இன்றைக்கு எந்தப் பக்கம் திரும்பினாலும் 'இயற்கை விவசாயம்' என்பதற்கு ஆதரவான
குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. தமிழகத்தின் வேளாண்துறை செயலாளாராக இருக்கும்
சுர்ஜித் கே. சௌத்ரி கூட, ''அறிவியலும் இயற்கையும் இணைந்த வேளாண்மையே
வெற்றிக்கான வழி'' என்று வழிமொழிகிறார்.

 

ஆனால், வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் பல்கலைக்கழக தரப்பிலோ, ''பெருகிக்
கொண்டிருக்கும் மக்கள் தொகையின் உணவுத் தேவையை சமாளிக்க, இயற்கை விவசாயத்தால்
முடியாது. ரசாயனம் மற்றும் பூச்சிக்கொல்லி ஆகியவற்றை பயன்படுத்தி அறிவியல்
பூர்வமாக செய்துவரும் விவசாயத்தின் மூலமும், மரபணு மாற்றுப்பயிர்களை
பயிரிடுவதன் மூலமும்தான் அது சாத்தியம். இயற்கை விவசாயம் என்பதும் ஒரு
தொழில்நுட்பம். அதைத் தவிர பெரிதாக ஒன்றுமில்லை'' என்று அடித்துச்
சொல்கிறார்கள்.

இந்தச் சூழலில், 'உணவு உற்பத்தி என்பது போதுமான அளவுக்கு இருக்கிறது. ஆனால்,
அதை பங்கிட்டுக் கொடுப்பதற்கு மனதுதான் இல்லை. இதைப் பயன்படுத்திக் கொண்டு,
செயற்கையான ரசாயன விவசாயத்துக்கு பலரும் வால் பிடிக்கிறார்கள்' என்று
விளாசுகிறார் கட்டுரையாளர். அவர் எடுத்து வைக்கும் வாதங்கள் நிச்சயமாக யோசிக்க
வேண்டியவை என்பதில் சந்தேகமில்லை!

*பெருகி வரும் மக்கள் தொகையைச் சமாளித்து, இத்தனை மக்களுக்கும் எப்படி
சோறிடுவது...?'*

-இன்று உலகெங்கும் உள்ள விவசாய அறிஞர்கள், ஆட்சியா ளர்கள், அதிகாரிகள்,
அரசியல்வாதிகள், பொதுநலவாதிகள் மற்றும் உணவுத்துறை நிபுணர்கள் முன்பாக
விஸ்வரூபமெடுத்து நிற்கும் ஒரு கேள்வி இது.

புதிதாக விளைநிலங்கள் உருவாக்க இனி வழியில்லை. காடுகள் அழித்து கழனிகள்
ஆக்குவது இனி முடியாது. மாற்றத்தக்க நிலம் அனைத்தையும் கிட்டத்தட்ட
விளைநிலமாக்கி விட்டோம். ரசாயன உர பயன்பாடு காரணமாக இப்போது, விளைச்சலின்
அளவும் படிப்படியாக குறைந்து வருகிறது. இருக்கிற விளைநிலங்களும் களர் மற்றும்
உவர் மண் பிரச்னைகளால் பாழ்பட்டு வருகின்றன. காடு அழித்தல், விளைநிலம்
கெடுத்தல் காரணமாக பாழ்நிலமாதலின் அளவு ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகிக் கொண்டே
போகிறது. நமக்கு இருக்கும் ஒரே வழி, ஏற்கெனவே இருக்கின்ற விளைநிலத்தில் அதிகம்
விளைவிக்க வேண்டும் என்பதுதான்.

இதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, ''உலகின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய
விவசாயத்தில் மேலும் புதிய தொழில்நுட் பங்களைப் பயன்படுத்த வேண்டும். மரபணு
மாற்றுத் தொழில்நுட் பம்தான் ஒரே வழி, இரண்டாவது பசுமைப் புரட்சி தான் ஒரே
தீர்வு'' என்கிறார்கள் 1960-களில் நிகழ்த்தப்பட்ட முதலாம் பசுமைப் புரட்சியின்
ஆதரவாளர்கள்.

