05262022வி
Last updateபு, 02 மார் 2022 7pm

சுனாமியைச் சொல்லியழ...

வ்வொரு நிகழ்வும்,அது துக்கமானதாகவிருந்தாலென்ன மகிழ்ச்சியானதாகவிருந்தாலென்ன அனைத்தும் இலங்கையில் சம்பிரதாயமாக மாறிவிட்டது!வார்த்தைகளுக்குக் கொடுக்கும் மதிப்பை மனிதவுணர்வுகளுக்கு எவரால் கொடுக்க முடிந்தது?இன்றைய இலங்கையில் சுனாமியலையால் அழிக்கப்பட்ட மக்களை நினைவுகூர்வதற்கு எந்தவொரு கட்சிக்கோ அல்லது இயக்கத்துக்கோ அருகதையுண்டா?மக்களின் மீதேறி யுத்தச்சவாரி செய்யும் இலங்கையரசுக்கோ அல்லது புலிகளுக்கோ இந்தத் தார்மீகக் கடமையைச் செய்யும் அருகதையுண்டா?எத்தனை தலைமுறை சென்றாலும் நீங்கா நினைவாக நெஞ்சில் நெருடும் இந்தச் சுனாமி அழிவானது, எம் தேசத்துக்கு மட்டும் சொந்தமில்லாத முழுவுலகுக்குமே பொதுவான நினைவு நாளாக இருக்கிறது.இங்கே கட்சி இயக்க வாத நலன்களைக் கடந்து, மக்களால் நினைவு கோரவேண்டிய இந்தக் கோரச் சம்பவத்தை, யுத்தத்தையே தொழிலாகக் கொண்ட அரசுகள்,கட்சிகள்-இயக்கங்கள் நினைவுகூர்ந்து தம்மை மக்களின் நண்பனாக்க முனையும் கபடத் தனத்தை என்னவென்பது!
 

கடந்த ஈராண்டுகளுக்கு முன் பல பத்தாயிரம் பிஞ்சுகள் சுனாமிக்கு இரையானபின் நடந்தேறிய இலங்கை அரசியலானது மிகவும் கீழ்தரமானது.அது மக்களின்-அழிந்தவர்களின் பெயரைச் சொல்லிப் பிழைப்பு நடத்த முனைந்ததேயொழியப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவொரு மீள் நிர்மாணப் பணியையும் செய்யவில்லை.மக்கள் இயற்கையின் கோரத்தாண்டவத்துக்குப் பலியான கொடூரத்தைப் பக்கம் பக்கமாகக் காட்டிப் பணம் சம்பாதித்தவர்கள், இன்று பல்லாயிரக்கணக்கான மக்களை யுத்த்தால் கொன்று குவித்து வருகிறார்கள்.இவர்களின் மிகக் கேவலமான யுத்த முனைப்பால் வாகரையில் இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் அகதியாக இடம்பெயர்ந்து அவலப்படும் இன்றைய பொழுதிலும்,யாழ்ப்பாணத்தில் அப்பாவி மக்கள் உண்ண உணவின்றிச் சாவதே மேலென்று ஒப்பாரியிட்டு,சிக்கன் குனியா நோய்க்குள் வதங்கும்போதும் யுத்தமே மக்கள் தலையில் குண்டைப்போட்டுக் கொல்லும்போது, இந்தச் சுனாமியில் செத்தவர்கள் பற்றிய புலிகளினது,இலங்கை அரசினது நினைவு கூரல்கள் எல்லாம் வெறும் வெற்றுத்தனமான சடங்கு நிகழ்வாகவே மாற்றப்படுகிறது.அப்பாவி மக்களை யுத்த ஜந்திரத்துக்குப் பலியாக்கி, அவர்களை மீளவும் கொன்று குவிக்கும் கட்சி-இயக்க நலன்கள் இலங்கைத் தேசத்து மக்களின் எந்த நலனையும் காக்கும் குடிசார் நலன்களை முதன்மைப் படுத்தவில்லை.மாறாக மக்களின் அனைத்து வாழ்வாதாரங்களையும் அழித்தெறிந்து, அவர்களைப் பட்டுணிச்சாவுக்குள் தள்ளிவிட்டு,சுனாமியால் செத்தவர்களுக்கு இரங்கல் உரை நிகழ்த்துவது மகாக்கொடுமையிலும் கொடுமை!

