சீனா, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேசம், தென்கொரியா உட்பட்ட ஐந்து நாடுகளிலும் 10 கோடி பெண்கள் பாலுறவுக்காகக் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளனர். இப்படி வருடா வருடம் பெண்களில் 5 கோடி பெண்கள் அடிமைகளாக மாற்றப்படுகின்றனர். இதனால் ஒவ்வொரு வருடமும் இரண்டு இலட்சம் பெண்கள் இறக்கின்றனர்.2 மேலும் ''எல்லை தாண்டும்; மிரட்டல்" என்ற தலைப்பில் வருடம் 7,000 நேபாளியப் பெண்கள் வறுமை காரணமாகப் பெற்றோரால் விற்கப்பட்டு, இந்தியாவின் விபச்சாரப் பகுதிகளுக்குக் கடத்தி வரப்படுகின்றனர். எயிட்ஸ் நோய்க்கு உள்ளாகிய பெண்கள் மீள நேபாளத்துக்கு அனுப்பப்படுகின்றனர்.
இந்தியாவில் 1,000 பேருக்கு ஒரு எயிட்ஸ் நோயாளியாக இருக்க, நேபாளத்தில் 200 பேருக்கு ஒருவராக உள்ளது. (21.3.1994)34. கிழக்கு ஐரோப்பாவில் இருந்து பெண்களைக் கடத்தி வரும் மாஃபியாக் குழுக்கள் 1,500 முதல் 5,000 மார்க்குக்கு விபச்சார முதலாளிக்கு விற்கின்றனர். நாள் ஒன்றுக்கு 12 மணிநேரம் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படும் பெண்களால் கிடைக்கும் வருமானத்தில், 30 சதவீதத்தைப் பெண் பெற 70 சதவீதத்தை அப்பெண்களை வாங்கிய முதலாளி சுருட்டுகின்றார். ரஷ்யாவில் போலிக் கம்யூனிசம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து பெண்களை வேலையை விட்டு இந்த முதலாளித்துவ ஜனநாயகம் துரத்தியது. உதாரணமாக உக்ரேனை எடுத்தால் 75 சதவீதப் பெண்கள் வேலையை இழந்து வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பெண்கள் விபச்சாரத்தைத் தேர்ந்தெடுப்பதும், அதற்காக ஜனநாயக ஐரோப்பாவை நோக்கி வருவதும் அதிகரித்துள்ளது. ஜெர்மனியை எடுத்தால் விபச்சாரத்தில் ஈடுபடுவோரில் 75 சதவீதம் வெளிநாட்டவர் ஆகும். ஆஸ்திரேலியாவில் இது 80 சதவீதமாகும். ஐரோப்பாவில் விபச்சாரத்தால் ஒருவர் சம்பாதிப்பது வருடத்துக்கு 7,20,000 பிராங்காகும். இது அடிப்படைச் சம்பளத்தைப் பெறும் தொழிலாளியை விட 10 மடங்கு அதிகமாகும். ஐரோப்பாவில் விபச்சாரத்தைக் குற்றமாகக் கருதி பெண்ணுக்குத் தண்டனை அளிக்க, அதில் ஈடுபடும் ஆணுக்குச் சட்டம் விதிவிலக்கு அளிக்கின்றது.2
நேபாளத்தில் இருந்து ஒரு இலட்சம் பெண்கள் விபச்சாரத்துக்காக இந்தியாவிற்குக் கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் தில்லியில் 12,000-மும், மும்பாயில் 18,000-மும், கொல்கத்தாவில் 15,000-முமாக உள்ளனர். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இயங்கும் அடிமைச் சந்தையில் இந்திய ரூபாய் 1,500-இக்கு 6 வயது சிறுவர் - சிறுமியை வாங்கமுடியும். இப்படி வருடா வருடம் 6,000 பேர் விற்கப்படுகின்றனர். அத்துடன் கருவில் இருக்கும் குழந்தையைக் கொன்றும் பிறந்த பின் கொன்றும் அதை மூலப்பொருளாகக் கொண்டு வாசனைத் திரவியம் தயாரிக்கவும், பாலியல் மற்றும் உழைப்புத் தேவைக்காகவும் தாய்லாந்தில் இருந்து மலேசியாவுக்கு 10,000 பேர் கடத்திச் செல்லப்படுகின்றனர். (1.4.1989)6 தாய்லாந்தில் இருந்து 12 வயதுக்கு மேற்பட்ட பெண்களைச் சூட்கேஸ்சில் வைத்துக் கடத்திய நபரை விமான நிலையத்தில் கைது செய்தனர். 