இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டில் "மடிவது மானுடம் என்ற தலைப்பில் சேலம் மாவட்டத்திலுள்ள சில பகுதிகள் ஆய்வுக்குள்ளானது. 1,250 குடும்பங்களை ஆராய்ந்த போது 641 குடும்பங்கள் (51 சதவீதம்) பெண் சிசுக் கொலையைச் செய்துள்ளது தெரிய வந்தது. (6.10.1992)34 "தொடரும் தொட்டில் கொலைகள் என்ற தலைப்பில் சேலம் மாவட்டத்தின் பெண் பிறப்பு வீதத்தை ஆய்வு செய்த "மெட்ராஸ் ஸ்கூல் சோஷியல் வொர்க் அறிக்கையின் படி 1991-இல், 1,000 ஆண்களுக்குப் பெண்கள் எண்ணிக்கை 900 பேரில் இருந்து 952 பேர் வரை இருந்தது. அதே எண்ணிக்கை 1995-இல், 1,000 ஆண்களுக்குப் பெண்கள் எண்ணிக்கை 764 பேரில் இருந்து 575 ஆகப் பெண்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது. (6.8.1995)34


சிசுக்கொலைகள் பொதுவாக ஏழைப் பெண்களுடைய அவலத்தின் விளைவாகும். கருஅழிப்பு என்பது பூர்சுவா வர்க்கத்தின் வழிமுறையாக இருக்க, சிசுக்கொலை அதற்குக் கீழ்ப்பட்ட வர்க்கத்தின் வடிவமாக உள்ளது. அறிவியல் கண்டுபிடிப்புகள் பெண்; உடலின் உள ரீதியான பாதுகாப்புக்கும், வளர்ச்சிக்கும் பயன்படுத்துவதற்குப் பதில் அதுவே ஆணாதிக்கத்தின் விளைவுகளை அதற்குள் தீர்த்து மேலும் ஆணாதிக்கமயமாதலில் இவைகள் தீர்வாகின்றன.


பெண் சமுதாயத்தில் சந்திக்கும் கொடூரமான, பாதகமான வாழ்க்கைமுறை, பெற்றெடுத்த பெற்றோர்களையே கண்ணீரி;ல் சித்திரவதை செய்கின்றது. இந்தச் சித்திரவதையைத் தாமும், வளர்ந்த பின் அப்பெண்ணும் சந்திப்பதை விட கருவில் அல்லது பிறந்தபின் கொன்று விடுவது அவர்களின் தீர்வாக உள்ளது. இந்த நிலைமைக்கு இந்த ஆணாதிக்கச் சமூகமே காரணமாகும். இதைப் பெற்றோருக்குக் கல்வியைப் புகட்டுவதன் மூலம் தடுக்கமுடியாது. ஏனெனில் கல்வி அறிவு பெற்ற பெற்றோர்கள் கருவில் வைத்தே நாகரிகமாகக் கொல்லும் பூர்சுவா கண்ணோட்டத்தைக் கொண்டு இருப்பது வெள்ளிடைமலை. சமுதாயத்தின் ஆணாதிக்கத்தை ஒழித்துக் கட்டாதவரை பெண் குழந்தைகளின் அவலம் மாறிவரும் சமூகப் பொருளதார நிலைமைக்கு உட்பட்டே தன்னை இசைவாக்கத்துக்குள்ளாகி நீடிக்கும். இதை உலகின் பல பிரதேசங்களில் காணமுடியும். சிசுக்கொலைகள் இன்று போல் அன்றும் பல வடிவில் பல்வேறு காரணத்துக்காக நடந்துள்ளது. திருகுர்ஆனில் இருந்து பார்ப்போம்.


அத் 6.137 இல், "இவ்வாறே இணைவைப்பாளர்களின் அநேகருக்குத் தங்கள் குழந்தைகளைக் (தாங்களே) கொலை செய்வதை அவர்களுடைய இணைத்தெய்வங்கள் அழகாக்கினார்கள். இந்தக் குழந்தைகள் எதற்காக பலியிடப்பட்டது? 1. எவரும் தம் மருமகனாகி விடக் கூடாது என்ற எண்ணத்தில் பெண்ணைக் கொல்வது அல்லது குலப்போர்களில் எதிரியின் கையில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக அல்லது வேறு காரணத்தால் இழிவு ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக. 2. குழந்தையைக் கடவுளின் திருப்திக்காகப் பலியிடுவது.


