ஜெனிவாப் பேச்சு வார்த்தையின் தோல்விக்குப் பின்பு எந்த முன்னேற்றமும் இலங்கை இனப் பிரச்சனயில் ஏற்படவில்லை-அப்படியேற்படுமென்றெந்த நம்பிக்கையுமில்லைதாம்.இன்றுவரை இலங்கையின் இனமுரண்பாடானது கணிசமான தமிழ் பேசும் மக்களை நாடோடிகளாக்கியதும்,ஒரு இலட்சத்துக்கு மேலான தமிழர்களைப் படுகொலை செய்ததும்,அப்பாவிச் சிங்கள இளைஞர்களை அழித்ததுமே வரலாறாக நிலவுகிறது.இதன் மறைமுக நலனானது ஒருசில பெரும் முதலாளிகளைத் தமிழ் இயக்க வாதிகளுக்குள் தோற்றுவித்ததும் கூடவே ஒரு சிலகற்றுக்குட்டிகளை "தமிழரின் "மேன்மை"உடையவர்களாக்கியும் உள்ளது.சிங்கள தரப்பில் பாரிய தரகு முதலாளிகளையும்,தான்தோன்றித் தனமான அதிகார வர்க்கத்தையும் பெரும் செல்வச் செழிப்பிலாக்கியுள்ள இந்த இனப்போராட்டமானது, சாரம்சத்தில் தவறான பாதையில் சென்றதன் விளைவுகள் நமது முகத்தில் ஓங்கியடிக்கிறது.


புரையோடிப்போன யுத்தம்:

இலங்கையில் மீளவும் யுத்தம் தொடர்கதையாகிவிட்டது!கடந்த காலத்தில் நிகழ்ந்த யுத்தத்துக்கும் இன்றைய யுத்தத்துக்கும் உள்ளடகத்திலும், உருவத்தில் மிகப் பெரிய வேறுபாடு நிலவுகிறது.முன்பு இலங்கைப் பயங்கரவாத இராணுவம் இனவழிப்பைச் செய்யுமொரு இராணுவமாகக் கட்டமைக்கப்பட்டு வந்தது.இன்று அந்த இராணுவமானது தமிழர்களின் அரசியல் முன்னெடுப்பாளர்கள் பலராலும் பயங்கரவாதத்துக்கு எதிரான படையாகக் கட்டமைக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் தமிழ்பேசும் மக்களுக்கான பிரச்சனையே என்னவென்றுவுணர முடியாதளவுக்குப் போராட்டம் நடைபெறுகிறது.இந்தப் "பயங்கரவாதத்துக்கு எதிரான"என்ற மொழியானது அமெரிக்கப் பாணியிலானதென்ற கருத்தியில் மெத்தனத்திலிருந்து விடுபட்டு, இலங்கைத் தேசத்துக்குள் நிலவும் சிறப்பியல்புகளை-கூறுகளை மையப்படுத்திய விமர்சனப் பண்பால் நாம் உள்வாங்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

"பயங்கரவாதத்துக்கு எதிரானது"என்றால், இலங்கைச் சமுதாயத்துள் எது பயங்கரவாதமாகிறதென்பதே எம் கேள்வியாகிறது? இந்தக் கேள்வியினூடு நாம் எமது அரசியல் முன்னெடுப்பைப் பார்த்தோமானால் தமிழ் பேசும் மக்களின் அரசியலானது எந்த முன்னெடுப்புமின்றி அநாதையாகக் கிடக்கிறதென்றவுண்மை முகத்தில் ஓங்கியடிக்கிறது!.மக்கள் அன்றாட வாழ்வியல் முரண்பாடுகளுக்கு முகங்கொடுக்க முடியாது திண்டாடும்போது, தமது உரிமைகள் குறித்தவர்கள் சிந்திப்பதற்கான தார்மீக மனத்திடமும் அவர்களிடத்திலின்றி,அவர்கள் உயிர்வாழும் ஆதாரங்களுக்காக ஏங்கிகிடக்கிறார்கள்.இந்த நிலையில் தமிழ்பேசும் மக்களின் குடிசார் வாழ்வியல் பண்புகள் யாவும் இல்லாதொழிக்கப்பட்டுவரும் அரச-இயக்க ஆதிக்கங்களால் மக்கள் தினமும் பலிகடாவாக்கப்பட்டும் வருவது மிகக் கொடுமையானதாகும்.


