Language Selection

பி.இரயாகரன் -2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 உலகில் அரசியல் அதிசயங்கள் நடக்கின்றன. இலங்கை தொழிலாளி வர்க்கத்தின் காலை உடைத்து விட்டுத்தான், இவர்கள் எல்லாம் கூட அரசியல் நாடகமாடுகின்றனர். ஜே.வி.பி திடீரென தொழிலாளர் என்று கோசம் போட, யூ.என்.பி.யும், புலிப்பினாமியான கூட்டமைப்பும் அதற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். தொழிலாளி வர்க்கம் தனது சொந்த வர்க்க அரசியலுடன் எழுந்திடா வண்ணம், இவர்கள் செய்கின்ற அரசியல் திருகுதாளங்கள் இவை. தொழிலாளியின் முதுகில் குத்தித் தான், இவர்கள் தமது சொந்த அரசியல் செய்கின்றனர்.

 

இந்த வேலைநிறுத்தத்தின் வெற்றி பற்றி அரசும் ஜே.வி.பியும் கூச்சல் போடுகின்றனவே, அப்படியாயின் தோற்றவர்கள் யார்? ஆம் தொழிலாளி வர்க்கம் தான், மீண்டும் தோற்றுப் போனது. அவர்கள் தோற்றுப்போகும் வகையில், தொழிலாளியின் பெயரால் ஒரு பொருளாதார வேலை நிறுத்தம்;. தொழிலாளியின் பொருளாதார அவலத்துக்கு காரணமான அரசியல் போராட்டத்தை தவிர்த்து, பொருளாதார போராட்டத்துக்குள் முடக்கி தொழிலாளியை தோற்கடித்தனர். இது தான் ஜே.வி.பி அரசியல்;. இதனால் தான் இனவாத முதலாளித்துவ யூ.என்.பி.யும், புலிப்பினாமியான முதலாளித்துவ கூட்டமைப்பும் ஆதரித்தனர்.

 

இவர்கள் எல்லாம் இதன் மூலம் தத்தம் சொந்த அரசியலை செய்தனர். ஜனநாயகத்தின் பெயரில் புலியெதிர்ப்பு எப்படி அரசு ஆதரவு அரசியலாக்கப்படுகின்றதோ, தேசியத்தின் பெயரில் எப்படி புலிப் பாசிசம் அரங்கேற்றப்படுகின்றதோ, அப்படியே தான் தொழிலாளியின் பெயரில் இவர்கள் அரசியல் செய்கின்றனர்.

 

தமிழ் மக்களுக்கு எதிராக புலியின் பெயரால் பச்சை இனவாதத்தைக் கக்கிய ஜே.வி.பி தான், இனவாத அரச பாசிசத்தைக் கட்டியெழுப்பியது. ஜே.வி.பி இன் இந்த இனவாதம் தான், கட்சியின் ஒரு பகுதியை அரசின் ஒரு பகுதியாக்கியது. ஜே.வி.பி தொடர்ந்து இனவாத அரசியலை நம்பி அரசியல் செய்யமுடியாது. அதை அரசு ஜே.வி.பியின் ஒரு பகுதியை பிளந்து, தனக்கு ஆதரவாக வைத்தபடி செய்கின்றது. எனவே ஜே.வி.பி க்கு புதிய அரசியல் அரங்கம் தேவை. சம்பள உயர்வு என்று பொருளாதார கோரிக்கையுடன், தமது தொழிலாளர் விரோத அரசியலையும் மூடிமறைக்க முனைகின்றனர்.

 

இந்த அரசியல் பித்தலாட்டத்தைப் புரிந்து கொண்ட யூ.என்.பி, ஜே.வி.பியின் இந்த போராட்டத்தை ஆதரித்தது. கூட்டமைப்பும் இதன் அடிப்படையில் தான்; ஆதரித்தது. இங்கு உண்மையான தொழிலாளி வர்க்க அரசியல் உணர்வுடன், இந்தப் போராட்டம் நடத்தப்படவில்லை. இதனால் தான் முதலாளித்துவ கட்சிகளின் ஆதரவு, ஜே.வி.பிக்கு வர்க்க அடிப்படையில் கிடைத்தது.