3. பல்வேறு மார்க்கத்தின் பேரிலும், விளக்கத்தின் பெயரிலும் கொன்றனர்.68 அன்று மேலே கூறியுள்ளது போல் சமுதாயத்தினுடைய நன்மையின் பெயரிலும், பாதுகாப்பின் பெயரிலும் சிறுவர் சிறுமிகள் பல காரணங்களைக் கொண்டு கொல்வது நடைமுறையாக இருந்தது. இன்று பெண் உரிமையின் பெயரிலும், ஆணாதிக்கக் கொடுமைக்கான தீர்வின் பெயரிலும், ஆணாதிக்கத் தேவையின் பெயரிலும், கருவிலும், பிறந்த பின் குழந்தையிலும் கொல்லும் வழக்கம் இன்று அதே போன்ற காரணத்தைக் கொண்டே நிகழ்த்தப்பட்டது. நிகழ்த்தப்படுகின்றது.


தனக்கு ஒரு மருமகன் வந்து விடக்கூடாது என்பதற்காகக் கொல்வது என்பது சொத்துரிமையின் பாதுகாப்பு சார்ந்து நடத்தப்பட்டது. ஆணாதிக்கம் வளர்ச்சி பெற்று ஆண் சார்ந்து சொத்து செல்லத் தொடங்கிய போது பெண் குழந்தையின் பிறப்பும், ஆணின் வருகை (மருமகன்) அந்தக் குடும்பத்தின் சொத்து கைமாறுவதைக் கோடிட்டுக் காட்டியது. இதனால் அதைத் தடுக்க பெண் குழந்தை கொல்லப்பட்டது.


எதிரியிடம் பிடிபடும் பெண்ணால் குல அடையாளம் நாசப்படுத்தப்படும் என்ற காரணத்துக்காகப் பெண் குழந்தைகளைக் கொன்றனர். அண்மையில் செர்பிய, போஸ்னியப் பெண்களின் இனத்தூய்மையைச் சிதைக்கக் கற்பழித்து, கருவை வளரவிட்டு, பெற்றுப் போட செய்த பிறகே அப்பெண்களை விடுவித்தனர். இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரின் இனத் தூய்மை வாதமும் இதன் பாற்பட்டதே. இது வரலாற்றில் பல போர்களில் நடந்த போதும் பெண்ணைக் கொல்வது அல்லது பிறந்த குழந்தையைக் கொல்வது என்ற பல வடிவங்களை இந்த ஆணாதிக்கச் சமூகம் கையாண்டு பெண்ணினத்தைக் கொன்றொழிக்கின்றது.


பெண் வீட்டை நோக்கி ஆண் வருவதன் மூலம் சொத்தைப் பெண்வழியில் (சொத்து பெண் வழியில் பெண் குலத்துக்குச் சேர்ந்து இருந்தது.) மருமகனுக்கு முழுமையாகக் கைமாற்றுவதில் இருந்து தப்பிக்க (ஆண்வழிச் சமூகம் உருவாகிக் கொண்டிருந்தது.) சொத்துரிமையைக் கைப்பற்றிக் கொண்டிருந்த பெண்ணின் தந்தை அல்லது ஆண் சகோதரர்கள் மூலம் கொல்லப்பட்ட பெண் குழந்தைகளைப் பின்னால் சமூக வளர்ச்சியால் நிறுத்தி, பெண்ணை ஆண் வீட்டுக்கு அனுப்பிவிடுவது சிறப்பானதாக இருந்தது. முன்பு ஆண் சீதனத்துடன் (இங்கு பெண்ணின் தந்தை வரும் ஆணிடம் (மருமகனிடம்) பெண்ணைக் கொடுத்து சொத்துரிமையை வாங்குவது) பெண் வீட்டுக்குச் செல்லும் முறையை மாற்றி, பெண் ஆண்வீட்டை நோக்கி செல்வதன் ஊடாகப் பெண் சீதனம் கொடுப்பது என்ற புதிய முறை புகுத்தப்பட்டது. ஆனால் இன்று இதன் இருகூறுகளும் பலவிதமான மாற்றத்துடன் பல பிரிவுகளை உள்ளடக்கி இன்று காணப்படுகின்றது. இது நீண்ட பெண்ணாதிக்கச் சமூகத்தில் இருந்து ஆணாதிக்கச் சமூகம் தோன்றி வளர்ந்த காலத்தில் ஏற்பட்ட படிமுறையான வளர்ச்சியில் சிறுக சிறுக ஏற்பட்ட மாற்றங்களே.