இந்த நூற்றாண்டின் பொருள்வயப்பட்ட ஊக்கங்கள் யாவும் சாமானிய மக்களின் உரிமைகளைப் பறிப்பதிலும்,அவர்களைப் பன்முகப்படுத்தப்பட்ட கருத்தியல் மற்றும் வன்முறைசார்ந்த நடவடிக்கைகள்(சட்டவாக்கம்,யுத்தம்)மூலமாக அடக்கியொடுக்குவதில் மிக நுணுக்கமாகச் செயற்பட்டு வருகிறது.இது எந்தப் பகுதி மக்களானாலும், அவர்கள் உழைத்துண்பவர்களாக இருக்கும் பட்சத்தில் இத்தகைய அளவுகோலுக்கு இரையாவது தொடர்ந்தபடிதாம் இருக்கிறது.இதைத் தடுத்து நிறுத்துவதற்கான அரசியல் மற்றும் தார்மீகப் பலம் இந்த மக்களிடமில்லை.இருந்த கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கைகள் பறித்து ஏப்பமிட்டு மக்களைத் தினமும் அடிமைகொள்வதும்,அடக்கியாளத் திட்டமிடப்படுவதும் தொடர்ந்தபடியே இன்றையப் பொருளாதார நகர்வு இடம் பெறுகிறது.

இந்தச் சூழலில்தாம் இலங்கையின் யுத்த மற்றும் அரசியல் நகர்வும்,புலிகளின் போராட்ட நிலைமையும் தமிழ்பேசும் மக்களை அடிமைகொள்ளும் அராஜகத்தைக் கடைப்பிடித்து ஒப்பேற்றப்படுகின்றன!இவைகளை நாம் போலித்தனமான அரசியல் கருத்துகளால் சமப்படுத்தி,அநுமதிப்பது எங்கள் மக்களுக்கான நலனாக இருக்கமுடியாது.காலம் கடந்த அரசியல் விய+கங்கள் எதுவும் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் தகமையைக் கொண்டிருக்க முடியாது.இந்தவுண்மை நமது தேசிய விடுதலைப் போராட்ட செல்நெறிய+டே நாம் படிப்பினைகளைக் கொண்டிருக்கும் இன்றைய யுத்தகால நகர்வில் வெகுவாக உணரத்தக்கவொரு படிப்பினையாகும்.எனவே நமது மக்களின் வாழ்வாதாரத் தேவைகள் இந்தவகை யுத்தங்காளால் நிறைவேற்றப்பட முடியாதென்பதும்,நமது அரசியல் உரிமைகள் வெறும் "போட்டி யுத்தங்காளால்" வென்றெடுக்கும் விடையமில்லையென்பதும் வெளிப்படையாக விமர்சிக்கப்பட வேண்டியதாகும்.அப்படி வென்றெடுக்கப்படுமென்றால் கடந்த 30 ஆண்டுகளாக நடைபெறும் இந்தத் தீராத யுத்தத்தால் நாம் அரசியல் மற்றும் சமூக வலுவைப் பெற்றிருக்கவேண்டும்.இத்தகைய கண்ணோட்டத்தில் நமது சமுதாயத்தை விழிக்கும் பட்சத்தில் அந்தச் சமுதாயமானது எந்த நிலையில் இன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டை எதிர்கொள்கிறதென்று நமக்குப் புலப்படும்.

ஒருநேரக் கஞ்சிக்கு இலங்கை அரசிடம் மண்டியிடும் இந்தத் தமிழ் இனத்தால் எந்தவொரு வலுவான போராட்டத்தையும் செய்யமுடியாது!அப்படிச் செய்யும் மக்கள் திரள் போராட்ட அணித்திரட்சியும் அவர்களிடம் இல்லை.வெறுமனவே ஒரு இராணுவ யந்திரத்தை அதனது இன அடையாளத்துடன் அது தம் மக்களின் விடுதலைக்கான "விடுதலைப் படையாக"வர்ணிக்க முடியாது.அல்லது அத்தகைய இராணுவயந்திரத்திடம் ஒடுக்குமுறைச் சிங்கள அரச இராணுவ ஜந்திரத்தை வெற்றிகொள்ளும் புரட்சிகர வேலைத் திட்டம் இருப்பதாகவும் எவரும் நம்பி ஏமாற முடியாது.புரட்சியென்பதை விட்டுவிட்டு,இன்றைய நமது போர் வாழ்சூழலுக்கு மாற்று என்பதென்ன அல்லது நாம் எங்ஙனம் எமது இந்தப் போரழிவுத் தலைவிதையை மாற்றுவதென்று சிந்தித்தாகவேண்டும்.

ஈழமா அல்லது இயல்பு வாழ்வா?

எம் மக்களிடம் இருக்கும் இன்றைய கேள்வி:

"போர் எதிற்காக?"என்பதே.