 

யூ.என்.பி இதன் மூலம் தொழிலாளியின் முதுகில் மீண்டும் ஒங்கிக் குத்த முடிந்த அதேநேரம், அரசுக்கு எதிரான தனது போரட்டத்துக்கு தொழிலாளியை பயன்படுத்த முனைந்தது.

 

கூட்டமைப்பு தொழிலாளியின் முதுகில் ஏறி, அரசை பலவீனப்படுத்தி புலியைப் பலப்படுத்த தொழிலாளியை பயன்படுத்த முனைந்தது.

 

இப்படி இவர்கள் யாருக்கும் தொழிலாளி வர்க்கத்தின் அவல நிலையையிட்டு உண்மையான எந்த அரசியல் அக்கறையும் கிடையாது. மாறாக தொழிலாளியை பயன்படுத்தி, தமது சொந்த குறுகிய அரசியலையே செய்ய முனைந்தனர். இவர்கள் எவரிடமும் இனவாதம் கடந்த, தொழிலாளர் உணர்வு கிடையாது.

 

பொருளாதார ரீதியான சமூக அதிருப்திகளை, தமது சொந்த குறுகிய அரசியல் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தவே முனைகின்றனர். தமிழ் மக்களின் பெயரில் இதுதான் நடந்தது, நடக்கின்றது. இலங்கை அரசியலில் எத்தனை வேஷங்கள், எத்தனை நாடகங்கள்.

 

இலங்கையில் உழைத்து வாழும் மக்களின் வாழ்க்கைத்தரம் என்பது, உழைத்து வாழமுடியாத நிலையை அடைந்துள்ளது. அன்றடாம் தமது நுகரும் அளவை இழக்கின்றனர். தமது அற்ப தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத அவல நிலைக்கு தரம் தாழ்ந்து போகின்றனர். ஒரு பகுதி மக்களுக்கு கிடைத்த ஒரு நேர கஞ்சி, இன்று அரைவயிறுக்கு கூட கிடைப்பதில்லை. இப்படி பொதுவாக ஏற்பட்டுள்ள வாழ்க்கைத் தரத்தின் வீழ்ச்சி, அரசுக்கு எதிரான மக்களின் அதிருப்தியாக மாறி நிற்கின்றது.

 

இதைத் தான் இவர்கள் தமது சொந்த குறுகிய நோக்கில், தமது சொந்த குறுகிய இனவாத அரசியல் நலனுக்காக பயன்படுத்துகின்றனர். தொழிலாளி வர்க்க உணர்வுக்கு எதிராக, இதை கையில் எடுக்கின்றனர்.

 

இதற்கு தீர்வாக சம்பளவுயர்வைக் கோருகின்றனர். சிலர் இதற்கு காரணமாக யுத்தத்தைக் காட்டி, யுத்தத்தை நிறுத்தக் கோருகின்றனர். இதன் மூலம் தொழிலாளியின் வீட்டில் தேன் ஒடுமென்கின்றனர். இப்படி பொருளாதார கோரிக்கைக்குள் தொழிலாளி வர்க்கத்தை அடைத்து, தமது அரசியல் இலாபங்களுக்காக கனைக்கின்றனர்.

 

இலங்கையில் நடப்பது என்ன?

 

தொழிலாளி வர்க்கத்துக்கு எதிராக இரண்டு பாசிசங்கள். மக்களை பிளந்து போடுகின்ற, தமிழ் சிங்களம் என்ற, இரண்டு இனவாதங்கள். இரண்டு யுத்த வெறியர்கள். இதை சுற்றிச் சுற்ற ஆதரிக்கும்; அரசியல் கட்சிகளும்;, கூலிக் குழுக்களும்;. மொத்தத்தில் மக்கள் மூச்சு விட இடமில்லை. எங்கும் இதுவாகிவிட்டது.

