மைய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை உயர்த்துவதற்காக நியமிக்கப்பட்ட ஆறாவது ஊதியக் குழு, தனது பரிந்துரைகளை மைய அரசிடம் அளித்திருக்கிறது. அரசு ஊழியர் சங்கங்கள் ஊதியக் குழுவின் அறிக்கையை, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குச் சாதகமான, ஒருதலைப்பட்சமான அறிக்கை எனக் குற்றஞ்சுமத்தியுள்ளன. 


 ஊழியர்களின் குற்றச்சாட்டில் உண்மையுண்டு. ஐ.ஏ.எஸ் தகுதி கொண்ட அரசுச் செயலர்களின் மாதச் சம்பளம் தற்பொழுது ரூ. 28,000/ தான். இதனை, ரூ. 80,000/ ஆக அதிகரிக்க வேண்டுமென ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ளது. இதோடு இந்த அதிகாரிகளுக்கு வழங்க வேண்டிய இதரப் படிகளையும் சேர்த்தால், அவர்களின் மொத்தச் சம்பளம் ரூ. 96,000/ ஆக எகிறிவிடும்.


 முப்படைத் தளபதிகளின் சம்பளத்தை ரூ. 90,000/ ஆகவும்; தற்பொழுது ரூ. 8,250/ சம்பளம் பெறும் இளம் லெப்டினென்ட் அதிகாரிகளின் சம்பளத்தை ரூ. 25,760/ ஆகவும்; துணை இராணுவப் படைகளின் தலைமை அதிகாரியின் சம்பளத்தை ரூ. 80,000/ ஆகவும் உயர்த்த வேண்டும் என அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்திய இராணுவத்தைச் சேர்ந்த இடைநிலை அதிகாரிகளுக்கு ஊதியக் குழுவின் பரிந்துரையால் 60 சதவீத சம்பள உயர்வு கிடைக்கும்.


 அதேசமயம், தற்பொழுது படிகளையும் சேர்த்து ரூ. 5,115/ சம்பளம் பெறும் கடைநிலை ஊழியர்களுக்கு இனி ரூ. 6,790/ சம்பளம் வழங்க ஊதியக் குழு பரிந்துரைத்துள்ளது. இந்த உயர்வு ஐ.ஏ.எஸ்.  அதிகாரிகளுக்கு வழங்கப்படும் போக்குவரத்துப்படியை (ரூ. 7,000/) விடக் குறைவானதாகும். கீழ்மட்ட ஊழியர்களின் சம்பளத்தை 18 முதல் 24 சதவீதம் வரை அதிகரித்துக் கொடுக்கப் பரிந்துரைத்துள்ள ஊதியக் குழு, மேல் மட்டத்தில் 60 முதல் 200 சதவீதம் வரை சம்பள உயர்வு வழங்க அறிவுறுத்தியிருக்கிறது.


 சம்பள உயர்வு குறித்த ஊதியக் குழுவின் பரிந்துரைகள் யாருக்கும் திருப்தியளிக்கவில்லை. கடைநிலை ஊழியர்கள் தங்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ. 10,000/ என நிர்ணயிக்கப்பட வேண்டும் எனக் கோரியிருந்ததை ஊதியக்குழு நிராகரித்திருப்பதோடு, தங்களின் பணிச் சுமையை அதிகரிக்கவும், பல சலுகைகளை நிறுத்தவும் பரிந்துரை செய்திருப்பதாகக் குமுறிக் கொண்டுள்ளனர்.


 இந்தியாவில் ஏறத்தாழ 84 கோடி மக்கள் நாளொன்றுக்கு வெறும் இருபது ரூபாய் (மாத வருமானம் ரூ. 600/) வருமானத்தில்தான் வாழ்க்கையை ஓட்டுவதாக அர்ஜூன் சென் குப்தா கமிட்டி கூறியுள்ளது. இப்படிப்பட்ட நிலையில், தங்களுக்கு அளிக்கப்பட்ட சம்பள உயர்வு பத்தாது எனக் கூறுவதற்குக் கொஞ்சம் கல்மனதுதான் வேண்டும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ற சம்பள உயர்வில்லை என்கிறார்கள் அரசு ஊழியர்கள். அப்படியே இருந்தாலும், விலைவாசி உயர்வு மாதச் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களைவிட, அன்றாடக் கூலிகளையல்லவா அதிகம் பதம் பார்க்கிறது?