ஆனால், இவர்களின் ஆதரவு, விதைக் கம்பெனிகளுக்கும் உரக் கம்பெனி களுக்கும்தான்
லாபத்தைக் கொடுக்கும் என்பதற்கு கடந்த நாற்பதாண்டு கால இந்திய விவசாயமே சான்று.
நிச்சயமாக விளைச்சல் அதிகரிக்கப் போவதில்லை. இப்போது இவர்கள் தூக்கிப் பிடிக்க
ஆரம்பித்திருக்கும் மரபணு மாற்றுப் பயிர்கள், விளைச்சலை அதிகரிக்க வந்தவையல்ல.
''புழு மற்றும் பூச்சிகளிடமிருந்து பயிர்களைக் காப்பாற்ற மட்டுமே மரபணு
மாற்றுப்பயிர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. விளைச்சலை அதிகப் படுத்தும் தந்திரம்
எதையும் அதற்குள் புகுத்த வில்லை'' என்று இவ்விதைகளை உருவாக்கிய கம்பெனிகளே
சொல்கின்றன.

அப்படியிருக்கும்போது, ''உலகப்பசியைப் போக்க, மரபணு மாற்று தொழில்நுட்பம்
மட்டுமே தீர்வு என்று சொல்வதை எப்படி ஏற்க முடியும்?'' என்றொரு கேள்வி
எழுகிறது.

உடனே, ''பல்வேறு தொழில்நுட்பங்களைப் புகுத்தி உருவாக்கப்பட்ட ரசாயன விவசாயத்
தாலும், மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்தாலும் கூட எல்லோருக்கும் சோறுபோட
முடியாது எனும்போது, அறிவியல் சார்ந்த ஆய்வுகளின்றி வழிவழியாக
பின்பற்றப்பட்டுவரும் இயற்கை விவசாயத்தால் எல்லோருக்கும் சோறு போட்டுவிட
முடியுமா?'' என்று எதிர்கேள்வி நிச்சயமாக எழும்.

*மண்ணைக் கெடுக்காதீர்கள்!*

எல்லோருக்கும் உணவு எனும்போது... நாட்டில் எவ்வளவு விளைநிலம் உள்ளது... அதன்
இன்றைய தரம் என்ன... எவ்வளவு விளைகிறது... எவ்வளவு அதிகம் விளைவிக்க முடியும்?
என்று பல்வேறு துணைக்கேள்விகளுக்கான பதில்களை நாம் கண்டாகவேண்டும்.

விளைநிலத்தை அதிகரிக்க முடியாத நிலையில் தற்போதிருக்கும் ஒவ்வொரு சதுர அடி
நிலமும் மிக முக்கியமானதாகிறது. பூமிப்பரப்பில் சுமார் 2% மட்டுமே விளைநிலம்.
அதாவது, ஒரு ஆப்பிள் பழத்தை நமது பூமி உருண்டையாக நினைத்து அதை 100 சம
துண்டுகளாக்குவோம். அதில் 2 துண்டுப் பகுதிதான் விளைநிலம். விளைச்சலை முடிவு
செய்வது, அந்நிலத்தின் உயிரோட்டமுள்ள மேல்மண் பகுதியே. பொதுவாக இதன் அளவு அரை
அடி முதல் 1 அடி ஆழம் வரையே. இதிலிருந்துதான் உலகில் தற்போது வாழ்ந்து
கொண்டிருக்கும்... நாளைக்கு பிறந்து வாழப்போகும் மக்களுக்கும் கால்நடைகளுக்கும்
தேவையான உணவை விளைவிக்கவேண்டும்.

இவ்வளவு முக்கியமான மேல்மண்ணை இப்போது நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம்? 10
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் விவசாயத்தில் சிதையாமல் இருந்த
விளைநிலத்தை, கடந்த 50 ஆண்டுகால பசுமைப் புரட்சியின் ரசாயன விவசாயம் பெருமளவு
பாதித்துவிட்டது என்பதை யாரும் மறுக்கமுடியாது.