 

இன்றைய நிலவரப்படி இந்த யுத்தமானது தமிழ் பேசும் முழுமொத்த மக்களையும் அவர்களின் வாழ்விடங்களைவிட்டொழுப்பியுள்ளது.இந்த யுத்தப் பேய்களால் பல்லாயிரம் மக்கள் நோய்கும்,பசிக்கும் இரையாகிவருகிறார்கள்.இடம் பெயர்ந்தலையும் மக்கள் ஒண்டுவதற்கு இடமின்றி அநாதைகளாகக் காட்டில் அலைகிறார்கள்.அப்படிக் காட்டில் தஞ்சமடைந்த மக்களை இலங்கையரசின் குண்டுகளும்,புலிகளின் பொல்லாத செல்லடிகளும் கொன்று குவித்துவருகிறது!எவரிடமும் முறையிடமுடியாத மக்கள் தம்முயிரைக் கையில் பிடித்தபடி மரணப் போராட்டம் செய்கிறார்கள்.இத்தகைய வாழ் சூழலை மக்களுக்கு வழங்கும் கொடூரமான அரசும்,புலிகளும் செத்தவர்களுக்காகக் கண்ணீர் வடிப்பது வடிகட்டிய அயோக்கியத்தனமானது.

 

யுத்தத்தை நிறுத்திச் சமாதானம் பேசுகிறோமென்று சொல்லிக்கொண்டே யுத்தம் செய்து, மக்களைக் கொல்லும் இந்த அரசியலானது இன்று நேற்றுத் தொடங்கிய கதையல்ல!

 

இது, சுமார் பன்னிரெண்டு ஆண்டுகளாக இதே கதையோடே யுத்தம் செய்து மக்களைக் கொல்கிறது புலியும்,சிங்கமும்!.மக்களை ஏமாற்றிக் கொலை புரியும் இந்த அரசியல், உயிர் வாழும் அப்பவிகளை இன்னும் ஒருபடி மேலே சென்று தமது பேரத்துக்காகப் பட்டுணி போட்டுக் கொல்லும் கொடூரம் இப்போது முனைப்பாக நடைபெறுகிறது.இன்றைய யாழ்ப்பாணத்து மக்கள் யாழ்பாணத்தைவிட்டு இடம் பெயரவும் முடியாது,பசிக்கும் நோய்க்கும் முகம் கொடுக்க முடியாது தற்கொலை செய்வதே மேலெனும் நிலைக்குள் தள்ளப்பட்டுக் கிடக்கிறார்கள்!இந்தவுண்மையைப் பாதிக்கப்பட்ட மக்களே கண்ணீரோடு கதிறிப் போனில்(தொலைபேசி) அழும்போது, நமக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை!

யாழ்ப்பாண நகரில் சீனியின்றிப் பரித்தித்துறைக்குச் சென்று, கால்கிலோ சீனிக்கு 100.ருபாய் கொடுத்து வேண்டப்படுகிறது.ஒரு லீட்டர் தேங்காய் எண்ணை 1400.ரூபாய்க்கும்,மாவு 350 ரூபாய்க்கும்,அரிசி 300 ரூபாய்கும், கத்தரிக்காய் கிலோ 400.ரூபாய்க்கும்,மீன்1400.ரூபாய்க்கும் கிலோ விற்கப்படும்போது, எவனால் யாழ்ப்பாணத்தில் வாழ ழுடியும்?உலகத்தில் பெரும் படைப்பலம் முடைய இந்தியா-சர்வ வல்லமை பொருந்திய இந்தியா இலங்கை அரசியலில் இத்தகைய கொடூரமான நிகழ்வுகளுக்கு இன்னும் எண்ணையூற்றி வருகிறது.மக்களின் அழிவைத் தடுத்து நிறுத்தும் தார்மீகக் கடமை உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது.அதைச் செய்ய வேண்டிய தரணத்தில் உலக மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

 

எனினும், இலங்கை அரசியலால் பாதிக்கப்படும் அப்பாவிகளைத் தத்தமது இயக்க-கட்சி அரசியல் நலனுக்காகப் புலிகளும்,இலங்கையை ஆளும் கட்சிகளும் திட்டமிட்டு மறைத்து வருகிறார்கள்.அப்பாவிகளின் அடிப்படையுரிமைகளைப் பறித்து அவர்களை அரசியல் பழிவாங்கலுக்குப் பயன்படுத்தும் இந்தக் கேடுகெட்ட அரசியல் மக்களின் மிகப்பெரும் துயரத்தைத் திரைபோட்டு மறைக்கிறது.யாழ்பாணத்திலும்,வாகரையிலும் மக்கள் செத்து மடியும் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

 

மூதூரில் ஒத்திகை பார்த்த மாபெரும் மனித அவலம் இப்போது தேசமெங்கும் அரங்கேற்றப்படுகிறது.அப்பாவி மக்களை இனத்தின்-மதத்தின் பெயரால் கொன்றுபோட முனையும் இந்தப் போராட்ட அரசியலைத் தடுப்பதற்கான எல்லா வகை அரசியல் நகர்வையும் நாம் ஆற்றவேண்டிய மிகக் கடினமான சூழலில் இருக்கிறோம்.