 அரசு ஊழியர்களின் மனசாட்சியை உலுக்கும் இவை போன்ற கேள்விகளைக் கேட்டால், அரசு ஊழியர்களும், மற்ற பிற உழைக்கும் மக்களும் சகோதரர்கள்; தங்களுக்குள் சகோதரச் சண்டையைத் தூண்டிவிடச் சதி நடக்கிறது என்ற பல்லவியைப் பாடித் தப்பித்துக் கொள்ள முயலுகிறார்கள். அரசு ஊழியர்கள் இப்படி வாய் இனிக்கப் பேசினாலும், அவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஒரு பெரும் இடைவெளி இருப்பதை மறைத்துவிட முடியாது.


 இலஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களைச் சங்கத்தில் இருந்து நீக்கி விடுவோம் என முடிவெடுத்து நடைமுறைப்படுத்தினால், பல ஊழியர் சங்கங்களின் கூடாரமே காலியாகி விடாதா? பேருந்து, ரயில் கட்டணங்களை அரசு மறைமுகமாக ஏற்றியிருப்பதை எதிர்த்து, பொது மக்களிடம் இருந்து பழைய கட்டணத்தைத்தான் வாங்குவோம் என ஊழியர் சங்கங்கள் ஒரு மணி நேரமாவது போராடியதுண்டா? சங்கமாக இணைந்துள்ள அரசு ஊழியர்களின் பலம், தங்களின் சம்பள உயர்வு, போனசு போன்ற சுயநல கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ளத்தான் பயன்படுகிறதேயொழிய, அதனைத் தாண்டி பொதுமக்களின் நலனுக்காகப் போராடுவது அபூர்வமாகி விட்டது.


 ""உலகமயம் எனும் ஆளும் வர்க்கங்களின் போதை ஆறாவது ஊதியக் குழுவிற்கும் ஏறிவிட்டதால்தான், அதனின் பரிந்துரைகள் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச பலன்களைக் கூட அளிக்கவில்லை'' என சி.பி.எம்.இன் தீக்கதிர் நாளேடு புலம்பி இருக்கிறது. ஊழியர்களுக்கு அவர்கள் கேட்ட சம்பளம் கொடுக்கப்பட்டால், இப்போதை இறங்கிவிடுமா என்பதுதான் கேள்வி. சம்பள உயர்வினால், விலைவாசி உயர்வை வேண்டுமானால் அரசு ஊழியர்கள் சமாளித்துக் கொள்ளலாமேயொழிய, உலகமயத் தாக்குதல்களில் இருந்து முற்றிலுமாகத் தப்பிவிட முடியாது.


 உலகமயத்தை எதிர்த்துப் போராடுவதென்பது அரசியல் போராட்டம். அரசு ஊழியர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்றால், சம்பள உயர்வு, போனசு என்ற குறுகிய தொழிற்சங்கவாதத்தில் இருந்து வெளியே வரவேண்டும். அதற்குத் தடையாக இருக்கும் தொழிற்சங்கத் தலைமையைத் தூக்கியெறிய வேண்டும். உலகமயத்தை எதிர்த்துப் போராடும் பல்வேறு மக்கட் பிரிவுகளோடு ஐக்கியப்பட வேண்டும்.


 இந்த ஐக்கியம் இல்லையென்றால் உலகமயச் சூழலில், சம்பள உயர்வு, வேலை பாதுகாப்பு போன்ற பொருளாதாரக் கோரிக்கைகளைக்கூட அரசு ஊழியர்கள் பெற்று விட முடியாது; இந்த ஐக்கியம் இல்லையென்றால், 9.7 இலட்சம் கடைநிலை ஊழியர்களின் பதவிகளை ஒழித்துக் கட்டுமாறு ஆலோசனை கூறியுள்ள ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரையைத் தோற்கடிக்க முடியாது; இந்த ஐக்கியம் இல்லையென்றால், சம்பள உயர்வுக்காக மட்டும் போராடும் அரசு ஊழியர்களைப் பொதுமக்கள் வில்லன்களைப் போலப் பார்ப்பதை மாற்றிவிட முடியாது.


 பாசிச ஜெயாவின் ஆட்சியின் பொழுது தமிழக அரசு ஊழியர்களின் போராட்டம் தோற்றுப் போனதை, அரசு ஊழியர்கள் மன்னிப்புக் கடிதம் கொடுத்து வேலைக்குத் திரும்பியதை நினைவில் கொள்ளுங்கள்.


 உலகமயத்துக்கு எதிரான ஐக்கியப்பட்ட அரசியல் போராட்டத்தின் அவசியம் மூளையில் உறைக்கும்!


· குப்பன்