''வதந்திகளை நம்பவேண்டாம் : விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை வேண்டுகோள்" 12 யூலை 2008 வெளியிட்டுள்ள புலி அறிக்கை, மீண்டும் 10 வருடங்கள் கடந்த பின் வந்துள்ளது. யாழ்குடாவை எதிரி கைப்பற்றிய காலத்திலும், இது போன்ற அறிக்கை ஒன்றை புலிகள் விட்டு இருந்தனர். புலி சந்திக்கின்ற பொதுநெருக்கடி, மக்கள் புலியை தோற்கடிக்கின்ற உண்மையை பளிச்சென்று இந்த அறிக்கை போட்டு உடைக்கின்றது.

 

புலிகள் தம்மையும், தமது கடந்தகாலத்தையும் திரும்பி பார்க்க மறுப்பது, மறுபடியும்  புலனாகின்றது. மக்கள் புலிகளை தோற்கடிக்கின்றனர் என்ற உண்மையின் பின்னுள்ள, பாசிச அரசியல் தாற்பாரியத்தை நாம் புரிந்து கொள்வது அவசியம்.

எது வதந்தி, எது உண்மை என்ற எதையும் ஊகிக்க முடியாத வகையில், மக்களை இட்டுச்சென்றது யார்?, எதிரியா? இல்லை. புலிகளாகிய நீங்கள் தான். எப்போது தான் நீங்கள் உண்மையைச் சொன்னீர்கள். உண்மை எப்போதும், மக்களின் மண்டைக்குள் குசுகுசுத்தபடியே உயிர் வாழ்கின்றது. இப்படி உண்மைகள் மக்களின் மண்டைக்குள் சிறைவைக்கப்பட்டுள்ளது.

 

இப்படி மக்கள் வெறுமையில் அனாதைகளாகி விட, அவர்கள் பொய்மைகளில் தான் வாழ்கின்றனர். இது தான் வாழ்வின் எதார்த்தம். வதந்தியும் உண்மையும் வெளிப்படையாக அல்ல, புலிக்கு அஞ்சி இரகசியமாக வதந்தி வடிவில் பரவுகின்றது. இதற்கு தொடக்கமும் முடிவுமிருப்பதில்லை.

 

புலிகள் பற்றிய பிரமைகளும், பெருமைகளும் கூட இப்படித் தான் உயிர் வாழ்ந்தது. அது புலிக்கு சார்பாக இருந்தவரை அதையே புலிகள் மேலும் ஊதிப்பெருக்கினர்.

 

உண்மைகள் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது. பொய்மைகளே எப்போதும் வாழ்ந்தன. வென்ற வரை, அது தலைகால் தெரியாது போற்றப்பட்டது. தோற்றபோது, கோடிக்கால் பூதம் போல் குழிபறிக்கின்றது. இதுதானே உண்மை.

 

ஒருபுறம் உண்மை, மறுபுறும் வதந்திகள். இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இருப்பதில்லை. ஏன் இந்த நிலை? யார் காரணம்? சொல்லுங்கள். இதனால் எதிரி கூட, தேவையான வதந்தியைப் பரப்ப முடிகின்றது. புலிகள் சொல்வதை யாரும் நம்புவதில்லை. ஏன் அவர்களே நம்புவது கிடையாது. இதைத்தான் எதிரி இலகுவாக, தனக்கு வசதியாக பயன்படுத்துகின்றான். இப்படி இந்த வதந்;தி அரசியலின் ஊற்று மூலமே புலிகள் தான்.

 

இப்படியிருக்க இவ்வறிக்கை 'ஆதாரமற்ற தகவல்களை அப்படியே நம்பிவிடும் மனநிலையிலிருந்து விடுபட்டு பகுத்தறியும் திறன்கொண்ட மக்களாக நாம் இருக்க வேண்டும்" என்கின்றது. பகுத்தறிவற்ற மந்தைகளை கொண்ட புலித் தேசியத்தை உருவாக்கிவிட்டு, தமக்கு சார்பாக மட்டும் சிந்திக்கும் பகுத்தறிவைக் கோருகின்றனர். இது எப்படித்தான் சாத்தியம்?

 

பகுத்தறிவுக்கும் உண்மைக்கும் இடையில் படுகொலை அரசியலை வைத்துக்கொண்டு, 'பகுத்தறியும் திறன்கொண்ட மக்கள்" எப்படித்தான் உயிர்வாழ முடியும். புலிப் பாசிசத்தை மட்டும் ஆதரிக்கும் பகுத்தறிவு என்ற ஒன்று, உலகில் கிடையாது. இது அரசை ஆதரிப்பது என்ற அர்த்தமுமல்ல.

 

மக்களின் எதார்த்த வாழ்க்;கையில் இருந்து தான், அவர்களின் சொந்த பகுத்தறிவு உருவாகமுடியும். மக்களின் எதார்த்தம் என்பது, புலிப்பாசித்தை கடந்ததல்ல. வெறும் அரச பாசிசம் மட்டுமானதல்ல. ஆகவே பகுத்தறிவு திறன் மலடாக்கப்பட்ட மக்கள் கூட்டத்தில், உயிர் வாழ்வது வதந்திகளுடன் கூடிய உண்மை தான். புலிக்கும் மக்களுக்கும் இடையில் உள்ள இடைவெளியோ அகலமாகி அகன்று வருகின்றது. இதுவே புலிகளை எதிரியிடம் தோற்கடிக்க வைக்கின்றது. இங்கு உண்மையுடன் கூடிய வதந்திகள், புலிக்கு குழி வெட்டுகின்றது.   