கடந்த 35 ஆண்டு காலமாக 'உயர் விளைச்சல் உயிரியல் பண்ணை மாதிரி' என்பதை நடத்தி
வரும் ஜான் ஜீவன்ஸ் என்ற பிரெஞ்சு விஞ்ஞானி, இந்த மண்ணிலிருந்து நமக்குக்
கிடைக்கும் ஒவ்வொரு கிலோ உணவும் எப்படி வருகிறது என்பதை விளக்குகிறார்.

'அமெரிக்காவில் இயந்திரமய ரசாயன விவசா யத்தின் மூலம் விளைவிக்கப்படும் ஒவ்வொரு
கிலோ உணவும் 6 கிலோ மண்ணின் உயிர்த் தன்மையை அழித்து விளைகிறது. அமெரிக் காவின்
மாதிரியைப் பின்பற்றும் மூன்றாம் உலக நாடுகளிலோ 12 கிலோ மண்ணின் உயிர்த்தன்
மையை அழித்து 1 கிலோ உணவு பெறப்படுகிறது. அமெரிக்காவின் விவசாய முறையை அப்படியே
கடைப்பிடிக்கும் சீனத்தில் 18 கிலோ அழிக்கப்பட்டு 1 கிலோ விளைவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் இயந்திர வழி இயற்கை விவசாயத்தில் 3 முதல் 5.5 கிலோ மண்ணில் உள்ள
உயிர்த்தன்மை அழிக்கப் பட்டு 1 கிலோ உணவு பெறப்படுகிறது' என்கிறார்.

பயிர்களை விளைவிப்பதற்காக மேல் மண்ணின் உயிர்த்தன்மையை அழித்திடும் இத்தகைய
தொழில்நுட்பங்களை இனியும் தொடர்ந்தால்... விளைநிலங்கள் எல்லாமே பாழ்நிலங்களாகி,
வெறும் தூசுக் குவியல் மட்டுமே மிஞ்சும். பாழ் பட்ட நிலத்தில் எருக்கும்,
ஊமத்தையும், பாதாள மூளியும்தான் வளருமே ஒழிய பயிர்கள் வளர்வது கடினம். மண்ணின்
உயிர்த்தன்மையை அழிக்காத, மேல்மண்ணைத் தொடர்ந்து மேம்படுத்தும் பல வகை இயற்கை
விவசாய முறைகள் மட்டுமே இப்பூமிப் பந்தையும் அதிலுள்ள ஜீவராசிகளையும்
காப்பாற்றுவதற்கான ஒரே வழி. இத்தகைய முறைகள் இப்போது புழக்கத்தில் உள்ளன.

*'தழைச்சத்துக்கு எங்கு செல்வது... மணிச்சத்து எங்கே கிடைக்கும்?'*

'இயற்கை வழி விவசாயம்' என்றதுமே ஒரு சிலர் பெருத்தக் குரலில் கூப்பாடு
போடுகிறார்கள். ''தேவைப்படும் தழைச்சத்துக்கு எங்கு செல்வது... மணிச்சத்து
எங்கே கிடைக்கும்'' என்பது போன்ற வாதங்களையும் சர்ச்சைகளையும்
எழுப்புகிறார்கள். ஆனால், கடந்த பல ஆண்டு காலமாக இயற்கை வழி விவசாயத்தின் மூலம்
உயர்விளைச்சல் கண்டோரின் பட்டியல் உயர்ந்து கொண்டே இருக்கிறது. ''இயற்கை வழி
விவசாயத்தில் அதிகம் விளைகிறது... தரமானதாக விளைகிறது'' என்று அந்த விவசாயிகள்
எல்லாம் உரக்கக் கூறுகிறார்கள். அதையெல்லாம் கண்கூடாகக் கண்ட பின்பும், இந்த
சர்ச்சையாளர்கள் உண்மையை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.