 

மறுபக்கத்தில் உலகமயமாக்கலும், ஏகாதிபத்திய சூறையாடலும் வேகம் பெற்றுள்ளது. இந்தியாவின் பொருளாதார நலனுக்கு ஏற்ப கைப்பொம்மையாகின்றது.

 

மொத்தத்தில் யுத்தம் மூலம், இவை வருவதும் போவதும் கூட தெரியாத வண்ணம், நாடு திட்டமிட்ட வகையில் சூறையாடப்படுகின்றது. அதாவது புலிக்கு எதிரான யுத்தம் போல், நாடு பொருளாதார ரீதியாகவே சூறையாடப்படுகின்றது. கண்ணுக்கு தெரியாத ஒரு யுத்தம், தேசிய பொருளாதாரத்தின் மீது அரசும் எகாதிபத்தியமும் கூட்டாகவே நடத்துகின்றது.

 

மக்கள் நாள் தோறும் இவர்களிடம் தம் வாழ்வை இழக்கின்றனர். மக்கள் நுகர்வதில் இருந்து புடுங்குவதன் மூலம் தான், செல்வம் திரட்டப்படுகின்றது. யாரும் இந்த ஏகாதிபத்திய உலகமயமாக்கல் சூறையாடலை எதிர்ப்பது கிடையாது. நாட்டு வளங்கள் அன்னியனுக்கு தாரை வார்க்கப்படுவதை யாரும் கண்டுகொள்வது கிடையாது. மக்கள் அன்றாடம் தம்மிடம் இருப்பதை இழக்கின்றனர். இருப்பதை இழப்பது தான், சிலரிடம் குவியும் செல்வம். இது தேசத்தை விட்டு, கடந்து செல்லுகின்றது.

 

இப்படி நாடு கடன், வட்டி, சுரண்டல் என்ற எல்லைக்குள் கற்பழிக்கப்படுகின்றது. இந்த அவலமான ஒரு பொருளாதார சுமை, எப்படி? ஏன்? யாரின் நலனுக்காக உருவாகின்றது. இதை யார்? உண்மையான மக்களின் நலனில் இருந்து பேசுகின்றனர். இதற்காக உண்மையாக யார் போராடுகின்றனர். யாருமில்லை.

 

இந்த நிலையில் மக்கள் சந்திக்கும் இன்றைய பொருளாதார நெருக்கடிக்களுக்கான காரணங்கள் என்ன?

 

1. திணிக்கப்படும் கடனும், வட்டியும் நாட்டு மக்களின் வயிற்றில் அடிக்கின்றது.

 

2. இலங்கை பொருளாதாரத்தை அன்னியன் தேவைக்கு ஏற்ப மாற்றி, அவன் விரும்பியவாறு சூறையாட அனுமதிப்பதன் மூலம், மக்கள் தமது சொந்த செல்வத்தையும் உழைப்பையும் அன்னியனிடம் இழந்து விடுகின்றனர்.

 

3. சர்வதேச ரீதியாக உலகத்தையே கொள்ளையடித்து, பணத்தைக் குவித்து வைத்திருப்பவன் அதை மேலும் பல மடங்காக பெருக்க முனைகின்றான். அவன் பங்குச்சந்தை மூலமும், ஊக வணிகத்தையும் கொண்டு, மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பொருட்களின் விலையை அதிகரிக்க வைக்கின்றான். உதாரணமாக இந்தியாவில் நடத்தப்படும் சூதாட்டத்தை, சில உதாரணங்கள் ஊடாகப் பாருங்கள். '.. 20.05.06 ஆம் ஆண்டில் கௌர் தானிய உற்பத்தி 6 இலட்சம் டன்கள் தான். ஆனால், பண்டப் பரிவர்த்தனையில் 1,692.6 இலட்சம் டன்கள் கையிருப்பில் இருப்பதாக ஊகம் செய்து கொண்டு, முன்நோக்கு வர்த்தகம் நடத்தப்பட்டது. இதுபோல் 10 இலட்சம் டன் உள்நாட்டு உற்பத்தியும் 5 இலட்சம் டன் இறக்குமதியுமாக மொத்தம் 15 இலட்சம் டன் அர்கர் பருப்பை வைத்துக் கொண்டு, 137.39 இலட்சம் டன் இருப்பதாக ஊக வணிகம் நடத்தப்பட்டது. இதிலிருந்து ஊக வணிகம் எவ்வாறு விலைவாசியைத் தாறுமாறாக எகிறச் செய்யும் என்பது புரியும். இப்படி ஊகவணிகத்தால் தான் சர்வதேச பெட்ரோலிய விலை எகிறியிருக்கிறது.

