05192022வி
Last updateபு, 02 மார் 2022 7pm

அலிகள்

''அலிகளின் பதிலடி" என்ற தலைப்பில், கட்டாயக் காயடிப்பு பற்றிய கட்டுரையில் ஆணுறுப்பை வெட்டி, பின் அவர்களை ஏலத்துக்கு விடுகின்றனர். ஒருமுறை கையைத் தட்டினால் 1,000 ரூபாய் என்ற வகையில் ஏலம் போகும். உத்திரப்பிரதேசத்திலுள்ள ஈடா மாகாணத்தில் தான் இவை அரங்கேறுகின்றது. 15,000 அலிகள் உள்ள தில்லியில் இதற்கு எதிராகப் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த நடவடிக்கைகளை எதிர்ப்போரை மாஃபியாக் கும்பல் பொலிஸ் கூட்டுடன் சேர்த்து கொன்று போட்டுவிடுகின்றனர். திருமணம் செய்தோர், செய்யாதோர் என வருடாவருடம் 1,000 பேரைக் கட்டாய அலிகளாக உருவாக்கி ஏலம் விடுகின்றனர். இவர்களைப் பாலியல் வக்கிரத்துக்கும், திருடவும் பலாத்காரமாக ஈடுபடுத்தப்படுகின்றனர். (6.5.1994)34

 


''புதிரான சங்கமம்" என்ற தலைப்பில் இந்தியா டுடே அலிகள் ஆணையும், பெண்ணையும் சிலவேளைகளில் இருவரையும் திருமணம் செய்கின்றனர் என்று எழுதியுள்ளது.34 (3.12.1997)
ஆணாதிக்க வக்கிரம் எந்தளவுக்கு விவகாரமாகின்றதோ, அந்தளவுக்குப் பாலியல் ரீதியில் அலிகள் மிக மோசமாகக் கேவலப்படுத்தப்படுகின்றனர். அலிகளின் வாழ்க்கையைக் கீழ்த்தரமாகக் காணும் எமது சமூகத்தில் ஆணாதிக்க வக்கிரத்தைத் தீர்ப்பதற்கு மட்டும் பயன்படும் ஒரு மனித ஜென்மமாக வாழ்கின்றனர். இதற்கு வெளியில் அவர்களின் வாழ்க்கையை அணுகுவது என்பது இந்த ஆணாதிக்கத்தால் ஏற்றுக் கொள்ளமுடியாத பண்பாடாகும். ஆணாதிக்கப் பாலியல் வக்கிரத்தைப் பெண்களிடம் முழுமையாகத் தீர்க்க முடியாதவர்கள் அலிகள்மீது தமது வக்கிரத்தைத் தீர்க்கின்றனர். இந்த ஆணாதிக்கப் பாலியல் சந்தை மவுசு கட்டாயமான அலிகளை உருவாக்கின்றது. இந்தியாவில் முடமாக்கி கட்டாயப் பிச்சைக்காகக் கூலிக்கு மாரடிக்கும் குழந்தைகள் போல் அலிகள் மாஃபியா கும்பலினால் உற்பத்திச் செய்யப்படுகின்றனர். இந்தக் குறித்த நிகழ்விற்கு எதிராகப் போராடுவது என்பது ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தை உள்ளடக்கியது. அலிகள் பற்றிய ஆணாதிக்கப் பார்வை, ஆணாதிக்க வக்கிரம் தகர்க்கப்படாத போராட்டம் கட்டாயமான அலிமுறையை மட்டும் தடுக்கும். ஆனால் அலியை உற்பத்தி செய்யும் ஆணாதிக்கக் கண்ணோட்டமும், அலியைப் பாலியல் தேவைக்காக மட்டும் பயன்படுத்தும் ஆணாதிக்கக் கண்ணோட்டமும் மாறிவிடாது. மாறாகத் தன்னை வேறொன்றாகப் புனரமைக்கும்.


பி.இரயாகரன் - சமர்