 

எதிரி யுத்தத்தை மட்டுமல்ல, உளவியல் போரையும் நடத்துகின்றான். புலிகள் மக்களுக்கு மறைக்கின்ற உண்மைகளை கொண்டு, பொய்களையும் இலகுவாக உண்மையாக்கி விடுகின்றான். ஏது உண்மை, ஏது பொய் என்று தெரியாது, எல்லாம் உண்மையாகிவிடுகின்து. இப்படியிருக்க 'மூர்க்கமான இப்போரின் மூலம் தமிழரை அடிமைப்படுத்த முயலும் எதிரி தனது சூழ்ச்சிகரமான உளவியல் போரையும் தொடுத்துள்ளான். உளவியல் போரின் இலக்காக மக்களை தேர்ந்தெடுத்திருக்கும் எதிரி, மக்களிடையே வதந்திகளை பரப்பி மனங்களை குழப்பி வருகின்றான்" என்று கூறுவதால், உண்மைக்கும் வதந்திக்கும் இடையில் வேறுபாட்டை மக்கள் இனம் கண்டுவிட மாட்டார்கள். உண்மையை உண்மையாக வெளிப்படையாக புலிகள் ஒப்புகொள்ளத்; தொடங்கினால் தான், வதந்தி பிரிந்து தனிமைப்படும். இப்படி தவறுகளை தவறாக ஒப்புக்கொள்வதும், மக்களை நேசிக்கவும் தொடங்கினால் தான், மக்கள் புலிகளை நம்புவர். புலிகளை மக்கள் நம்பாத வரை, புலிகளை நேசிக்காத வரை, வதந்தியும் உண்மையுடன் சேர்ந்தே உயிர்வாழும். அதைத்தான் புலிகளின் பாசிச அரசியல் கோருகின்றது.  

  

இப்படி உண்மை எதார்த்தம் உயிர் வாழ, பகுத்தறிவற்ற வகையில் அறிக்கை கூறுவது என்ன? 'எமது விடுதலைப் போராட்டத்தின் பலமாக திகழ்வது மக்கள் சக்தியே. இந்த மக்கள் சக்தியை பலவீனப்படுத்துவதன் மூலம் எமது விடுதலைப் போராட்டத்தை தோற்கடிக்க முடியும் என எதிரி கணக்கிடுகின்றான்" என்கின்றது. பகுத்தறிவு கொண்டு பார்த்தால், எதிரியை விடவும் புலிகள் தான், எமது மக்களை தோற்கடித்துள்ளனர். அவர்களை அடிமைப்படுத்தி, வதந்திகளுடன் கூடிய உண்மையுடன் நடைப்பிணமாக வாழ வைத்துள்ளனர். இதன் மேல் ஏறித்தானே எதிரி சவாரி செய்கின்றான்.

 

இந்த உண்மையை புரிந்து தம்மை திருத்துவதை விட்டுவிட்டு, மக்களை திருத்த முனைகின்றனர். 'எதிரியினால் திட்டமிட்டு பரப்பப்படும் உண்மையை போன்று தோற்றமளிக்கும் பொய்களை ஆய்வு செய்யும் சுய விழிப்பை எமது மக்கள் கொண்டிருக்க வேண்டும்" எப்படி? 'சுய விழிப்பை எமது மக்கள் கொண்டிருக்க வேண்டும்" என்றால், அவர்கள் சுயமாக தமது விடுதலைக்காக தாமே போராட வேண்டும். அதை உயிருடன் எங்கே விட்டு வைத்துள்ளீர்கள். எல்லாவற்றையும் சுயமற்ற ஒன்றாக மாற்றிய பின், 'சுய விழிப்பை" எங்கிருந்து எப்படி பெறுவது. 'ஆதாரமற்ற தகவல்களை அப்படியே நம்பிவிடும் மனநிலையிலிருந்து விடுபட்டு, பகுத்தறியும் திறன்கொண்ட மக்களாக நாம் இருக்க வேண்டும்" என்பது, மக்களின் அவலத்தின் மேலான புலிகளின் சொந்த நகைச்சுவை தான். இதை வேடிக்கையாக சொல்லமுடியும்.

 

இதை உண்மையாக சொல்லவும், இருக்கவும் புலிகளால் கூட முடியாது. மக்கள் எப்படித் தான் இதைப் புரிந்து கொள்வது. இதை புரிந்து கொள்ளும் ஆற்றலும், பகுத்தறிவும் மக்களுக்கு கிடையாது. அதை எல்லாம் நலமடித்த நீங்களே, மக்களை கருத்தரிக்க கோருவது அபத்தமல்லவா. இதை நகைச்சுவை என்பதா பகுத்தறிவு என்பதா!.

 

பி.இரயாகரன்
13.07.2008