'உள்ளூர் சரக்கு சரியானதாக இருக்குமா?' என்ற ஒரு வகைத் தாழ்வுணர்வு எப்போதும்
இருந்து வருகிறது. அதுமட்டுமல்ல... எதுவாக இருந்தாலும் படித்தவர்கள்
சொன்னால்தான் நம்பவேண்டும் என்ற பிடிவாத குணமும் மேலோங்கி நிற்கிறது. மேலை
நாட்டினர், வெள்ளைத் தோலுடையவர்கள் சொன்னால் சரியாக இருக்கும் என்ற அபத்தமும்
அதிகமாக இருக்கிறது. அத்தகையோருக்காக... இதோ மேலும் சில உதாரணங்கள்....

*வெள்ளைத்தோலே விளக்குகிறது...!*

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், பலகாலமாக தீவிர இயற்கை விவசாயம் செய்பவர். ஐ.நா.
சபையின் உணவு மற்றும் உழவு அமைப்பின் ஆய்வை முன்னே வைக்கிறார். அவர் சொல்வது
இதுதான்-

* பொலிவியா நாட்டில் இயற்கை வழி விவசாயம் மூலம் ஹெக்டேருக்கு 15 டன்கள்
உருளைக்கிழங்கு விளைவித்துள்ளார்கள். அதற்கு முன்பு ஹெக்டருக்கு 4 டன்கள்
மட்டுமே கிடைத்து வந்தது.

* இயற்கை விவசாயத்தின் மூலம் கியூபாவில் காய்கறிகளின் விளைச்சல் இரு மடங்கானது.

* பஞ்சத்தில் சிக்கித் தவித்த எத்தியோப்பியாவில் சர்க்கரை வள்ளிக் கிழங்கின்
விளைச்சல் ஹெக்டருக்கு 6 டன்னிலிருந்து 30 டன் என்று உயர்ந்தது.

* கென்யாவில் மக்காச்சோள விளைச்சல் ஹெக்டருக்கு 2.25 டன்னிலிருந்து 9 டன் என்று
உயர்ந்தது.

* பாகிஸ்தானில் மாம்பழ விளைச்சல் 7.5 டன் என்பதில் இருந்து 22 டன் ஆக
உயர்ந்தது.

மேற்கண்ட எல்லா இடங்களிலும் ஏதோ 10%, 20% என விளைச்சல் உயரவில்லை 3 மடங்கு
முதல் 6 மடங்கு வரை உயர்ந்திருக்கிறது என்பது கவனிக்கப்படவேண்டிய அம்சமாகும்.

இவ்வளவு ஏன், நம்முடைய அண்டை மாநிலமான ஆந்திராவில் நாகரத்தின நாயுடு ஒற்றை
நாற்று, இயற்கை விவசாயம் மூலம் ஏக்கருக்கு 6,900 கிலோ நெல் விளைவித்துள்ளார்.
இந்தச் சாதனைகளெல்லாம் இயற்கை விவசாயத்தின் மூலம் நடந்தவைதான்.

*அடித்துச் சொல்லும் ஆய்வுகள்!*

எதைச் சொன்னாலும், 'இது பற்றி ஆய்வுகள் நடந்துள்ளனவா... அறிவியல் அடிப்படை
இருக்கிறதா... அதற்கு என்ன ஆதாரம்?' என்ற கேள்விகளை வீசி மடக்கப்
பார்க்கின்றனர் இயற்கை வேளாண் மைக்கு மறுப்பும் எதிர்ப்பும் சொல்லும் கூட்டத்
தினர். அவர்களுக்கென்றே பல்வேறு ஆய்வு முடிவுகளையும் நம்மால் முன்
வைக்கமுடியும்.

