04232021வெ
Last updateசெ, 20 ஏப் 2021 6pm

அவளும் அரசியலும், பின் நானும் கட்டிலும்

இது கோடைகாலம். நேற்று அவளோடு கண்ட கலகத்தில் உருக்குலைந்து படுக்கையில் புரண்டபோது,

சில ஞாபகங்கள் நெஞ்சை முட்டுகின்றன.

 

அக்கம் பக்கம் பார்த்துப் பேசு தம்பி எண்டு என்ர அம்மா அடிக்கடி சொல்லும்.

 

அப்படிப்பட்ட தமிழ்ச் சமூகத்துள் வாழக் கொடுத்த உடல்களுக்கு- எல்லோருக்கும் ஒரு பெயர் இருப்பதுபோல எனது உடலுக்குச் சிறியபாலன் பொருத்தமாக இருக்குமெண்டு என்ர தாத்தா சொன்னவராம்.அதனால தாத்தாவின் அச்சொட்டான பக்திமார்க்கத்தில் மரியாளின் கையில் தவழ்ந்துவரும் சிறியபாலனை என்னில் கண்டபோது நான் தாத்தாவைத் தின்பதற்காக வந்தவன் எண்டு எங்கட பாட்டி சொல்லிச் சொல்லி அழுதுவடிந்தாவாம் பின்னாளில்.

 

 

இப்படியொரு நினைவைக் காவி வந்த இந்தக் கோடைகாலத்தில் இன்னுஞ் சில நினைவுகளும் கூட வந்தபடியிருந்தன.அவை பெரும்பாலும் உடல் கண்டு உருகும், மனமுருக்கி நோயின் அறிகுறியோடு அடைப்பகற்றி வடிந்தொழுகும் "அந்த இந்தா"ப+ச்சி பார்க்கும் ஒரு பருவத்தின் பக்குவமற்ற பொழுதுகள்.இப்படிக் கூடவே வந்து தொலைகின்றன.

எனினும் இது கோடைகாலம்தானே?

 

அப்ப!

அப்ப என்ன அப்ப?

இப்ப மாதிரியல்லவா இருக்கு!-அந்த அப்ப.

இனிப்புக்கு ஒருக்காய் பிடி.

எள்ளுருண்டைக்கு ஒருக்காய் பிடி.

பேரீச்சம் பழத்துக்கு ஒருக்கா கொஞ்சவிடு.

பார்லிச் சோடாவுக்கு ஒருக்காய் ஆட்டு.

 

இப்படிச் சில்லறைத்தனமாகப் இலுப்பைக்கூடல் சந்தி கடைக்காரன்-மாமா முறை வேணும், என்னிடம் இனிப்புகள் தந்து தன்னைத் தணித்தபோது எனக்குப் பத்து வயது.மாமாவுக்கு தொடையுக்க கட்டி கண்டு சிதள் பிடித்துவிட்டது! இறுக்கி ஆட்டிவிடு குஞ்சு.சிதள் வெளியில வர. நானும் சிதள் எடுத்துவிட்ட காலத்தை அப்போவெல்லாம் நினைத்தே பார்ப்பதில்லை. அதுவொரு அவஸ்த்தையான காலம். மனதில் பெரிய பெரிய கனவெல்லாம் வரும். அம்புலிமாமாப் புத்தகத்தில வருகிறமாதிரிப் பெரிய உருவ மனிதர்கள் கனவினில் வருவதுண்டு. சின்ன வயதில் எனக்கு அம்புலிமாமாப் புத்தகம்தாம் பிடிக்கும். பாடப் புத்தகத்தைவிட இது அழகாக இருக்கும். நல்ல கற்பனைகளைத் தந்து கொண்டிருந்தது. அல்லது நான் மாமாவுக்குச் சிதள் எடுத்துவிட்டதை மறக்க முனைந்தேன், அதுள்.

 

"அக்கம் பக்கம் பார்த்துப் பேசு தம்பி"எண்டது என்னெண்டு இப்பவும் விளங்கவில்லை. அதனால இந்த வகையறாக்களையும் சொல்வதில் கூச்சம் இருப்பதாகக்கூடத் தெரியவில்லை.