 

சமாதானம்,

புரிந்துணர்வு ஒப்பந்தம்

பேச்சு வார்த்தையென்று இந்தப் பயங்கரவாதிகள் பூச் சுற்றும் அரசியலில் உண்மையில் மக்களின் நலனைப் பின்தள்ளிய இயக்க-கட்சி நலனே முதன்மையுறுகிறது.இவர்கள் நடாத்தும் இந்த நாடகத்தை சுமார் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் அறிக்கையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்:

 

"நாம் சமாதானத்தின் கதவுகளை அடைத்து விடவில்லை.சமாதான வழியில் பிரச்சனைக்குத் தீர்வுகாணும் பாதைகளை மூடிவிடவில்லை.சமாதான வழிமூலம் எமது மக்களுக்கு நீதி கிடைக்குமானால் நாம் அதனை மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.சமாதானத்தை தோற்றுவிக்கும் நல்லெண்ண நோக்குடன் இங்குவரும் சமாதானத் தூதுவர்களை நாம் நேசக்கரம் நீட்டி வரவேற்று வருகிறோம்.போரை நிறுத்தி,சமாதான வழியில் பிரச்சனைக்குத் தீர்வுகாண எமது விடுதலை இயக்கம் தயாராக இருக்கிறதென்பதை நாம் இவர்களுக்கு மேலும் மேலும் வலியுறுத்தி வருகிறோம்.எமது நல்லெண்ணத்துக்குச் சான்றாக சமாதானச் சமிஞ்சிகளை காட்டவும் நாம் தவறவில்லை."(08.03.1994 அனைத்துலகப் பெண்கள் தினத்துக்கான பிரபாகரனின் அறிக்ககை.-எரிமலை ஆனி 1994.பக்கம்:14.)

 

இந்தக் கூற்றைக் கடந்த மாவீரர் தினவுரையிலும் நீங்கள் கேட்டிருப்பீர்கள்.ஏன் ஒவ்வொரு மாவீரர் தினவுரையிலும் எல்லோரும் கேட்டிருக்கிறோம்.ஆனால் இவர்கள் சொல்லும் மக்களுக்கு, இவர்கள் என்ன நீதியைக் கொடுத்துள்ளார்கள் இன்றுவரை?இவர்களே சமாதானம் என்று அடிக்கொரு தடவை சொல்லிக்கொண்டு, இன்று வரை மக்களுக்கெதிரான யுத்தங்களைச் செய்கிறார்கள்.என்னவொரு கபடத்தனமான அரசியல்?கடந்த பன்னிரெண்டாண்டுகளாகச் சமாதானஞ் செய்ய முடியாத மர்மம்தாமென்ன?மக்களின் நலனை முதன்மைப் படுத்தும் அரசியலானது நிச்சியமொரு இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கும்!அனால் இங்கே 2004 இல் இடம் பெற்ற இயற்கையின் கோரத் தாண்டவத்தில் எழுபதாயிரம் உயிர்களைப் பறி கொடுத்த இந்தத் தேசத்தின் அரச அமைப்புகள் இன்னும் அதேயளவு உயிர்களைக் கொன்றுபோடும் யுத்தத்தில் மூழ்கிக் கிடப்பதன் மர்மம்தாமென்ன?இவர்களில் எந்தத் தரப்புக்கும் மக்களின் அவதிகளில் அக்கறையில்லை.மாறாக மக்களின் அவலத்தில் அரசியல் பிழைப்பு நடாத்தும் மிகக் கேவலமான அரசியல் வியூகத்தை இவர்கள் மக்கள் நலனென்கிறார்கள்.இதையும் மக்களின் பெயரால் வரவு வைத்தபடி அந்த மக்களைக் கொன்று குவிக்கும்போது நாம் இந்தப் பாழாய்ப்போன யுத்த வெறியர்களைச் சபிப்பதைத் தவிர வேறுவழியின்றிக் கிடக்கிறோம்.

 

ப.வி.ஸ்ரீரங்கன்
26.12.2006


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்