டி.ஜே.சொல்லும் நாடற்றவனின் குறிப்புகள்

தேசம் தொலைத்தோம்...


மக்களே,உங்களது இராச்சியத்தின் மீது
விசுவாசமாக இருக்கும் நான்
எல்லாம் வல்ல உங்கள் கிருபையின் தயவால்
சத்தியத்தைத் தரிசித்து,
என்னால் கண்டடைந்த உங்கள் ஒளியை
உலகுக்கு ஒப்புவிக்கிறேன்:

ஓரத்தே நீரின்றித் தவிக்கும் தவளைபோல் நான் ஊரின்றித் தவிக்கிறேன்.

என் பிள்ளைகளுக்கோ அப்பா,அம்மா தேசம் புரிந்திருக்க மனமாகினும்-இந்தத்தேசத்தை நிசத்தில் பார்க்க முடியவில்லை-ஈழம் எனது தாயகம்!


நாளைய பொழுதுக்கும் வேலைக்கு வருவதற்காக மட்டும் படியளக்கும் என் வேலைத்தல உரிமையாளர்கள் இந்த வகைக்களுக்கான தேவைகளை எப்படிக் கவனிப்பார்கள்?இந்தாண்டு விடுமுறையானது பியர் போத்தலோடு போகிறது.பொழுதுபோக்குத் தோட்டத்தில் அமர்ந்துள்ள நான் ஒரு கவிதைத் தொகுப்புக்குள் வாழ முற்படுவதுகூட ஒரு விசித்திரமான உணர்வினாற்றாம்.தேசம்-தாயகம்.உயிரினுள் உறங்கும் ஏதொவொரு வலி மேலெழுகிறது.நாடற்றவனின் குறிப்புகள் எனது வலியையும் தனக்குள் இணைத்துவிடுவதால் அது பொதுவானவொரு தளத்தில் நமது குறிப்புகளாகிறது.

கடனில் மூழ்கித் தொலையும் பொழுது. சும்மா தருவதுபோன்று பணம் தந்த சிட்டி பாங்(நாளை இன்னொரு பெயரோடு என்னைக் கொல்லும் இந்த வங்கி.பிரான்சின் பகாசூரக்(;(Crédit Mutuel)கடனளிக்கும் வங்கி சிற்றி பாங்கை இன்று வேண்டுகிறது.) என்னை முழங்காலோடு முறித்து விட்டகொடுமையிலிருந்து மீண்டுவிடுவதற்குள் ஐந்தாறு கவிதைகளோடு-கண்ணீரோடு நான் கரைந்து விடுவேன் போலுள்ளது.

"நகரம் பிதுக்கித் தள்ளுகிறது
தனக்கான அவதிகளினு}டு
என்னையும்

ஒரு செர்ரிப் பூ
உதிர்ந்து
நிலத்தை வந்தடைவதற்குள்
மலைபோல குவிகின்றன
கட்டவேண்டிய கடன் பில்கள்..."

மார்பு தட்டும் மண்டையும்,தானென்ற அகங்காரமும் நிறைந்த மனிதர்களை நாம் தமிழகத்துச் சின்னத்திரைகளில் அனுபவிக்கின்றோம்.ஓரத்தில் மிக நொந்துகொள்ளும் ஆணவத்து அதிகாரத்தால் மனதுடையுந்தருணங்கள் பல.இங்கே, மனிதர்கள் நிசத்தை மறைத்துக்கொண்டு கோடிகளில் வாழும் தருணத்தில் நாம் கடன்களோடு வாழுகின்ற உண்மை முகத்துள் ஒரு அதிசயமான வாழ்வாதாரத்தைக் கனவுக்குள் உள்வாங்குகிறோம்.பணம் மட்டும் போதுமாக இருந்தால் வாழ்வு சுகமாக இருக்கும்.

நினைத்தவுடன் எதனையும் ஆட்கொள்ள அதுதானே அவசியமானது?

இதனாற்றான் வள்ளுவனும்"பொருளில்லாருக்கு இவ்வுலகம் இல்லை"என்றான் போல்.

"நகரம் ஏற்றுக் கொள்வதில்லை
வீடற்றவர்களை மட்டுமின்றி
மனதில் ஈரலிப்புள்ளவர்களையும்..."