*100 கோடி பேர் பட்டினி... 170 கோடி பேருக்கு உடல் பருமன் நோய்! *

மிக்சிகன் பல்கலைக்கழகத்து விஞ்ஞானிகள் குழு, 'உலகம் முழுவதும் இன்றே இயற்கை
விவசாயத்துக்குத் திரும்பினால், விளைச்சல் எப்படியிருக்கும்' என்று ஆராய்ந்து
இரு வகையான விவரங்களைக் கொடுத்துள்ளது. 1. வளர்ந்த நாடுகளில் இயற்கை வழி
விவசாயத்தின் மூலம் இப்போது பெறும் விளைச்சலில் 80% பெற முடியும். 2. வளரும்
நாடுகளில் இந்தியா உள்பட விளைச்சலின் அளவு 2 மடங்கு முதல் 4 மடங்கு வரை உயரும்.
ஆனால், இயற்கை விவசாயத்துக்கு மாறுவதில் சிக்கல்கள் உள்ளன. போதுமான கால்நடைகள்,
ஆட்கள் என்று ஆரம்பக்கட்ட தேவைகளைப் பூர்த்திச் செய்வது முக்கியம் என்று
சொல்லியிருக்கிறது அந்தக் குழு.

சுவிட்சர்லாந்தில் உள்ள இயற்கை வழி விவசாய ஆய்வு நிலையம், கடந்த 21 ஆண்டுகளாக
வடஅமெரிக்கா, ஐரோப்பாவில் நடந்த இரண்டாயிரத்துக்கும் மேலான ஆய்வுகளை
ஆராய்ந்தது. 'உலக உணவு விருது' பெற்ற அமெரிக்கரான பெர் பின்ஸ்ட்ரப் ஆண்டர்சன்
தலைமையிலான குழு, தன்னுடைய ஆய்வின் முடிவில், ''ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில்
உள்ள அனைத்து உழவர் களும் இயற்கை வழி விவசாயத்துக்குத் திரும்பினால்,
விளைச்சலின் அளவு இப்போது விளைவதில் 80% இருக்கும்'' என்று சொன்னது.

இங்கிலாந்தில் உள்ள எஸ்செக்ஸ் பல்கலைக்கழகத்தின் ஜூலியஸ் பிரட்டி, ராச்சேல்
ஹின் ஆகியோர் வளரும் நாடுகளில் நடப்பில் இருக்கும் 200-க்கும் மேலான இயற்கை வழி
விவசாயத் திட்டங்களை அலசி ஆராய்ந்தனர். இத்திட்டங்கள் 90 இலட்சம் பண்ணைகளில்
7.2 கோடி ஏக்கரில் நடந்தவை. இவர்களது ஆய்வு, எல்லோரும் இயற்கை விவசாயத்துக்கு
மாறினால், இப்போது விளைவதில் 93% விளைச்சலை உலகம் உடனடியாகப் பெறும் என்கிறது.

மத்திய இந்தியாவில் 1,000 பண்ணைகளில் 7,750 ஏக்கரில் இயற்கை வழியில் பயிரிடப்
பட்ட பருத்தி, கோதுமை, மிளகாய், சோயா பீன்ஸ் பயிர்களின் விளைச்சல் ரசாயன
விவசாயத்தை விட 20% அதிகமிருந்ததாக அங்கு நடந்த 7 ஆண்டு ஆய்வுகளின் முடிவுகள்
தெரிவிக் கின்றன.

இந்த ஆய்வுகளின் முடிவுகளைத் தொகுத்து, 'வேர்ல்டு வாட்ச் இன்ஸ்ட்டிடியூட்'
2006-ம் ஆண்டில் சில ஆய்வுகளை வெளியிட்டது. இந்த ஆய்வுகளின் ஒட்டுமொத் தமான
முடிவுகள் - 'உலக உழவர்கள் இன்றே இயற்கை வழி விவசாயத்துக்கு மாறினால் வளர்ந்த
நாடுகளில் விளைச்சல் இப்போது பெறுவதில் 80% இருக்கும். வளரும் நாடுகளில் 2.4
மடங்கும் இருக்கும்' என்பதுதான்.

