"ரோம் எரியும்போது நேரோ(Nero)மன்னன் பிடில் வாசித்தானாம்"என்று மனிதவுணர்வின் வக்கிரத்தைக் குறித்துச் சொல்வதற்குத் தமிழ்ச் சூழலில் சொல்வார்கள்!அப்போதெல்லாம் அவன் ஏன்-எதற்காக மகிழ்ந்து, இசைத்தான் என்பதற்கான காரணம் அறிய விருப்பு இருக்கவில்லை.அதையும் நமது தமிழ்ச் சூழல் சொல்லவுமில்லை.


இப்போது நேரோ மன்னன் மகிழும் அந்தத் தரணம் இலங்கையில் உருவாகி வருகிறது.

 


ரோமானியச் சாம்ராஜ்சியத்தில் ஏற்பட்ட தேக்கம்,பொருள் வளர்ச்சிக்குரிய சூழல் ஸ்த்தம்பித்திருந்தபோது, கட்டுமானத் துறையில் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சி நேரோ மன்னனுக்குத் தலை வலியாகியது.அவனது பரிவாரங்கள்,பல் துறை விற்பனர்கள்,பொருளாதார மேதைகள் அவனுக்கு அறிவுறுத்தியது "அந்த நேரத்தில் தப்பிப் பிழைக்க முயிற்சித்த" கட்டுமானத்துறையின் நலனுக்கானதாக இருந்தது.

ரோமை எரி.

எரிப்பதன் பலனாகக் கட்டமானத் துறை மீளவும் வீரியத்துடன் வெற்றியீட்டிப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக மாறும் என்றார்கள்.

நெருப்பிட்டான் நேரோ.

எரிந்தது ரோமபுரி.

பிடிலெடுத்து வாசித்தான் நேரோ,மகிழ்ந்தான்:கூத்தாடினான்.

சிறப்பாக ஆதாயமடைந்தார்கள் கட்டுமானத்துறை முதலாளிகள்.மற்றும் ஆளும் பெருமான்கள்!-அப்பாடா நல்ல சந்தோசம்.


இது வரலாறு.

இன்று இலங்கை?


வாகரையில் மக்கள் யுத்தத்தில் சாக,கிழக்கு மாகணம் எங்கும் யுத்தம் விரியப் புலிகள்"தந்துரோபாயப் பின் வாங்கலாக"ஓடித்தப்ப உலகத்துக்குச் சில செய்திகள் கஞ்சிகுடிச்சாறு பற்றிக் கசிகிறது.மனிதவிரோதமான முறையில் நடந்துகொண்ட காலடிகள் தென்படுகின்றன.

ஐயோ மக்கள்...


யாழ்ப்பாணம்: உணவுக்காக ஏங்கிக் கிடக்க,பொருள்களின் விலைகள் ஐரோப்பியச் செலவுப் புள்ளியில் விற்கப்படுகின்றன.வருமானம் பூச்சியம்.வாழ்பவர்கள் தமது உறவுகள் புலம் பெயர்ந்திருக்கும்போது,அவர்களை வதைக்கிறார்கள்-வெருட்டுகிறார்கள்:


"மருந்து குடித்துச் சாவோம் பணம் உண்டியலில் அனுப்பு!-வெஸ்ரன் யூனியன் வங்கிமூலமாக உடனே அனுப்பு."


அனுப்பிய அரை மணிக்குள் காசு கையில்!


கடை விரித்தவர்கள் வாயில் தோசை,புலம் பெயர்ந்தவர்களின் தோளில் சுமை!வங்கியில் கடன்- பெரும் சுமை.வீட்டு வாடகை கட்ட முடியாதென்று கடிதம் வீட்டுக்கு வருகிறது.யுத்தத்தின் சுமை எங்கே முட்டி மோதுகிறது?


யுத்தம்-பொருளாதாரத்தடை!


மில்லியன்கள் டொலருக்குக் கப்பல் வேண்டும் எம்.பி. மகேஸ்வரன்.

யாழ்ப்பாணத்துக்குப் பொருள் அனுப்பி மக்களுக்குச் சேவை செய்வதும் நோக்காம்.
//He said that this was his second ship and the first ship ‘Jans Clipper MV’ is already chartered by the Sri Lanka Government to ferry goods and food items to the restive Jaffna Peninsula. He told that already there are more than eight cargo ships belonging to Sinhalese owners are under the charter of the Sri Lanka Government for transporting food and other items to Jaffna.//

புல்லாரிக்கிறது.

ஒரு கப்பல் காவிச் செல்லும் பொருள்களை விற்றால் ஆறு கோடி ஆதாயமாம்!

ஆருடைய பணம்?

மேற்குலகில் கோப்பை கழுவும் தமிழனின் பணம்.தன்னைக் கடனாளியாக்கித் தமது உறவின் உயிரைப் பிடித்து வைப்பவ(ள்)ன் புலம் பெயர்ந்த தமிழன்.

...ம்...

போகட்டும்!

யுத்தம்,பசி,நோய் நொடி!


கப்பல்,
கொள்முதல்,
சந்தை,
பேரம்,
ஆயுதத் தரகு,
கோடிகளுக்குள் புரளும் அரசியல் தலைவர்கள்:
மகிழ்ச்சி,
மப்பு,குடி,கும்மாளம்!


பாதைகள் திறக்கமாட்டோம்,-புலிகள் வரிமூலம் வருமானம் பெறும் வழி அது!

கப்பல்மூலம் உணவு போவது ஆமிக்கு,அது தேசத் துரோகம் நாம் தடுப்போம்,அழிப்போம்.

எல்லாம் நடக்கலாம்.

என்றாலும் யாழ்ப்பாணம் பொன் முட்டையிடும் வாத்து இப்போது!


இந்த அரசியலில் இழந்தவர்கள் புலம் பெயர் தமிழர்கள்தாம்!ஊரை,வாழ்வை,நிம்மதியை,பொருளை!

இறுதியாகச் சுமக்கும் கடன்பளு எப்போது உயிரைப் பறிக்கும்?இதுதாம் புலம் பெயர்ந்த தமிழன் கேள்வி!

சொல்லமுடியாது!

யுத்தம் எதற்கு?

நாலு பணம் சம்பாதிப்பார்கள் தலைவர்கள்,தளபதிகள்,முதலாளிகள்.

பொருளாதாரத் தடை:பொருள் தேடுவதற்கு நல்லவொரு வழி!தொடரட்டும்.


யுத்தத்துக்குக் காரணங்கள் பல.அவை மக்களைச் சொல்லி மாமனிதர்கள் மனம் மகிழ்ந்து பொருள் சுமக்க,-பதிவிச் சுகம் காண... சொல்லித் தெரிவதில்லை இவைகள்.


நேரோ மன்னன் பிடில்...

போதும்!

எல்லாம் பொன்னான பொருள்-ஆதாரத்தின் அரிச்சுவடி புரிந்தால் பொய்மை பிடரியைத் தட்டும்.

பேதமையான மனது சொல்கிறது: "எல்லாம் எங்கட தலைவர் வெல்வார்! "

வென்றது அவர்கள்தானே?

இராஜ பக்ஷ மட்டுமல்ல எல்லாத் தரப்பும் வென்றே வருகிறது.-மக்களைத் தவிர!

ப.வி.ஸ்ரீரங்கன்
17.01.2006