எனது சுயம் நெஞ்சில் ஈரத்தோடு,தனது தேசத்தையும்,குடும்பத்தையும் தாங்கிக் கனவோடு எதிர்காலத்தை எதிர்கொள்கிறது.வானம் முட்டும் ஈரமனம் தோன்றிக்கொண்டே உலகத்தின் வலியைத் தனதாக்கித், தான் மட்டும் அதிகாரத்திலிருந்தால் இந்தக் கொடுமை எனக்கு- "இவர்களுக்கு"நிகழாதென்கிறது மனம்.என்னை தூக்கி இந்த உலகத்தின் விளிம்பில் வைத்துக் கொள்கிறேன்.இப்போது நான் விளிம்பு மனிதானாகிவிட்டேன்.எனக்குள் வலிகளும்-வேதனைகளும் உங்களைப் போலவேதாம் உண்டு.இதனால்தாம் நான் பொதுவாக இருக்கிறேன் என்ற உணர்வோடு வருகிறேன்.மிகச் சமீபத்து நடாத்தைகள் என்னனுள் பாரிய தாக்கத்தைச் செய்திருக்கிறது.இதனால் எனது மனதில் ஈரம் அதிகமாகிறது.ஏனெனில், நான் தேசம் தொலைத்தவன்.அந்த வலிகள் நம்மை அடிமைகொண்ட முறைமைகளோடு தினமும் ஒரு கனவுக்காலத்தை நமக்குள் தோற்றிக் கொள்ளும்போதெல்லாம் நெஞ்சில் ஈரலிப்பான கனிவும் மற்றவர்களை மனிதர்களாக உணரும் ஒரு தியான நிலையை எனக்குள்ளும் இந்த டி.ஜே.க்குள்ளும் தோற்றிவித்துள்ளது.நாம் மனிதர்கள்.


நகர்ப்புறத்து வாழ்வியல் மதிப்பீடுகளால் தகர்ந்துபோகும் மனிதம் மற்றுமொரு புறமாக மகத்துவத்துக்கான தேர்வை செய்கிறது.இந்தத் தேர்வு தேவாலயங்களில் செபஞ் சொல்வதிலிருந்து தன்னை மீடெடுக்க முனைவதில் மட்டுமே ஆர்வமாக இருக்கிறது-பக்கத்தில் மனிதர்கள் உயிரோடு எரிக்கப்படும்போது.


ஆம்!தேசத்தைத் தொலைத்தவர்களில் பலர் தமது இருப்புக்கு எதிரான பலவிதமான விளைவுகளை எதிர் கொள்வதில்"தீயினால்"சுடுதலும் ஒன்று.நகரங்கள் இனவாதத்தைத் தள்ளிக்கொண்டே மனித நேயம் பற்றிய புதுக்கவிதையும் பாடுகிறது.அத்தகைய தருணத்தில் நெஞ்சில் ஈரலிப்போடு இருக்கும் விளிம்பு மனிதர்கள் வாழ்வுக்கான தேடலோடு பாதுகாப்புத்தேடி நகரத்தை அண்மிக்கும்போது அங்கே உதிரி மானுட வாழ்வு அவர்களை-எம்மை எட்டிப்பார்கிறது.நாம் உயிர்வாழ்வதற்காக உழைத்து உருக்குலைகிறோம்.

"நீயொரு
மரம் நட முயல்கின்றாய்
எனக்குள்..."


இது இலகுவானது இல்லை.நான்-நாம் சலனப்பட்டவாழ்விலிருந்து என்னை-எம்மை மீட்பதற்காக எத்தனையோ தவங்களில் உலாவருகிறோம் இ.ல்லையா?


இதிலொன்று ஓடாய் உழைத்துச் சாவதில் நான், என்னைப் புனரமைக்கிறேன்.இங்கே, எனது மனதும் வெறும் புல் பூண்டே முளைக்க முடியாத தரிசு நிலத்தைப்போல் காய்ந்து வெந்துலர்ந்து விடுகிறதே!இங்கே இன்னொரு பசுமையை நீ வரவழைப்பதற்காக மரம் நாட்டுவது தகுமா?

"தரிசாகிக் கொண்டிருக்கும் மனிதில்
அவ்வளவு இலகுவல்ல
தளிரொன்று அரும்புவது."


நடப்பில்லுள்ள ஒழுங்கின்மீது கைகளை நீட்டிக்குற்றுஞ் சொல்லும் மொழியைத் தகர்த்துவிட்டு குறியீடுகளால் சுட்டப்படும் இந்த மொழிக்குச் சொந்தக்காரன் "நாடற்றவனின் குறிப்புகள்"சொன்ன இளங்கோ.மிகவும் கவனத்தோடு வாசிக்கப்பட வேண்டிய உணர்வுகளை எழுத்தில் வடித்துவைத்துவிட்டு ஓரத்தில் ஒதுங்கிவிடும் புதிய கவிதை மரபுக்கு இளங்கோவும் சொந்தக்காரனாக இருப்பது ஆச்சரியமானது.புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வாழ்வின் அனைத்துச் சங்கதிகளையும் மிக இலகுவாக அனுபவிக்கக் கூடிய நிலையில் இருக்கும் இளைஞனிடம் அடி நாதமாக மனிதம் இழையோடுவது மிக ஆச்சரியமானதாகும்.இந்த ஆச்சரியமான உந்துதலுக்கு ஈழத்துப் போரின் மிக யதார்த்தமான தாக்கம் உந்து சக்தியாகும்.