''வளரும் நாடுகள் பரவாயில்லை. ஆனால், வளர்ந்த நாடுகளில் 20% விளைச்சல் குறைவு
ஏற்படும் என்கிறதே ஆய்வு முடிவுகள். இது உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்துமே?''
என்ற ஐயம் உடனே எழும். உலக மக்கள் தொகையில் அதிக மக்கள் வாழ்வது வளரும்
நாடுகளான மூன்றாம் உலக நாடுகளில்தான். பசியால் வாடுவதும் மாய்வதும் இந்த
நாடுகளில்தான். எனவே, இங்கு அதிகம் மகசூல் காண வேண்டும் என்பதே எல்லோரின்
ஆசையாக இருக்கிறது-சர்வதேச உணவு தானிய வியாபாரிகள் தவிர! எனவே, வளரும்
நாடுகளில் மீதமாகும் விளைபொருட்கள் வளர்ந்த நாடுகளின் பற்றாக்குறையையும்
போக்கும். ஏழை நாடுகளின் அன்னியச் செலவாணி பெருகும்.

*இன்னொரு கோர முகம்!*

உணவு உற்பத்தி குறைந்துவிட்டது... உணவுப் பஞ்சம் வரும்... பட்டினிச் சாவுகள்
ஏற்படும்... என்றெல்லாம் எப்போது பார்த்தாலும் சொல்லப் படுகிறது. ஏற்கெனவே
பட்டினிச்சாவு களும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் பிரச்னைக்கு உண்மையான
காரணம்... உணவு உற்பத்தி குறைவுதானா? என்றொரு கேள்வியை எழுப்பினால்,
பிரச்னையின் இன்னொரு கோரமுகம் உங்களைப் பார்த்து கோரைப் பற்களுடன் சிரிக்கும்
என்பதே உண்மை.

இந்தப் பூமியில் ஒவ்வொரு இரவும் ஏறத்தாழ 100 கோடி மக்கள் உணவின்றி பசித்த
வயிறுடன் உறங்குகின்றனர். இவர்களுக்கு வழங்கக்கூடிய அளவு உணவு இப்போது இங்கு
உண்மையில் விளையவில்லையா?

வறுமை மற்றும் பட்டினி ஆகியப் பிரச்னையை ஒட்டி, உலகை நம்ப வைப்பதற்காக பல்வேறு
கருத்துக்களை விஞ்ஞானிகளும் அரசியல்வாதி களும் எடுத்து வைக்கின்றனர்.
பெரும்பாலும் அவையெல்லாம் கட்டுக்கதைகள் என்பதே உண்மையாக இருக்கிறது. அவற்றில்
பன்னிரண்டு விஷயங்களைத் தொகுத்து '12 கட்டுக்கதைகள்' என்ற தலைப்பில் ஒரு
ஆய்வறிக்கையை 1998-ல் வெளியிட்டிருக்கிறது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரான்சஸ்
மோரே லேப்பி தலைமை யிலான குழு. ஒவ்வொரு அம்சத்தையும் அலசி ஆராய்ந்து அத்தனையும்
பொய் என்று சொல்லியி ருக்கிறது அந்தக் குழு. அந்தப் பன்னிரண்டு
'கட்டுக்கதை'களில்  முக்கியமானது, 'மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப போதுமான
உணவு உற்பத்தி இல்லை' என்பதுதான்.

இதைப்பற்றி அந்தக் குழு சொல்வது இதுதான்-

''உலகில் எல்லோரின் தேவைக்கும் அதிகமான தானியங்கள், காய்கறிகள் எல்லாமே விளை
கின்றன. மொத்த விளைச்சலை அப்படியே தலைக்கு இவ்வளவு என்று பிரித்து வழங்கினால்,
ஒவ்வொருவருக்கும், தினசரி 1.25 கிலோ தானியங்கள் மற்றும் பயறு வகைகள், ஏறத்தாழ
அரை கிலோ காய்கறிகள், பழங்கள், கால் கிலோ மாமிசம், பால், முட்டை கிடைக்கும்.
இவற்றின் மூலம் ஒவ்வொருவரும் பெறக்கூடிய சக்தியின் அளவு 3,500 கலோரி. ஆனால்,
நன்கு வளர்ந் திருக்கும் ஒரு மனிதனின் தேவை 2,100 கலோரி முதல் 2,500
கலோரிகள்தான். தினசரி 3,500 கிலோ கலோரி அளவு உணவு உட்கொண்டால், உலகத்தில் உள்ள
அத்தனை பேருக்கும் உடல் பருமன் ஒட்டிய நோய்கள் வந்து சேரும்.''