 

கோடை வெயிற்காலமென்பதால் அப்பப்ப பியருக்கு பியர் குடலை நிறைப்பதில் ஏவறை முன்னுக்கு வந்து தொந்தரவு தந்து கொண்டிருக்கு. எல்லாம் அவள் போட்ட அல்லது நான் போட்ட தர்க்கத்தால் வந்த வினைதாம்.

 

அடிவயிற்றில் கிடப்பதைக்கூடக் கண்டறிந்தால் அதை வெளியில கொட்டுவது எனக்குப் பிரச்சனையாக இருப்பதில்லை. என்னத்தையோ பறி கொடுத்தமாதிரிச் சிலர் பேயடித்ததுபோல இருப்பது எனக்குப் பிடிப்பதில்லை, அல்லது சோகத்தனமான பாடல்களைக் கேட்பதும் எனக்குப் பிடிக்காது. எப்பவுமே துள்ளல் இசைதாம். அதுவும் பெண்ணுடலைச் சுத்தியே பாடல் கட்டினால் அதைப் பல மணி நேரம் கேட்டபடி இலயிப்பேன்.

 

இப்படியொரு நினைவோடு கண்சிமிட்டிக் கொண்டிருந்த மனதுக்கு என்னவோ அவளால் நடந்துவிட்டது.

மனதுக்குள் ஒருவித ஏமாற்றம் நிலவியது.அப்படி என்னதாம் இருக்குமென்று அறிவுக்குப் புலப்படவில்லை.

 

சிறியபாலனின் சிறு பிராயத்துக்குள் கிடக்கும் "மாமாவின் கடை" ஞபாகமாக இருக்குமாவெண்டு பார்த்தால் அது நிச்சியமாக இருக்காது. ஊரைப் பார்த்தாக வேண்டுமென்றால் அதுவும் மனதுக்கு ஏமாற்றம்தான். எங்கோவோ வெளி நாட்டிலிருந்து மட்டக்களப்புக்கு மனைவி பிள்ளையளப் பார்க்கப்போன ஜாணுக்கு என்ன நடந்தது? அதுதாம் மனதினது ஏமாற்றத்துக்குக் காரணமோ? அவளோடு இதைத்தானே விவாதித்துப் பிரிந்தோம்!...ச்சீ...அவளை மிஸ் பண்ணி...

 

எண்டாலும்...மண்டையில போட்டாங்களே! ஒரே குழப்பமாகக்கிடக்கு.இவங்கள் நித்திரைபோலக் கிடப்பாங்கள், ஆனால் நசுக்கிடாமல் எல்லாத்தையும் மோப்பம் பிடித்தபடி...இதை எதிரிகளிடம் காட்டாமல் அப்பாவிகளிடம் காட்டும் இந்தக் கொலைக் கும்பலிடம் என்னத்தைக் காணமுடியும்?

 

மனிதர்களைக் கொல்லுவதில் விடுதலை வந்துவிடுமெண்டு எந்தப் புராணத்தில் இருக்கு?

 

எதெண்டாலும் நம்மட நாட்டைப் பார்க்காதிருக்க முடியுமோ?

 

நல்லதோ கெட்டதோ அதுதானே எங்கட மனதுக்குள் தொங்கிக்கிடக்கும் அழகான சிறுபிராயம்.

 

என்னதான் மாமாவுக்குச் சிதளெடுத்த காலம் மங்கலாகத் தலைகாட்டினாலும், மாதா கோயில் குருசு மரமும், கொடி மரமும் மறக்கமுடியாதவொரு நினைவுச் சின்னங்களாகக்கிடக்கு. இருந்திருந்து எட்டு மூலைப் பட்டத்தின்ர உச்சப் பறப்பிலும், விண்கூவலிலும் ஒரு மனத்துடிப்பு-மகிழ்வு இருப்பதும் இப்போது ஏமாற்றத்தைத் தந்தபடிதாம். ஜாணுக்கும் இப்பிடித்தாம் இருந்திருக்கும்...