இந்தக் கேள்வி மிகவும் பலவீனப்பட்டுப்போனவொரு இனத்தின் இருத்தலுக்குரிய கேள்வியாகும்.


இதை மறுதலித்துவிட்டு எந்தக் கொம்பரும் "விடுதலை,தியாகம்"என்று தத்தமது விசுவாசத்துக்குரிய தலைவர்களுக்குக் கொம்பு சீவ முடியாது.



நமது அரசியல் முன்னெடுப்புகளை நாமே தீர்மானிக்க முடியாதவகையில் அந்நிய ஆதிக்கங்களிடம் நமது அரசியல் திட்டமிடல்களையும் அது சார்ந்த விய+கங்களையும் பறி கொடுத்துவிட்ட இந்தப் பயங்கரமான யுத்தச் சூழலில் எமது மக்களின் வருங்காலத்தோடு விளையாடும் "அதிகாரப் போட்டி அரசியல்-யுத்தம்"எந்தச் சூழலிலும் மக்களால் அங்கீரிக்கப்படுமென்று எதிர்பார்க்க முடியாது.இந்தவொரு அறுதியான சமூகச் சூழல் பற்றிய கணிப்பை உறுதிப்படுத்தும் வகையிலான சிங்கள அரசியல் நகர்வு இப்போது எமக்குள் திணிக்கும் கருத்தியல் "வாழ்வதற்கான இயல்பு நிலை"என்பதாகவும்,அதைக் குழப்பும் "புலிப் பயங்கரவாதம்"என்பதாகவும் திட்டமிட்ட வகையில் மக்களின் தேவையை அறிந்து பரப்பப்பட்டு, கருத்தியல் ஒற்றுமை ஏற்படுத்தப்படுகிறது.


இந்த நோக்கத்திலான இலங்கை அரச விய+கம் மென்மேலும் மேல் நோக்கி உந்தப்பட்டு,மக்களின் சுயவிருப்பாக மாற்றப்பட்டும் வருகிறது.இதனால் நமது மக்களின்மீது இயக்கங்கள் ஏற்படுத்தி வைத்திருந்த பலாத்தகரமான அதிகாரத்துவ மேலாண்மை மெல்ல உடைபட்டு வருவதும் கூடவே அந்தவொரு சந்தர்ப்பத்தை மக்களே மேலும் வலுப்படுத்தும் தரணத்தில் "தேசிய விடுதலைப் போரை" பிற்போக்கான வகையில் முன்னெடுத்த இயக்கவாத மாயை தகர்ந்து தவிடுபொடியாகும் தரணம் நெருங்குகிறது.இதை எதிர்பார்த்துக் காத்திருந்த வெளிப் புறச் சக்திகள் மெல்லத் தமது நலன்களை மையப்படுத்திய அரசியற் கருத்தாக்கங்களையும்,அதுசார்ந்த பொருளாதாரத் தாக்குதல்களையும் எமது மக்களின்மீது திணித்து நமது மக்களை நவீனமான முறையில் அடிமை கொள்கிறார்கள்.இத்தகையவொரு நிலையை இலங்கை இனவாத அரசு முன்னெடுக்குமென்பதை நாம் பல முறைகள் கட்டுரைகளுடாகப் பேசியுள்ளோம்.இந்தவொரு மையப் பிரச்சனையில் மக்கள் கிடந்து அல்லலுறும்போது எந்தத் தியாகமும்,தீரமும் கருத்தில் கொள்ளப்படாது போகும்.இந்தச் சூழலே இலங்தை மற்றும் அந்நியச் சக்திகளுக்கு மிக உறுதியானவொரு அரசியல் நகர்வையும்,அந்த நகர்வுக்கேற்ற வகையான கருத்தியல் வெற்றியையும் தமிழ்பேசும் மக்களுக்குள் ஏற்படுத்தியுள்ளது.இதை இனங்காணமுடியாதவொரு தரித்திரமான அரசியல் வெறுமையோடு நமது "இனவிடுதலைப் போராட்டம்"தொடர்ந்து யுத்தத்துள் மூழ்கடிக்கப்பட்டு,அதன் அரசியல் விய+கம் முற்று முழுதாக முடமாக்கப்பட்டு வருகிறது.