உண்மையில் பெட்ரோலியப் பற்றாக்குறையால் அல்ல என்று இப்போது சிதம்பரம் உட்பட ஆட்சியாளர்களே ஒப்புக் கொள்கிறார்கள்."

 

இப்படி உலகளவில் நடக்கின்றது. இல்லாத பொருளை வாங்கி வாங்கி விற்றுவிடலும், இருக்கும் பொருள் பலமடங்காக மாறுகின்றது. இல்லாது வெறும் செயற்கை தட்டுப்பாடாக இது மாறுகின்றது.

 

இந்த பெற்றோலிய விலையேற்றத்தின் பின், அதை உற்பத்தி செய்த உழைக்கும் மக்களின் கூலி உயர்ந்தது கிடையாது. அதாவது உற்பத்தி செலவில் மாற்றமில்லை. அது போல் திடீரென அதிகரித்த திடீர் பாவனை கிடையாது. விலையேற்றத்தால் பாவனை குறைகின்றது.

 

இவையெல்லாம் மக்களின் வயிற்றில் ஓட்டை போட்டு உறுஞ்சுகின்றது.

4. மக்கள் மேல் திணிக்கப்பட்டுள்ள யுத்தம். மக்களின் அரை வயிற்றுக் கஞ்சியை புடுங்கி, அதை வெடிகுண்டாக்கி அந்த மக்கள் மேலேயே போடுகின்றது.

 

5. அடுத்தது பணவீக்கம். நிலையான பொருளாதார வாழ்வாதாரங்களை பேண முடியாத வகையில், நாட்டை அழிப்பவர்கள் என்ன செய்கின்றனர். மக்களின் உழைப்புக்கு கொடுக்க வேண்டிய கூலியை கொடுக்க முடியாது போக, வெறும் பேப்பரை பணமாக அடித்து தள்ளுகின்றனர். இதன் மூலம் பணம் வீக்கம் ஏற்பட்டு, பொருளின் விலை தலைகால் தெரியாது எகிறுகின்றது. மக்களின் கூலி அளவு, ஏற்படும் வாழ்க்கையின் தேவையின் பெறுமதியை விட குறைந்து போகின்றது. இப்படி மக்களின் உழைப்பு பெறுமானத்தை திட்டமிட்டே திருடிவிடுகின்றனர்.

 

இப்படி பல அரசியல் காரணங்கள், தொழிலாளியின் வாழ்வை உறுஞ்சுகின்றது. இதையெல்லாம் இவர்கள் (இனவாத ஜே.வி.பி, முதலாளித்துவ யூ.என்.பி.யும், புலிப்பினாமியான கூட்டமைப்பு) முன்வைப்பது கிடையாது. மாறாக இந்த அரசியல் காரணங்களை பேசாத பொருளாதார போராட்டம் என்பது, இந்த கட்சிகள் தமது சொந்த குறுகிய சுயநலனை அடைவதற்கு தொழிலாளி வர்க்கத்தைப் பயன்படுத்தினர். இதையே இவர்கள் வெற்றி என்கின்றனர். உண்மையில் மீண்டும் தோற்றது, தொழிலாளி வர்க்கம் தான். இந்த வேலை நிறுத்தம் இதைத் தாண்டி எதையும் வழிகாட்டவுமில்லை, சாதிக்கவுமில்லை.

 

பி.இரயாகரன்
11.07.2008