 

ஆனால் மனதினது சோகத்துக்கு வேறொரு காரணமும் இருக்கும்போல. அவள்தாம்!அவள்மீதான வாக்குவாதமும், அவளை அவள் சுயமே புதைத்துக் கொண்டிருப்பதால் எதைச் சொன்னாலும் நாலுகால் பாய்ச்சலில் எம்பிக் குதிக்கிறாள்! யாரூ என்ன சொன்னாலும் அதை நேரடியாக விளங்குவதில் ரொம்பக் கெட்டிக்காரி. இவளை நினைத்தபோது இந்தக் கோடைகால இதமான கால நிலைகூடப் பனிக்காலக் கொடுமையாகி விடுகிறது.

 

நேற்றுக்கூட இந்த நண்பிக்கு மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஜாண் பற்றிய என் கருத்தாடலில் மனது புண்ணாகிவிட்டதுபோல ஒரு மனக் கிலேசம் பிடித்திருந்தது.

 

அரசியல் மாற்றுக் கருத்துக்களுக்காக ஒருவரை மண்டையில் போடும் அரசியல் எப்படி ஜனநாயத் தன்மையானது எண்டதுதாம் எனது கேள்வி. அவளுக்கு ஜனநாயகமென்பது தமிழர்களுக்காகப் போரடுவதுதாம் எண்ட கதையாகவும்,அதற்கு எதிராகக் கருத்துச் சொல்வது சரியில்லை எண்டமாதிரி.

 

"ஏனப்பா உமக்கு ஒவ்வொரு நாளும் சாகிற சனமெல்லாம் துரோகியெண்ட நினைப்போ?"இப்படி அவளைப் புடுங்கியெடுத்தேன்.

 

"நீர் சொல்லுறது சரியில்லை. பாலா அண்ணா இந்தியப் பிரதமர் இராஜீவ் கொலையைத் தவறென்று சொல்லுறார். தங்களை மன்னிக்க வேறு சொல்லுறார்.அவர்கள் ஜனநாயகத்தை இப்ப மதிக்கினம்." அவள் விழிகளில் நம்பிக்கையைவிட ஒருவித எதிர்பார்ப்பே இருந்தது.

 

"ம்ம்ம்ம்........ அவர்கள், தாங்கள் இராஜீவைக் கொல்லவே இல்லை எண்டு இதுவரை சொன்னவர்கள். இப்ப பாலா அண்ணா ஒத்துக் கொண்டு அப்புறுவர் ஆகிறாரே! அதோட இது ஜனநாயமெண்டுற போதுதானே குண்டு வெடிப்பும், ஜாண்1 கொலையும் நடக்குது..."நான் இழுத்துக் கொண்டு போனபோது அவளுக்கு மேலும் விவாதிக்கவிருப்பமில்லை.

 

"தேசியத்துக் எதிரான கருத்துக்கள் எங்கட விடுதலைக்கு உதவாது"எண்டாள்.

 

"அதென்ன தேசியம், விடுதலை? கொஞ்சம் சொல்லேன்!" எனக்கு அவள் குறித்து நிறைய மதிப்புண்டு. எனினும் அவள் அதைத் தப்பாகவே எடுத்துக் கொண்டு, தன்மீது காதலென்றும்,கல்யாணத்துக்குப் பின்புதாம் எல்லாம் என்பாள். நானோ "நல்லதொரு நட்போடு பின் கூடுதலும் குலைதலுமே நோக்கு" என்ற பேர்வழி. அவள் மிக இளமையானவள், என்னைப் போலவே. எமெக்கென்ன முப்பதைக்கடக்காத வயதில் என்ன கல்யாணம் வேண்டிக்கிடக்கு? அம்மா அப்பா பார்த்துச் செய்கிறபோது அது நடக்கட்டும்.எண்டமாதிரித்தாம் எனது நோக்கு.