1994-1996-க்கும் இடையில் இதுபோல் 40-இக்கும் மேற்பட்டோரைக் கடத்தியது ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்தது. (24.4.1999)55
''விற்கப்படும் பெண்கள்" என்ற கட்டுரையில் இந்துமத ஆச்சாரத்துக்கும், பழமையையும் இறுகப் பிடித்துக் கொண்டு இருக்கும் இராஜஸ்தானில், பெண்கள் ஆண்களால் விற்கப்படுகின்றனர். இதையொட்டி பொலிசோ, உள்ள+ர் பஞ்சாயத்துக்களோ கண்டு கொள்வதில்லை. (24.3.1999)34 1,25,000 பெண்கள் ஒவ்வொரு மாதமும் விபச்சாரத்துக்காக உலகளவில் கடத்தப்பட்டு விற்கப்படுகின்றனர். (11.3.1999)44
பெண் இந்த உலகில் தனிச்சிறப்பான தகுதியுடன் வாழ்ந்த வாழ்க்கையின் அனைத்து ஆதாரங்களும் அழிக்கப்பட்ட இன்றைய மனித வரலாற்றில் பெண் சந்தைப்படுத்தப்படுகின்றாள். இன்று பெண் சந்தைப் பெறுமானம் உள்ள ஒரு பண்டமாக இருப்பதே மனித வரலாறாக உள்ளது. பெண்ணின் உழைப்பில் பண்டமாகும் பொருள் சந்தைப் பெறுமானத்தைப் பெறும் அதே நேரம், பெண்ணின் சதையுள்ள பாலியல் பண்டம் சந்தை பெறுமானத்தைப் பெற்றுக் கொள்ளும் அதே நேரம் பெண்ணின் உழைப்பு சந்தைப் பெறுமானத்தை இழந்து போயுள்ளது. இது அனைத்து மூலதனத்தினதும் அடிப்படை விதியாகும். பெண்ணின் மூலம் கிடைக்கும் அனைத்தும் பெறுமானம் உள்ளதாக உள்ள அதே நேரம் பெண்ணுக்குக் கிடைப்பது எல்லாம் பெறுமானம் அற்ற இழிவுகளே.
பெண் பாலியல் பண்டம் என்ற ஆணாதிக்கச் சுரண்டல் மதிப்பீட்டில் பெண்ணின் அனைத்துப் பாலியல் உறுப்புகளும் விலை பேசப்படுகின்றது. இது அப்பெண்ணின் சமூகத் தகுதியைப் பொறுத்து பெறுமதி நிர்ணயமாகின்றது. பெண்ணின் வயது, அழகு, கன்னித் தன்மை என்ற அனைத்துத் தளத்திலும் பெண்ணின் விலை தீர்மானமாகின்றது. இப்பெண்களை விற்க உலகளாவிய ரீதியில் மாஃபியாக் குழுக்கள் இயங்குகின்றன. பெண் பாலியல் விபச்சாரத்துக்காக கடத்தப்படுவதும், விற்கப்படுவதும் பொதுவான நிகழ்வாக உலகில் எல்லாத் தளத்திலும் காணப்படுகின்றது. வருடம் 15 இலட்சம் பெண்கள் விற்கப்படும் நிலையில் ஒரு பெண்ணின் ஆயுள் 60 எனின் அண்ணளவாக அவளின் ஆயுளில் ஒன்பது கோடி பெண்கள் விற்கப்பட்டு விடுகின்றனர். பெண்ணின் நிலை இப்படி உள்ள போது இதை எப்படி நாம் ஒழிக்கமுடியும். சந்தை பற்றிய கண்ணோட்டம், இலாபம் பற்றிய குறிக்கோள், மனிதன் பற்றிய சமூக நோக்கு, பெண்கள் பற்றி மனித நோக்கு வந்தடையாத எல்லா நிலையிலும் இது தொடரும். இதை வேறு வழியில் தடுத்து விட முடியாது. இதை எல்லாம் ஒட்டுமொத்தமாகத் தகர்க்க போராட வேண்டியுள்ளது.
