01272023வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

டெங்கு காய்ச்சல்

-மருத்துவர் ப.செல்வராஜன்-

மழைக்காலத்தில் நாம் கண்டு பயப்படும் இன்னொரு நோய் டெங்கு காய்ச்சல். அறுபதுகளின் துவக்கத்தில் ‘டிங்கி’ ஜுரம் என அறிமுகமான இந்நோய் வந்த சீசனில்தான் ‘‘ஸ்டவ் ஜோசியம்’’ என்பதும் அறிமுகமானது. ‘டிங்கி’ என்ற பெயரால் பல நகைச்சுவைத் துணுக்குகள் உருவாயின. ஆனால், அதன் சரியான பெயர் ‘டெங்கு’ என்பதே.


இந்நோய் ஏற்படக் காரணமாக உள்ளது டெங்கு நுண்ணியே. (நுண்ணி என்பது வைரஸ்தாங்க.... தமிழ்மொழி பெயர்ப்பாளர்கள் நுண்கிருமி என்றால் பாக்டீரியா, அதிநுண்கிருமி என்பது வைரஸ் அதாவது நுண்ணி என்கிறார்கள்)

இவை ஊன்நீர் வகைகளாகப் (Serotypes) பிரித்தால் நான்கு வகைப்படும். அதில் என்ன விசேஷம் என்கிறீர்களா? அதைப் பிறகு சொல்கிறேன். இவை வயது, பால், இனம் ஆகிய வேறுபாடு பார்க்காமல் எல்லோரையும் ஒன்றாகத் தாக்கும்.

இவற்றைப் பரப்பும் கொசுக்களை ‘ஈடஸ் ஈஜிப்டை’ என்கிறார்கள். இவை பகல் நேரத்தில் கடிப்பவை. அதனால் நமக்குத் தெரியும். மழை நீரில் அல்லது குளிர்சாதனப் பெட்டி (ரிஃபிரி ஜிரேட்டர்), ஏ.சி ஆகியவற்றில் தேங்கும் சிறிதளவு நீரில்கூட கொசுக்கள் முட்டையிட்டுப் பெருகிவிடும். நகர்ப்புறங்களில் சிறு பாத்திரங்களில் இவை பெருகி, நோயைப் பரப்புகின்றன.
சாதாரணமாக, மருத்துவர்களிடம் ஜுரம் என்று போனால் மழைக்காலத்தில் ‘‘இதெல்லாம் வைரஸ் ஃபீவர் (viral fever)’’ என்பார்கள். ‘‘அதுக்குப் போய் ‘டெஸ்ட்’ எல்லாம் பண்ண வேண்டாம்.... போய் மாத்திரை சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க!’’ என்பார்கள்

அந்த ‘வைரஸ் ஃபீவர்’ தான் டெங்கு. பொதுவாக ஒரு நாள் காய்ச்சலுக்கே, என்ன சோதனை செய்யலாம் என வரைமுறைகள் உள்ளன. நம் ஊரில் ‘‘எதுக்கும் எல்லாம் பாத்துடலாமே, டாக்டர்’’ என்று நோயாளிகள் தாமே முடிவு செய்வது தவறு.

முதல் நாள் காய்ச்சலில் ஒரே ஒரு சோதனை போதும். (உச்சி முதல் பாதம் வரை மருத்துவர் சோதித்தாலே பல முறை காரணம் புரியலாம்). குளிர் அல்லது கடுமையான தலைவலி ஏற்பட்டால் மலேரியா உள்ளதா எனச் சோதிக்கலாம். அது ஒன்று மட்டுமே ‘பாசிட்டிவ்’ ஆக இருக்கக் கூடும்.

டெங்குதானா என உறுதி செய்வது, அவசியமற்றது. அதற்கென பணம் செலவழிப்பது வீண். ஏனெனில், டெங்கு காய்ச்சலுக்கென தனிப்பட்ட மருந்துகள் ஏதும் கிடையாது. வெறும் பக்கபலம் தரும் சிகிச்சை மட்டுமே போதும். மேலும் 15 வயதுக்குட்பட்டோருக்கு மட்டுமே _ அதிலும் 5% க்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே உயிருக்குத் தீங்கு ஏற்படும் அளவு பாதிப்பு ஏற்படலாம்.

நோய்க் குறிகள்:

1) நோய்த் தடுப்பாற்றல் இல்லாதவர்களிடம் ஏற்படுவதை (classic dengue) ‘‘முறையான டெங்கு’’ என்கிறார்கள். இந்நோய் வெளிநாட்டிலிருந்து நம் நாட்டுக்கு வந்து தங்கும் இளவயதினரையும் குழந்தைகளையும் தாக்குவது. உடலில் நுண்ணி புகுந்து 5_8 நாட்கள் சும்மா இருந்து, பிறகு கண்ணீர்க் கசிவு, தடிமன் என வேலை காட்டும். இதற்குச் சில மணி நேரங்கள் கழித்து திடீரென உடம்பை முறிக்கும் வலி, கண்களின் பின்புறத்தில் வலி, பொறுக்க முடியாத தலைவலி மற்றும் கால், கை மூட்டுகளில் வலி ஆகியன ஏற்படும்.

