எழுக என எழுந்தாய்த் தமிழ் தேசம்!


நீல மேகமும்
நெடும் பகற் பொழுதும்
இடுமுள் வேலிதாங்க
தெருவெங்கும் இருண்டு கொடுவரி மறுகும்
கால் வலிக்கும் ஜந்திரம் ஓயாது:யுத்தம்!

"போய் வா"என் கோ,பெருந்தகையே!
பார்த்திருப்பதற்குள்ளே விரிதிரைக் கடலொடு
முதிரக் காத்திருக்காது உதிரக் கண்டேன் கனா!
இங்கு ஓடாய் உழைத்தவர் உறக்கம் தொலையும்

மதிலொடு ஒட்டிய ஓணானுக்கும்
ஒரு வயிறுண்டு
ஓரத்தில் கொட்டும்
தூசி மேகம்

எதற்காகவோ இருப்பழியும் காலம்
யானுளம் கலங்கி
யாவதும் அறியேன்
ஓதுவதற்கு ஒப்பாருமில்லை
ஒழிக என் கூதற் காலம்!

நெடும் புனல் நீக்கிய மறைப்பில்
துயிலிழந்த தெருவோரத்துக் கண்மாய்
பெரு நரிக்குக் கொண்டாட்டம்
துள்ளிக் குதிக்கும் மீனுக்கு அழிவு
இளநிலாக் காயும்
இருளாற் கவ்வும் இயக்கமும் அதுவாய்


எழுக என எழுந்தாய்த் தமிழ் தேசம்
எங்கேயும் கெந்தகப் புகையுண்ட குறை முகங்கள்
வல்லூறு வட்டமிட
ஊழ்வினை வந்து உயிர் உண்டு கழிந்தது

பொன் திகழ் மேனியொடு பலர் தோன்றி
செங்கோல் காட்டிச் சொல்லிய கதைகளும் ஆறிய கஞ்சி
இருளிடை புகுந்த ஒளிமுதற் கடவன்
கோன்முறை வெடிபட வருபவர்
அடுபுலி அனையவர்
படுகடன் இது?