ஆசியாவிலுள்ள ஐந்து நாடுகளில் கடத்தப்பட்ட 10 கோடி பெண்களில் 5 கோடி பெண்கள் அடிமையாகவே வாழ்வதுடன் இதனால் வருடம் இரண்டு இலட்சம் பெண்கள் இறக்கின்றனர். இதை எந்த ஜனநாயகமும், புதிய உலக ஒழுங்கும் தடுத்துவிடவில்லை. சீனாவுக்கு இரும்புத் திரையை இட்ட ஏகாதிபத்தியங்கள் பின் தாங்களாகவே தகர்த்தவர்கள் பெண்ணைப் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்துக்கு எதிரான ஜனநாயகச் சந்தைக்கு விற்பனைக்காகக் கொண்டு வருவதை ஜனநாயகப்படுத்தினர். இது கிழக்கு ஐரோப்பாவிலும் ஜனநாயகமயமானது.
கிழக்கு ஐரோப்பாவில் இருந்து கொண்டு வந்து விற்கப்படும் பெண்கள், ஐரோப்பிய மூலதன ஜனநாயக விபச்சார விடுதியில் அடிமையாக்கப்பட்டுள்ளனர். அடிமை வியாபாரத்தை ஒழித்ததாக நூற்றாண்டுகளைக் கொண்டாடும் இந்த ஐரோப்பாவில், மார்க்குகளுக்கும், பிராங்குகளுக்கும் பெண்கள் விற்கப்படுகின்றனர். கம்யூனிசம் மக்களின் சிறையாக இருந்தது என்று மார்தட்டி பிதற்றியவர்களின் நம்பிக்கையில் இருந்து ஓடிவந்தவர்கள் உண்மையான சிறையில் அடைக்கப்பட்டதை உணர்வதும், மீண்டும் பழையதைக் கோருவதும் அம்மக்களின் எதார்த்தமாக உள்ளது. அங்கு இருந்து மேற்கு ஜனநாயகம் பற்றிய கனவுடன் வந்தவர்கள் கட்டியிருந்த கோவணத்தையும் இழந்த கதையாகப் பட்டினியிலும், புதிய பாலியல் சிறைகளிலும் சிக்கிக் கொண்டனர். சொந்த நாட்டில் பெண்கள் வேலையை விட்டுத் தூக்கியெறியப்படுகின்றனர். இது மேற்கில் மட்டுமல்ல சீனாவுக்கும் பொதுவான பண்பாகிப் போனது. கம்யூனிசச் சர்வாதிகாரம் பற்றிய மேற்கின் பிரச்சாரத்தாலும், சதிகளாலும் உள்ள+ர் ஆட்சிப் பீடத்தில் இருந்த முதலாளித்துவப் பிரிவால் சிதைக்கப்பட்ட போது எல்லாக் கற்பனைப் புனைவுகளும் பத்தாண்டு கூட நீடிக்க முடியவில்லை.
பெண்ணின் உரிமை, பெண்ணின் ஓய்வு.... என அனைத்தும் காற்றோடு காற்றாகப் பாட்டாளிவர்க்கச் சர்வாதிகார ஒழிப்புடன் பறந்து ஆணாதிக்கத் தனிச்சொத்துரிமை சர்வாதிகாரத்தினுள் மீளவும் சிக்கிக் கொண்டாள். இது மேற்கு ஜனநாயகத்தின் ஆணாதிக்க வடிவம்தான். இதைத்தான் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை எதிர்த்தவர்கள் முதல் வர்க்கப் போராட்டத்தை எதிர்ப்பவர்கள் வரையுள்ள ஜனநாயக எல்லையாகும். இதற்காகவே மார்க்சியத்துக்கு எதிரான கோட்பாட்டு மற்றும் நடைமுறைப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டார்கள்.