உடல் அசைவினால் தலைவலி கூடும். சிலருக்கு வெளிச்சத்தையே பார்க்க முடியாத அளவு கண்கள் கூசலாம். உடல் நடுக்கமும் குளிரும் சற்று தாமதமாக வரலாம். இவை தவிர, தூக்கம் வராமலும், பசி இன்றி வாய் கசந்து போய், உடல் பலவீனம் அடைந்து அவதிப்படவும் நேரும். கால்வாசி பேருக்குத் தொண்டையிலும், மூக்கிலும் அழற்சி ஏற்படும்.

முக்கியமான விஷயம்: டெங்கு காய்ச்சலின்போது இருமல் மட்டும் வருவதே இல்லை.

மருத்துவச் சோதனையின் போது, கண்கோளங்களைத் தொட்டால் வலி ஏற்படுவது தெரியும். உடலில் ஆங்காங்கே நிணநீர் முண்டுகள் வீக்கமுற்றுக் காணப்படும்.

பாதி பேருக்கு, நாக்கின் பின்புறம் சிறிய வேர்க்குரு போன்ற குமிழ்கள் ஏற்படும். நாக்கின் மேல் மாவு போன்ற கோழைப் படிந்திருக்கும். மார்பிலும், கரங்களின் உட்பகுதிகளிலும் தோல் சிவந்து காணப்பட்டாலும், இவை சில நாட்களில் மறைந்து விடும். அதன்பிறகு, தடித்த அல்லது சிறு கொப்பளங்களோடு தோல் சிவக்கலாம். இவை 3_5 நாட்களில் தோன்றி, உடல் முழுவதும் பரவலாம்.

2_3 நாட்களில் காய்ச்சல் குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பிடக் கூடும். மற்ற நோய்க்குறிகள் அனைத்தும் மறைந்து போய் விடும்.

ஆனால், அனைத்துமே 2_3 நாட்களில் மறுபடியும் வந்து விடும்.

இது டெங்கு காய்ச்சலின் தனிப்பட்ட குணநலன் ஆகும்.

அதிர்ஷ்டவசமாக, இத்தகைய classic dengue அதிகம் காணப்படுவதில்லை. நோய்க்குப் பிறகு, பல வாரங்களுக்கு உடல் சோர்வு நீடிக்கும்.

2) இரண்டாவது வகை, சற்றுக் கடுமை குறைந்த நோய் வகையாகும். இதில் காய்ச்சல், பசியின்மை தலைவலி மற்றும் உடல்வலி ஆகியன இருக்கும். லேசான தோல் சிவத்தல் காணப்படும். நிணநீர் முண்டுகள் பாதிப்படைவதில்லை. 3 நாட்களில் உடல் முழுவதும் தேறிவிடும். (நம் ஊரில் காணும் ‘வைரஸ் ஃபீவர்’ இந்த வகையைச் சேர்ந்ததுதான்).

3) இவற்றையெல்லாம் விட அச்சுறுத்தும் ஒன்று ‘டெங்கு குருதிக் கசிவு காய்ச்சல்’ (dengue hemorrhagic fever) எனப்படும் மூன்றாவது வகையாகும்.

இதைப்பார்த்துதான் நாம் மிரண்டு போகிறோம். (தண்ணீர்ப் பாம்புகளைக் கூட நாகப் பாம்பு என அடித்துக் கொல்வதும் அலறி ஓடுவதும் போல்தான் இது).

இது குழந்தைகளை, அதாவது 15 வயதிற்குட்பட்டவர்களை மட்டுமே பாதிக்கிறது. இருபாலரையும் ஒரே அளவில் தாக்குகிறது.

நோய்க்குறிகள்:

துவக்க நிலையில் காய்ச்சல், தொண்டை வலி, தலைவலி, பசியின்மை, குமட்டல், வாந்தி மற்றும் கடுமையான வயிற்றுவலி ஆகியன ஏற்படும். 2_4 நாட்கள் வரை இது நீடிக்கும். ஆனால், classic dengue போல், தசை வலி, மூட்டு வலி மற்றும் எலும்பு வலி ஆகியன இராது.

சோதித்துப் பார்க்கையில் 38.30 to 40.60 (1010F _ 1050F) காய்ச்சல், உள் நாக்கும் தொண்டையும் சிவந்த நிலை தவிர, நிணநீர் முண்டுகள் மற்றும் கல்லீரல் வீங்கியிருப்பது தெரிய வரும்.

துவக்க நிலையை அடுத்து, உடல் நிலை வெகு துரிதமாக மோசமடையும். உடல் சோர்வு மிகவும் அதிகரிக்கும். கை கால்கள் சில்லிட்ட போதும், உடல் மட்டும் வெப்பம் கொண்டிருக்கும். நெற்றியிலும், கைகால் விரல் முனைகளிலும் புள்ளி புள்ளியாக குருதிக் கசிவு (petechiae) ஏற்படும். சில சமயம், தோலில் தடிப்புகள் அல்லது சிறு கொப்புளங்கள் தோன்றும். கை கால்கள் நீலமாகக் கூடும். இதயத் துடிப்பு அதிகரித்து, ரத்த அழுத்தம் குறைந்துபோகும்.