*பயங்கரவாத ஃபாஸ்ட் புட்!*

'துரித உணவு' எனப்படும் 'ஃபாஸ்ட்ஃபுட்' இந்தப் பல்லாயிரமாண்டு பண்பாட்டை
அழிக்கிறது. தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டு 'ஒரே சுவை, ஒரே மணம், ஒரே
மாதிரியான தரம்' என்ற முழக்கங்கள் புடைசூழ வருகிற பதப்படுத் தப்பட்ட உணவு. இதை
எதிர்த்து, மக்களுடைய உணவுப் பண்பாட்டைக் காக்க இத்தாலியைத் தலைமையிடமாகக்
கொண்டு சுமார் 100 நாடுகளில் இயங்குகிறது 'ஸ்லோ ஃபுட்' என்ற இயக்கம். இதன்
தலைவரான கார்லோ பெர்ட்டினி, ''630 கோடி மக்கள் உள்ள இந்த உலகில், தினமும் 80
கோடிக்கும் மேலான மக்கள் பசியால் வாடுகின்றனர். ஆனால், இதே உலகில் 170 கோடி
மக்கள் உடல் பருமன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக உணவு உற்பத்தியோ...
இன்றைய மக்கள் தொகையைப் போல இரண்டு மடங்கு பேருக்கு, அதாவது சுமார் 1,200 கோடி
பேருக்குத் தேவையான அளவு விளைவிக்கப்படுகிறது. என்ன பைத்தியக்கார உலகம் இது?''
என்று ஆதங்கப்படுகிறார்.

*ஒவ்வொரு நாளும்... ஒவ்வோர் ஆண்டும்! *

உலக அளவில் பட்டினியின் காரணமாக ஒவ்வொரு நாளும் 24,000 பேர் மடிகின்றனர்.
இவர்களில் 78% பேர் குழந்தைகளும், பெண்களும். 140 கோடிக்கும் அதிகமான மனிதர்கள்
நீண்ட காலம் பட்டினியில் உழல்பவர்கள். மொத்தத்தில் ஒவ்வொரு ஆண்டும் 1 கோடியே 30
லட்சம் சகோதர, சகோதரிகளை பட்டினி அரக்கனுக்குக் காவு கொடுத்துக்
கொண்டிருக்கிறோம்.

ஒவ்வொர் இரவும் பசித்த வயிற்றுடன் படுக்கைக்குச் செல்லும் இந்தியச் சகோதர,
சகோதரிகள் 34 கோடி பேர். பட்டினி என்ற அரக்கனின் பிடியில் சிக்கி ஒவ்வொரு
நாளும் சுமார் 10,000 இந்திய சகோதரர்கள் உயிரை விடுகின்றனர். இதுவே ஓராண்டுக்கு
சுமார் 40 லட்சம் பேர்.

தனக்கு ஒரு பிரச்னை என்றதும் மனிதாபிமானம், மண்ணாங்கட்டி என்றெல்லாம்
வாய்ச்சவடால் விடும் பேர்வழிகளே... இப்போது சொல்லுங்கள் ஆண்டுதோறும் 1 கோடியே
30 லட்சம் பேர் இறந்து போவதற்கு காரணம்... போதிய விளைச் சலின்மையா... போதுமான
மனது இல்லாமையா?

ஹிட்லரின் இனவெறி காரணமாக நடத்தப்பட்ட 2-ம் உலக (வணிகப்) போரில் உலகெங்கும்
இறந்தவர்களின் எண்ணிக்கை 60 லட்சம் பேர். இன்று பட்டினியால் மடிபவர்கள்
ஆண்டுதோறும் 130 லட்சம் பேர். அதாவது, ஒவ்வொர் ஆண்டும் இரண்டு உலகப் போர்களை
நிகழ்த்திக் கொண்டி ருக்கிறான் பட்டினி அரக்கன் -செயற்கையாக!