தன்னையும்,தான்சார்ந்த புறவுலகத்தையும் மனித முகத்தோடு தரிசிக்கும் எழுத்துக்கள் நமது சமுதாயத்தில் அருகி வரும்போது இன்றைய நாடற்றவனின் குறிப்புகள் இதை உடைத்து இதோ எனது வாழ்வு உன்னையும்,என்னையும் இணைத்ததே என்று தனது இருப்பை எனக்குள் பிரதியிடுகிறது.இது,அபாரமான மனிதத்தொடுதலே!

இளங்கோவின் உணர்வு வரிகள் மிகம் மனிதத்தோடும் மனித உந்துதலோடு மிடுக்காகப் பயணிப்பவை.இவரது தொகுப்புள் உள்ள பல்வேறு உணர்வு நறுக்குகள் மிகவும் மனிதவிருப்புகளோடு நம் முன் எழுந்து நடைபயில்பவை.நாம் ஒன்றித்தே செல்வதற்குத் தயாராகும் வாழ்வின் விருப்போடு மிகவும் நெருங்கி நம்மீது பரிவாகவும் பழக முற்படுபவை.தோளில் கரம்பதித்துக்கொண்டே மிக நெருக்கமாக நமது அந்தரங்கத்தை நம் கண்முன் கொணர்ந்து நம்மை எச்சரித்துவிட்டுச் செல்லும் பற்பல மனிதத் தெறித்தல்களை நாடற்றவனின் குறிப்புக்கள் நாம் இனம் காணமுடியும்.

"குழந்தைகள்
காணாமற் போகின்றார்கள்
கடத்தப்படுகின்றார்கள்
காவும் கொள்ளப்படுகின்றார்கள்."

வரிகள் மெல்லியவை.ஆனால், இவற்றுக்குள் உள்ள வலி மிக வலியது.இன்றைய இளையவரின் வாழ்வைச் சிதிலமாக்கும் பொருளுலகத்தில் நாமும் சிறார்களாய் இருந்தோம்.நமது மழலைகளும் அவ்வண்ணமே இருக்கிறார்கள்.எங்கள் வாழ்வில் தரிசித்திருக்கக்கூடிய உலகை இன்றைய சிறார்கள் தரிசித்திருக்க வாய்ப்பில்லை.சிறார் பருவம் திருடப்படுகிறது.ஒருபுறம் கல்விக்காக மறுபுறம் போருக்காக-நாட்டிற்காக.குடும்பங்கள்-பாடசாலைகள் குழுந்தைப் பருவத்தைக் கொன்று குவித்துவிட்ட வெறும் ஜந்திரங்களை உருவாக்கத், தேசமோ தனது விடிவுக்காகச் சிறார்களைப் போரில் இறக்கிக் கொன்று தள்ளுகிறது.இரண்டும் ஒரிடத்தில் சேரும்போது நிகழ்வு ஒன்றேதாம்.

"87களில்
கொடுமிருளாய்த் துரத்திய
சம்பங்களில்
எனது பிராத்தனை
என்றுமே வளர்ந்துவிடக் கூடாது
என்பதாய் இருந்தது

இன்றும்
எத்தனை குழந்தைகள்
பாயில் மூத்திரம் பெய்தபடி
இரவுகளை வெறித்துப் பார்க்கின்றனவோ...?"


மனிதவிருத்தி,மனிதவிருத்தி என்று கூறுகிறோமே அது என்ன?

மனித இருத்தல் வெகுவாகப் பொருள் நலனோடு பிணைக்கப்பட்டபின் அந்த இருத்தலை உறுதிப்படுத்துவது அல்ல சிதைப்பது இன்னொரு சக்தியினால் என்றாகிறது.நான் நாளை உயிரோடு இருப்பதும்,இல்லாதிருப்பதும் நிலவும் அதிகாரத்தினாற் தீர்மானிக்கப்படும்போது எனக்குள் நிலவும் சுதந்திரம் மாயைகிறது.எனது சுயத்தில் எங்கோவொரு வெளியில் உயிர்த்திருத்தல் என்ற ஏக்கம் ஒட்டிக்கொள்கிறது.நான் கனவுகாணும் பட்டாம் பூச்சி உலகம் என்னிடமிருந்து பறித்தெடுக்கப்படுகிறது.அத்தகைய உலகத்தைப் போரினால் கருக்கியபடி நான் இன்னொரு உலகுக்குள் திணிக்கப்படுகிறேன்.அங்கே,நான் மகத்துவமான ஒரு உலகத்தின் கதா நாயகனாக வர்ணிக்கப்பட்ட இன்னொரு உலகம் ஜந்திரத்தனமான எனக்குள் பிணைக்கப்படுகிறது.இது கொடூரமான உளவியல் தாக்கத்தை எனக்குள் நிகழ்த்திக் காட்டியிருப்பினும் பொது மனிதக் கதையாடலில் எனக்குள் இன்னொரு உலகம் கட்டியமைக்கப்படுகிறது.


(தொடரும்.)

ப.வி.ஸ்ரீரங்கன்
11.07.2008