இந்தச் சந்தர்ப்பத்தில் மக்களின் மொத்த எண்ணவோட்டமானது ஒருகிணைந்த ஒரு அமைப்புக்கு விசுவாசமாக இருப்பதற்குச் சாத்தியமில்லை.தொடர் துன்பங்கள்,பசி,பட்டுணி,சாவு,பொருளிழப்பு,வாழ்விடங்களைவிட்டு ஒதுங்குதல்,அகதி வாழ்வு,இத்தகைய சமூகச் சீர் குலைவு மக்களிடத்தில் ஆத்மீகப் பலவீனத்தையும்,அது சார்ந்த மதிப்பீடுகளையும் வேறொரு பாணியில்(உயிர் வாழ்வதே சாத்தியமில்லாத தேசத்தில் அதைச் சாத்தியப் படுதும் அவா)உருவாக்கும்.இப்போது விடுதலை,சுதந்திரம் என்பதெல்லாம் மக்களின் வாழ்வோடு சம்பந்தப்படாத விஷயமாக மக்களே உணரத்தலைப்படும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.இதை இனம் கண்டவர்கள் எமது மக்களின் எதிரிகளே!நம்மைச் சுற்றி மதில்களை உருவாக்கிய விடுதலை இயக்கங்கள் நமது மக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து கிஞ்சித்தும் கவலை கொள்ளாது அவர்களையே ஆயுதப் பலாத்தகாரத்தால் ஒடுக்கித் தமது ஆதிகத்தை நிலைப்படுத்த முனைந்த இந்தக் கேடுகெட்ட அரசியலுக்குப் புலிகளையோ அல்லது மற்றைய இயக்கங்களையோ காரணம்காட்டிப் பேசுவதைவிட,நமது மக்களின் அரசியல் அறிவு நிலை சார்ந்து சிந்திப்பதே சாலச் சிறந்தது.எமது சமூகத்தின் உயிர்த்திருப்பே மாற்று இனத்திடம் அல்லது மாற்றார் தயவில் பொருளாதார நலன்களைக் கனவுகண்டது.இது முற்றிலும் சுய விருத்திக்கான எல்லாவகையான கதவுகளையும் இறுக மூடிவிட்டு மாற்றாரில் தங்கி வாழும் ஒரு உதவாக்கரை,கையாலாகாத இனமாக நமது மக்களை மெல்ல உருவாக்கிய சிங்கள மற்றும் அந்நியச் சக்திகள் இன்று நமது மக்களைப் படு குழியில் தள்ளிவிட்டுப் புலிகளைப் பயங்கரவாதிகளாக்கித் தமது வெற்றியை அரசியல் ரீதியாகப் பெற்று நிலைப்படுத்துகிறார்கள்.இதைத் தடுப்பதற்கு வக்கிலாத ஆயுதப் போராட்டம் எமது மக்களிடமும்,போராடும் போராளிகளிடமும் அந்நியப்பட்டுக்கொண்டே செல்கிறது.இது எந்தத் தரணத்திலும் இனியொரு கூட்டு ஒத்துழைப்பாக மாறி மக்களிடம் முனைப்புப் பெறுமென்று எவரும் பகற்கனவு காணமுடியாது.


இங்கேதாம் "ஈழம்"குறித்த கனவுகள் தகரத்தொடங்குகிறது.இத்தகைய தகர்வில் மக்களே தமது உறுதியானவொரு நிலைப்பாட்டைத் தமது வாழ்வியல் நம்பிக்கைகளுடாகச் சாதிக்கும் சமூக அபிலாசையாக இது விருத்தியாகி போருக்கு அகப் புறமாக எதிர்ப்பிடும் தரணம் தோன்றுகிறது.இது வலியது!இதைத் தடுத்து மக்களின்மீது மீளவுமொரு போர்ச் சுமையைத் திணிக்கும் இயக்கவாதத் தந்திரங்கள் நிலைத்த வெற்றியை அடைவதற்கில்லை.இதுவே ஈழக் கோசத்தின் பொருள்வயப்பட்ட தோல்வியாகவும் கருத்தியல் தளத்திலான தகர்வாகவும் தமிழ்ச் சமுதாயத்தின் உட்புறத்தே பாரிய வெறுப்பாகவும் நிலவிக்கொண்டிருக்கிறது.இதுதாம் இன்றைய உண்மையான நிலைவரம்.இதைமீறித் தமிழ்பேசும் மக்கள் அணித்திரட்சியடைந்து ஒரு "வெகுஜன"எழிச்சியை செய்வதற்கில்லை.காலம் கடந்த ஞானத்தால் எந்தப்பலனுமில்லை.மக்களை மடையர்களாக்கிய மந்தைத்தனமான போராட்ட முறைமகள் அந்த மக்களாலேயே தோற்கடிக்கப்படும் தரணம் நெருங்கி வருவதைக்கூட அறிய முடியாத வகையில்"ஈழக்கனவு"ரீல்விட்டுக் கொண்டிருபதுதாம் இன்றைய பெரிய அவலம்.


ப.வி.ஸ்ரீரங்கன்
05.11.2006