறுத்து நிற்கும். அந்த கணமெல்லாம் மனிதராய் வாழ்தலுக்கு கூச்சமே வருகிறது.

 

-சக்கரவர்த்தி

 

http://www.kariththundu.com/sakku08.html