குழந்தைப் பலியீட்டையொட்டி மேலும் பல தகவல்களை ஆதாரமாகச் சுருக்கமாகப் பார்ப்போம். பசுபிக் பிரதேசத்திலுள்ள மலேகியூலாவில், ஒரு பெண்ணுக்குப் பிறக்கும் ஆண் குழந்தை பலியிடப்பட்டது. குழந்தை பிறந்த பின் இன்று நடக்கும் பொய்ச் சண்டைகளுக்குப் பின் ஆண் குழந்தைக்குப் பதில் பன்றிகளைப் பலிகொடுக்கும் போது ~ஆண்களை உருவாக்கவே|83 இப்பலி நடத்தப்படுகின்றது என்று கூறப்பட்டது. இப்பலி பல கட்டமாகப் பல உரிமையின் பெயரில் நிகழ்த்தப்படுவதுடன், கணவன் கொடுக்கும் பலி மனைவியின் சகோதரனுக்காக இருக்கின்றது. இங்கு தந்தையின் பலிக்கான பெயர் ~மூத்தமகன்|83 என்றே அழைக்கப்படுகின்றது. தாய்மாமன் மகனுக்குச் செய்த வஞ்சகத்தால் தாய்மாமனை மூத்தமகனின் ஆவி பாதுகாக்க இது நிகழ்த்தப்பட்டது. இது தாய்வழிச் சமூகத்தில் இருந்து தந்தை வழிச் சமூகம் தோன்றிய போது ஏற்பட்ட துரோகத்தை ஈடுசெய்ய மூத்தமகனைப் பலியிடும் சடங்கு வழக்கில் இருந்துள்ளது. தாய்வழிச் சமூகத்தில் இருந்து தந்தைவழிச் சமூகம் தோன்றிய போது ஏற்பட்ட முரண்பாட்டில் தாய் மாமனுக்குக் கொடுத்த வம்ச உரிமையைச் சில பிரதேசத்தில் ~பிள்ளையைப் பாகம் பிரித்தல்|6 என்று அழைக்கப்படுகின்றது. தந்தைவழிச் சமூகம் தோற்றம் பெற்ற போது தாய்வழிச் சமூக முரண்பாடுகள் பலிகள் மூலம் இட்டு நிரப்பப்பட்டது. இதன் மூலம் பூதங்கள், தேவதைகள் தோற்றத்தை உருவாக்கியது. இதன் போது பரிசுகளைக் கொடுத்துப் பெண்ணை அடைவது, பெறுவது என்று தொடங்கி தேவதைக்கான பூசைகள் என பல வடிவங்கள் உருவானது. இது இன்று பன்றி, ஆடு, மாடு என மாற்றாகப் பலி கொடுக்கப்படுகின்றது. இன்று மிருகப்பலி கொடுப்பு நீடிக்கும் வடிவங்கள் பொதுவாகக் குழந்தை பலியிட்டதற்கு மாற்றாக வந்த வடிவங்களாக உள்ளது.


கார்த்தேஜ் நகர மக்களை அகதொகிஸ்ஸினி தோற்கடித்த போது பால்தேவதையின் கோபமே காரணம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் உயர்ந்த குடும்பத்தில் இருந்து இருநூறு குழந்தைகள் இடுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிள்ளையற்றவர்கள் ஏழைகளிடம் பணம் கொடுத்து வாங்கி பலி கொடுத்தனர். இக்குழந்தைகளைப் பலிகொடுக்கப் பெற்றோர்கள் சமுதாய நலன் என்ற பெயரில் 500 குழந்தைகளைப் பலிகொடுத்தனர். தேவதையின் கையில் குழந்தையை வைத்து ஒன்றன் பின் ஒன்றாக நெருப்புக்குள் உருட்டிவிட்டுப் பலியிடப்பட்டனர். அப்போது குழந்தையின் கதறலைக் கேட்பதைத் தடுக்க இசை முழக்கம் உறுமியது. அதாவது சுரண்டலின் சூறையாடலால் ஏற்படும் மனித அவலத்தை மூடிமறைக்க இசையும், மற்ற கலைகளும் என்ன பாத்திரத்தை ஆற்றுகின்றதோ அதையே அன்று பலியீட்டின் கொடூரத்தை மறைக்க இசை முழக்கம் உதவியது. அப்போது பெண் ஒரு சொட்டுக் கண்ணீரையோ, துயரத்தையோ வெளிப்படுத்தினால் பலி வெற்றிபெறாது என்ற நம்பிக்கை புகுத்தப்பட்டது.