பாலியல் சந்தையில் இன்று உலகளவில் சிறுமிகள் - சிறுவர்கள் என அனைத்து வகை மாதிரியும் மாட்டுச் சந்தையில் விற்கப்படுவது போல் கிழக்கில் இருந்து இலங்கைவரை வாங்கமுடியும். அதுவும் மேற்கின் பணத்தில் சிறு தொகையில் சாதிக்கமுடியும். கன்னிகழியாத பெண்ணைக்கூடக் கோரி, புதுசு புதுசாகப் பெற்று நுகரமுடியும்;. கம்பூச்சியாவில் (கம்போடியா) அமைதியைக் காக்க, ஜனநாயகத்தை மீட்க சென்ற ஐக்கியநாட்டுப் படையின் கட்டற்ற சுதந்திர ஜனநாயகப் பாலியலைப் பூர்த்தி செய்யவும், போல்பாட் தலைமையிலான கம்ய+னிஸ்டுகளைக் கட்டற்று சுதந்திரமாக வேட்டையாடவும் 6,000 ஆக இருந்த விபச்சாரிகளை 20,000-ஆக அதிகரிக்க வைத்தனர் ஜனநாயகவாதிகள். இதனால் எயிட்ஸ் நோய் முன்பை விட பத்து மடங்கு அதிகரித்துள்ளது. போல்பாட்டை ஒழிக்கச் சென்ற அமெரிக்க ஜனநாயக இராணுவம் கன்னி கழியாத இளம் பெண்களைப் பரிசோதித்து 21,000 ரூபாய்க்கு விலைபேசி வாங்கி, கட்டற்றச் சுதந்திரத்தில் வைத்துக் கம்யூனிச சர்வாதிகாரத்தை ஒழித்துக் கட்டவும், பின்நவீனத்துவக் கால ஏகாதிபத்தியத்தைப் பாதுகாக்கவும் வீரப் போரில் ஈடுபட்டனர். (15.4.1995)6
இதை எதிர்த்து கேட்பது, இதை அம்பலப்படுத்துவது சர்வாதிகாரத்தின் கூறு என்று, ஜனநாயகவாதிகளின் பிதற்றலுக்குப் பின்னால் அங்கீகாரம் பெறுகின்றது. கம்யூனிசம் விபச்சாரத்தையும், பெண்ணின் இழி நிலையையும் தனது சர்வாதிகாரப் போராட்டத்தில் ஒழிக்கின்றது. இதற்கு எதிரான ஜனநாயகப் போராட்டத்தில் இவை மீள உருவாக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றது. இதுவே சீனாவானாலும் சரி, கம்போடியா ஆனாலும் சரி, கிழக்கானாலும் சரி, எமக்கு எதார்த்தமான நிர்வாணமாக எம்முன் அம்பலமாகின்றது.
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை எதிர்ப்பவன் விபச்சாரச் சுதந்திரத்தையும், பெண்கள் விற்கப்படுவதையும், பெண்கள் வேலையை விட்டுத் துரத்தப்படுவதையும், வீட்டில் அடைந்து கிடப்பதையும் கோருவதுக்கு அப்பால் எதையும் அவர்களின் கோரிக்கை சாதித்ததில்லை. நாம் இதை இந்த முதலாளித்துவ ஜனநாயகச் சமூகத்தில் கம்யூனிசத்திற்கு எதிராக நடந்ததைக் கொண்டு காணமுடியும். இவர்கள் இன்று இப்பெண்கள் பற்றி எதாவது புலம்பினால் அது மீண்டும் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் வந்து விடக் கூடாது என்ற ஆதங்கத்தில் தானே ஒழிய பெண்கள் மீதான அக்கறையில் அல்ல. அக்கறையிருப்பின் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தில் பெண் அனுபவித்த உரிமைகளை ஏற்றுக் கொண்டு திரும்பவும் அதை அடைய வர்க்கப் போராட்டத்தைக் கோரவும், போராடவும் வேண்டும். ஆனால் இந்த ஜனநாயகம் பற்றி எந்த பாட்டாளி வர்க்கச் சர்வாதிகார எதிர்ப்பாளனும் கோருவதில்லை.
இப்படி விற்கப்பட்ட பெண்கள் சந்தையில் விலைபோன பின்பு விபச்சாரச் சந்தையில் உழல விடப்படுகின்றனர். வாழ்க்கை பூராகவும் விபச்சாரத்தைச் செய்வதும், மாறி மாறி விற்கப்பட்டு வறுமையிலும், பட்டினியிலும், வயதாகின்ற போது வீதியிலும் வாழ்ந்து மடிகின்றனர். இதை இந்த ஜனநாயக உலகம் பாதுகாத்து விபச்சாரம் புரிகின்றது.