ஆக, உலகில் பசி, பட்டினிக் கொடுமைகளுக்குக் காரணம், தேவையான அளவு விளையாதது
அல்ல. பசியில் வாடுவோரிடம் போதுமான வாங்கும் சக்தி இல்லை என்பதே உண்மை. இது
விவசாயம், விளைச்சல் சார்ந்த பிரச்னையில்லை. அரசியல், பொருளியல் சார்ந்த
பிரச்னை. இதைத் தீர்த்து வைப்பதற்கு இன்றைக்கு நமக்குத் தேவைப்படுவது... மரபணு
மாற்றுப் பயிர்கள் அல்ல. தேவைப்படும் சமூகப் பொருளாதார மாற்றங்களை செய்யக்கூடிய
அரசியல் சக்தி.

அப்படி தீர்வு காணப்பட்டால், மண்வளம் காத்து, இயற்கை வளம் பேணி, தரமான
சத்துக்கள் மிகுந்ததை விளைவித்துத் தரும் இயற்கை வழி விவசாயத்தின் மூலம்
இன்றுள்ள மக்கள் தொகையைப் போல 3-4 மடங்கு மக்களுக்கு அமுத அன்னம் படைக்க
முடியும். விவசாயிகளின் பொருளாதார நிலைமையும் மேம்படும்.

இவ்வளவு உண்மைகள், ஆதாரங்கள் இருக்கின்றன என்று எடுத்துக்காட்டிய பிறகும்,
'இயற்கை வழி விவசாயம் மூலம் எல்லோருக்கும் சோறு போட முடியுமா?' என்று கேள்வி
எழுப்பினால், அவர்களெல் லாம் கண் முன் உள்ள உண்மையை அலசிப் பார்க்க
முடியாதவர்கள் அல்லது ரசாயன விவசாயத் துக்குத் தாலி கட்டிக்கொண்டு, மண்ணை
மலடாக்கும் கம்பெனிகள் தந்த போலி அறிவியலை, கம்பெனி களை வாழ வைப்பதற்காக
இருப்பவர்கள் என்றுதானே பொருள்.

*'வறுமையே உலகின் மிகப் பெரிய வன்முறை' என்று சொல்லியிருக்கிறார் காந்தி- *

சிந்தியுங்கள் நண்பர்களே!

*ஸ்லோ ஃபுட்!*

'ஃபாஸ்ட் ஃபுட்' என்பது ஒரு வகை உணவோ அல்லது உணவகங்கள் சம்பந்தப்பட்டது
மட்டுமல்ல. பல்வேறு விஷயங்களை உள்ளடக்கிய புதுவித கலாச்சாரத்தின் முகம் அது.
அதாவது... விவசாயம், இயற்கைச்சூழல், இயற்கை ஆதாரங்கள் மீது உள்ளூர் மக்களுக்கு
உள்ள உரிமை, உள்நாட்டு மற்றும் பன்னாட்டு வணிகம், விதை, உணவுத்
தொழில்நுட்பங்கள் என்று பலவற்றின் மீதும் பகாசுர கம்பெனிகள் செலுத்த
ஆரம்பித்திருக்கும் ஏகபோகத் தின் வெளித்தோற்றம்தான் ஃபாஸ்ட்ஃபுட்.

இதன் மூலம் உலக மக்களை அடிமையாக்குவதைத் தடுத்து நிறுத்தி, உலக மக்களை உணவுக்
கலாச் சாரம் மூலம் ஒன்றிணைக்க முயலும் அமைப்பே ஸ்லோ ஃபுட். உணவு என்பது அந்தந்த
வட்டாரக் கலாச்சாரத்துடன், இயற்கைச் சூழலுடன் பின்னிப் பிணைந்த ஒன்று. இத்தகைய
உணர்வைப் பரப்பும் அமைப்பே ஸ்லோ ஃபுட். இந்த அமைப்பின் அடையாளச் சின்னம் நத்தை.
1986-ம் ஆண்டு இத்தாலியில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு இன்று 104 நாடுகளில்
பரவியுள்ளது.

 

http://groups.google.com/group/muththamiz/msg/0151af1ff8fde928?