500 வருடத்திற்கு முன் மெக்ஸிகோவில் நடைபெற்ற யாகத்தில் பலி கொடுக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை ~70,000|83 ஆகும். இதற்காக இரண்டு மைல் நீளத்திற்குப் பலிகொடுக்கும் குழந்தைகள் நிறுத்தப்பட்டனர்.


இன்று கருஅழிப்பு, சிசுக்கொலை, மிருகப்பலி எப்படி நாகரிகச் சமுதாயத்தில் காட்டுமிராண்டித்தனமாக உள்ளதோ, அதுவே அன்று சமுதாயத்தின் நலனுக்காகக் கொடுக்கப்பட்டது. இதை இன்று பெண் உரிமையின் ஊடாக ஆணாதிக்கத்துக்கு எதிராக நியாயப்படுத்தும் அரசியல் கோட்பாட்டில் ஆணாதிக்கம் புளுத்துப்போயுள்ளது.


மனித வரலாற்றில் உலகின் பல பாகங்களில் உருவான தேவதைகளை நோக்கி குழந்தைகளைப் பலிகொடுத்த ஆணாதிக்கம், பெண்களின் பாலியல் உணர்ச்சியை நலமடித்தது போல் பெண்ணினுடைய தாய்மை பண்பையும் நலமடித்தது. தாய்மையின் பண்பு மனிதத் தன்மையில் மிகவும் சிறப்பான உட்கூறாகும். உயிரியல் விதிகளில், சமூக உணர்வுகளினுடைய விசேடமாக மனித உணர்வுகளில் தாய்மை என்பது சமூகத் தன்மையை உயர்வாகக் கொண்ட நிலையாகும். தாய்மையும் அதன் பின்னான குழந்தை வளர்ப்பிலும் பெண் என்ற தாய் தன் உயிரைவிட குழந்தையின் உயிருக்காகப் போராடி மடிவது அதன் உயர்வான உணர்வாகும். பெரியோரின் வாழ்வைவிட குழந்தையின் வாழ்வுக்கு அர்ப்பணிக்கும் பண்பு சமூகத்தன்மையின் மிக உயர்ந்த பண்பாகும். இந்தக் குழந்தை - தாய்க்கிடையில் நீடிக்கும் உறவு தனிமனித வாதத்துக்கு எதிரான சமூகத்தன்மை வாய்ந்தவை. இதனால்தான் ஏகாதிபத்தியத் தனிச்சொத்துரிமையில் தனிவாதத்தைச் (பின்நவீனத்துவ வழியில் பெரும் கோட்பாட்டுக்கு எதிரான சிறுகோட்பாடு) சமூகக் கூட்டுக்கு எதிராக நிலைநாட்ட பெண் உடல் சார்ந்து குழந்தை மீதான ஆணாதிக்கச் சிந்தனையின் வடிவமான பெண்ணின் உடல் சார்ந்த கருஅழிப்பை வேகமாக ஏற்றுச் சட்டமூலத்தைக் கொடுக்கின்றது. தாய்க்கும், குழந்தைக்கும் இடையில் ஏற்படும் சமூகப் பிளவு எவ்வளவுக்கு எவ்வளவு அகலமாகின்றதோ அந்தளவுக்குப் பெண்ணிடம் நீடிக்கும் சமூகத்தன்மையைச் சிதைப்பது உலகமயமாதல் பாதுகாப்பின் அங்கமான ஓர் ஆயுதமாகும். இந்த ஆயுதத்தைக் கோட்பாட்டு மயமாக்கிவிட்டால் சமூகச் சிந்தனைத்தளம் வறண்டு வெடிப்புகளின் பாலைவனமாகி விடுமல்லவா? இதன் மூலம் ஆணாதிக்கத்தையும் சுரண்டல் அமைப்பையும் சிதைவின்றி நீடித்து பாதுகாத்து சூறையாட முடியுமல்லவா?


உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்ட போது எல்லாம் மனிதனும் தன் வேட்டை நாய்க்குத் தமது வயதுபோன பெற்றோரைக் கொன்று உணவளித்ததைச் சார்லஸ் டார்வின் தனது நேரடி ஆராய்ச்சிகளில் உறுதி செய்தார்.


"நாய்க்கு மனிதனைத் தீனியாக்குகின்றீர்களே ஏன்? என்று டார்வின் கேட்ட போது, "நாய்கள் வேட்டைக்குப் பயன்படும். கிழவிகள் பயன்பட மாட்டார்கள் (15-1.4)54 என்று பதிலளித்த போது பலியீட்டின் தன்மையும், விளக்கமும் சமுதாயத்தை முன்நிறுத்துகின்றது. அத்துடன் கிழவிகளைப் பலியிட்ட போது கிழவர்கள் பாதுகாப்பைப் பெறுவதில் இருந்து மனித நலன்கள் ஆதிக்கம் பெற்ற பிரிவின் சமூக நலனை ஈடு செய்வதைக் காட்டுகின்றது.