 

"உமக்கு என்னைக் கிண்டலடிப்பதே தொழிலாச்சு! இனியும் உம்மோட கதைச்சால் என்னை முட்டாளாக்கிப் போடுவீர்" எண்டபடி வெடுக்கெனப் பாய்ந்தாள். நல்லதொரு பொழுதில் அவளை இழக்கவிரும்பவில்லை. நாங்கள் மதிய நேர உணவை ஒரு சைனா ரெஸ்ரோரன்டில் உண்பதாகத் திட்டமிட்டே கூடியிருந்தோம். எல்லாம் நாசமாய்ப் போச்சு. அரசியல் கதைத்து முகத்தைத் தொலைத்துப் பிரிந்தோம். அந்தப் பொழுது வீணாகப் போனது, அவளைப் போலவே.

 

எதெண்டாலும் அவாவுக்கு இப்படிச் சரியான அவசரம் கூடாது.

 

எதற்கெடுத்தாலும் இந்தா தோளில சுமக்கிறன் எண்டபடி எல்லாவற்றையும் தன்னைச் சுற்றியே பின்னப்பட்டதாக அவள் எண்ணி விடுகிறாள். நானும் என்பாட்டுக்கு அவளை நல்லாபடியாகச் சபித்திருக்கிறேன்,"ஏன் நீர் இப்படி அவசரக் குடுக்கைமாதிரி அலம்பித் தள்ளுகிறீர்?"சில சமயங்களில் எங்கட சம்பாஷணைகள் இப்படித்தாம் ஆரம்பமாகும். அவள் சுயமுனைப்புடையவள் எண்டு நான் எண்ணுவதாலும், அவள் பற்றிய எனது கணிப்பு -எனக்குப்பிடித்த பிறேமொன்றைச் செய்து அவளை அதற்குள் திணித்தேன். இந்தத் திணிப்போடு அவள் வருகிறபோதெல்லாம் நான் ரொம்ப நம்பகத் தன்மையற்றபடியேதாம் கதைத்து வந்துள்ளோம்.

 

இந்தக் கட்டிலை விட்டெழும்பும் தெம்பு எனக்கில்லை.

அவள் குறித்த கனவுகளோடு ஏமாற்றம் நெஞ்சுக்குள் புகைகிறது!

 

அம்மா தேத்தண்ணியோடு என்ர அறைக்கு வந்து என்னைப் பரிவோடு உச்சிமோந்து செல்கிறாள். அவளுக்கு என்ர வயது பன்னிரெண்டு என்ற நினைப்பு. அப்பனுக்கோ எனக்கும் வயசாகிற பருவமும் விளங்கிறதில்லை.அடுத்த வருடம் முப்பதைக் கூட்டி வந்திரும்.தங்கச்சிக்கு மாப்பிளை பார்க்கிற அம்மாவுக்கு என்ர நினைப்பு வருகிறதே இல்லை.

 

அவள் வருவாளா?

அரசியல் பேசுவாளா? என்ர நோக்கை நான் அடைவேனா?

ஒண்டும் சரியில்லை.

 

அவளை வன்னிக்குக் கூட்டிக் கொண்டுபோய் நல்ல மழையில் இறுகப்பிடித்து நனைந்து புரண்டெழுவேண்டும். நம்ம காரியம் முடிய அவளை அங்கேயே தொலைத்துவிட்டு நான் மட்டும் புகல் நாடு மீளவேண்டும். ஆத்திரம் மனதைக் குடைகிறது.

 

"அக்கம் பக்கம் பார்த்துப் பேசு தம்பி" எண்டு என்ர அம்மா அடிக்கடி சொல்லுவா, எண்டாலும் அவளால் அக்கமும் தெரியவில்லைப் பக்கமும் தெரியுதில்லை.

அவள்...

 

(1: ஜாண்,ரீ.பீ.சீ வானொலியில் புலி எதிர்ப்புக் கருத்து முன்வைப்பவர். சுவிசிலிருந்து மட்டக்களப்புக்குச் சென்று, மனைவி பிள்ளைகளோடு மகிழ்வாக இருந்தபோது, ஆயுத தாரிகளால் கடந்த சில நாட்களுக்குமுன் சுட்டுக் கொல்ப்பட்டார்-மட்டக்களப்பில்.)

ப.வி.ஸ்ரீரங்கன்

27.06.06

 


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்