4_5_வது நாளில்தான் பெரும் உயிர் இழப்பு நேருகிறது. ரத்த வாந்தி, கருத்த நிறத்தில் மலப்போக்கு, ஆழ்மயக்கநிலை மற்றும் உடன் தேறாத அதிர்வு நிலை ஆகியன கவலையளிக்கும் அறிகுறிகள். மூச்சுத் திணறல், உடல் நீலம் ஆதல், வலிப்புகள் ஆகியன இறுதிக் கட்டத்தில் காணப்படும்.

சிகிச்சை : டெங்குவுக்கென தனிப்பட்ட சிகிச்சை எதுவும் இல்லை. ரத்தச் சுழற்சி துவண்டு விடாமல் இருக்குமளவு நீரை உள்ளே செலுத்த வேண்டும்.

காய்ச்சலைக் குறைக்க போதிய அளவு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குருதிக் கசிவு ஏற்பட வட்டணுக்கள் (platelets) குறைவதே காரணம் என்பதால், அவற்றை ஈடுசெய்ய ரத்தம் _ குறிப்பாக, வட்டணுக்கள் மட்டும் _ செலுத்த வேண்டியிருக்கும்.

வட்டணுக்கள் சாதாரணமாக 2.0 லட்சம் முதல் 2.5 லட்சம் மி.மீ3 என்ற அளவில் இருக்கும். அவை, ரத்தக் கசிவு உடலில் ஏற்படாமல் தடுப்பவை. அவற்றின் எண்ணிக்கை மிகவும் குறையும்போது குருதிக் கசிவு ஏற்படுகிறது.

மருத்துவ ஆலோசனை கட்டாயம் தேவை

ஆய்வுக்கூட சோதனைகள்: டெங்குவுக் கென உடலில் தோன்றும் காப்பு மூலங்களின் அளவுகளைக் (Igm Anti Body) கொண்டு, டெங்குதானா என உறுதி செய்யலாம். இது வழக்கமாக எல்லா காய்ச்சல் வந்தவர்களுக்கும் செய்வது தேவை இல்லை. பணம்தான் வீணாகச் செலவாகும்.

2) வட்டணுக்களின் எண்ணிக்கை: இது குறையும் போது, ரத்தம் செலுத்த வேண்டி இருக்கலாம்.

தடுப்பு முறைகள்: டெங்குவுக்கென தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை வெற்றி கிட்டவில்லை.

நிச்சயமான ஒரே தடுப்புமுறை, கொசுக்களை ஒழிக்கும் முறையே. மழைநீரையும், வீடுகளில் தேங்கும் நீரையும் அவ்வப்போது ஒழிப்பது மட்டுமே.

அவசியமான அச்சுறுத்தல்: ஒருமுறை டெங்குவினால் பாதிப்புற்ற பிறகு, தடுப்பாற்றல் அதிகரிக்கும். ஆனால், அடுத்த முறை 4 ஊன்நீர் வகைகளில் வேறொரு வகை, டெங்கு நுண்ணி தாக்கும்போது, உடற்காப்பு மூலம் விளைவிக்கும் செயல்களால் மட்டுமே பெரும் தீங்குகள் ஏற்படும்.

அதாவது, நம்மைக் காப்பதற்கென்று உள்ள காவல்துறை, வீட்டில் திருடன் நுழைந்ததற்காக வீட்டையே கொளுத்துவது போன்ற விளைவுகள் ஏற்படும். இந்நிலை பெரும்பாலும் உடல் பலம் குறைவான குழந்தைகளில் _ அதாவது நோஞ்சான்களிடம் _ ஏற்படுவதில்லை. நல்ல திடகாத்திரமான குழந்தைகளே பாதிப்புறுகின்றன. எனவே, நடுத்தர மற்றும் உயர்மட்ட வசதி கொண்ட குடும்பத்தினர் ‘டெங்கு’ என்றால் அலறுவது நியாயம்தான்! ஆனால், கொசுக்களை ஒழிப்பது நாமும் பங்கேற்க வேண்டிய ஒரு பொது நல சேவை என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

சீனாவில் மா சே துங் ஆட்சி துவங்கியபோது கொசுக்கள், பூச்சிகள், எலிகள் இவற்றைக் கொல்வது நம் தலையாய கடமை என்றவுடன், மக்கள் வெளுத்து வாங்கியதில், ‘சுற்றுச் சூழல் சமநிலை இழப்பே (Ecological imbalance) வந்து விட்டது என்கிறார்கள். அந்த அளவு இல்லா விட்டாலும், கொஞ்சமாவது நாம் செயல்படலாம்... என்ன சார், சொல்றீங்க?...

http://maruththuvam.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D