குழந்தை பலியீட்டின் போது இந்த ஆணாதிக்கச் சமூகப் பாதுகாப்புடன், அதன் நலன் சார்ந்து பெண்ணின் தாய்மை உணர்வைப் பலிகேட்டது. ஒருதார ஆணாதிக்க மணத்தில் பெண்ணின் பாலியல் உணர்வை எப்படி ஆணாதிக்கம் தனது சொத்துரிமை பாதுகாப்பில் பலி கேட்டு அழித்ததோ அது குழந்தை பலியெடுப்பிலும் நிகழ்ந்தது. இதைப் பெண்கள் மீது நிறுவ கடமை, பக்தி, தேவதைகளின் கோபம் போன்ற பல்வேறு காரணத்தைக் கூறி, பெண்ணின் கண்ணீரைக் கூட மறுதளித்தது. பெண் குழந்தைக்காகத் தன்னை மாய்த்துப் போராடும் உயிரியல் உணர்வை ஆணாதிக்கம் மறுத்தது. பெண்ணே குழந்தையைப் பலியிட கூட்டிவரும் பண்பாட்டுக் கலாச்சாரத்தை ஏற்படுத்தியது. பலியை நேரடியாகப் பார்வையிட நிர்ப்பந்தித்தது. அங்கு எந்தவித எதிர்ப்பும் எழுப்பாத வண்ணம் பெண்ணின் உணர்ச்சிக் கூறுகள் சிதைக்கப்பட்டது.


இதன் போது குழந்தைகளின் கதறல்கள், தாய்மையினுடைய ஆற்றாமையின் ஆணாதிக்க வெளிப்பாடாகவே பாவம் என்ற சொல் இந்தச் சமுதாயத்தில் தோற்றம் பெற்றது. இந்தப் பாவம் என்ற அனுதாபம் குழந்தை பலியிடலுக்கு எதிர்ப்பாக வளர்ச்சி பெற்றது. அதன்பின் குழந்தை பலியிடல் படிப்படியாக நின்று அதனிடத்தில் மிருகப்பலி மாற்றீடானது.


ஆனால் இன்று கருஅழிப்புகள், சிசுக்கொலைகள் போன்றவற்றைப் பெண் செய்வதன் மூலம் தாய்மையின் உட்கூறு தொடர்ந்து நலமடிப்பதைத் தடுத்து விடவில்லை. பெற்ற தாயே இன்று பெண் குழந்தையைக் கதறவிட்டு கொன்று போடும் மன உளைச்சலை இந்த ஆணாதிக்கம் சகித்துக் கொள்ளச் செய்கின்றது. கருவில் வைத்து கொல்வதும் (இதன் நலன் எதுவாக இருந்தாலும்) பிறந்தபின் கொல்வதும் பெண்ணின் தாய்மை மீதான ஆணாதிக்கத்தின் கொடூரமான வக்கிரமே. பாலியல் உணர்வை, தாய்மை உணர்வைப் பெண்ணுக்கு மறுக்கும் இந்தச் சமுதாயத்தில் அது எந்த வடிவில் வந்தாலும் பெண்ணுக்கு எதிரான தன்மை காணப்படுகின்றது. ஆணாதிக்கம் கட்டமைக்கும் இந்தச் சமுதாயத்தில் அதன் எல்லைக்குள் காணமுயல்கின்ற தீர்வுகள் ஆணாதிக்கச் சிந்தனைத் தளத்தால் ஊடுருவிப் போயுள்ளது. இதைப் பெண்களின் அமைப்புகள் பெண்ணின் நலன் என்று அழைத்து கோரும் போதுகூட முன்னாள் பலிகளுக்கு எந்த விதத்திலும் குறைந்தவையல்ல. ஆணாதிக்கம் அற்ற சமுதாயத்தில் இது நிலவமுடியாது என்பதைப் புரிந்து கொள்வதும், அதன் வழியில் மக்களை வென்றெடுப்பதும் அரசியல் பணியாகப் பெண்கள் அமைப்பு புரியாதவரை இந்தப் பெண்ணியம் ஆணாதிக்க எல்லைக்குள் தீர்வுகளை ஆணாதிக்க வழியில் கோருவதாகவே எஞ்சும்.